ஈழத்தில் உருவாகியுள்ள கட்சி பிளவுகளும், சுயேட்சை வேட்பாளர்களின் அதிகரிப்பும் ஈழ மக்களுக்கு எந்த வித இலாபத்தினையும் பெற்றுக்கொடுக்க போவதில்லை.தன்னிலையில் செயற்படும் சிங்கள வல்லாதிக்க சக்திகளுக்கு பாரியதொரு சந்தர்பத்தையே இன்றைய தமிழ் அரசியல் தலைமைகளும் சுயேட்சைகளும் உருவாக்கி உள்ளார்கள். தமக்கே பட்டமும் பதவியும் வேண்டும் என்ற சுயநலம் மிக்க ஒருங்கிணைப்பு தோற்றமாகவே இன்றைய செயற்பாடுகள் தமிழ் தலைமைகளால் வழிநடத்தப்டுகின்றது. இந்த செயற்பாட்டை உடைப்பதற்கு விரும்பியோ விரும்பாமலோ இந்திய தமிழ் அரசியல் கட்சிகளின் வழிமுறையில் தேசியம் பற்றியும் எமது தேசிய தலைவர் பிரபாகரன் பற்றியும் கூட்டங்களில் உரையாற்றவேண்டிய தேவைப்பாடு பழுத்த கட்சிகளின் தலைமைகளுக்கு ஏற்படலாம். இப்படியான பேச்சுக்களை எவ்வளவு தூரம் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற கேள்விக்குறி எம்மிடம் இருந்தாலும் ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் மக்களின் வாக்குகள் தேசியம் சார் தீவிர பேச்சாளர்களுக்கு வாக்குகள் செல்லும் வாய்ப்புகளும் உண்டு.
தேசியம் பேசி வாக்கு பெட்டியை நிரப்பும் கட்சிகள் வரும் ஆண்டு வரை தாம் வாக்களித்த வேலைத்திட்டத்தில் 10 வீதமான செயற்பாட்டை நிகழ்த்தி வரும் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தலுக்கான திட்டங்களை வகுக்கும். பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றவுடன் தமது வேலைகள் முடிந்ததாக எண்ணும் ஒவ்வொரு கட்சியும் தலைமைகளும் புலம்பெயர் தேசங்களில் இயங்கும் தமது அருவடிகளை பார்வையிடவும் ஈழத்தில் வறுமைக்கோட்டுக்குள் வாழும் மக்களை அப்படியே வைத்திருக்க வேண்டிய தீவிர செயற்பாடுகளிலும் இறங்கும். வறுமையான மக்களின் நலன்களுக்காக புலம்பெயர் தேசங்களில் இருந்து கிடைக்கும் பணத்தொகையில் ஒரு பகுதியை கண்துடைப்பு நிகழ்வுகளுக்காக மக்கள் நலன் காப்பதாக கூறி செலவழித்து விட்டு மீதிப்பணங்களை தமது நலன்களுக்காக செலவழிக்கும். இதுவே எமது தீவிர கட்டமைப்பு உடைக்கப்பட்ட பின்னர் நிகழ்த்தவண்ணம் உள்ளது, இந்த உண்மையை நாம் சொல்வதானால் நாம் துரோகியாக்கப்படலாம். ஆனாலும் உண்மைகள் என்றும் உறங்கப் போவதில்லை.
ஈழத்தின் அரசியல் நிலைப்பாடு மாற வேண்டுமானால் இன்றைய
இந்த நிலை மாறவேண்டும். அப்படி என்றால் விலைபோகா தேசியம், நேர்மை, ஒழுக்கம் நிறைந்த இளைய சமுதாயம் ஒன்று முன்வரவேண்டும்.முன்வரவேண்டும் என்பதன் அர்த்தம் யாதெனில் நாம் நீதியான தன்னலம் பேணா இளைய சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டும் எனலாம்.இந்த குறித்தல் என்பதும் தன்னலம் பேணா இளைய சமுதாயத்தை எம்மால் கட்டி எழுப்ப முடியுமா என்பதுமே இன்றைய பெரிய கேள்விக்குறி.
காவியா