இரத்த வெள்ளம் அந்த காட்டு மண்ணை சிவப்பாக்கி கொண்டிருந்தது. என் உடலும் அந்த குருதியில் குழித்தது. டேய் கவி அண்ணா இங்க ஓடி வாடா எல்லாருமே காயம்டா என் தம்பி கத்துகிறான். யாரை தூக்குவது யாரை தவிர்ப்பது என்பது புரியவில்லை. சுமார் என் உறவுகள் முப்பது பேருக்கு மேலானவர்கள் அந்த இடத்திலே சூழ்ந்திருந்தோம். அதில் குறித்த சிலரைத்தவிர அனைவருக்கும் படு காயம். கட்டு போடுவதற்கு எந்த அவகாசமும் கிடைக்கவில்லை. அந்த சந்தர்ப்பத்தை சிங்கள தேசம் எமக்கு தரவில்லை. பாய்ந்து வந்து கொண்டிருந்தன சிங்களன் ஏவிய எம்மை கொல்லுவதற்கான இரும்புத்துண்டுகள். அதற்குள்ளும் தவழ்வதும் உருழ்வதுமாக ஒவ்வொருவராக பார்க்கின்றோம்.
அனைவரும் முனகி கொண்டு இருக்கின்றார்கள். இருந்த துணிகள் அனைத்தும் அவர்களுக்கு கட்டுப்போடும் துணிகள் ஆகின்றன. கை உடைந்ததும் கால் துண்டானதுமாக ஒவ்வொருவரும் துடித்து கொண்டிருந்தார்கள். தம்பி அண்ணா மாமா என்று பல குரல்கள் எம்மை அழைத்து கொண்டிருந்தன. முதலில் பலத்த காயமடைந்தவர்களுக்கான முதலுதவி செய்ய முனைகிறேன். ஆனால் எதுவுமே முடியவில்லை. அந்தளவு தாக்குதல் அங்கே நடத்தப்படுகிறது. இருப்பினும் அனைவருக்கும் கிடைத்த துணிகள் கொண்டு இரத்த போக்கை கட்டுப்படுத்த முயல்கிறோம்.
அந்த இடத்தில் என் உறவுகளில் ஏற்கனவே காலில் பலத்த காயமடைந்த நிலையில் களமுனையில் இருந்து விலகி மூத்த போராளி ஒருவரும் குடும்பமும் படுத்திருந்ததும் அவர்களது எந்த சத்தமும் எமக்கு கேட்காததும் நாம் உணராத ஒன்றாக இருந்தது. அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை நாம் யோசிக்கவே இல்லை. ஆனால் மீண்டும் தம்பியின் குரல் “டே அண்ணா இங்க ஓடிவாடா” இங்க வந்து பாருடா…. அவனின் கூப்பிட்ட குரலுக்கு நான் ஓடி சென்ற போது அந்த காட்சி என்னால் நம்பவே முடியாது இருந்தது.
தாய் தந்தைக்கு நடுவில் தூங்கி கொண்டிருந்த பெண் குழந்தையும் ஆண் குழந்தையும் நடந்த சம்பவத்தால் திக் பிரமை பிடித்தவர்களாக திகைத்து போய் கிடந்தார்கள். இருவரையும் தூக்கி நெஞ்சோடு அணைத்து கொள்கிறேன். செல்லங்களுக்கு ஒன்றும் இல்ல மாமா இருக்கன் குட்டிக்கு ஒன்றும் இல்லை என்று அணைத்தவாறு பங்கருக்குள் பாய்கிறேன். உண்மையில் அதிசயமா அல்லது எது என்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை காரணம்.அனைவரும் சாகும் தருவாயில் காயமடைந்து கிடந்த போதும் அந்த குழந்தைகளுக்கு எந்த கீறல்களும் இல்லை. அவர்கள் இருவரும் தப்பி இருந்தார்கள். பங்கருக்குள் அவர்களை இருந்தி விட்டு திரும்ப அங்கே போன போது,
ஏற்கனவே காயத்தால் உடைந்து போய் கிடந்த கால் மீண்டும் ஒரு தடவை பல இஞ்சி எலும்பை உடைத்தெறிந்து பிஞ்சு போய் கிடந்தது. தம்பி என் பிள்ளைகளை காப்பாத்து. அவர் அப்பிடித்தான் சொல்லி கொண்டிருந்தார். அவரது காலுக்கு மம்பெட்டி பிடியை கழட்டி வைத்து கட்டுகிறேன். அவரது கால் தோலில் மட்டும் தொங்கிய படி கிடக்கிறது. இரத்தம் தொடர்ந்து வெளியேறி கொண்டே இருக்கிறது. கட்டுப்படுத்த முடியவில்லை. இருந்தாலும் இரத்தத்தை கட்டுப்படுத்த பலவாறு முனைகிறேன் இரத்தமோ தொடர்ந்தும் வெளியேறுகிறது. கட்டுப்படவில்லை…. முயற்சியில் சிறு வெற்றி அதனால் அவரது மனைவியின் காயத்துக்குமான இரத்தக்கட்டுப்படுத்தலை செய்து முடித்து நிமிரும் போது மீண்டும் அந்த குரல் தம்பி என் பிள்ளைகளை பார்த்துக்கோ…