காற்று இந்த இடத்தில் தான் இருக்க வேண்டுமென்று யாரும் கட்டளை போட முடியாது. அதே போல சித்தர்களை இங்கு இருப்பார்கள், இங்கு இருக்கமாட்டார்கள் என்று சொல்ல முடியாது. எங்கு வேண்டுமென்றாலும் இருப்பார்கள். எப்போதாவது ஒரு முறை தான் அவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை மற்றவர்களுக்கு அடையாளம் காட்டுவார்கள்.
பல நேரங்களில் அவர்களை இவர் சித்தராகயிருப்பாரோ என்று சந்தேகப்பட முடியாத அளவிற்கு மிக கீழ்தரமான இடத்தில் கூட இருப்பார்கள். பைத்தியகாரர்கள் போலவும், பிச்சைகாரர்கள் போல மட்டுமல்ல திருடர்கள் போலவும் இருப்பார்கள். ஒரு முறை திருக்கோவிலூர் ரயில் நிலையத்தில் அப்படி ஒருவரை சந்தித்தேன்.
எனக்கு பக்கத்தில் போட்டிருந்த சிமெண்ட் பெஞ்சில் முரட்டு ஆசாமி வந்து அமர்ந்தார். அவரிடமிருந்து வந்த சாராய நெடி குடலை புரட்டியது. அந்த நாற்றம் வேறு போதாது என்று சுருட்டு புகையை ஊதி தள்ளி கொண்டிருந்தார். அவரை பார்ப்பதற்கே அருவெறுப்பாக இருந்தது. பக்கத்தில் இருப்பவர்களின் சங்கடத்தை உணராத இங்கிதம் தெரியாத மனிதர்களை வேறு எப்படி பார்க்க முடியும்.
என் கண்ணெதிரிலேயே வேறு ஒரு அட்டூழியம் செய்தார். ரயில் நிலையத்தில் ஆள் ஆரவமில்லாத நேரம் இது. உடனடியான ரயில்வரத்து எதுவும் இல்லை. ரயில்வே ஊழியர்களின் நடமாட்டம் கூட இல்லை. மனித சஞ்சாரம் இல்லாத இடத்தில் அவரும் நானும் அடுத்த ரயிலுக்காக காத்து இருக்கும் ஒரு இளைஞரும் மட்டுமே இருந்தோம்.
மற்றபடி நான்கு காக்கைகள், தண்டவாளத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தன. அந்த சாராய மனிதர் யாருமே எதிர்பாராத ஒரு காரியத்தை செய்தார். மறைத்து வைத்திருந்த பேனா கத்தியை எடுத்து பக்கத்தில் இருந்த இளைஞன் முன்னால் நீட்டி பணத்தை எடு என மிரட்டினார்.
அப்படி ஒரு சம்பவம் என்னருகில் நிகழும் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. உடல் எல்லாம் வியர்த்து நாக்கு ஒட்டிக் கொண்டது. பயத்தில் கத்த கூட முடியவில்லை. அந்த இளைஞன் நிலையோ மிகவும் பரிதாபகரமாக இருந்தது. கைகள் நடுங்க சட்டைபையில் இருந்த நூறு ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம் நீட்டிய அவன் அவர் பணத்தை பார்க்கும் அவகாசத்தில் நோட்டை கீழே போட்டுவிட்டு எழுந்து ஓடினான்.
ரயில்வே நிலைய ஊழியர்களை அழைத்து வரதான் ஓடினான். ஆனால் அதற்குள் அந்த சாராய மனிதர் ஒரு விந்தை காரியம் செய்தார். பணத்தை தரையில் போட்டு யாரோ எதிரியை மிதிப்பது போல் மிதித்தார். எனக்கோ பயம் அதிகரித்து விட்டது. இவன் குடிகாரன், திருடன் மட்டுமில்ல பைத்தியகாரனும் கூட தனது மூடு மாறி நம்மிடம் வந்து எதாவது வம்பு செய்தால் எப்படி சமாளிப்பது, கத்தி யாரையாவது கூப்பிட வேண்டியதுதான்
என்று வாய் திறந்த போது வாயை மூடு உன்னை எதுவும் செய்ய மாட்டேன். என்று சொன்ன அவர் தண்டவாளத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்தார். நம்பினால் நம்புங்கள் சற்று தொலைவு நடந்த அவர் என் கண்ணெதிரே காற்றில் கரைந்து மறைந்து போனார்.
அதற்குள் ரயில் ஊழியர்களுடன் வந்த அந்த இளைஞர் அவன் எங்கே என்று என்னிடம் கேட்டார். திகைப்பின் உச்சியிலிருந்த எனக்கு பேச்சு வரவில்லை. அவர் போன திசையை சைகையால் காட்டினேன். அதற்குள்ளே கீழே மிதிப்பட்டு கிடந்த நூறு ரூபாய் நோட்டை கண்டெடுத்த ரயில்வே ஊழியர் அவன் பைத்தியகாரன் போல் இருக்கிறது. ஓடிவிட்டான் விட்டுவிடுங்கள் என சொன்னார். இந்த சம்பவம் ஏன் நடந்தது என்று இன்று வரை விளங்கவில்லை என்றாலும் திருடர்களாகவும் சித்தர்கள் வருவார்கள் என்பது புரிந்தது.
மேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்