போராளிகள் எனப்படுபவர்கள் யார்?
”போராளிகள்” என்ற வார்த்தையை நாம் எமது வாழ்நாளில் பலதடவைகள் பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றோம், அந்த ”போராளிகள்” என்றால் யார் என்ற தெளிவான புரிதல் எமக்கு இருக்கின்றதா? என்று எம்மில் கேள்விகள் எழும்போதே போராளிகள் என்றால் யார்? என்ற ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதவேண்டும் என்று எனக்குத் தோன்றியது.
ஏதோ ஒரு கொள்கைக்காக எந்த நிலையிலும் மாற்றம் பெறாத எண்ணத்துடன் பயணிப்பவர்களே ”போராளிகள்” என்று நாம் பொதுவாக சொல்லிக்கொண்டு விலகிச்செல்கின்றோம். ஆனால் இந்த வாதம் சரியானதா? என்று நாம் என்றும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. ”போராளிகள்” என்ற வார்த்தைக்குள் ”ஒரு கொள்கைக்காக வாழ்பவர்கள்” என்ற சொற்தொடரை நாம் திணிக்கும்போது அது ”தீவிரவாதம்” என்ற புதுப்பெயரை மற்றவர்கள் பார்வையில் விதைத்துச் செல்கின்றது. ”கொள்கை” என்பதனை ஆதிக்க சக்திகள் தீண்டத்தகாத சொல்லாக மாற்றியிருப்பதே இதற்கு காரணமாகின்றது.
ஆகவே போராளிகள் என்றால் யார்? என்ற இந்த கேள்வியை இப்போது நாம் மிகவும் ஆழமாக உள்வாங்கவேண்டியவர்ளாக இருக்கின்றோம்.
”போராளிகள்” எனப்படுபவர்கள் அன்பு நிலையில் நின்று, ஆத்மீக உணர்வுகளை உணர்ந்து, கொள்கையின் பிடியில் மாறாநிலையில் வாழ்பவர்களே உண்மையாக போராளிகள். உண்மையான போராளிகளிடம் அன்பும் கனிவும் ஒழுக்கமும் நேர்மையும் வாக்கு சுத்தமும் சுயநலமில்லா தன்மையும் காணப்படும். எந்த சந்தர்ப்பத்திலும் விலைபோகா தன்மையும் எந்த ஒரு உயிரையும் சுயலாபத்திற்காக வதைக்காத மனப்பக்குவமும் காணப்படும். உலகம் சமூகம் பற்றிய விழிப்புணர்வு சிந்தனையும், பெண்மை, பெண்ணியம், மானிட உளவியல், மானிட சிந்தனை பற்றிய தெளிவும் காணப்படும். ஆக போராளிகள் எனப்படுபவர்கள் உடல், உள சிந்தனையில் உயர்வு பெற்றவர்களாக மனித நாகரீகம் தெரிந்து மனிதர்களை மதிக்கும் பக்குவம் பெற்றவர்களாக விளங்குவர். வார்த்தையாடலில் நிதானமும் பக்குவமான சமூக சிந்தனைகளை வளர்பவர்களாகவும், சமூகத்திற்கு விழிப்புணர்வு தத்துவத்தை விதைக்கும் அதேநேரம் தாமும் விழிப்புணர்வு சிந்தனை மிக்கவர்களாக விளங்குவர்.
ஆகவே மதிப்பானவர்களே
”போராளிகள்” எனப்படுபவர்கள் ஆண்டவனின் சந்நிதியில் வைத்து பூஜிக்கப்படவேண்டியவர்கள். அந்த போற்றுதற்குரிய சொல்லை தரமற்ற பலரும் தமக்காக பயன்படுத்த விழைவதும் அந்த வார்த்தையின் மகத்துவத்தை சிதறடிக்க முயல்வதும் பாரதூரமான குற்றமாகும்.முகவலையில் ”போராளிகள்” என்ற வார்த்தையை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் ஆழமான சிந்தனையின் பின்னரே அந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். எனது மனமறிந்து நான் பார்த்து வியந்த ”போராளிகள்” மரணத்தை தழுவிய மாவீரர்களும்,விடுதலை போராட்டத்தில் அங்கம் இழந்து அடுத்த நேர உணவிற்காக என்ன வழியென்று தெரியாமல் வாடும் எமது ”முன்னாள் போராளிகளும்” மட்டுமே.
எனவே இனிவரும் காலங்களில் போராளிகள் என்ற சொல்லை முடிந்தளவு பயன்படுத்துவதை தவிர்ப்பதே ஆரோக்கியமாக இருக்கும்.
-காவியா