மணல்யாழ்ப்பாணத்தில் மர்மக்காய்ச்சல் பரவுகிறது என்பது வதந்தியே என்று யாழ்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் உடுப்பிட்டியைச் சேர்ந்த 8 வயதுச் சிறுவன் ஒருவன் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தான். சிறுவனுக்கு ஏற்பட்டது மர்மக் காய்ச்சல் என்றும் அதனாலேயே அவன் உயிரிழந்தான் என்றும் செய்திகள் வெளியாகின. இது தொடர்பில் கேட்டபோதே பணிப்பாளர் மேற்கண்டாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
யாழ்ப்பாணத்தில் இதுவரை மர்மக் காய்ச்சலால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டதற்கான பதிவுகள் எவையும் இல்லை. குறிப்பாக இந்தப் பகுதியில் மர்மக் காய்ச்சலால் இறப்புக்கள் ஏதேனும் இடம்பெற்றிருந்தால் அவர்களே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலேயே அனுமதிக்கப்பட்டிருப்பார்கள்.
கடந்த சில நாள்களுக்கு முன்னர் முல்லைத்தீ வில் இன்புளுவன்சா தொற்றால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டன என அறிவிக்கப்பட்டது. எனினும் அவ்வாறான காய்ச்சல் இந்தப் பகுதியில் ஏற்படவில்லை. என்றார்.