மக்களுக்குக் காசு கொடுத்து வாக்குகளை வாங்கும் நிலை இருக்கும் வரையில் வெற்றி பெறுகிறவர், சேவை செய்யும் மனநிலையில் இருக்க மாட்டார். பணம்தான் பிரதானம் என்றால்,நேர்மையான நிர்வாகம், சேவை என்பதையெல்லாம் மக்கள் எதிர்பார்க்கக் கூடாது என கருத்து வெளியிட்டுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
பெரும் நெருக்கடிப் பின்னர் ஆர்.கே நகர் இடைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இந்த தேர்தல் முடிவுகள் ஆளும்கட்சி வட்டாரத்தை புரட்டிப்போட்டுள்ளது. அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனைவிட 40 ஆயிரத்து 707 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் டி.டி.வி.தினகரன்.
இந்நிலையில், இந்த தேர்தல் குறித்து தமிழகத்தில் இருந்து வெளிவரும் இணையத்தளத்திற்கு பிரத்தியேகமாக பேட்டியளித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மேலும் தெரிவித்திருப்பதாவது,
என்னுடைய உழைப்புக்குக் குறைந்தது பத்தாயிரம் வாக்குகளாவது வந்திருக்க வேண்டும். இவ்வளவு கேவலமாக இந்த நாடு போய்விட்டது என்பதைத்தான் இந்த ஆர்.கே நகர் வெற்றி காட்டுகிறது
ஐம்பது ஆண்டுகளாக மாறி மாறி ஆண்ட இந்தக் கட்சிகள் எல்லாம், ‘காசு கொடுத்தால் போதும்’ என்ற மனநிலைக்கு மக்களைத் தள்ளிவிட்டார்கள். இதுதான் இவர்கள் இத்தனை ஆண்டுகளாக செய்து வரும் சாதனை. மக்களும் தங்களுடைய உரிமையை விற்கும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள்.
வாக்கை விற்பது என்பது மானத்தை விற்பது போன்றது என்பதை மறந்துவிட்டார்கள். இவ்வளவு பணம் கொடுக்கும் வேட்பாளருக்கு, பணம் எப்படி வந்தது என்பதை யோசிக்கும்போதுதான் நல்ல சிந்தனை பிறக்கும்.
பணம் பெறுகிறவரையில் மக்களிடமும் நேர்மை இருக்காது. ஆள்பவர்களிடமும் நேர்மை இருக்காது. “நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள், எனக்குப் பணம் கொடு“ என்ற மனநிலையை எப்படிப் பார்ப்பது? இது ஒரு குற்ற சமூகமாகத்தான் மாறிப் போகும்.
2ஜி வழக்கில் சரியான ஆதாரங்களை முன்வைக்க அரசு தவறிவிட்டதால் விடுதலை செய்துவிட்டார்கள். சங்கர்ராமன் படுகொலையில் சரியான ஆதாரம் இல்லை; தா.கிருஷ்ணன் கொலை, லீலாவதி கொலை எனப் போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.
இந்த வழக்குகளின் தீர்ப்புகள் எதைக் காட்டுகிறது? நீ என்ன குற்றம் வேண்டுமானாலும் செய்து கொள். சாட்சி இல்லாமல் பார்த்துக் கொள் என்பதுதானே. சமூகமே குற்ற சமூகமாக இருக்கும்போது நல்ல சிந்தனைகள் எப்படிப் பிறக்கும்?
ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரனுக்கெல்லாம் வாக்கு செலுத்துவார்களா என சிலர் தொடர்ந்து பேசி வந்தனர். அதையும் மீறி எதற்காக தினகரனுக்கு இவ்வளவு வாக்குகளைச் செலுத்தினார்கள்? அவர் மக்களுக்காக எத்தனை போராட்டங்களை நடத்தினார்? அவர் வந்தால் மக்களுக்கு நல்லது செய்வார் என இந்த மக்கள் எப்படி நம்பினார்கள்?
தினகரன் வெற்றிக்கு ஒரே காரணம், பணம் மட்டும்தான். பணத்தை பிரதானமாக வைத்துக் கட்டமைக்கிற ஒரு சமூகம், எப்படி சரியான சமூகமாக இருக்கும். ஒரு முதலீட்டாளன் இலாபத்தைப் பெறுவதற்கு வருவாரா? மக்கள் சேவைக்காக வருவாரா? 100 கோடி, 200 கோடி என செலவிட்டு வெற்றியைப் பெறுகிறவர், எப்படி சேவை செய்வார்?
ஒரு சட்டமன்ற உறுப்பினராகி சேவை செய்யும் அளவுக்கு இவர்கள் நல்லவர்களா? ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறார்கள் என்று அம்மையார் தமிழிசை தெருவில் இறங்கி போராடுகிறார். நீங்கள்தான் கறுப்புப் பணத்தை ஒழித்துவிட்டீர்களே. பிறகு இவ்வளவு பணம் எப்படி வந்தது?
கேஸ்லெஸ் எகானமி என அறிவித்த பிறகும், முழுக்க 2 ஆயிரம் ரூபாய் தாள்களாக தொகுதியில் விளையாடியது எப்படி? சமூகப் பொறுப்பு என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது. பணம்தான் பிரதானம் என்றால் இது முதலாளிகளின் வேட்டைக்காடாகத்தான் இருக்கும். மக்கள் வாழ்கிற நாடாக இது இருக்காது.
இந்தமுறை தினகரன் கொடுத்த பணத்துக்காக மட்டும் மக்கள் வாக்களிக்கவில்லை. கடந்தமுறை தினகரனுக்காக எடப்பாடி பழனிசாமி வாக்குக் கேட்க வந்தபோது, 4 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். அந்தப் பணமும் தினகரனுக்கான வாக்கு கணக்கில் சேர்ந்துவிட்டது.
கடந்தமுறை நான்காயிரம் வாங்கிவிட்டோம். இந்தமுறையும் நான்காயிரம் வாங்கிவிட்டோம். அவருக்குத்தான் வாக்கு செலுத்த வேண்டும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். இந்த ஒரு விஷயத்தில்தான் மதுசூதனன் தோற்கிறார். இந்தப் பணத்தை தினகரன் எப்படி சம்பாதித்தார் என மக்கள் கேள்வி எழுப்பவில்லை.
திருடர்களில் அதிகப் பணம் கொடுக்கிறவர் நல்லவர் என்ற எண்ணத்துக்கு வந்துவிட்டார்கள். கடந்தமுறை தினகரனுக்காக காசு கொடுத்த எடப்பாடி பழனிசாமி, இந்தமுறை மதுசூதனனுக்காக வாக்கு கேட்கப் போகும்போது, ‘ கடந்தமுறை அவருக்காகப் பணம் கொடுத்தீர்கள். தேர்தலும் நின்று போய்விட்டது. இந்தமுறை தினகரனுக்கே ஓட்டு போடுகிறோம்’ என்பதைச் சுட்டிக் காட்டிவிட்டனர். இது மக்களிடம் இருக்கும் தர்மம்.
ஆர்.கே.நகர் தொகுதியில் ஐம்பதாயிரம் இளைஞர் வாக்குகள் இருக்கின்றது. இதை நம்பித்தான் நாங்கள் களத்தில் நின்றோம். தேர்தலில் கடுமையான உழைப்பைக் கொடுத்தோம். தெருத்தெருவாக பல கிலோமீட்டர்கள் தினமும் நடந்து மக்களிடம் பரப்புரை செய்தோம்.
அதில் ஒரு பத்தாயிரம் பேர் எங்களுக்கு வாக்கு செலுத்தியிருந்தால் கூட மகிழ்ச்சியடைந்திருப்போம். எங்களுக்கு 3,860 வாக்குகள் மட்டுமே வந்திருக்கின்றன. மீதமுள்ள வாக்குகள் எங்கே போனது என்று தெரியவில்லை. அங்கு இருப்பவர்கள் எல்லாம் அடித்தட்டு மக்கள். ஆழ்ந்த வறுமையில் இருப்பவர்கள்.
தேர்தல் களத்தில் ஏழை, பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் பணம் வாங்குகிறார்கள். இந்தச் செயல் கொடுங்குற்றம் என மக்களுக்குப் புரியவில்லை. இதை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். ‘போட மாட்டோம் ஓட்டு; வாங்க மாட்டோம் நோட்டு’ எனப் பதாகையை கையில் வைத்திருக்கிறார்கள்.
அதை இந்த மக்கள் படிப்பதே இல்லை. வாக்குக்காக காசு கொடுத்த செல்வி என்ற பெண்ணைக் கைது செய்தார்கள். அவர் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? காலையில் கைது செய்துவிட்டு மாலையில் விடுவிப்பதற்குப் பெயர் நடவடிக்கையா?
இந்தத் தேர்தலால் நான் சிறு பெருமைகூட அடையவில்லை. தொகுதியில் மக்கள் எங்களுக்குக் காட்டிய வரவேற்பைப் பார்த்து மற்ற கட்சிகள் மிரண்டு போனார்கள். இவர்கள் எங்களுக்கு வாக்கு போட்டுவிடக் கூடாது என பயந்து கொண்டே அதிகமாகப் பணம் கொடுத்தார்கள்.
எங்களுக்கு 3,800 பேர் வாக்கு செலுத்தியுள்ளனர். இவ்வளவு பணத்தையும் மீறி, நல்ல நோக்கத்துக்காக வாக்கு செலுத்திய மக்களுக்கு உண்மையாக இருப்போம். இந்தக் கேடுகெட்ட பணநாயகத்தை ஒழித்துக்கட்டி, உண்மையான ஜனநாயத்தை உருவாக்குவதற்கு இன்னும் உழைக்க வேண்டும்.
ஐம்பதாயிரம் இளைஞர்களை நம்பித்தானே களத்தில் நின்றோம். எனக்கு பத்தாயிரம் வாக்கு வந்திருந்தால், தொலைதூரத்தில் இருந்து பார்க்கும் இளைஞனுக்கு நம்பிக்கை வந்திருக்கும். தொடர்ச்சியாக தோல்வி வரும்போது விரக்தி நிலை ஏற்பட்டுவிடும்.
இந்த நிலை தொடர்ந்தால் மாவோயிஸமும் நக்சலிஸமும் தோன்றும். அது தேசத்துக்கு பேராபத்தாக முடியும். கேரளாவில் எளிய நிர்வாகம் இருக்கிறது. அங்கு ஓட்டுக்குப் பணமும் கொடுப்பதில்லை, அந்த மக்கள் வாங்குவதும் இல்லை.
அங்கு ஒரு மீனவன் சாவுக்கு அந்த தேசமே அழுகிறது. இங்கு ஆயிரம் பேர் இறந்தும் ஆட்சியாளர்கள் அழுதார்களா? தேர்தல் நாடகத்துக்குள் மீனவன் சாவை மூடிவிட்டார்கள். எத்தனை பேர் செத்தார்கள் என புள்ளிவிபரத்தை கணக்கெடுத்து பணம் கொடுத்துவிட்டார்கள். இங்கு நெல்மணிகள் குறைவாகவும் பதர்கள் அதிகமாகவும் வளர்ந்துவிட்டது.
தினகரன் வீட்டில் எவ்வளவு ரெய்டு நடத்தினார்கள். அதையும் மீறி இவ்வளவு பணம் எப்படி வெளியில் வருகிறது? எங்களைச் சுற்றி என்ன நடக்கிறது? இந்த நாட்டில் என்ன நடக்கிறது? வருமான வரித்துறை வேட்டை என்ற பெயரில் சேகர் ரெட்டி, நத்தம் விஸ்வநாதன், அன்புநாதன் வீட்டுக்குச் சென்றார்களே, அவர்கள் வீட்டில் என்னதான் எடுத்தார்கள்?
எவ்வளவு எடுத்தோம் என நீங்கள் ஏன் மக்களிடம் சொல்லவில்லை? போனமுறை 89 கோடி கொடுத்தது குற்றம் எனத் தேர்தலை ரத்து செய்தார்கள். இந்தமுறையும் பணம் கொடுத்துத்தான் வெற்றி பெற்றார். கேரளாவில் ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் அடி விழும். இங்கு காசு கொடுக்கவில்லையென்றால் அடி விழும்.
இதை மாற்ற வேண்டும் என்றால் ஒவ்வொரு குடிமகனும் நினைத்தால்தான் முடியும். ஆர்.கே.நகர் முதலமைச்சர் ஜெயலலிதா தொகுதி என்கிறார்கள். அவருடைய கால் அந்த நிலத்தில் ஒருமுறையாவது தொட்டிருக்குமா? நூறு ஏக்கரில் குப்பை நிறைந்திருக்கும் தொகுதி. எவ்வளவோ நம்பிக்கைகைளை அந்த மக்களிடம் விதைத்தோம்.
எங்களை ஏமாற்றிவிட்டார்கள். அதேபோல், இந்த நோட்டா என்பதே ஒரு மனநோய். குரங்கு கையில் பூ மாலை என்பதுபோல இவர்கள் கையில் வாக்கு. நன்றாக சமைத்து நானும் சாப்பிட மாட்டேன். மற்றவர்களையும் சாப்பிட விட மாட்டேன் என்பது போலத்தான் நோட்டா வாக்குகளும்.
இவர்களுக்கு அதிகாரத்தில் இருப்பவர்களைத்தான் பிடிக்கவில்லை. எங்களை ஏன் உங்களுக்குப் பிடிக்காமல் போனது? என்று குறிப்பிட்டுள்ளார்.