ஆண்டு ஒன்று பிறந்தால் புதிய எதிர்பார்ப்புக்கள் ஏற்படுவது இயல்பானது. தமிழர்களின் வாழ்வில் எல்லாம் ஏமாற்றமாய் தொடர 2018ஆம் ஆண்டு பிறந்தால் வெறும் வயிறுடன் எங்கள் சிறுவர்கள் கல்வி கற்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இன்று (02.01.2018) பாடசாலை திறந்தபோது வருகை தந்த எத்தனை மாணவர்கள் வெறும் வயிற்றுடன் வந்திருப்பார்கள்? இலங்கையில் உலக உணவுத் திட்டம் நிறுவனம், முன்னெடுத்திருந்த பாடசாலை இலவச உணவுத் திட்டத்தை சில மாகாணதங்களில் நிறுத்திக்கொண்ட போதும் வடக்கு மாகாணத்தில் இந்த திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கபட்டது. அதற்கான காரணம் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்திற்கு இந்த திட்டம் மிகவும் அவசியமான ஒன்றாக காணப்பட்டது.
இந்த நிலையில் 2017ஆம் ஆண்டுடன் உலக உணவுத் திட்டத்தின் பாடசாலை இலவச உணவுத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இத்தகையதொரு அறிவித்தல் வந்தபோதும் எப்படியும் 2018இல் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற எதிர்ப்பார்ப்பும் பலருக்கும் இருந்தது. மாறாக உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. நிச்சயமாக இந்த விடயம் லட்சக்கணக்கான சிறுவர்களை பாதிக்கும் ஒரு விடயமாகவே இருக்கும். போரினால் சொத்துக்களையும் சொந்தங்களையும் இழந்த பல்லாயிரக்கணக்கான சிறுவர்களுக்கு இந்த உணவுத் திட்டம் பயனளித்து வந்தது. அவர்களின் பசியை தணித்து வந்தது. பாடசாலை உணவூட்டல் திட்டம் தொடர்பான பணியை புரியும் பொருட்டு கிளிநொச்சி கரைச்சிக் கோட்ட அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றிய காலங்களில் மேற்பார்வை நிமித்தம் பாடசாலை செல்லுகின்றபோது இத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து நன்கு உணர்ந்துள்ளேன்.
உலக உணவுத் திட்டம் நிறுவனம் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் மாணவர்களுக்கு உணவினை வழங்கி வந்தது. தரம் ஒன்று முதல் ஒன்பது வரையிலான வகுப்புக்களை சேர்ந்த மாணவர்களை தனது இலவச உணவுத் திட்டத்தில் உள்ளடக்கியிருந்தது. பாடசாலையில் சமைத்த மதிய உணவு வழங்கப்பட்டது. இதற்காக அரிசி, சத்தூட்டிய எண்ணைய், பருப்பு, அடைக்கப்பட்ட மீன், காய்கறிகள் என்பன பாடசாலைக்கு வழங்கப்பட்டு, பாடசாலையில் வைத்து சமைத்து மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதற்காக யப்பான், கனடா போன்ற நாடுகள் உதவியினைப் புரிந்திருந்தன. போர், இயற்கை அனர்த்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அல்லது நாட்டின் சில பகுதிகளுக்கு வழங்கப்படும் இந்த உதவி வடக்கு மாகாண சிறுவர்களின் பசியை ஆற்றியதும் நன்றிக்குரியது.
ஆனால் தற்போது இந்த திட்டம் வடக்கு மாகாணத்தில் நிறுத்தும் அளவிற்கு வடக்கு மாகாணத்தில் பொருளாதார மேம்பாடுகள் ஏற்பட்டு விடவில்லை. கிளிநொச்சியில் உள்ள பல்வேறு பாடசாலைகளுக்கும் களத் தரிசிப்பை மேற்கொண்ட வகையில் வடக்கு மாகாண சிறுவர்களின் பசியினை போக்கி அவர்களை கல்வியை பற்றிக் கொள்ள இந்த திட்டம் பெரும் உதவி புரிந்ததை கண்கூடாக காண முடிந்தது. பாடசாலை சென்றால் பசியிருக்காது என்று வருகை தரும் பல மாணவர்களுடன் பேசியிருக்கிறேன். சிறுவர்கள், வளரும் வயதினர் உணவை கேட்டு வாங்கவும் அல்லது உணவு தொடர்பில் பேசவும் தயங்குவார்கள். காலையில் என்ன உணவு உண்டீர்கள் என்று வினவினால், உணவை உட்கொள்ளாமல் விட்டாலும் அவை பற்றி பேச தயங்குவார்கள்.
வெவ்வேறு வழிகளின் மூலம் உரையாடிச் செல்லுகின்றபோதே மாணவர்கள் எந்த நிலையில் பாடசாலை வருகிறார்கள் என்பதை உணர முடியும். தாய் தந்தையரை இழந்து, உறவினர்களுடன் வளரும் பிள்ளைகளுக்கு இந்த உணவே ஒரு அன்னை ஊட்டும் உணவுபோல அமைகிறது. வன்னியில் பல பிள்ளைகளின் தாய்மார்கள் இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு பண்ணைகளில் பணிபுரிகின்றனர். அத்துடன் கண்ணி வெடி மற்றும் மதிவெடி அகற்றும் வேலைகளிலும் பல பெண் தலைமைத்துவ குடும்பப் பெண்களும் ஏனைய குடும்பங்களும் வேலை பார்க்கின்றனர். அவர்களின் பிள்ளைகள் எல்லாம் இந்த உணவை பெரிதும் நம்பியிருப்பவர்கள். மேற்குறிப்பிட்ட வேலைகள் பிள்ளைகளின் படிப்பையும் அவர்கள்மீதான கரிசனையையும் அவர்களின் உலகத்தையும் பெரிதும் பாதிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன.
இந்நத நிலையில் உலக உணவுத் திட்டத்தின் இலவச உணவு அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது. இதனைத் தவிர வீட்டில் அடுப்பெரியாத பிள்ளைகளுக்கு இந்த உணவே பசி தீர்க்கும் அமுதம். பசியோடு உணவுக்காக பள்ளிக்கூடம் வந்து, உணவுக்கான மணியோசைக்காக மாணவர்கள் காத்திருக்க, இந்த உணவுத் திட்டம் இன்றோடு நிறுத்தப்படுகிறது என்ற இச் செய்தி பெரும் துயரத்தைத் தருக்கிறது. தாயை இழந்து, தந்தையை இழந்து, இருவரையும் இழந்து, பொருளாதாரத்தால், சமூக நெருக்கடிகளால் நலிவுற்ற எண்ணற்ற குழந்தைகள் நினைவுக்கு வருகின்றனர். பசியும் துயரமும் போரின் வடும் நிலைத்துவிட்ட அந்த முகங்கள் நினைவுக்கு வருகின்றன. வெறும் வயிற்றுடன் கல்வி கற்க முடியாது என்பதை அடிப்படையாக கொண்டே உலக உணவுத் திட்டம் இந்த திட்டத்தை முன்னெடுத்து வந்தது.
ஆனால் இந்த திட்டம் வடக்கில் நிறுத்தப்படுகின்றபோது, சுமார் ஒன்றரை லட்சம் சிறுவர்கள் பாதிக்கப்படப்போகின்றனர். வெறும் வயிற்றுடன் அவர்கள் கல்வி கற்கப் போகின்றனர். இதனால் மாணவர்களின் இடைவிலகம் அதிகரிக்கலாம். அத்துடன் கல்வியில் பின்னடைவை ஏற்படுத்தலாம். இலங்கையில் கல்வியில் பின்னிலையில் இருந்த வடக்கு மாகாணத்தை இந்த விடயம் மேலும் பின்நோக்கி தள்ளலாம். உலக உணவுத் திட்டம் இதுவரையில் ஆற்றிய பணி மகத்தானது. எனினும் வடக்கின் போர் வடுக்களும் பொருளாதார உள நலிவுகளும் நீங்காத இக் கால கட்டத்தில் அதன் பணி இன்னமும் தேவைப்படுகின்றது. இலங்கையில் அவ்வப்போது இலவச உணவு தொடர்பில் பல்வேறு திட்டங்கள் முன் வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களின் விசேட தன்மை கொண்ட சிக்கல்களை அடிப்படையாகக் கொண்டு, மாணவர்களின் பசியை தவிர்க்கும் முகமாகவும் அவர்களின் ஆரோக்கியத்தையும் உள நலத்தையும் அடிப்படையாகக் கொண்டும் வடக்கு கிழக்கு மாகாண அரசுகள் உலக உணவுத் திட்ட நிறுவனத்துடன் இணைந்தும் கோரிக்கைகளை முன்வைத்தும் விசேட பாடசாலை உணவுத் திட்டம் ஒன்றை முன்னெடுப்பது காலத்தின் கட்டமானது. உரிமை இல்லை, உறவுகள் இல்லை என்று பெரியவர் மனப் பசியில் உருக்குலையும் எமது மண்ணில் ஏதுமறியாத சிறுவர்கள் பசியிருந்து தம் கல்வியையும் எதிர்காலத்தையும் கருக்கிவிட நாம் இடமளிக்கக்கூடாது. இதில் மௌனித்திருப்பதும், பொறுப்பற்று இருப்பதும் நாமே எம் மண்ணின் செடிகளை பசியில் கருக விடும் செயலுக்கு ஒப்பானது.
- தீபச்செல்வன்
மூலம்- குளோபல் தமிழ்