மனித இனத்தின் இயற்கைக்கு எதிராக செயற்பாடுகளின் விளைவுகளால் இன்று ஒட்டு மொத்த மனிதகுலத்துக்கு மட்டுமன்றி புவிவாழ் அனைத்து உயிரினங்களுக்கும் வாழமுடியாத நிலை ஏற்படுகிறது.ஏற்படுகிறது. தாயாய் விளங்கிய இயற்கை அன்னை இந் நூற்றாண்டில் அபாயகரமானதாக மாறிவிட்டது.
மனிதன் இயற்கையை வெல்ல நினைத்தன் விளைவே நிகழ்கால இயற்கை அனர்த்தங்களின் பெருங்காரணம். இயற்கைக்கு இசைந்த வாழ்வை மறுத்த மனிதகுலம் இயற்கையை வெல்ல அல்லது வளைக்க முற்பட்டதால் ஏற்பட்ட பாரிய விளைவாக காலநிலை மாற்றம் காணப்படுகின்றது. இன்றைய உலகம் எதிர்கொள்ளும் மிகப்பாரிய வெல்ல முடியாத சவாலாகவும் இதுவே காணப்படுகிறது.
இயற்கை ஒரு கட்டமைக்கப்பட்ட ஒழுங்கு. இதன் கட்டமைப்பில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் இயற்கை வட்டத்தை பாதித்து சூழல் சமநிலையைக் குழப்புகிறது. இயற்கை வளங்களில் பிரதானமானது காட்டுவளம் ஆகும். தானாக உருவாக கூடியது இதன் சிறப்பம்சம்.
காடுகளை யாரும் விதைப்பதில்லை. காட்டு மரங்களை மனித குலத்தால் நட்டு வளர்க்கவும் முடியாது அப்படியொரு தேவையும் இல்லை. காடுகளை விதைப்பதில் பறவைகள் பாரிய பங்கு வகிக்கின்றன. அதற்காக எல்லா இடங்களிலும் ஒரே வகையான மரங்கள் முளைப்பதில்லை. இது இயற்கையின் நியதி. அதேபோல் இயற்கையை அழிக்க மனிதனால் மட்டுமே முடிகிறது.
ஆனால் மீழ்காடாக்கம் செய்யக்கூடிய வளமும் அறிவும் இப்பூவுலகிலேயே மனிதனுக்குத் தான் உண்டு.
உலகமயமாதலினால் விரைவுபடுத்தப்பட்ட வாழ்க்கை நிலைகள் காரணமாக பல தேவைகள் நிமித்தம் மனிதன் காடுகளை அழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறான். குடியிருப்புகள் அமைத்தல், கட்டடங்கள் அமைத்தல், தளபாடங்கள் உற்பத்தி, விற்றல், பயிர்ச்செய்கை போன்றவை அவற்றில் சிலவாகும். அத்தோடு காட்டுத்தீ போன்ற காரணங்களாளும் காடுகள் அழிவடைகின்றன.
இதன் காரணமாக தற்காலத்தில் புவி எதிர் நோக்கும் மிக பாரிய பிரச்சினையாக பூகோள வெப்பமயமாதல் காணப்படுகின்றது. உலக நாடுகள் அனைத்தும் தற்காலத்தில் இதற்கு எதிராக குரல்கொடுக்கின்றன. எனினும் இதன் உக்கிரம் குறைந்ததாக இல்லை.
உலக வெப்பமயமாதலின் காரணமாக நிகழ்காலத்தில் அதிக வறட்சி நிலவுகிறது. அத்தோடு துருவப் பகுதி பனிக்கட்டிகள் உருகத் தொடங்கி விட்டது. அத்துடன் இயற்கை வட்டங்களில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந் நூற்றாண்டில் மிக பாரிய சவாலாக இது விளங்குகிறது.
அதி வெப்பம் காரணமாக துருவ பனிக்கட்டிகள் உருகுவதால் தீவுப் பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு வளி மாசடைவால் புவியின் கவசமான ஓசோன் பாதிப்படைந்து புற ஊதாக் கதிர்கள் புவியை வந்தடைகின்றது. இதனால் புதிய வகையான நோய்கள் பரவுகின்றன. சில புவி வாழ் உயிரினங்கள் அழிவடைந்து விட்டன. இந் நிலைதொடர்ந்தால் இந் நூற்றாண்டுடன் நாம் வாழும் புவியின் ஆயுள் முடிவடைவது திண்ணம்.
தற்போது இயற்கை வட்டத்தின் முதன்மையான மழை வட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. மனிதன் மரங்களை வெட்டுவதன் காரணமாக ஆவியுயிர்ப்பு செயற்பாடு குறைந்து மழைபொழிவு குறைவடைந்துள்ளது. இதன் காரணமாக நிகழ்கால புவி வாழ் உயிரினங்கள் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றன.
கடும் வறட்சி காரணமாக குளங்கள் வற்றிப் போய் விவசாயம் பாதிப்படைந்துள்ளது. அத்தோடு காட்டு விலங்குகள் குடி நீர் தேடி வாழ்விடங்களுக்குள் புகும் நிலையும் காணப்படுகின்றது. நிலக்கீழ் நீர் வற்றி செல்கிறது. இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
அத்தோடு நீரில் கனியுப்புகள் செறிவு அதிகரித்து குடிப்பதற்கு உகந்ததாக இல்லை. இதன் காரணமாக மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது. உணவு உற்பத்தி குறைவாக உள்ளது. உணவு நீர் தட்டுப்பாடு நிலவுவதற்கு ஒர் ஆரம்பப் புள்ளியாக நிகழ்காலம் காணப்படுகிறது.
இதற்கு பின்னராவது மனிதன் தன் முறையற்ற செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். முதலில் ஒவ்வொரு தனி நபரும் மாற வேண்டும். இயற்கையை நேசிக்கும் மனநிலையை பிள்ளைகள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். மரங்களை நடும் பழக்கத்தை ஊக்குவித்தலும் அவசியமாகிறது.
அத்தோடு அரசு மரம் நடும் திட்டங்களை மக்கள் மத்தில் ஊக்குவிக்க வேண்டும். ஆழமான குழாய் கிணறுகள் தோண்ட அரசு அனுமதி வழங்குவதை நிறுத்த வேண்டும். குளங்களை புனரமைப்பு செய்ய வேண்டும். மழை நீரை தேக்கி வைக்கும் பாரிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அத்தோடுகாடுகளை மீழ் உருவாக்கும் திட்டங்களை உருவாக்க வேண்டும். கடுமையான சட்ங்கள் மூலம் காடழிப்பை நிறுத்த வேண்டும்.
இதற்கு பின்னரும் மனித இனம் இயற்கையை வெல்ல நினைப்பதை விடுத்து இயற்கையோடு இசைந்து வாழப் பழக வேண்டும். இப் புவிதனை எதிர் கால சந்ததிக்காக பாதுகாக்கும் கடமை அனைவருக்கும் உண்டு. நிலை உணர்ந்து செயற்பட்டால் புவியின் ஆயுள் அதிகரிக்கும்.
தயாழினி.இ
ஊடகப் பயிலுனர்.
குறிப்பு:- Fme Inst எமது ஊடகப் பயிலுனர்களால் பயிற்சிக்காக எழுதப்படுகின்றன கட்டுரைகள் இங்கே தொகுக்கப்படுகின்றன. தொடர்ச்சியாக இத்தளத்தில் வெளியிடப்படும் கட்டுரைகள் தொடர்பான கருத்துக்களை நண்பர்கள் பகிர்ந்து கொள்ளளலாம்.