யாழ்.போதனா வைத்தியசாலையில் வெற்றிகரமான நடைபெற்ற திறந்த இருதய சத்திரசிகிச்சை தொடர்பில் வைத்தியசாலையின் பணிப்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழ் போதனா வைத்தியசாலையில் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 20, 21ஆம் திகதிகளில் இருதய நெஞ்சறை சத்திர சிகிச்சை நிபுணர் சிதம்பரநாதன் முகுந்தனின் தலைமையில் முதற்தடவையாக இதய நுரையீரல் மாற்றுவழி இயந்திரத்தினுடனான அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி (Cardio Pulmonary bypass machine with latest technology) இருவருக்கு திறந்த இருதய சத்திர சிகிச்சை (Open Heart Surgery) வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இது யாழ் போதனா வைத்தியசாலையின் வளர்ச்சியில் ஏற்பட்ட ஒரு முக்கிய மைல் கல்லாகும். தற்போது இலங்கையில் திறந்த இருதய சத்திர சிகிச்சை நடைபெறும் 4 அரச மருத்துவமனைகளில் ஒன்றாக யாழ் போதனா வைத்தியசாலை உயர்ந்திருப்பது பெருமைக்குரிய விடயமாகும்.
இற்றைக்கு 30 வருடங்களுக்கு முன்னர் யாழ் போதனா வைத்தியசாலையில் நெஞ்சறை சத்திரசிகிச்சை பிரிவு ஒன்று இயங்கியுள்ளது. 1969 – 1970 காலப்பகுதிகளில் Dr.A.T.S.Paul தலைமையிலான குழு கொழும்பில் இருந்து வந்து போதனா வைத்தியசாலையில் நெஞ்சறை சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து Dr.Stephan, Dr.R.Natkunam, Mr.Rudra Rajaretnam போன்ற திறமைமிக்க நெஞ்சறை சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் 1984 வரை கடமையாற்றியுள்ளார்கள்.
இக் காலப்பகுதியில் நெஞ்சறை சத்திரசிகிச்சை உட்பட சில எளிமையான இருதய சத்திர சிகிச்சைகள் (CMV – Closed Mitral Valvotomy, PDA Ligation, ASD Closure) மேற்கொள்ளப்பட்டுள்ளன. அன்றைய காலப்பகுதியில் இதயத்தின் செயற்பாட்டை நிறுத்தி மேற்கொள்ளும் சத்திரசிகிச்சைக்குரிய நவீன வசதிகள் காணப்படவில்லை.
இருதயத்தின் செயற்பாட்டை நிறுத்தாது உடல் வெப்பநிலையைக் குறைப்பதன் மூலம் இருதயத்தை மந்த கதியில் இயங்கச் செய்து குறைந்த நேரத்தில் சிறிய அளவான சத்திர சிகிச்சைகளை மட்டுமே மேற்கொள்ளக் கூடியதாகயிருந்தது.
ஆனால், தற்போது அதிநவீன Pulmonary Bypass Machine (Heart Lung Machine) உதவியுடன் இருதய நுரையீரல் செயற்பாட்டை பூரணமாக நிறுத்தி நீண்டநேர சத்திரசிகிச்சை மேற்கோள்ளும் வசதி ஏற்பட்டுள்ளது. இப்போது செய்யப்படுகின்ற கடினமான சத்திரசிகிச்சைகள் 3 – 6 மணித்தியாலங்களுக்கு மேல் நீடிக்கின்றன. சத்திர சிகிச்சையின் போது Cardiopulmonary Bypass Machine ஆனது தற்காலிகமாக இருதயத்தினதும் நுரையீரலதும் செயற்பாட்டை மேற்கொள்ளுகிறது. (Cardiopulmonary bypass (CPB) is a technique that temporarily takes over the function of the heart and lungs during surgery, maintaining the circulation of blood and the oxygen content of the patient´s body. The CPB pump itself is often referred to as a heart–lung machine)
இருதய சத்திரசிகிச்சைக் குழுவில் இருதய நெஞ்சறை சத்திரசிகிச்சை நிபுணர் (Consultant Cardiothoracic Surgeon), மற்றும் மயக்க மருந்தியல் நிபுணர் (Consultant Anaesthetist), இதய வைத்திய நிபுணர் (Consultant Cardiologist), உதவி வைத்தியர்கள், பெபியூசனிஸ்ட் (CPB Machine ஐ இயக்குபவர்கள் – Perfusionists), தாதியர்கள், சுகாதார உதவியாளர்கள் அடங்குகின்றனர்.
யாழ் போதனா வைத்தியசாலையின் முதலாவது இருதய நெஞ்சறை சத்திரசிக்சை நிபுணர், வைத்தியகலாநிதி சிதம்பரநாதன் முகுந்தன் (Consultant in Cardiothoracic Surgery) ஒரு வருடத்திற்கு முன்பே நியமனம் பெற்றபோதும் உடனடியாக சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ளக்கூடிய எந்த வசதிகளும் காணப்படவில்லை.
இக் காலப் பகுதியில் இவர் கொழும்பு சீமாட்டி ரிச்வே சிறுவர் போதனா வைத்தியசாலையில் (LRH / Colombo) பகுதி நேரமாக சேவையாற்றிக் கொண்டு, சத்திரசிகிச்சைக் கூடம், அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றை அமைப்பதிலும் சத்திரசிகிச்சைக்குத் தேவையான இயந்திரங்கள் (CPB Machine), மற்றும் உபகரணங்கள் போன்றவற்றை பெற்றுக் கொள்வதிலும், பெபியூசனிஸ்ட் (Perfusionists), தாதிய உத்தியோகத்தர்கள் முதலானோரை பயிற்றுவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்வதிலும் ஈடுபட்டிருந்தார்.
இக்காலப்பகுதியில் இங்கு கடமையாற்றிய 4 தாதிய உத்தியோகத்தர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலை (NHSL), சீமாட்டி றிச்வே சிறுவர் வைத்தியசாலை (LRH) ஆகியவற்றின் இருதய நெஞ்சறை சத்திர சிகிச்சைப் பிரிவுகளுக்குச் சென்று 3 மாத காலம் பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டனர். மேலும் சுகாதார உதவியாளர்களும் இவ் வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய பயிற்சிகளைப் பெற்றனர்.
யாழ் போதனா வைத்தியசாலையானது கொழும்பு மத்திய சுகாதார அமைச்சின் நேரடியான நிருவாகத்தின் கீழ் இயங்கிவரும் வைத்தியசாலையாகும். இந்த ஆண்டு எமது வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சையை ஆரம்பிக்க சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி இராஜித சேனாரத்னவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளும் போதியளவு ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கியிருந்தனர். எதிர்வரும் ஆண்டில் முழுமையான ஆளணியினரை சுகாதார அமைச்சு நியமனம் செய்வதோடு புதிய கட்டடத் தொகுதியை அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது.
அதேவேளை கொழும்பு தேசிய வைத்தியசாலை, சீமாட்டி ரிச்வே வைத்தியசாலை, கண்டி போதனா வைத்தியசாலை, கராப்பிட்டிய வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகள் எமது தாதியர்கள் மற்றும் பெபியூஷனிஸ்ட் முதலானோருக்கு பயிற்சிகளை வழங்கியதுடன் இதய நுரையீரல் மாற்றுவழி இயந்திரத்தினை இயக்குகின்ற பெபியூசனிஸ்ட் இருவரை எமக்குத் தற்காலிகமாகத் தந்து யாழ்ப்பாணத்தில் இருதய சத்திர சிகிச்சையை ஆரம்பிக்க உதவியமைக்காக இவ் வைத்தியசாலைகள் பணிப்பாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
யாழ் போதனா வைத்தியசாலையில் இருதய நெஞ்சறை சத்திர சிகிச்சைக்கான தனியான கட்டடத் தொகுதி, முழுமையான ஆளணி மற்றும் முழுமையான உபகரணத் தொகுதி என்பவற்றைப் பெற்றுக் கொள்ள கடந்த ஒரு வருடமாக திட்டமிட்டு வருகின்றோம். இக்காலப் பகுதியில் பல கலந்துரையாடல்கள் மூலமாக எமக்கு கிடைத்த வசதிகளுடன் 2018 ஆரம்ப பகுதியில் இதய சத்திர சிகிச்சையை ஆரம்பிக்கவே திட்டமிட்டிருந்தோம்.
சுகாதார அமைச்சு வருட ஆரம்பத்தில் இருதய நெஞ்சறை சத்திர சிகிச்சை நிபுணரை நியமித்த போதிலும், இருதய சத்திர சிகிச்சைக்கான பிரத்தியேக உணர்வழியியல் சிகிச்சை நிபுணரையும் ஏனைய வைத்தியர்களையும் நியமிக்கவில்லை. இருப்பினும் 2 வைத்தியர்கள் மாத்திரமே நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் மயக்கமருந்தியல் துறையினர் (Department of Anaesthesiology) ஆளணிப் பற்றாக்குறை இருந்த போதிலும் இவ்வருடம் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள உதவினர்.
அதேவேளை சுமார் 30 மில்லியன் ரூபா பெறுமதியான இருதய சத்திரசிகிச்சைக்கான Cardiopulmonary Bypass Machine ஐ கொள்வனவு செய்ய மத்திய சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. வெகுவிரைவில் அவ்வியந்திரம் எமக்கு கிடைக்கப்பெற்றுவிடும். இருப்பினும் புதிய இயந்திரம் வந்துசேரும் வரை குறிப்பிட்ட இயந்திரத்தை விற்பனை செய்யும் TERUMO- Hemas Surgicals & Diagnostics (PVT) LTD நிறுவனம் தன்னிடம் இருந்த இயந்திரத்தை எமக்கு வழங்கி 2017 இல் முன்கூட்டியே சத்திர சிகிச்சையை ஆரம்பிக்க உதவியிருந்தது.
சத்திரசிகிச்சையின் பின்னரான நோயாளரைப் பராமரிக்கும் 2 படுக்கைகளைக் கொண்ட அதிதீவிர சிகிச்சைப் பிரிவே (CT/ICU) தற்போது வைத்தியசாலையில் காணப்படுகின்றது. எனவே நிலையான கட்டடத் தொகுதி மற்றும் போதியளவு மயக்கமருந்தியல் நிபுணர்களும் ஏனைய வைத்தியர்களும் போதிய தாதியர்களும் நியமிக்கப்படுமிடத்து இருதய சத்திர சிகிச்சையை மேலும் சிறப்பாகச் செய்ய முடியும். தற்போது இருக்கின்ற வளங்களைக் கொண்டு போதனா வைத்தியசாலையில் வாரத்திற்கு 2 சத்திர சிகிச்சைகளை மாத்திரமே செய்து கொள்ளகூடியதாயுள்ளது.
இருதய சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்காக தற்போது 360 இற்கும் மேற்பட்டவர்கள் பதிவுகளை மேற்கொண்டிருக்கின்றனர். எதிர்வரும் ஆண்டில் இருந்து இருதய முடியுரு நாடிகளில் ஏற்படும் அடைப்புக்களுக்கான சத்திர சிகிச்சை (Coronary Artery Bypass Graft Surgery (CABG)), இதய வால்வு மாற்று சத்திர சிகிச்சை (Valve Replacement Surgery), பிறப்பிலிருந்து இதயத்தில் ஏற்படுகின்ற அமைப்பு ரீதியான அசாதாரண மாற்றங்களுக்கான சீரமைப்பு சத்திர சிகிச்சை (Corrective Surgery for Congenital Cardiac Defect) முதலான சேவைகள் விரிவாக்கப்பட்டு சில ஆண்டுகளில் மிகச் சிறப்பான இருதய சத்திர சிகிச்சைகளை யாழ் போதனா வைத்தியசாலையில் வழங்க முடியுமென எதிர்பார்க்கின்றோம்.
யாழ் போதனா வைத்தியசாலையில் திறந்த இருதய சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதற்கு பலர் தனிப்பட்ட முறையிலும் உதவியுள்ளனர். குறிப்பாக இருதய நெஞ்சறை சத்திர சிகிச்சை நிபுணர் (Consultant Cardiothoracic Surgeon) வைத்தியகலாநிதி சிதம்பரநாதன் முகுந்தன் பல தடவைகள் சுகாதார அமைச்சிற்குச் சென்று சத்திர சிகிச்சைக்குத் தேவையான சத்திரசிகிச்சைகூட, அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றின் உள்ளக வசதிகளை ஏற்படுத்துவதிலும் உபகரணங்களை பெறுவதிலும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
அதேவேளை இருதய சத்திரசிகிச்சை பொறுப்புத் தாதிய உத்தியோகத்தர் கிறிஸ்தோபர் ரமேஸ்குமார், தேசிய வைத்தியசாலைக்குச் சென்று உரிய பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டதோடு உள்ளக ஒழுங்கமைப்பு வேலைகளையும் செய்துள்ளார். மேலும் இவர் சுகாதார அமைச்சின் மருந்துகள் சேவைகள் வழங்கல் பிரிவிற்கு பலதடவைகள் சென்று சத்திரசிகிச்சைக்குரிய உபகரணங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் உதவியுள்ளார்.
அத்துடன், சிரேட்ட உணர்வழியியல் சிகிச்சை நிபுணர் சுந்தரலிங்கம் பிறேமகிருஸ்ணாவும் (Consultant Anaesthesiologist) ஏனைய உணர்வழியியல் சிகிச்சை நிபுணர்களும் மற்றும் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் இருதய சிகிச்சை நிபுணர்களும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி இந்த சத்திரசிகிச்சையை இந்த ஆண்டு ஆரம்பிக்க உதவியுள்ளனர்.
அண்மையில் பிரதான நாளிதழ் ஒன்றில் தவறான செய்தி வெளியிடப்பட்டிருந்தது. எனவே யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட திறந்த இருதய சத்திரசிகிச்சை, இதன் உருவாக்கம் பற்றி பொதுமக்கள் தெளிவாக அறிந்து கொள்வது நன்று.
யாழ் போதனா வைத்தியசாலையில் முதற்றடவையாக மேற்கொள்ளப்பட்ட திறந்த இருதய சத்திர சிகிச்சையானது முழுமையாக மத்திய சுகாதார அமைச்சின் நிதியுதவி மற்றும் ஆலோசனை வழிகாட்டலுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதற்காக எந்த ஒரு தனிநபர்களதும் தனியார் நிறுவனங்களதும் நிதி உதவிகளோ இயந்திர, உபகரணங்களோ பெற்றுக் கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பணிப்பாளர்
வைத்திய கலாநிதி.த.சத்தியமூர்த்தி