இந்திய ஆந்திரா மாநிலத்தில் ஆண் வேடமிட்டு 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த யுவதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், காசிநாயினி மண்டலத்தை சேர்ந்தவர் மௌனிகா (வயது 20). இவர், ஜம்மலமடுகு பகுதியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிப்புரிந்து வந்துள்ளார்.
அப்போது, மௌனிகா தன்னுடன் பணி புரியும் ஒரு இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் காதல் என்ற பெயரில் பல இடங்களில் சுற்றித் திரிந்துள்ளனர்.
இந்த நிலையில், இருவரும் கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து ஊரை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் பின்னர் குறித்த இளைஞர் சொந்த வேலையாக ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
ஆனால், மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் மௌனிகா நடந்த விவரங்களை தனது பெற்றோரிடம் கூறி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
தொடர்ந்து, அந்த இளைஞரின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டபோது, அவர் விரைவில் ஊர் திரும்புவதாக கூறியுள்ளார்.
இருப்பினும் அவரை எப்படியாவது வரவழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது ஊரில் நடக்கும் திருவிழாவுக்கு கட்டாயம் வரவேண்டும் என்று மௌனிகா குறித்த இளைஞரை தொலைபேசிமூலம் அழைத்துள்ளார்.
இதை நம்பிய அவரும், காசிநாயினி மண்டலத்திலுள்ள மௌனிகாவின் வீட்டுக்கு கடந்தவாரம் சென்றுள்ளார். இதனையடுத்து, மௌனிகாவின் அறையில் குறித்த இளைஞர் இருக்கும் போது அவர் ஆண் இல்லை ஒரு பெண்தான் என்பது மௌனிகாவுக்கு தெரியவந்துள்ளது.
இதனால் கடும் அதிர்ச்சியடைந்த மௌனிகா, இதுகுறித்து தனது பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார். இதுகுறித்து மௌனிகாவின் பெற்றோர் ஜம்மலமொடுகு பகுதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த பொலிஸார், மௌனிகாவை மீட்டதுடன் ஆண் வேடமிட்டிருந்த பெண்ணையும் கைது செய்துள்ளனர்.
மேலும் இது குறித்து பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தியதில் ஆண் வேடமிட்டிருந்தவர் ஜம்மலமடுகு மண்டலம், ஈடுகளபாடு கிராமத்தை சேர்ந்த 18 வயதான ரமாதேவி என்ற இளம் பெண் என்பதும் மௌனிகா மட்டுமின்றி கடப்பா மாவட்டம் பீமகுண்டத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு இளம்பெண்களையும் ஆண் என ஏமாற்றி ராமதேவி திருமணம் செய்தமையும் இவர் இதுவரை 3 திருமணங்கள் செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
பெண்ணாக இருந்து கொண்டு பெண்களையே திருமணம் செய்துகொள்ள காரணம் என்ன? என பொலிஸார் கேட்டதற்கு, “சிறு வயதிலிருந்தே நான் ஆண் போல வளர்ந்தேன். எனக்கு ஆண்களை திருமணம் செய்து கொள்ள பிடிக்க வில்லை. எனவேதான் ஆண் போல வேடமிட்டு பெண்களைத் திருமணம் செய்து கொள்கி றேன்”. என பதிலளித் துள்ளார்.
இது குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து ரமாதேவியை கைது செய்துள்ளனர். அவர் பணம், நகைகளுக்காக ஆண் வேடமிட்டு திருமணம் செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து ரமாதேவியிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு இளம்பெண் ஆண் வேடமிட்டு 3 பெண்களை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்து வருவதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
Share this: