குழந்தை ஒன்றின் மனதின் வலி…
கவி மாமா…
அம்மாவிடம் மறக்கமுடியாத நினைவுகள் பற்றி கேட்டீங்க தானே…? நான் சொல்லவா மாமா? என் குட்டி மருமகன் ஒருவன் தொலைபேசியில் அழைத்தான்.
எனக்குத் தெரியும் அவனின் மனதில் உள்ள வலிகள். அதை அவனிடம் கேட்க விருப்பம் இல்லை எனிலும் அவனின் பிடிவாதம் என்னை கேட்க வைத்தது.
“ம்ம்ம் சொல்லுங்க செல்லம்…”
என்னால இப்பவும் மறக்க முடியாம இருக்கு என்னோட கூட விளையாடிக் கொண்டிருந்த என் அக்கா ஒராள. எனக்கு வெடிச்சத்தம் என்றா எல்லோரை போலவும் சரியான பயம். அம்மாவோடே இருப்பன் எப்பவும். பங்கருக்க தான் என்ட அம்மா என்னை எப்பவும் இருக்க சொல்லுவா. அதனால் பங்கருக்க இருப்பன். வெடிச்சத்தங்கள் குறைஞ்சிருந்தால் வெளீல கொஞ்ச நேரம் விளையாடுவன். அப்பிடி விளையாடும் போது தான் அந்த அக்கா என்னோடு விளையாட வந்தவா. அவாவுக்கு 4 வயசிருக்கும் எனக்கு 3 வயசு. நாங்கள் இரண்டு பேரும் தான் விளையாடுவம். நாங்கள் விளையாடும் போது அம்மாவும் அந்த அக்காவின் அம்மாவும் கூடவே இருப்பினம்.
எங்களுக்கு சாப்பிட எதுவும் இருக்காது அம்மா இருக்கிற அரிசில கஞ்சி காச்சி தருவா அத குடிப்பன் ஒரு வேளை மட்டும் தான் அம்மா சாப்பிடுவா. அப்ப நான் என்னோடத குடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லுவா. என்னோட விளையாட அம்மாவும் அந்த அக்காவும் தான் இருப்பினம்.
சரி மாமா இப்ப அந்த அக்காவ பற்றி சொல்லவா? ம் சொல்லுங்க குட்டி.. நான் அவனிடம் வினவுகிறேன். நாங்கள் வெள்ளாம் முள்ளிவாய்க்கால் என்ற இடத்தில இருந்த போது தான் அவை எங்களுக்கு பக்கத்தில இருந்தவ அப்ப வெடிச்சத்தம் கேட்கவில்லை என்றால் நாங்கள் எங்கள் தறப்பாள் கொட்டிலுக்கு முன்னால இருந்த மரத்துக்கு கீழ விளையாடுறனாங்கள். அன்றும் அப்பிடித்தான். “அம்மா நாங்கள் அங்க எப்ப இருந்தனாங்கள்? ” காலம் நினைவில்லாததால் தாயிடம் வினவுகிறான். ஓம் மாமா நாங்கள் சித்திரை மாதம் கடைசி நாட்கள் அங்க தான் இருந்தம் திகதி தெரியவில்லை. அப்போது தாய் நினைவுபடுத்தியதை எனக்கு கூறுகிறான்.
அப்ப ஆமி சரியா சுடுவான் செல்லடிப்பான் நாங்கள் பயந்து பயந்து விளையாடுவம். அன்டைக்கும் மதிய நேரம் ஆமியின் வெடிச்சத்தம் ஒன்றும் கேட்கல்ல அப்ப நான் அந்த அக்காவ விளையாட கூப்பிட்டன் அவாவும் வந்தா விளையாடி கொண்டிருக்க என்னோட அம்மா வந்து சாப்பிட கூப்பிட்டா. அப்ப அக்காவோட அம்மாவும் வந்து ” தம்பி சாப்பிட்டு வரட்டும் நீங்களும் வாங்கோ சாப்பிட்டு வந்தா தம்பியோட விளையாடலாம். என்று அக்காவை கூப்பிட்டா. சரி அம்மா என்று அவா எழும்பி போக நானும் அம்மாவோட வந்திட்டன். அம்மா எனக்கு சோற்றை சேர்த்து வாய்க்குள் ஊட்டி விட ஒரு தடவை சாப்பிட்டு முடிக்க முன் ஏதோ ஒரு சத்தம் பயத்தில் நான் அழுதுவிட்டேன். பின்பு அந்த அக்காவோட அம்மா கத்தி அழும் சத்தம் கேட்டு அம்மாவும் நானும் வெளீல போனம்.
அந்த அக்கா என்னோடு வளையாடி கொண்டிருந்த அக்கா, ஐந்து நிமிடங்களின் முன் தம்பி தம்பி என்று என்னை அணைத்திருந்த அக்கா, செல் குண்டுகள் என்று பயத்தில் நடுங்கிய போதும் ஆதரவாக என்னோடு விளையாடி அந்த சின்ன அக்கா ஆமி சுட்ட ரவுன்ஸ் பட்டு செத்து கிடந்தா. இரத்தம் வந்து கொண்டிருந்தது. நான் அக்கா என்று அழுதன். என்னை கட்டிப்பிடிச்சு அக்காவோட அம்மா கத்தி அழுதா என்னோட அம்மாவும் அவாவும் கத்திய சத்தம் கேட்டு பக்கத்த இருந்தவ எட்டி பாத்திச்சினம் திரும்பவும் வெடிச்சத்தம் கேட்க அம்மா என்னை பங்கருக்குள்ள கொண்டு போட்டா நான் அழுதிட்டே இருந்தன்.
அவன் அழுவது மட்டும் என் செவிகளுக்கு கேட்டுக் கொண்டிருக்கிறது. தொலைபேசியை அணைக்கிறேன்.
எழுத தோன்றவில்லை மனம் பதைபதைக்கிறது. சீ என்ன வாழ்க்கை இது என்று எண்ண தோன்றுகிறது. யாருக்காக எங்களை தொலைத்தோமோ அவர்கள் இன்றும் அழுதபடிதானே இருக்கிறார்கள். எந்த தலைமுறைக்காக தங்களை ஆகுதி ஆக்கி மாவீரர்கள் சென்றார்களோ அந்த தலைமுறை இன்றும் அழுது கொண்டுதானே இருக்கிறது. மனதில் எழுந்தவற்றை நினைக்க முடியாது எழுகிறேன்…