கடலோரம் சிறு குடிசை…
ஏழையவன் மாளிகையாம்…!
கடலன்னை மடிதனிலே…
மீனவனின் வாழ்விடமாம..!
கடலை நம்பி வலை விரித்து…
கண் விழித்துக் காத்திருப்பான்..!
கண்ணாளன் வரவை எண்ணி…
கண்ணீருடன் அவன் மனையாள்..!
ஏக்கத்திலே தொடரும் – இந்த
எளியவர்கள் வாழ்க்கை வட்டம்..!
விடியல் தினம் கண்டதுண்டு…
இவன் வாழ்வில் விடியல் ஏது…?
அள்ளித்தந்த கடல்த்தாயும்…
அள்ளிச் செல்லும் கலிகாலம்..!
சீற்றம் கொண்டால் காலநிலை…
ஏழை மகன் என்ன செய்வான்..?
அன்னியனின் அடாவடிகள்…
கடல் நடுவில் அரங்கேறும்..!
உடல் வருத்தி உயிர் பிழைத்து…
கரை சேர்தலே போராட்டம்…!
கனவுகள் பல சுமந்த படி…
கட்டுமரம் கடலில் செல்லும்..!
அலைகடல் ஓசையாய் – நித்தம்
ஒலிக்கிறது மீனவன் குரல்…!!
– வேலணையூர் ரஜிந்தன்.