அவள் ஒரு விதவை
அழகு நிறைந்த அவள்
அன்பு நிறைந்த மனசு
பூப் போன்ற மென் முகம்
மழலை மனதுடன் குமரியவள்
பார்ப்போர் வியக்கும் பாசக்காரி
குறும்புகள் செய்யும் முதிர்ந்த குழந்தை
குறும்புப் பேச்சில் குடும்பமே மகிழும்
கல்யாணப் பேச்சில்.
சாதகம் பார்த்து சாதியும் தேடி
சோதிடம் சொன்னார்
பத்தும் பொருத்தமென்று
பொருந்திய சாதகங்கள்
நிச்சயித்த நாளில்
இணைந்தது இருமனம்
வெள்ளை மனம் கொண்டவளுக்கு
கள்ளம் இல்லாக் கணவன்
உற்றாரும் உறவினரும்
ஊர் வியக்க புகழ்ந்தார்கள்
என்ன ஜோடிப் இதுவென்று
காண்போர்கள் மலைத்தார்கள்
கண்ணூறு பட்டதுவோ
கலைந்தது இவள் கோலம்
காலன் இவள்மீது காதலில்
வந்துநின்றான்
கண்மணியாள் ஆருயிரை
அப்படியே வாதம் செய்தான்
ஜோதிடர் அனைவரிலும்
கோலமயில் கோபம்கொண்டாள்
உற்றார்களை உதாசினம் செய்தாள்
போதாத காலமென்று
தன்மீதும் பழிபோட்டாள்
ஆறுதல் சொல்ல அயலவர் வர
விதியென்ன இதுதானோ
வஞ்சியவள் விம்மி நின்றாள்
கண்ணோரம் நீரும் கசிய
கணவன் நினைவும் மலர
சிரிப்பொலியில் நிறைந்த இல்லம்
ஒளியிழந்து இருள் சூழ
நிஐங்கள் எல்லாம் நிம்மதி இழக்க
பசுமை இழந்த பாலைவனம் போல்
துணையிழந்த தனிமரமாய்
துயரங்கள் சுமக்கும் அவள்
காலையில் போட்ட கோலங்கள் போல்
கலைந்து போன அலங்கோலமாய்
அவள் வாழ்
தாலிப்பொருத்தம் இல்லாதவளென்று
தண்டிக்க முடியாத சமுதாயம்
கேலிகள் பேசிடவே
வேதனையின் உச்சத்தில்
நாளாந்தம் சுடுசொற்கள்
அணிகின்றாள் ஆரணங்கவள்
ஜோடி போட்டு சென்ற வீதிகளும்
இவளை பார்த்து நகைக்க
வீட்டு மூலையில் இருக்கிறாள்
சமூதாயம் பிழையென்று
விமர்சிக்க யாருமில்லை
மறுவாழ்வு அவள் கொண்டால்
மானங் கெட்டவள் எனப் பேச்சு
துணை இழந்த அவளுக்கு
துணையொன்று தேவையென்று
விடவில்லை யார் மூச்சும்
சாட்சிகள் இல்லாத
சமூதாயத்திற்கு பயந்தவள்
தனிமரமாய் வாழ்கிறாள்
ஒழுக்கம் தவறாத அவள் ஒருத்தி
வெள்ளை புடவையில் வருகிறாள்
மனச்சாட்சி இல்லாத மனிதர்கள்
அவள் மனம் வருந்த செல்கிறார்
அவள் ஒரு விதவை என்று!!
உயிர்ப்புடன் – தரணி.