யாழ்ப்பாண நகரை நன்கு அறிந்தவர்களா? அப்படியாயின் கண்களை சில நிமிடங்கள் மூடுங்கள்.
அகக் கண்களால் நகரை நினையுங்கள். இப்போது கண்களை திறவுங்கள்.
முதலாவது படத்தை கிளிக் செய்து பாருங்கள்.
வேலியே பயிரை ?
இன்றைய தினம் பிற்பகல் 1.45 மணிக்கு யாழ் நகரில் நின்றேன்.
கஸ்தூரியார் வீதி தெற்கிலிருந்து வடக்கு நோக்கி மட்டும் போகும் ஒரு வழிப் பாதை.
வடக்கிலிருந்து தெற்காக வாகனங்கள் வந்தால் போக்குவரத்து விதியை மீறியதாக குற்றம்.
போக்குவரத்து பொலிசாரும் குற்றம் எழுதி தண்டம் விதித்து சாரதி அனுமதிப் பத்திரத்தை வாங்கி ரசீது கொடுக்க வேண்டும்.
ஆனால் 1.30 மணி முதல் 1.55 மணி வரை இவ் வீதியில் வடக்கிலிருந்து தெற்காக மரண ஊர்வலம் ஒன்றுடன் வாகனங்கள் வரவும் ,நகரின் அமைதியைக் குலைத்து பட்டாசுகள் கொளுத்தவும் அனுமதி வழங்கப்பட்டது.
போக்குவரத்துப் பொலிசார் வீதியை மறித்து மரண ஊர்வலம் போகவும் காவல் நின்றனர்.
இறந்தவர் வீடு பிறவுண் வீதி முதலாம் ஒழுங்கைக்கு அண்மையில் உள்ளது. மாரடைப்பில் காலமாகிய 40 வயதான கோடீஸ்வர முதலாளி.
அவரது வீட்டிலிருந்து தெற்காக நாவலர் வீதி வந்து மேற்காக ஐந்து சென்று உள்பாதையால் கொட்டடி இந்து மயானத்திற்கு செல்லலாம்.
நகர மத்தி போக்குவரத்தை குழப்பி பட்டாசுகள் பல ஆயிரம் ரூபாவிற்கு வெடித்து பொது சமூக அமைதியை குழப்பி யாழ் மாநகர போக்குவரத்தை குழப்ப வேண்டிய அவசியமில்லை.
அடுத்தவரிற்கு உதவி செய்யாவிட்டாலும் இடையூறு செய்யாமல் வாழ்வதே நாம் செய்யும் முதலாவது புண்ணிய காரியமாகும். போகிற ஆன்மாவும் புண்ணியமாகப் போகும்.
முதலாளி வர்க்கத்தின் விளம்பரங்களால் வாழும் ஊடகங்களும் இந்த செய்தியை படங்களை நிச்சயம் பிரசுரிக்கவே…. மா……ட்டாது.
4 வருடத்திற்கு முன்னரும் யாழ் நகர ஐந்து சந்தியில் அரை மணி நேரம் வீதியை மறித்து இது போன்றதொரு நிகழ்வு நடந்தது.
முகநூலிலும் பதிந்தேன். உரிய இடத்திற்கும் மின்னஞ்சல் செய்தேன்.
விளைவு பூச்சியம்.
சமூக வலைத்தளங்களின் பதிவுகள் சமூக மாற்றத்திற்கு செல்வாக்குச் செலுத்தும் காலம் இது. பார்ப்போம் இப் பதிவினால் ஏதாவது மாற்றம் வருகிறதா?
இங்கு எழுகின்ற கேள்வி என்னவென்றால் சட்டம் ஒழுங்கை யார் பார்ப்பது.
வேலியே……?
எனக்குள்ள மிகச் சொட்டு கவலை என்னவென்றால் எனது காலத்தில் மட்டுமல்ல எனது பிள்ளைகளின்…….. காலத்திலும்………….. இயற்கை வளங்கள் கொழிக்கும் எமது தாய் நாடு அபிவிருத்தி அடையவே…… மாட்டா…….து.
– வே.தபேந்திரன்