‘நாகவிகாரை விகாராதிபதியின் இறுதிக் கிரியைகள் நாளை, தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு படுகொலை தூபி அருகில் உடலை தகனம் செய்ய ஏற்பாடு’ இது 21.12.2017 உதயன் பத்திரிக்கையில் உட்பக்கத்தில் ஒரு செய்தி வெளிவந்தது.
அந்தச் செய்தி எம்மைப்போன்ற பல இளைஞர்கள் மற்றும் சாமானிய மக்கள் மனதில் வேதனையும் இதை தடுக்க வேண்டும் என்ற உணர்வும் பெருக்கெடுத்தது. அந்த வகையில் அந்த இளைஞர்கள் மற்றும் சாமானிய மக்கள் சார்பில் இதை தடுக்க முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நானும் எனது நண்பன் கமலக் கண்ணனும் இவ்விடயம் யாழ்ப்பாணம் மாநாகர எல்லைக்கு வருவதனால் இவ் இறுதி நிகழ்வு தொடர்பாக அவசர நடவடிக்கை எடுக்குமாறு கோரி மாநகர சபையிடம் மகஜர் ஒன்றினை கையளிப்பதற்காக யாழ்.மாநாகர சபைக்கு சென்றோம்.(மகஜர் இணைக்கப்பட்டுள்ளது)
அங்கு மாநகர ஆணையாளர் வேறு ஒரு கூடத்திற்கு சென்றதன் காரணமாக உதவி மாநகர ஆணையாளரிடம் எமது மகஜரை கையளித்தோம். அத்துடன் இதை எவ்வாறு தடுக்கலாம் என்பது பற்றியும் வினாவினோம். அதற்கு குறித்த நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் இவ் இறுதி நிகழ்வுக்காக முதலில் யாழ்.மாநகர சபை மைதானத்தை கேட்டதாகவும் அதற்கு தாங்கள் மறுத்து விட்டதாகும் தெரிவித்தார். அதன் பிறகே ஏற்பாட்டாளர்கள் இவ் இடத்தை தெரிவு செய்ததாகவும் குறித்த பகுதி இலங்கை தொல்பொருளியல் திணைக்களத்திற்கு சொந்தமானது என்றும் அதில் அவர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் அவர்கள் இதற்கான அனுமதியை கொழும்பில் நேரடியாகப் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். அதனை தடுத்து நிறுத்துகின்ற அதிகாரம் தமக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.
அவர்களுக்கு சொந்தமான இடத்தில் தகனம் செய்யலாம் என்றால் எமக்கு சொந்தமான இடத்தில் நாங்களும் தகனம் செய்யலாம் தானே என்ற வினா வினாவினையும் அவர்களிடம் நாம் எழுப்புவதற்கும் பின்னிற்கவில்லை.அதற்கு இவ்வாறன வினாக்களை எழுப்ப வேண்டாம் என்றும் தானும் ஒரு தமிழ்இன உணர்வாளனாக இச்சம்பவத்தை விரும்பவில்லை என்றும் ஆனால் எம்முடைய அதிகார வரம்புக்குள் எதுவும் செய்ய முடியாது என்று இதனை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தான் போய் கூறி செயல் வடிவம் ஆக்க வேண்டும் என்று ஆலோசனையும்; தெரிவித்தார்கள்.
பின்னர் யாழ்.மாநகர ஆணையளருக்குரிய மகஜரினை குறித்த அதிகாரியிடம் கொடுத்து விட்டு வலம்புரி, மற்றும் யாழ்.தினக்குரல் ஆசியர்பீடத்திடம் கலந்துரையாடினோம். இது பற்றி செய்திகளை நாளை வெளியிடலாம் ஆனால் அதன் மூலம் இதனை எவ்வாறு தடுக்கமுடியும் என்று கருத்து தெரிவித்தனர்.
அடுத்த நாள் காலை அதாவது சம்பவ தினத்தன்று கையளித்த மகஜருக்கான பதில் யாழ்மாநகர ஆணையாளர் அவர்களால் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டது. (கடிதம் இணைக்கப்பட்டுள்ளது)
அதில் குறித்த காணி தொல் பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது என்றும் அது அவர்களின் முழுமையான நடவடிக்கைக்கு உட்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து நாம் இவ் இறுதி நிகழ்வுக்கு தடையுத்தரவு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த சட்டத்தரணி மணிவண்ணன் அவர்களைத் தொடர்பு கொண்டு யாழ்.நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தோம்.
சட்டதரணி மணிவண்ணன் அவர்கள் வழிகாட்டலுடன் இவ் வழக்கின் பிரதிவாதிகளாக யாழ். நாகவிகாரை விகாராதிபதி, யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் அதிகாரி, யாழ்.மாநகர சபை ஆணையாளர், பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர், மாநாகர சபை சுகாதார உத்தியோகத்தர் ஆகியோர் இணைக்கப்பட்டனர்.
நீதிமன்று விடுமுறைக் காலமாகியதால் அவசர வழக்காக காலை 12 மணிக்கு நீதிபதி அவர்களால் எடுக்கப்பட்டது அதில் சட்டதரணிகள் மணிவண்ணன் மற்றும் சுகாஸ் அடங்கலாக 12 சட்டத்தரணிகள் ஆஜராகினர்.
முற்றவெளி பகுதியில் உடலை தகனம் செய்வதால் யாழ்.மக்களின் பாரம்பரியம் பாதிக்கப்படுவதுடன் குறித்த இடத்திற்கு அருகில் நூலகம், எரிபொருள் நிரப்பு நிலையம், சந்தை, தபால் அலுவலகம், பாடசாலைகள் மற்றும் மைதானம் என்பவற்றும் கௌரவ நீதிமன்றும் காணப்படுவதனால் நாகவிகாரை விகாராதிபதியின் உடலை முற்றவெளிப் பிரதேசத்தில் தகனம் செய்ய தடை விதிக்குமாறு நீதிமன்றில் தெரிவித்தார் சட்டதரணி மணிவண்ணன்
அதற்கு நீதிபதி எதிராளிகள் அனைவருக்கும் சம்மன் அனுப்புமாறும் அவர்களை 2 மணிக்கு மன்றில் ஆஜராகுமாறும் உத்தரவு பிறப்பித்தார்.
மாலை 2 மணிக்கு எமது சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கத்துடன் மணிவண்ணன், சுகாஸ் உட்பட 13 சட்டத்தரணிகள் முற்பட்டனர்.
எமது விண்ணப்பத்தை நிராகாரித்த யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் குறித்த பகுதி தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது அதனை அவர்களின் அனுமதியுடன் இராணுவத்தினர் பெற்று நிகழ்வை நடாத்துகின்றனர் என்றும் அவரின் இறுதி ஊர்வலம் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நாகவிகாரையிலிருந்து ஆரம்பித்து பாதி தூரத்தை கடந்து விட்டது என்றும் இச் சந்தர்ப்பத்தில் தடையுத்தரவு விடுவிக்கப்பட்டால் அது குழப்பத்தை உண்டு பண்ணி இனமோதல்கலை உண்டு பண்ணும் என்று தெரிவித்தனர்.
இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதவான் தேரரின் உடலை தகனம் செய்வதற்கான அனுமதியினை வழங்கினார்.
இதில் குறிப்பிடத்தக்க முக்கிய விடயம் தொல் பொருளியல் திணைக்களம். அவர்களுக்கு சொந்தமான இடத்தில் யாரும் எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது என்பது தான் தொல் பொருளியல் திணைகளகத்தின் இலட்சினையை நீங்கள் நன்கு உற்றுநோக்கினால் அதின் நடுப்பகுதியில் புத்தவிகாரையின் இலட்சினை காணப்படுகின்றது. (படம் இணைக்கப்பட்டுள்ளது)
ஆக தொல்பொருளியல் முற்று முழுதாக பௌத்த மயமாக்கப்பட்டது ஆகும். அந்தவகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசியல் யாப்பில் பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது அதனை எமது தமிழ்த்தேசிய தலைமைகளும் ஏற்றுக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன( செய்தி இணைக்கப்பட்டுள்ளது)
அதன்படி பார்த்தால் எமது பாரம்பரிய நிலங்களை பெரும்பானமை இனம் ஆலயங்களைக்கொண்டும், தொல் பொருள் ஆய்வுகளைக் கொண்டும் தமது வரையற்ற அதிகார வரம்பைக் கொண்டு ஆக்கிரமிக்க முடியும். அதற்கான ஆரம்ப புள்ளியாக இவ் நிகழ்வு அமைந்திருக்கலாம்.
நேற்று தனகம் செய்யப்பட்ட இடத்தில் என்னும் சிலமாதங்களில் நினைவுத்தூபியும் அதனைத் தொடர்ந்து பௌத்த விகாரையும் வரலாம். அப்போதும் நாம் ஒன்று திரண்டு குரல் கொடுக்கத்தான் போகின்றோம். ஆனால் அதனை அவர்கள் கனகச்சிதமாக செய்து முடிப்பார்கள். அப்போதும் அவர்கள் இது தொல்பொருளியல் திணைக்களத்திற்கான காணி அதில் யாரும் தலையிட முடியாது என்ற கருத்தை இன்று போல் அன்றும் முன்வைப்பார்கள். இதுவே வரலாறு எமக்கு கற்றுத் தரும் பாடம்.
வரலாற்றில் இருந்து பாடம் கற்காவிடின் இனி வரப்போகும் வரலாற்றில் எமது இனத்திற்கு என்று ஒரு இடம் இருக்காது.
மூலம் – துளியம்