பழந்தமிழர்கள் இயற்கை வழிபாட்டிற்கு அடுத்ததாக சிறுதெய்வ வழிபாட்டை பின்பற்றி வந்தவர்கள். வீட்டுத்தெய்வம், குலதெய்வம், இனதெய்வம், ஊர்தெய்வம், காவல் தெய்வம் என நீளும் பட்டியல் உண்டு. இச்சிறுதெய்வங்கள் மரத்தடி, குளம், கால்வாய், ஏரி, ஆறு, ஊர்எல்லை என பொது இடங்களில் வைக்கப்பட்டு வழிபடப்படும்.
போரிலே விழுப்புண்பட்டு வீழ்ந்த வீரர்கள் மற்றும் திருமணம் ஆகாமல் இறந்த கன்னிப்பெண்களின் புதைகுழிகளில் நடுகற்களை நட்டு மலர்களும், மதுவும், மாமிசமும், சோறும் நடுகற்களுக்கு படைத்தனர் இது நடுகல் வழிபாடு எனவும் அழைக்கப்பட்டது.
பிற்காலத்தில் நடுகற்களுக்கு உருவம் கொடுத்து வழிபடலாயினர். இவ்வழிபாட்டின் வடிவமே சிறுதெய்வ வழிபாடாக பரிணாமம் பெற்றது எனலாம்.
கம்பீர உருவம், தலைப்பாகை, நெற்றியில் திருமண், மிரட்டும் கண்கள், முறுக்கிய பெருமீசை, ஓங்கிய கையில் வீச்சரிவாள், என்பவற்றுடன் தோற்றமளிக்கும் காவல் தெய்வங்களை பார்க்கையில் ,வீரம் பொருந்திய பழந்தமிழர்களும் இவ்வாறுதான் இருந்திருப்பார்கள் என கற்பனை செய்யக்கூடியதாக இருக்கிறது.
இச் சிறுதெய்வங்களுக்கு பலியிடுதல், ஆணி செருப்பணிதல், சூரைக்கொடுத்தல், கோழிக்குத்துதல் போன்ற சடங்குகளை பழந்தமிழர்கள் தொண்மை தொட்டு பேணிவருகிறார்கள்.
மூதாதைத் தமிழர்களுடைய பெயர்கள் கூட மருதாயி, கருப்பாயி, மாரியம்மா, கருப்பனார், ஒண்டி கருப்பனார், மாடாசாமி போன்ற சிறுதெய்வங்களின் பெயர்களையே கொண்டிருந்ததை கவனிக்கலாம்.
இவ்வாறு தமிழர்களுடன் ஒன்றிணைந்த சிறுதெய்வங்களும் சிறுதெய்வங்களின் சடங்குகளும் தற்காலத்தில் பெருமளவில் மருவி வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
எதிர்காலத்தில் சிறுதெய்வ வழிபாடும் அதன் சடங்குகளும் நிலைத்திருக்குமா என்பது சந்தேகமே.
இன்று சிறுதெய்வங்கள் தன் சுய நிலை மாறியும் முக்கியத்துவம் இழந்தும் போகிறது. தற்போது சிறுதெய்வங்களை பெருந்தெய்வங்களுக்கு உறவுடையதாக மாற்றப்பட்டு அவ்வழிபாட்டு முறைமைகள் காவுகொள்ளப்பட்டு பிராம்மணிய ஆகம சித்தாந்தங்களுக்குள் உள்ளீர்க்கப்படுகிறது.
சிறுதெய்வங்களின் வீர உணர்வு, ஆவேசம், உக்கிரம் என்பன குறைக்கப்பட்டு, சாந்தம் அமைதி போன்ற பெருந்தெய்வங்களின் குணங்கள் கற்பிக்கப்படுகின்றது. அது நாகரிக வழிபாட்டு முறைமை என்றும் ஏனையவை காட்டுமிராண்டிச் செயற்பாடுகள் போலவும் பார்க்கப்படுகிறது.
பிரம்மனின் ஆணவத்தை அடக்கும் பொருட்டு அவதரித்த சிவனின் அம்சமே வைரவர் என குறிப்பிட்டு வைரவர் என்ற சிறுதெய்வத்தின் மூர்த்தங்கள் சிவன் என்ற பெருந்தெய்வ மூர்த்தங்களினுள் உள்வாங்கப்படுகிறது.
விசேடமாக சைவர்கள், வைணவர்களின் வருகையால் சிறுதெய்வங்கள் விஷ்னுவாகவும், சிவனாகவும் மாறியது எனலாம்.
தமிழர்கள் அன்னம்மா, அம்மாரி, ஊரம்மா,மாரியம்மா,மீனாட்சியம்மா, முத்துமாரியம்மா,காளியம்மா,நாடியம்மா போன்ற சிறுதெய்வங்களை இன்று , அம்மன் என்ற பெருந்தெய்வத்தினுள் உள்வாங்கி வழிபடுவதை அவதானிக்கலாம்.
சங்க கால நூலில் சேர வம்சத்தினர் ஐயிரை மலையில் புலனும் சோறும் படைத்து ஐய்யனாரை வழிபட்டதாக குறிப்பிடப் பட்டிருக்கிறது.
இவ்வழிபாடானது தெலுங்கு குடிகளின் வருகையினால் ஐயிரைமலை, சாமிமலையாகவும் ஐய்யனார், ஐய்யப்பன் சாமியாகவும் மாற்றம் கண்டுள்ளமை மறுக்கமுடியாத உண்மை.
ஆகமம் சாராத சிறுதெய்வங்களின் கோயிலையும் தெய்வ உருவையும் ஆகம விதிப்படி அமைத்தால் அதிக வருமானத்தை பெறமுடியும் என்ற தனிப்பட்டவர்களின் சுயலாபமும், பிராம்மணிய இந்துத்துவத்தை ஒரு பேரின அடையாளமாக மாற்றும் சிந்தனையும் சிறுதெய்வ வழிபாட்டு முறை உருமாறி செல்வதில் செல்வாக்கு செலுத்துகிறது.
இவ்வாறு சிறுதெய்வங்களை இழப்பதோடு சிறுதெய்வங்களுக்கு தமிழர்கள் தொண்றுதொட்டு செய்யப்படும் பலியிடல்,கோழி குத்து போன்ற பண்பாட்டு சடங்குகளுக்கு பல்வேறுபட்ட தரப்பினர் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் வருவதோடு தடைச்சட்டங்களூடாக தடைகளும் வருகின்றன.
இது சிறுதெய்வ வழிபாட்டு சடங்குகளுக்கும் பண்பாட்டிற்கும் பெரும் சவாலாகவே அமைகின்ற காலம் எனலாம்.
இன்று சமூகத்தில் பெருந்தெய்வங்களை வழிபடுபவர்கள் உயர்ந்த சாதி என்றும், சிறுதெய்வங்களை வழிபடுவர்கள் குறைந்த சாதி என்ற தவறான எண்ணமும் ஆழப்பதிந்துள்ளது.
பெருந்தெய்வ ஆகம வழிபாட்டுத் தலங்கள் பிராமண ஐயர்களால் சமஷ்கிருத மொழியிலும் ,சிறுதெய்வ வழிபாட்டில் குலவழி பூசாரிகளால் தமிழ் மொழியிலும் பூசைகள் நடைபெறுகின்றன. இதில் பூசாரிகளிலும் பார்க்க ஐயர்கள் உயர்ந்தவர்கள் என்ற மனப்பான்மை உள்ளது.
நாகரிகம் புனிதம் என்ற நிலை கருதி தமிழர்கள் சிறுதெய்வங்களை புறக்கணிப்பதை அவதானிக்கலாம். சிறுதெய்வங்களின் ஆலயங்களை பராமரிப்பதிலும் புதிய ஆலயங்களை உருவாக்குவதிலும் நிறுவன ரீதியாக தமிழர்கள் பின்தங்கி காணப்படுகின்றமை வேதனைக்குரிய விடயமாகும்.
பாடசாலைசைவ நூல்களிலும் சிறுதெய்வ வழிபாட்டை உள்வாங்காமையால் எதிர்கால சந்ததிகள் சிறுதெய்வங்களை அறியும் வாய்ப்பு அரிதாகின்றது.
“குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறவாதே
குலதெய்வத்தை மறந்தால் குலம் தளைக்காது”
என்பதற்கு அமைய ,
தமிழர்கள் தமக்குரிய சிறுதெய்வங்களை அறிந்து வழிபடுவது அவசியம். தமிழர்கள் தமது அடையாளமான சிறுதெய்வ வழிபாட்டை இழப்பார்களாயின் தமது வழிபாட்டு உரிமையையும் அடையாளத்தையும் இழப்பார்கள்.
சி.அபிகாசினி
ஊடகப்பயிலுனர்
குறிப்பு:-Fme Inst, எமது ஊடகப் பயிலுனர்களால் பயிற்சிக்காக தொகுக்கப்படுகின்ற கட்டுரைகள் தொடர்ச்சியாக இத்தளத்தில் வெளியிடப்படும்.