ஷாஜகான் மும்தாஜ், ரோமியோ யூலியற், அமராவதி அம்பிகாவதி வரிசையில் சொல்ல மறந்த காதல் கதையே ஜெனியின் காதல் கதை.
அரக்கன் போன்ற தோற்றமுடைய ஒருவன் மீது தேவதைக்கு காதல் வந்தது என்று நாம் கேலிசித்திரக் கதைகளில் தான் அறிந்திருக்கிறோம். இவனைப்போல் விகாரமுள்ள ஒரு மனித உருவம் சூரிய வெளிச்சம் படுகிற இந்தப் பூலோகத்தில் இருக்கமுடியுமா?” என வாசிகள் சொல்லும்படியான பயங்கரமான தோற்றமுடைய கார்ல் மார்க்ஸ்சுக்கும் நல்ல அழகியும் குணவதியும் கல்வி அறிவும் கொண்ட ஜெனிக்கும் காதல் ஏற்பட்டது என்பது வியக்கதக்க ஓர் விடயம் தான்.
ஜெனியின் அழகை பாராட்டாதவர்கள் எவரும் இருக்கமுடியாது. ட்ரியல் வாசிகள்”உலகின் மிகச்சிறந்த பூ ஒன்று இருக்குமானால் அது கூட தோற்றுப்போகும் அவளிடம்”என்பார்கள். இமயத்தின் பெருமையை சிறு கல் தான் செப்பமுடியுமா என்ன?
இவ் காதல் ஜோடிகளின் உருவம் மாத்திரம் இல்லை எண்ணங்களும் நேர்கோணலே.ஜெனி மார்க்ஸ்சை விட நான்கு வயது மூத்தவளாக இருந்த போதிலும் உலக வாழ்க்கையில் அதிக பற்று கொண்டிருந்தாள். ஆனால் மார்க்ஸ் உலக விவகாரங்களுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை போன்று வாழ்ந்து வந்தான். இருந்த போதிலும் “எறும்பை ஈர்க்க சிறு சீனி துணிக்கைகள் போதும்”என்பதைப் போல் மார்க்ஸின் பெண்னை மதிக்கும் சுபாவம், அகங்காரமற்ற அறிவு, தன்னலமற்ற தியாகம் என்பன ஜெனியை மார்க்ஸ் பால் ஈர்த்தது
ஜெனி என்னும் ஒரு அசாதாரணமான பெண் தன் வாழ்க்கையில் வரவேண்டுமென்றால் தானும் அசாதாரணமாக இருக்க வேண்டும் என்று பட்டம் படிக்க மார்க்ஸ் பேர்லின் செல்ல, “காத்திருப்பதே சுகம்”என்று ஜெனி ஓர் ஆண்டோ ஈராண்டோ அல்ல ஏழாண்டாக மார்க்ஸ்சை தன் கணவனாகவே மனதில் வரித்து வாழ்ந்தாள். பல ஆண்டுகள் காத்திருந்த ஜெனியை வாழாவெட்டி என்று ஊர் வாசிகள் பரிகசித்தார்கள்.
நெருப்பாக குமுறும் ஜெனியின் இதயத்தில் மார்க்ஸின் கடிதங்கள் நீர் போல் வந்து குளிர்வித்தது எனலாம். இருப்பினும் சில வேளைகளில் ஜெனி மார்க்ஸின் கடிதத்தை பார்த்து “இளவு காத்த கிளி போல்” ஏமாறுவதும் வழக்கம். இப்படி கடிதம் எழுதாமலிருப்பதற்கு நஷ்டஈடு செலுத்துவது போல் மார்க்ஸ் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று தான் எழுதிய கவிதைகளை தொகுத்து ஒரு கையெழுத்துப்புத்தகமாக ஜெனிக்கு அனுப்பி வைத்தார்.
ஜெனி அப்புத்தகத்தை திறந்து வாசிக்கையில் எழுத்துக்கள் தெளிவாக விளங்கவில்லை. இன்பத்தில் கண்ணீர் ததும்பியதால்
“ஜெனி கொண்ட காதலுக்கு சாட்சி
விழியோரம் கசியும் ஊற்று” எனலாம்
மார்க்ஸ் ஜெனியின் இருமனமும் இணைந்து பல ஆண்டு கடந்து இறுதியில் திருமணத்தில் இணைந்தது.”ஜெனிக்கு திருமணவாழ்க்கை சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டு நரகத்தில் நிகழ்ந்தது எனலாம்” ஆனால் ஜெனிக்கு நரகமாக இருந்தாலும் மார்க்ஸ் உடன் இருந்தால் நரகமும் சொர்க்கம் தான்.
பரம்பரை பரம்பரையாக பிரபு வம்சத்தில் குட்டி அரசியைப் போல் வாழ்ந்த இவளோ வறுமையின் உச்சிக்கு சென்று மடிவாள் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆனாலும் மார்க்ஸின் காதலுக்கு முன் இந்த வறுமை துச்சமென சிரித்து விரட்டுவாள்.
” கொடிது கொடிது வறுமை கொடிது ஒருவனது இளமைப்பருவத்தில் வறுமை வருமாயின் அது மிகவும் கொடியதாக வருத்தும்”
இவர்களின் இளமை வாழ்க்கையில் வறுமை தொட்டுச்செல்லவில்லை குடிக்கொண்டது எனலாம். பணத்தை பற்றி எழுத தெரிந்த மார்க்ஸ்க்கு பணத்தை சம்பாதிக்க தெரியவில்லை. ஒரு சமயம் உணவுக்காக தன் மேல் சட்டையை அடகு வைத்து சட்டையில்லாத காரணத்தினால் வெளியில் செல்ல முடியாமல் வீட்டினுள் அடைப்பட்டு கிடந்தாராம். இவரே இப்படி துன்பத்தை அடையும் போது ஒரு பெண்ணாக ஜெனி எவ்வளவு துன்பத்தை அடைந்திருப்பாளாே! ஆம் ஜெனி அடைந்த துன்பங்கள் அளப்பரியது.
பசிக்கு அழும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையை ஜெனி சந்தித்தாள். அவளுடைய மார்பில் பாலுக்கு பதிலாக இரத்தம் வரும் அளவுக்கு அவளை பட்டினி வாட்டியது.
“குழந்தை பிறந்தபோது தொட்டில் இல்லை இறந்த போது சவப்பெட்டியுமில்லை”என்ற ஜெனியின் வரிகளில் கண்கலங்காதவர்கள் எவரும் இருக்கத்தான் முடியுமா? தன் குழந்தை இறந்த தருனம் மனமுடைந்து ஜெனி கூறிய வார்த்தைகள் அவை.
இதுபோன்ற பல்வேறு சங்கடங்களில் தன் கணவனை வெறுக்காது ” நான் ஒருபோதும் தளர்வடைவதில்லை எனக்கு என் கணவர் அருகில் இருக்கிறார். இப்படி ஒரு மனிதனை கணவனாக பெற்றமைக்காக நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை” என்று கூறுவாளாம். ஒரு தருனம் மார்க்ஸ் சிறையில் அடைக்கப்பட்டதை அறிந்து மார்க்சைப் பார்க்கச்சென்ற ஜெனி ‘விபச்சாரி’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி ஜெனி விபச்சாரிகளுடன் சிறையில் அடைக்கப்பட்டாள். இச்சம்பவங்கள் ஜெனியின் காதலை பறைசாட்டுகின்றது எனலாம்.
நான் கலங்கி அதனால் நீ கலங்கி உன் சிந்தனைகள் சிதறிவிடக்கூடாது என்பதற்காக தன் வறுமை நிலையை கூட மார்க்ஸிடம் சொல்வதில்லையாம் ஜெனி. இவ்வாறு மார்க்ஸ் மீது ஜெனி கொண்ட காதலுக்கு ஒரு சலூட்.
“ஜெனி என்றால் காதல், காதல் என்றால் ஜெனி”
சி.அபிகாசினி
ஊடகப்பயிலுனர்
குறிப்பு:-
Fme Inst எமது ஊடகப் பயிலுனர்களால் பயிற்சிக்காக தொகுக்கப்படுகின்ற கட்டுரைகள் தொடர்ச்சியாக இத்தளத்தில் வெளியிடப்படுகின்றன உங்கள் காத்திரமான கருத்துகளுக்காக.