தமிழர்கள் தங்கள் வரலாற்றை தொலைத்ததற்கும் தங்கள் தேசங்களை தொலைத்ததற்கும் அடிப்படையான காரணமாக இருந்த சாதிய வாதத்தினுள் தேசியம் கரைந்துகொண்டிருக்கிறது.
சாதியம் என்பது தமிழ் சமூகம் ஒன்றுபடுவதற்கும் விடுதலை இலக்கை விரைந்து அடைவதற்கும் பிரதானமான ஒரு தடைக்கல்லாகவே இருக்கிறது.
எமது நாட்டைப் பொறுத்தவரை தமிழர்கள் தனியான ஒரு தேசிய இனம்.
தமிழர்களுக்கென தனித்துவமான மொழி, கலை, பண்பாடு, பாரம்பரியம், பொருண்மியம், இயற்கை வளங்கள், ஆண்மீக வழிபாடு மற்றும் பூர்வீக நிலம் என்பன காணப்பட்ட போதிலும் அவர்கள் தங்களது சொந்த நிலங்களிலேயே அகதிகளாக வாழ்கின்ற துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில் தேசமாக ஒன்றிணைந்து எமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு தடையாக சாதியம் ஒரு மறைமுகமான காரணியாக காணப்படுகிறது.
நிகழ்காலத்தைப் பொறுத்தவரை தேசியத்தைப் பின்தள்ளி ஏனைய காரணிகளான சாதியம், பிரதேசவாதம், மதவாதம் போன்றன வளர்ந்து கொண்டு செல்லும் நிலைமைகளே அதிகம் காணப்படுகின்றன.
இது தொடர்பாக அக்கறை எடுத்து செயற்பட வேண்டிய தமிழ் தலைமைகளே அதனைக் காவிச் செல்வது தமிழ் இனத்தின் துர்பாக்கியமே.
சாதியம் அன்று தொட்டு இன்றுவரை எமது சமூகத்தில் காணப்படும் சாபம். காலனித்துவத்திற்கு முன்பிருந்தே இதன் ஆதிக்கம் தொடர்கிறது. காலனித்துவ ஆதிக்கத்தின் போதும் சாதியம் காக்கப்பட்டது.
இதனை கா. சிவத்தம்பி அவர்கள் “காலனித்துவ ஆளுகையால் ஏற்கனவே சாதியத்தால் வறையறுக்கப்பட்டிருந்த தமிழ் சமூக ஒழுங்கை குலைக்க முடியவில்லை. மாறாக ஆதிக்க சாதியினரை முதன்மை படுத்துவதன் மூலம் தனது இருப்பை தக்கவைத்து கொண்டது…” என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதன் அடிப்படையில் ஆதிக்க சாதியினரின் தலைமையே வலுப்பெற்றிருந்ததை அறியலாம். சாதியம் தொடர்பாக சார்பான கருத்துகளை முன் வைத்தவர்களில் ஆறுமுகநாவலர் பிரதானமானவர்.
சேர் பொன். இராமநாதனும் குறிப்பிடத்தக்கவர். 1976 ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தமிழர்விடுதலை கூட்டணி நிறைவேற்றியபோது “தமிழீழம் சாதி சமயமற்ற சமதர்ம குடியரசு என்றும் தமிழீழத்தில் தீண்டாமை சட்டரீதியாக ஒழிக்கப்படும்” என்றும் கூறியது. எனினும் இது பெயரளவிலான தீர்மானமாக அக் காலத்தில் பார்க்கப்பட்டது.
இதன் பின்னர் எழுபதுகளின் கடைசி பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறிய காலப்பகுதியில் சாதியம் தொடர்பான கருத்துகள் வலுவிழந்திருந்தன.
2009 ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் முடிவிற்கு வந்ததன் பின் தற்போதைய நிகழ்காலத்தில் இக் கருத்துகள் மெல்ல மெல்ல முளைவிட்டு வளர்ந்துவர ஆரம்பித்திருப்பது கண்கூடு.
இதற்கு மக்களின் தேவைகளைத் தீர்த்து வைக்கக்கூடிய அல்லது மக்கள் மீது கருத்துருவாக்க செல்வாக்குச் செலுத்தக்கூடிய பரிசுத்தத் தலைமைகள் இல்லாமை பெருங்குறையே. இங்கே தலைமைகள் மக்களை ஒன்று படுதுவதற்கு மாறாக தற்போதய தலைமைகளை மக்கள் ஒன்றுபடுத்த வேண்டிய நிலை வேதனைக்குரிய விடயமே.
உலகமயமாதலுக்கு ஏற்ப சாதியமானது தன்னை புதிதாக வடிவமைத்துக் கொண்டு அரசியல், பொருளாதாரம், கலை, பண்பாடு என அனைத்து துறைகளில்லும் வியாபித்திருப்பது நிஐம். ஒருபுறம் சாதியம் அழிவடைந்து வருவது போல் தோன்றினாலும் மறுபுறம் வேறு காரணிகளூடாக வலுப்பெற்று வருகிறது. இதனுள் தேசியவாத சிந்தனை அடிபட்டு போவது நிதர்சனம். இதற்கு எமது நிகழ்கால தலைமைகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளும் காரணம்.
இவ்விடத்தில் “தமிழர்கள் தங்களை ஒரு தேசம் என கருதுவது வெறும் பிரமை. பல்வேறு சாதி பிரிவினைகள் கொண்டவர்கள் தங்களை ஒரு தேசம் என அழைக்க என்ன அருகதை இருக்கிறது? நிலவிவரும் சமூக ஒழுங்கை மாற்றாதவரை தமிழர்கள் எவ்வித முன்னேற்றமும் அடையப்போவதில்லை.
சாதியக்கட்டமைப்பில் இருந்து நாங்கள் எதை உருவாக்கினாலும் அது இறுதியில் உடைந்து தான் போகும்” என்ற சாதியம் தொடர்பான அம்பேத்கார் உடைய கருத்து நோக்கத்தக்கது.
தமிழர்கள் அரசியல் ரீதியான தீர்வொன்றை நோக்கி காத்திருக்கும் இக் காலகட்டத்தில் தேசிய ரீதியாக ஒருமைப்படுவது அவசியமாகிறது.
இதற்கு இடையூரான சாதியம், பிரதேசவாதம் போன்ற சிந்தனைகளை மக்கள் மத்தியில் அகற்ற வேண்டிய தேவை தற்காலத்தில் உணரப்படுகின்றது. இதற்கான நடவடிக்கைகளை தமிழ் தலைமைகளே எடுக்கவேண்டும். அதை விடுத்து இவர்களே இதன் காவிகளாக இருப்பது வேதனையான விடயம். இந் நிலைமை மாற வேண்டியது நிகழ்கால தேவை.
தயாழினி,இ.