“யாழும் குழலும் சீரும் மிடறும்
தாழ் குரல் தண்ணுமை ஆடலொடு
இவற்றின் இசைந்த பாடல் இசையாகும்.
– இளங்கோவடிகள் – சிலப்பதிகாரம்.
இசை என்பது ஒழுங்கு செய்யப்பட்ட ,ஒரு விதத்தில் கட்டுப்பட்ட ஒலியாகும். இசை என்ற சொல்லுக்கு இசையவைப்பது என்ற பொருளும் உண்டு. உலகிலுள்ள ஜீவன்களை இசையவைக்கும் சாதனம் இசையாகும். இவ்விசையானது படித்தவர்கள் முதல் பாமரர் வரை பரந்து இரசிக்கும் ஒரு சிறந்த கலையாகும்.
“இசையால் வசமாகா இதயம் எது? என்ற அடிகளின் மூலம் அனைவரையும் ஈர்க்கக்கூடிய ஒன்று என்பதும் திண்ணம்.
ஒவ்வொரு இனத்துக்கென்றும் தனித்தனி பண்பாட்டு பாரம்பரியங்கள் காணப்படுவது போல ,இசையும் காணப்படுகிறது. அந்த வகையில் தமிழர்களுக்கும் ஒரு பாரம்பரிய இசை வடிவம் காணப்படுகிறது. ஆனால் இன்றைய காலத்தில் மரபுத்தமிழிசையின் செல்வாக்கானது ஏனைய இசைகளின் கலப்பாலும் ,பிற இனச்செல்வாக்காலும் தனித்துவமற்று மருவிப்போவது உள்ளங்கை நெல்லிக்கனியென்றே கூறலாம்.
பழந்தமிழ் இசை என்பது ,தமிழர்களின் மரபு வழியான மிகப்பழையான இசைச்செல்வமாகும். பழந்தமிழிசையெனக் குறிப்பிடும் போது ஐரோப்பியர் ஆட்சிக்கு முன்னரான காலத் தமிழ் மொழியின் இசை, நடைச்சிறப்புகள் ஆகியவற்றைக் கூறலாம்.
அதாவது தமிழ் இலக்கிய வரலாற்றின் முதலாவது காலமான சங்ககாலத்தில் ,சங்கத்தமிழானது ,இயல்,இசை,நாடகம் என்ற வகையினுள் அடங்கியிருந்தது. இதில் இசை என்பது தமிழிசையாகும். இக்காலத்தில் கூத்து ,இசை ஆகியன வளரத்தொடங்கின.
எனவே இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழிசை செம்மையான கலைகளில் ஒன்றாக விளங்கியிருக்கிறது என்பது திண்ணம்.
சங்க நூல்களான எட்டுத்தொகை ,பத்துப்பாட்டு நூல்களிலும் தமிழிசை பற்றி கூறப்பட்டுள்ளது. அத்தோடு இக்காலத்தில் பாணன்,பாடினி, விறலி, கூத்தர் முதலான பாத்திரங்கள் மூலம் பழந்தமிழிசை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதும் உறுதி.
இதனையடுத்து வந்த சங்கமருவிய காலத்திலேயும் ,சங்ககால தமிழிசைப்பண்புகள் வளரத்தொடங்கின. தமிழிசையோடு இறைவனை இணைத்துப்பாடுவதிலும் இக்கால புலவர்கள் ஈடுபட்டனர். பக்தி நெறிக்காலமாகக் காணப்பட்ட பல்லவர் காலத்தில்,நாயன்மார்கள் தமிழையும் இசையையும் இணைத்து பண் கனிந்த பாடல்களை வழங்கினர்.”தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்”,இசை பத்திமயாற் பாடு்தலும் என்று தொடங்கும் வரிகளை உதாரணமாகச்சொல்லலாம்.
இவ்வாறு வளர்ந்த தமிழிசைக்கு ,அப்பர்,சம்பந்தர்,மாணிக்கவாசகர் போன்றவர்கள் புத்துயிர்ப்பளித்தனர். சங்கமருவிய காலத்தில் களப்பினர் ஆட்சி நிலவியிருந்தாலும் தமிழிசை தன் வளர்ச்சியைக் கைவிடவில்லை.
தொல்காப்பியம் என்ற நூலில் , மரபுத்தமிழிசை பற்றிய அனைத்து செய்திகளும் அடங்கியுள்ளன.
இசையைத்தொழிலாகக் கொண்ட மக்கள் உபயோகிக்கும் யாழ் ,முறி, உடுக்கு,பறை,சங்கு,போன்ற பல்வேறு இசைக்கருவிகளைப் பற்றியும் இந்நூல் கூறுகிறது.
மரபுத்தமிழிசையின் பண்புகளை வெளிப்படுத்த ,பழந்தமிழ் மக்கள் , இசைத்தூண்கள்,இசைச்சிற்பங்கள்,இசைக்கல்வெட்டுகள்,போன்றவற்றையும் நிறுவினர்.
குடுமியான்மலை இசைக்கல்வெட்டு தமிழிசையின் சுரங்கங்கள் பற்றிய தகவலையும் தருகிறது.இத்தோடு 24பண்கள்,12தான சுரங்கள்,72மேளகர்த்தாக்கள் போன்ற சிறப்பான விடயங்களையும் தமிழிசை அடக்கியிருந்தது.
இவ்வாறு வளர்ச்சி பெற்ற மரபுத்தமிழிசையானது ,நாயக்கர் காலத்தில் முகம்மதியர்களின் வருகையாலும்,பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் மேற்கத்தேய இசையின் காரணமாகவும் ,கலப்பிற்குள்ளானது.இதன் விளைவாக அதன் தனித்தன்மை கெடத்தொடங்கியது. அதாவது ஐரோப்பிய இசையும், ஹிந்துஸ்தானி இசையும் தமிழிசைக்குள் புகுந்து கொண்டன.இதனால் பிற மொழி அம்சங்களும் அவற்றின் வரையறைகளும் தமிழிசையுடன் சேர்ந்து ஒன்றாகின.இதைவிட கி. பி 16ம் நூற்றாண்டளவில் சிறப்புப் பெற்ற கர்நாடக இசைக்கும் தமிழிசைக்கும் பலவிதமான ஒற்றுமைகள் உண்டு என்றும்,இன்று தழைத்தோங்கி நிற்கும் கர்நாடக இசையே தமிழிசையின் மறு வடிவம் என்ற கருத்துகளும் நிலவிவந்தன.இவ்வளவு காலமும் தமிழிசையின் தனித்தன்மையை நோக்கிய மக்கள் பின்னர் வேறு இசையில் காணப்படும் ஒற்றுமை வேற்றுமை போன்றவற்றை நோக்கத்தொடங்கினர்.
இதே போல் ஈழத்திலே 13ம் நூற்றாண்டு காலப்பகுதியில் கண்ணகி வழக்குரை என்ற நூல் எழுந்தது. இந்த நாட்டாரிலக்கியமானது இசையோடு கூத்து வடிவில் ஆடப்பட்டு வந்தது.பிற்பட்ட காலத்திலும் பாடி ஆடப்பட்டு வந்திருக்கிறது.பின்னர் தென்னகத்தில் ஏற்பட்ட நிலையைப்போலவே ,ஈழத்திலும் மரபுத்தமிழிசை மங்கத்தொடங்கியது.
தமிழர்களின் தனித்துவமாகக் காணப்படும் இவ்விசையானது இன்றும் ஆங்காங்கே மருவிக்காணப்பட்டாலும் ,அவற்றைப் பாதுகாப்பதிலும் , வளர்ப்பதிலும் யாரும் முன்னிற்பதில்லை.இதற்குப் பிரதான காரணம் எம் சமூகத்தில் காணப்படும் சாதிப்பாகுபாடே ஆகும்.
ஏனெனில் மரபுத்தமிழிசை அம்சங்களை இன்றும் பாதுக
ஏனெனில் மரபுத்தமிழிசை அம்சங்களை இன்றும் பாதுகாக்கும் அல்லது வெளிப்படுத்தும் கலைஞர்களை, கீழ் நிலையில் பாகுபடுத்தி வைத்திருப்பதே பிரதான காரணமாகும்.
இதைவிட அந்நிய கலாசார மோகம் பல வழிகளிலும் எம் பண்பாட்டு பாரம்பரியங்களை மறக்கச் செய்து , மாய உலகிற்குள் எம் மரபுகளை முடக்கிவிட்டுள்ளது.
ஆனாலும் மேற்கத்தேய நாடுகளில் தமிழரின் மரபுத்தமிழிசைக்கு இன்னமும் வரவேற்பு இருப்பதும் கண்கூடு. எனவே நாங்கள் மறத்தமிழர்கள் என்று வீர வசனம் பேசுவதை நிறுத்திவிட்டு , நம் பாரம்பரிய தமிழிசையை உலகமெலாம் பரவச்செய்வோம்
மிதிலைமாறன்
ஊடகப்பயிலுனர்.
குறிப்பு:- Fme Inst எமது ஊடகப் பயிலுனர்களால் பயிற்சிக்காக எழுதப்படுகின்றன கட்டுரைகள் இங்கே தொகுக்கப்படுகின்றன. தொடர்ச்சியாக இத்தளத்தில் வெளியிடப்படும் கட்டுரைகள் தொடர்பான கருத்துக்களை நண்பர்கள் பகிர்ந்து கொள்ளளலாம்.