கொத்து ரொட்டி என்றவுடனே எம்மில் சிலபேரின் நாக்கில் எச்சில் ஊறும் ஆனால் இவன் என்னடா கொத்து ரொட்டி அரசியல் என்கிறானே என்ற ஆர்வத்தில் நீங்கள் வாசிப்பது எனக்கு தெரிகிறது..
ஆம் கொத்து ரொட்டியைப் போன்று இதனை பார்க்கும் போது இதைப்போல் வேறொன்றும் இல்லை என்ற எண்ணம் எங்களுக்கு தோன்றும். உண்போம்..! காலத்தின் கோலத்தில் ஒருநாள் அவதியுறுவோம்..!
எமது வடக்கு கிழக்கில் இருக்கின்ற தமிழ் கட்சிகளின் கூட்டுப் போல இந்த கேடுகெட்ட கொத்துரொட்டிக்குள்ளும் வெங்காயம் , கோதுமை ,பச்சை மிளகாய் ,லீக்ஸ் போன்ற நிறையப் பதார்த்தங்கள் இருக்கிறது..! இவற்றை ஒன்றாகச் சேர்த்தாலும் ஒருகாலமும் அவை ஒன்றோடு ஒன்று கலந்துபோகாது .
எங்களுடைய பொருளாதாரத்திலும் இந்த கேடு கெட்ட கொத்து ரொட்டி கை வைத்து விட்டது. வெறும் கழிவுகெட்ட (போஸ்டர் மா) கோதுமைமாவிற்கு காசை அள்ளிக்கொடுக்கிறோம். இந்த கேடுகெட்ட கொத்து ரொட்டி அரசியலுக்கும் வாக்கை அள்ளிவிதைக்கிறோம்.
எங்கள் உணவுப்பண்பாட்டுக்கு ஒத்த உணவு இதுவல்ல ஆனால் இதற்கு இளைஞர்கள் மத்தியில் கடும் வரவேற்பு மிகுந்து காணப்படுகிறது. இதனை இளைஞர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். கொத்துரொட்டியை தூக்கி எறியுங்கள். ஒரு காலமும் இந்த கொத்துரொட்டியால் எங்கள் வயிற்றுப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது.
அதுபோல, வவுனியா பேரூந்து நிலையப்பிரச்சினை , பொருளாதார மத்திய நிலையப்பிரச்சினை என்று புதிய புதிய வயிற்றுக் கோளாறுகள் வந்துதான் தீரும் .
கொத்துரொட்டிகளிலும் நிறையவகை உருவெடுத்து இருக்கின்றது . சைவக்கொத்து , மசாலாக்கொத்து , இடியப்பக்கொத்துப் போன்று தமிழர் அரசியலிலும் தமிழர் விடுதலை கூட்டணி , தமிழ்த்தேசிய பேரவை , தமிழ் தேசிய கூட்டமைப்பு எத்தனை வகையாக பிரிந்தாலும் அதன் பண்பு மாறாது. தேர்தல் காலம் வந்தால் கொத்து ரொட்டியை கொத்தும் போது சிதறி சிதறி தட்டுக்குள் விழுவது போல ஆசனப்பங்கீட்டுக்காக அடித்துக்கொண்டு, பிளவை வெளியே காட்டியும் காட்டாமலும் சேர்ந்திருக்கும்.
கொத்துரொட்டியை மறந்து விடுங்கள்.. அதற்காக பீட்சா, பர்கர் போன்ற அண்டைவீட்டவரை அழைத்துவிடாதீர்கள். அது இதைவிட கொடிது. பெரிய பின்புலத்துடன் ஆக்கிரமித்து காணப்படும் . இந்த கொத்து ரொட்டி அரசியலில் இருந்து விடுபெற தமிழீழ மக்கள் ஒன்றித்து கூட்டாஞ்சோறு ஆக்குங்கள்
க.சிம்சுபன்
ஊடகப்பயிலுனர்.
குறிப்பு:- Fme Inst எமது ஊடகப் பயிலுனர்களால் பயிற்சிக்காக எழுதப்படுகின்றன கட்டுரைகள் இங்கே தொகுக்கப்படுகின்றன. தொடர்ச்சியாக இத்தளத்தில் வெளியிடப்படும் கட்டுரைகள் தொடர்பான கருத்துக்களை நண்பர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.