“யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்” என்பது தமிழர்களிடையே காணப்படும் ஒரு முதுமொழி. ஈழத்தமிழர்களின போராட்ட எழுச்சியிலும், அதன் பின்னடைவுகளிலும் சிங்கள அரசு மிகவும் பயன்பெற்றது என்பது முன்பே கூறியிருந்தேன். அதிலும் ஈழத்தமிழர்கள் விடுதலைப்போராட்டத்தில் கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற விருப்பும் நம்பிக்கையும் கொண்டு தீவிரமாக போராடியவர்கள் விடுதலைப்புலிகள். இதனால்தான் பெருமளவு தமிழர்கள் விரும்பிய விடுதலைப்புலிகளை சிங்கள அரசும், அந்த அரசிற்கு கைகொடுக்க விரும்பியோரும் பலமாக எதிர்த்தனர்.
சொல்லும் செய்தி சுருக்கமாகவும் விளக்கமாகவும் விரைவாகவும் அமைய வேண்டும் என்பது எல்லோராலும் விரும்பப்படும் ஒன்று. அந்தவகையில் தமிழருக்கான தனி நாடு அமையும், தனியரசு அமையும், ஈழத்தமிழராகிய நாம் விடுதலை பெற்று அமைதியாக உயர்ந்த வாழ்க்கை வாழ்வோம் என்று உறுதியாக ஈழத்தமிழராகிய நாம் நம்பவேண்டும். சொல்லும் செயலும் ஒன்றாக அமைந்தால்தான் வெற்றி கிடைக்கும். இந்த வெற்றி நினைப்பு எவ்வாறு குலைகிறது? எங்கள் ஈழப்போராட்டம் எவ்விதமான தடைகளை சந்தித்தது, சந்திக்கிறது,? அந்த தடைகளுக்கான காரணங்கள் என்ன? எதற்காக இந்தத்தடைகள் தலைதூக்குகின்றன? என்பது தொடர்பான ஒரு சிந்தனையே இத்தொடரின் நோக்கம். எனவே சில வரலாற்று அனுபவங்களை, சுருக்கமாக அசைபோட்டாலே இனியாவது தெளிவடையமுடியும் என்பது எனது நம்பிக்கை.
ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கான விழிப்பு ஆயிரத்து தொள்ளாயிரத்து பத்தொன்பதில் ஆரம்பித்தது என்று சொல்லமுடியும். அப்படியானால் இக்காலத்தின் முன் ஈழத்தமிழர்கள் விடுதலை வேண்டவில்லையா எனக்கேட்கலாம். ஆனால் அந்நிய வருகையின்பின் இலங்கை முழுவதும் ஒரே நிர்வாக அலகின் கீழ் வந்தபின்பு சுதேச மக்களும் ஆட்சியில் பங்கு பற்றும் வாய்ப்பளிக்கப்பட்டது. இந்தவேளையில் சேர். பொன். அருணாசலம் சிங்களருடன் சேர்ந்து இலங்கையின் விடுதலைக்காக தொழிற்பட்டுள்ளார். ஆனால் அரச அங்கத்துவம் என்று வரும் போது சிங்களவர் முற்றுமுழுதாக தங்கள் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தலும், தங்கள் உரிமைகளை வெல்வதும் அவசியம் என்றும் எண்ணினார்களே தவிர தமிழ் பிரதிநிதித்துவம் அல்லது தமிழ்மக்களின் உரிமைகள் என்பன முக்கியத்துவம் பெறவில்லை. இதனால்தான் அவர் தெளிவான தீர்மானத்தை எடுத்து, அங்கிருந்து பிரிந்து வந்து தனித்த கட்சியை ஆரம்பித்துள்ளார். எனவே அன்றே அவரின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு கைகோர்க்க ஏனைய தமிழ்த்தலைவர்கள் விரும்பியிருந்தால் ஒருவேளை பிரித்தானியாவிடமிருந்தே எங்கள் உரிமைகளை பெற வாய்ப்பு கிடைத்திருக்கலாம். சேர். பொன். இராமநாதன் கூட, இதற்காக அருணாசலம் அவர்களுடன் சேர்ந்து தொழிற்பட முயற்சிக்கவில்லை என்றே சொல்லமுடியும். கல்வியில் வளர்ந்த பெரியோர்கள், தமிழரின் முன்னோடிகள் என்றெல்லாம் கருதப்பட்ட தலைவர்கள், அதிலும் உலக அளவில் புகழ்பெற்ற ஈழத்தமிழ் பெரியவர்கள் கூட நல்லதொரு தீர்வை பெற்றுத்தராமைக்கு என்ன காரணம்.
வரலாறு என்பது ஒரு எரிச்சலூட்டும் கற்கையாக எமக்கு தெரிகிறது. பாடசாலை மாணவர்கள்கூட ஏனிந்த வரலாற்று படிப்பு என்று வரலாற்றை வெறுப்பதுண்டு. காரணம், வரலாற்றின் அவசியம் புரியாதநிலை, வரலாற்றினை சுவைபட புரியும்படியாக யாரும் சொல்லித்தராதநிலை எனலாம். இதைவிட மேலும் சில காரணங்கள் சொல்லமுடியும். அதாவது வரலாறு என்பது உலக வரலாறு என்ற அடிப்படையில் எங்களைப்பற்றி அல்லது எங்கள் நாட்டைப்பற்றி எமக்கு சொல்லித்தருவதிலும், உலகம் தொடர்பாக அதிக செய்திகளை சொல்லித்தருதல் காரணமாக இருக்கலாம். உண்மையில் எமக்கு உலக அறிவு வேண்டும், ஆனால் அதற்கு முன் எங்களைப்பற்றிய தெளிவான அறிவு வேண்டும் என்பது ஒத்துக்கொள்ளவேண்டிய ஒன்று. எனக்கும் வரலாறு என்பது பிடிக்காத ஒன்றாகவே இருந்தது. ஆனால் ஈழத்தமிழர்கள் தொடர்பான வரலாறு தெரிந்தபின்புதான் எனக்கும் பல செய்திகளில் தெளிவுகள் பிறக்க ஆரம்பித்ததன. அதனால்தான் சுருக்கமாக என்றாலும் வரலாறு தெரிந்தால்தான் எங்களை அறியமுடியும். வரலாறு என்பது பிழை எது, சரி எது, தீமை எது, நன்மை எது என்பவற்றுக்கான அடித்தளத்தை அமைக்க எமக்கு வழிகாட்டும் நல்ல அனுபவ சான்று. எனவே வரலாற்றினை அறிந்து வைத்தல் எமக்கு மிகமுக்கியம். அதுவே எங்களுக்கு வெற்றி தோல்விகளை எடுத்துக்காட்டும் முக்கியமான ஆசிரியன். வெற்றிகரமாக அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும் சிறந்த ஆசான்.
இலங்கை 1948 பெப்ரவரி 4 இல் பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெற்றதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அவ்வாறான ஒரு விடுதலை பெறும் காலம்வரை தமிழர்களும் இலங்கையில் இருந்துள்ளார்கள். கல்வியில் உயர்ந்தோரும் இருந்துள்ளார்கள். ஆனால் இக்காலகட்டத்தில் யார் பெரியவன் என்ற தன்முனைப்பு ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் விடுதலையை வென்றெடுக்க விடவில்லை என்றே சொல்லமுடியும். அதாவது ஒவ்வொரு படித்தவர்களும் நானே பெரியவன் என்றும், என்னால் தான் எதுவும் நடக்கவேண்டும் என்றும், மற்றவர்களால் நடந்தால் எனக்கு மதிப்பில்லை என்றும், நினைத்தது மட்டுமன்றி அந்த எண்ணக்கருவை பலமாக பற்றியிருந்ததால் தங்களது வெற்றிதான் பெரிதாக தெரிந்ததே தவிர தமிழர்களின் வெற்றி பெரிதாக தெரியவில்லை. இதனால் நாங்கள் தோற்றோம் என்பதுதான் உண்மை. இது இன்னும் முடியவில்லை என்பது மட்டுமல்ல இன்றும் தொடர்வதை எங்களால் நேரடியாகவே அவதானிக்க முடியும். இன்றைய தலைவர்களும் தமிழர்களுக்குள் தமிழர்கள் வலுவாக அடித்துகொள்கிறார்கள். பதவிக்காக துடிக்கிறார்கள். ஆனால் அதுவே சிங்களத்தலைவர்களை கண்டால் நீங்கள் சொன்னால் சரிதான் என்ற முடிவை எடுக்கிறார்கள். இரு கைகளையும் கட்டியபடி அவர்கள் பின் செல்கிறார்கள். சிங்களர் தமிழர்களை ஆளவேண்டும் என்பதை வலுவாக நினைப்பதுமட்டுமன்றி, அதற்கு துணை சேர்க்கக்கூடிய தமிழர்களை தம்முடன் சேர்க்கிறார்கள். தமிழர்களுக்காக போராடும் ஏனைய, தனக்கு முன்னுரிமை கொடுக்காமல் தமிழர்க்கு முன்னுரிமை கொடுக்கும் அமைப்புகளை பயங்கரவாதிகள் அல்லது இனவாதிகள் என்று முத்திரையை பதித்துவிடுவர். தமிழர்களை ஆளவேண்டும் நான் நல்ல பதவி பெறவேண்டும் என்ற சிந்தையின்றி தமிழர்களை வாழவைக்க வேண்டும், தமிழன் விடுதலை பெறவேண்டும் என்ற எண்ணமுள்ள தலைவனாலேயே தமிழர்க்கு நீதி பெற்றுக்கொடுக்க முடியும், அவர்களை வாழவைக்கமுடியும். இப்போது சிந்தித்துப் பார்த்தால் யார் தலைமைக்கு உண்மையான அருகதையுள்ளவன் என்று தெரியும்.
எங்களுடைய தலைமைத்தெரிவுகள் சற்று வித்தியாசமாகவே அமைந்திருக்கும். தலைமைக்கு மட்டுமல்ல, எமக்காக உழைப்பவர்கள் தெரிவையும் நாங்கள் அதேவழியில் தான் செய்கின்றோம். தங்கள் வாழ்வும், தங்கள் உயிரும் தமிழர்க்கே என்று இலக்கு நோக்கி சென்றவர்களை மறந்துவிடுகின்றோம். ஏனென்றால் அவர்கள் தங்கள் குடும்பம், தங்கள் வாழ்வு எல்லாம் தமிழனின் விடுதலை என்று நினைத்தவர்கள். அவர்கள் உழைத்து வாழ முடியாதவர்கள் அல்ல, தமிழன் தரம் தாழ்ந்து வாழக்கூடாது என்று நினைத்தவர்கள். அவர்கள் தொடர்பாக பேசினால் குற்றம், எழுதினால் குற்றம், படங்கள் வைத்திருந்தால் குற்றம், துன்பத்திலிருக்கும் அவர்கள் சார்ந்த பெற்றோர் உறவினர்களுக்கு உதவினால் குற்றம் என்று எமக்குள் ஒரு வட்டம் போட்டுவிட்டு, வருடத்தில் ஒரு முறையோ அல்லது இருமுறையோ அவர்களை நினைத்து விட்டு, அதையே மூலதனமாக கொண்டு அரசியல் நடாத்துவோரை நம்பி நிற்கும் இழிவான நிலைக்கு தமிழர்களாகிய நாம் தள்ளப்பட்டுவிடோம் என்றும் சொல்லமுடியும். இன்றும் எங்களுக்காக வாழ்ந்த பெருந்தகைகளை உண்மையாக நினைப்போர், அவர்களுக்காக உள்ளத்தால் உணர்ந்து செயற்படுவோர் தயவு கூர்ந்து என்னை மன்னிக்கவும். இதுபோக எனது வாழ்வு, மற்றும் எல்லா நலமும் பெற்று புவியில் நிறைவாக வாழ்தல் மட்டுமன்றி, எங்கள் வாரிசுகளினையும் நன்கு வாழவைத்தல் நம் கடனே என்று வாழும் தலைவர்களை நாங்கள் மிகவும் நம்புவோம் என்றும் சொல்லமுடியும். இது யாரையும் குறைகூறும் செய்தியல்ல, நாம் ஏமாறும் வரலாறு.
ஆனால் சிங்களர்கள் அப்படியல்ல. தமக்குள் அடித்துகொள்வார்கள். அவர்களின் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதாக காட்டுவார்கள். ஆனால் அவர்களுக்கு பாதிப்பு வராமல் பார்த்துகொள்வார்கள். இன்றும் அதை நாம் தெளிவாக நடைமுறையில் அவதானிக்க முடியும். அதற்கும் மேலாக தமிழர்களை, முஸ்லீம்களை அடக்குவதில், அவர்களின் உரிமைகளை இல்லாமல் செய்வதில், குடியேற்றங்களை நடாத்துவதில். மேலும் தமிழர்களுக்கு எதிரான எல்லா நடவடிக்கைகளிலும் ஒரே நோக்குடன் செயற்படுவர். எந்தக்காரணம் கொண்டும் எந்த ஒரு வலிமைபெற்ற சிங்களத்தலைவரும் இந்த இலக்கிலிருந்து மாறமாட்டார்கள். ஆனால் தமிழ் தலைவர்கள் எனது இருப்பு சரியாக இருந்தால் போதும் என்பதில் மட்டும் மிகவும் கவனமாக இருப்பார்கள். மனதளவில் நான் தலைவனாக, பெரியவனாக இருக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கை கொண்டு உருவாகும் தலைவர்கள், தங்கள் நிலையை உருவாக்க,காப்பாற்ற, உறுதிப்படுத்த, நிலைக்கவைக்க எதையும் செய்ய தயங்கமாட்டார்கள். சமூக நலனிலும் தன்நலனே உயர்வு என்று நினைத்து அதற்காகவே செயற்படுவர். இதற்கு நான் ஒரு உதாரணம் சொல்லமுடியும்.
புவியில் வாழும் விலங்குகளில் நன்றி உள்ள விலங்கினம் என்றால் அது நாய்தான் என்று சொல்வார்கள். ஒரு இல்லத்தில் வளர்க்கப்படும் நாய், அந்த இல்ல உரிமையாளருக்கும், அதே இல்ல உறுப்பினர்களுக்கும் மட்டுமே நன்றியைக் காட்டுமே தவிர எல்லா மனிதர்களுக்கும் அல்ல. அதுவே அடுத்த மனிதனைக் கண்டால் குரைக்கும், எதிர்க்கும், தனது முழுமையான எதிர்ப்பைக்காட்டும். அதுமட்டுமல்ல தனது சைகைகளை எழுப்பி தனது உரிமையாளனை அழைத்து புதிய மனிதனைக் காட்டியும் கொடுக்கும். இதற்கும் மேலாக தனது இனமான இன்னுமொரு நாய் தன் வீட்டிற்குள் நுழைந்தால் அல்லது நுழைய முற்பட்டால் அந்த நாயை பலமாக எதிர்க்கும். இது நாய்களிடம் காணப்படும் தனித்துவ குணம். தனது உரிமையாளர் மீது வைத்துள்ள விசுவாச குணம். நான் நாய்களை பற்றி மட்டுமே பேசுகிறேன். தவறாக எண்ணவேண்டாம்.
பொதுவாக சாதாரண பொதுமக்கள் அரசியல் தொடர்பாக சிறந்த அறிவு கொண்டிருக்கமாட்டார்கள். ஆனால் தாங்கள் விரும்பும் அல்லது தாங்கள் நம்பிக்கை கொண்ட தலைவர்கள் சொல்வதை சரி என்றும், படித்தவர்கள் சரியாகத்தான் சொல்வார்கள் என்றும் நம்புவது மட்டுமன்றி, அவர்கள் சரியாக எதையும் செய்யும் ஆற்றல் படைத்தவர்கள், எங்கள் நலத்தில் மிகுந்த அக்கறையுள்ளவர்கள் என்றும் முற்றுமுழுதாக நம்பி அவர்களுக்காக தங்கள் முடிபுகளை அர்ப்பணிப்பர். ஆனால் எங்களுடைய எல்லா தலைவர்கள் எங்களுக்கு நன்மை புரிந்தார்களா என்பது கேள்விக்குரிய ஒன்றுதான்.
இனி இன்றைய காலகட்டம் பற்றி சிந்தித்து பாருங்கள். தமிழ் மக்களிடையே எழுச்சி கொண்ட இளைஞர்கள் கூட்டுச் சேர்ந்து அமைத்த தமிழர் படைகள் அல்லது இயக்கங்களை கட்டுப்படுத்தும் நோக்கில்தான் சிறீலங்கா இராணுவம் கரையோரங்களில் இருந்து நகர்ந்து ஊர்மனைகளுக்குள் முகாம்களை அமைத்தது. பின்னர் புலிகள் மட்டும் நிலைத்துக்கொள்ள ஏனைய இயக்கங்கள் அல்லது அமைப்புக்கள் அரசுடன் கூட்டுச்சேர்ந்து தமிழர் உரிமைக்காக போராடின, சனநாயகத்தில் இணைந்தன. அதன் விளைவுகளையும் தமிழர்கள் அனுபவித்தார்கள். ஆனால் 2009இல் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டனர் என்று சிறிலங்காவில் ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபக்சவினால் அறிவிக்கப்பட்டு போர் முடிவிற்கு வந்ததாக சொல்லப்பட்டது. அப்படியென்றால் இன்னும் ஏன் இராணுவம் வடக்கு, கிழக்கில் ஊர்மனைகளுக்குள் நிலைகொண்டுள்ளது?. சிறிலங்காவின் அரசியல் கட்டமைப்பின் பிரகாரம் பாராளுமன்றில் தமிழர் சார்பான கட்சிகள் பெறக்கூடிய அதி உயர் அரசியல்நிலை எதிர்க்கட்சி என்ற உயரம். அந்த உயர்நிலை வந்தும்கூட இராணுவத்தை நகர்த்தும் பலம் ஏன் இல்லை?. அரசுடன் இணைந்து செயற்படும் தமிழ் சனநாயக அமைப்புகள்கூட தமிழரின் இந்த அவலநிலையை மாற்றும் சக்தியற்றுள்ளது. ஏன்? சிந்தித்தால் எமக்கு பலம் எதுவும் இல்லை என்பது நன்கு புலனாகும். பாராளுமன்றின் பொய்மை தெளிவாகத்தெரியும். வெறும்பேச்சு அரசியல்தான் மிச்சமாக உள்ளது என்ற உண்மை விளங்கும். இதை தேசியத்தலைவர் பிரபாகரன் மொழியில் சொல்வதானால் ஐம்பது பேர் சேர்ந்தால் விவாதிக்கலாம், ஐந்துபேர் சேர்ந்தால் சாதிக்கலாம். விடுதலைப்புலிகள் சாதிப்பதில் கவனம் செலுத்தினார்கள். இதனால் சனநாயக வாதிகள் வெறுத்தனர். இப்போது யாழ்ப்பாணம் முற்றவெளிகூட சிங்களவனின் மயானமாகிறது. பிக்குவின் உடல் தகனத்தின் மைதானமாகிறது. தமிழன் அமைதியாக வேடிக்கை பார்க்கலாமே தவிர வேறு யாது செய்யமுடியும்.
வடக்கு, கிழக்கில் இன்னும் இராணுவம் தொடர்ந்து நிலைகொள்ளக்காரணம் சிங்கள அரசின் அனுபவ பாடம்தான் என்பதே உண்மை. அது என்னவென்றால் விடுதலைப்புலிகளின் போராற்றல் உயர்வுநிலையில் இருந்த காலத்தில் பல இராணுவவீரர்கள் படைகளை விட்டு வெளியேறினார்கள் அல்லது ஓடினார்கள். அது போரின்போதும், பிறவேளைகளிலும் அரசிற்கே தெரியாமல் தங்கள் உயிரைக்காக இராணுவம் மேற்கொண்ட தற்காப்பு. இந்த படைவீரர்களில் வெளிநாடு சென்று தொழில் புரிந்த வீரர்கள் மற்றும் ஊருக்குள் ஒழித்து வாழ்ந்த இராணுவவீரர்கள் என பலவகையுண்டு. அதன்பின் அரசின் கண்காணிப்பின் படி தெற்கில் அல்லது சிங்கள மக்களிடையே நடந்த அதிக குற்றச்செயல்கள் படையிலிருந்து தப்பி ஓடிய அல்லது விலகிய இராணுவவீரர்களாலே நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிபர அடிப்படையில் நோக்கும்போது, இங்கிருக்கும் இராணுவவீரர்களை தெற்குக்கு அழைத்து அங்கு அவர்கள் சிங்களரை தொல்லைப்படுத்துவதை சமாளிக்கமுடியாது. அதிலும்விட வடக்கு கிழக்கில் முடக்கிவிட்டால், தமிழர்களுடன் விட்டுவிட்டால் அரசிற்கு எந்த தொல்லையும் இல்லை. இராணுவம் செய்யும் எந்த செயலுக்கும் நியாயம் சொல்லிவிட்டால் போதும் என்று அரசு முடிவெடுத்து இராணுவத்தை வடக்கு கிழக்கில் இன்னும் வைத்திருக்கிறது. இதற்கு நிறைய கதைகள் உருவாக்கலாம். புனர்வாழ்வு பெற்றவர்கள் கண்காணிக்கப்படவேண்டும். விடுதலைப்புலிகளை தலை தூக்கவிடக்கூடாது. இப்படிப் பல. எனவே இராணுவமும் இருக்கும். தமிழர்க்கு துன்பமும் கிடைக்கும். சிங்களர்க்கு தொல்லையும் இல்லை. அரசிற்கும் நிம்மதி. இதுதான் எங்கள் நிலை. ஏனென்றால் விடுதலை வேண்டுவது, உரிமை கேட்பது என்பது உலகில் எந்த ஒரு இனமும் செய்யக்கூடாத தவறு. அதிலும் தமிழர் கேட்கவே கூடாது. அவ்வாறு கேட்டால் இராணுவ வன்முறைதான் பதிலடி. நன்றாக அவதானியுங்கள், பயங்கரவாதிகளான புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை மீட்டதாக சொல்லிய மகிந்த ராஜபக்ச, அடுத்து தேர்லில் வென்று பாராளுமன்றம் சென்ற உறுப்பினர்களுக்கே சொல்லிவிட்டார். புலிகள் கேட்டதை யாரும் கேட்கக்கூடாது அவற்றையெல்லாம் தமிழர்க்கு தரமுடியாது. அப்படியென்றால் புலிகள் விடுதலைப்போராளிகள் தானே. இந்த வார்த்தைகளை சமாதானத்தை விரும்பும் உலக நாடுகளுக்கு ஏன் விளங்கிகொள்ளவில்லை. ஒவ்வொரு இனங்களும் உரிமையுடன் வாழவேண்டும் என்று கொந்தளிக்கும் அமைப்புகள் ஏன் புரிந்துகொள்ளவில்லை. காரணம் தமிழர்களுகென்று உண்மையான பலமான அமைப்பு எதுவும் கிடையாது. புலிகளால் ஏற்படுத்தப்படும் தனிநாடு, தனியரசு நிறுவப்பட்டால் உலகில் தமிழனும் பலமாக மாறிவிடுவான். அது தடுக்கப்பட வேண்டும். தூரநோக்கற்ற, சுயநல அரசியல் தன்மைகொண்ட தலைவர்கள் உள்வாங்கப்பட்டால் தமிழரின் எண்ணங்களை சிதைப்பது சுலபம் என்பதே சிங்கள அரசின் நீண்டகால நோக்கமும், அனுபவமும், ஆகும். அது எவ்வாறு நடந்தது என்று தொடர்ந்து பார்ப்போம்.
பரமபுத்திரன்.