காலத்துக்கு ஏற்றவாறு வாக்காளர்கள் மாறவேண்டும். மாறத்தாமதிப்பதும்,மாறாமல் இருப்பதும் சமூகத்திற்கு இடைஞ்சலையும்,பாரியபாதிப்பையும் ஏற்படுத்தும். ஆதலால் வாக்காளர்களின் விரைவானமாற்றத்தை நான் வலியுறுத்துகிறேன் என, மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி ஜோசப் பொன்னையா நேற்றுமுன்தினம் தெரிவித்துள்ளார்.
சமகாலப் பிரச்சனைகள் பற்றி ஆராயும் கூட்டமொன்று ஆயரின் பணிமனையில் நடந்தது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தற்போது நடைபெறவிருக்கும் தேர்தலில் பல புதிய முறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. வட்டாரத்தேர்தல்,பெண் பிரதிநிதித்துவம், வட்டாரத்தில் வைத்தே வாக்கெண்ணும்முறை, கட்சிக்கோ அல்லது குழுக்களுக்கோ வாக்களிப்பது, இரண்டாவது பட்டியலில் இருந்து தெரிவு என்பன அவைகளில் பிரதான வகிபாகத்தை ஏற்கின்றன.
அரசு கொள்கையடிப்படையில் மக்களை சிந்திக்கச் செய்யவே இவ்வாறு செய்வதாக, அரசியல் அவதானிகள் கருத்துவெளியிட்டுள்ளனர்.
அரசு அவ்வாறு நினைத்திருந்தால் அது பாராட்டப்படவேண்டியதொன்று. கடந்த காலங்களில் எமது மக்கள் தமது வாக்குகளை எந்த அடிப்படையில் செலுத்தினார்கள் என்பதை நாம் அறிவோம்.
சாதி, இனம், மதம், ஊர் என்ற வரையறைக்குள் நின்றே பெரும்பாலானோர் வாக்களித்தார்கள். இதையும் விட கையூட்டும் இருந்ததாக கூறப்படுகிறது. அதை உறுதிபடக் கூற முடியாதுள்ளது.
மிகமிக குறைந்த எண்ணிக்கையினரே இதற்கு அப்பால் சென்றுவாக்களித்தார்கள்.
வாக்களிக்கும்போது வாக்காளரொருவர்,வேட்பாளரொருவரால் நமக்கு அல்லது நமது சமூகத்திற்கு சேவைகிடைக்குமா? நமது பொதுத் தேவைகள் நிறைவேறுமா? என்பது பற்றி தனிமையிலோ அல்லது ஒன்று கூடியோ சிந்திக்கவேண்டும்.
சிந்தித்தால் நல்லதெளிவான முடிவு கிடைக்கும். அப்படி வாக்காளர்கள் சிந்திக்கவில்லை என்றும் கூறமுடியாது.
சாய்ந்தமருது மக்கள் எடுத்தமுடிவு, காரைதீவு மக்கள்அரசியலை ஆளும் விதம் என்பன மக்கள் வேறுவிதமாகவும் சிந்திக்கத் தலைப்பட்டுவிட்டார்கள் என்பதற்கு நல்ல உதாரணங்களாகும்.
இனிவரப்போகும் அடுத்தடுத்த தேர்தல்களில் பெண்களின் கையாளுகையும் முடிவும் தலைதூக்கும் அது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்க்கமுடியும்.
சில மூத்தஅரசியல்வாதிகள் தங்களுக்கென்ற வாக்காளர்களின் கும்பலை வைத்திருக்கிறார்கள். அதனை வாக்குவங்கி என்ற அழகான சொல்லால் அழைப்பார்கள்.
வாக்காளர்களை சிந்தித்து தெளிவுகண்டு செயற்படமாட்டார்கள். இது வாக்காளர்களின் பிழையே தவிர அரசியல் வாதிகளின் பிழையல்ல. அரசியல்வாதிகளின் பெரும்பாலானோர் தாங்கள் வெற்றி ஈட்டுவதற்கான வழிவகைகளையே சிந்திப்பார்கள். அவைகளில் பிழையானவற்றிற்கு நாம் துணைபோகக் கூடாது.
நாட்டை குட்டிச் சுவராக்கிய தலைவர்களுக்கும் மக்கள் கூட்டம் இப்போதும் இருக்கிறது. இது யாருடையபிழை? மக்களிலா? தலைவரிலா?
அரசியல்வாதிகள் தங்களது வெற்றிக்கும் சுகபோகத்திற்கும் எதையும் செய்வார்கள். கட்சிதாவுதல்,பேச்சுவார்த்தை, கூட்டுச்சேர்தல். கட்சியிலிருந்து விலகல் என்பனஅவர்களின் தந்திரத்திற்கான கலைச்சொற்கள்.
நான், அவர்களைப்பற்றி குறை கூறவோ. அல்லது அவைகளை சரிப்படுத்தவோ விரும்பவில்லை.நான் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நிற்கும் மதத்தலைவன். எனது நோக்கமும் கரிசனையும் வாக்காளர்களை சிந்திக்கப்பண்ணுவதே. ஆதலால் உள்ளூர் முன்னோடிகள் எனது கருத்துக்களை தத்தமது கிராமமட்ட மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். நிச்சயமாக அதுமாற்றத்தை கொண்டுவரும். அதுவே எமது சமூகத்தினது மாற்றத்தின் முதற்படி என்றார்.