மலையக அரசியல் களத்தில் இரு துருவங்களாக வலம்வரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் எம்.பியும், தொழிலாள் தேசிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் திகாம்பரமும் நாளை வெள்ளிக்கிழமை ஒரே மேடையில் அமரவுள்ளனர்.
இலங்கைக்கு இன்று விஜயம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை ஹற்றனுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
நோர்வூட் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையிலிருந்து மலையக மக்களுக்காக அவர் சிறப்புரையாற்றவுள்ளார். அத்துடன், இந்திய அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஹற்றன், கிளங்கன் வைத்தியசாலையையும் திறந்துவைக்கவுள்ளார்.
இதனால், ஹற்றன் எங்கும் வரலாறு காணாத வகையில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. புலனாய்வு அமைப்புகளும் உஷார்நிலையில் இருக்கின்றன.
பிரமுகர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள மேடையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் மனோ கணேசன், அமைச்சர் ப.திகாம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், ஆறுமுகன் தொண்டமான் எம்.பி., முத்துசிவலிங்கம் எம்.பி. உள்ளிட்டவர்கள் அமரவுள்ளனர்.
மலையகத்தில் ஏதேனும் ஒரு நிகழ்வுக்கு திகாம்பரத்தை அழைத்தால் அதில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பங்கேற்பதைத் தவிர்ப்பதும் அதேபோல் தொண்டமானை அழைத்தால் திகாம்பரம் அணி அந்நிகழ்வைப் புறக்கணிப்பதும் வழமையான சம்பவங்களாக இருக்கின்றன.
எனவே, இருகட்சிகளும் – தொழிற்சங்கங்களும் இணைந்தால் அதுகூட ஒரு அற்புதம் என சொல்லுமளவுக்கு அரசியல் பகைமை முற்றிப்போயுள்ளது.
இந்நிலையில்தான் விரும்பியோ, விரும்பாமலோ இந்தியப் பிரதமர் மோடியை வரவேற்க இருதரப்பும் இணைந்து செயற்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஓரணியாக மேடையில் அமர்வதற்குரிய சந்தர்ப்பமும் உரு வாகியுள்ளது.
எனவே, இதை ஒருநாளுக்கான கூத்தாக மட்டும் பார்க்காது, மலையக மக்களின் பிரச்சினையின்போது ஒன்றிணைந்து செயற்படுவதற்கான ஒரு ஆரம்பப்புள்ளியாக மலையக அரசியல்வாதிகள் பார்க்க வேண்டும் என்று மலையக புத்திஜீவிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மலையகத்தில் பலமானதொரு அரசியல் கூட்டணியை ஏற்படுத்துவதற்கும் இதை ஓர் அடித்தளமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அதேவேளை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகியவற்றுடன் இந்திய பிரதமர் மோடி தனித்தனியே பேச்சு நடத்தவுள்ளார். கொழும்பில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் சந்திக்கவுள்ளார்.
காந்தியின் மலையகப் பயணம்
1927 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி இந்தியாவின் அஹிம்சாவதி மகாத்மா காந்தி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இது அரசியல் ரீதியான பயணமல்ல.
மூன்று வாரங்கள் இலங்கையில் தங்கியிருந்த காந்தி கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், மாத்தளை, பதுளை, காலி, சிலாபம், ஹற்றன் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றிருந்தார்.
காசல்ரீ சமர்வில் தோட்டத்திலுள்ள செட்டியார் ஒருவரின் பங்களாவிலேயே ஹற்றன் பயணத்தின்போது காந்தி தங்கியிருந்தார். குறித்த ஆடம்பர பங்களா தற்போது சமர்வில் தமிழ் வித்தியாலயமாக இருக்கின்றது.
நேருவின் மலையக விஜயம்
1931ஆம் ஆண்டு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு வந்திருந்த இந்திய முன்னாள் பிரதமர் நேரு நுவரெலியாவில் ஒரு நாள் தங்கியிருந்தார்.
பின்னர் 1939 ஆம் ஆண்டு காந்தியின் கோரிக்கையின் பிரகாரம் மலையகத்துக்கு நேரு வந்திருந்தார். அக்காலப் பகுதியில் இலங்கையில் வாழ்ந்த இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு எதிராக பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன.
இதனைச் சமாளிப்பதற்கு – எதிர்கொள்வதற்கு பலமானதொரு கட்டமைப்பு அவசியமாகியிருந்தது. அதனை அமைக்கும் நோக்கிலேயே நேரு வந்திருந்தார்.
ஹற்றன், டன்பார்க் மைதானத்தில் காந்திரமானதொரு உரையை நேரு நிகழ்த்தினார்.
இதையடுத்து 1939 ஆம் ஆண்டு ஜீலை 25 ஆம் திகதி இலங்கை இந்திய காங்கிரஸ் உதயமாகியது. அதுவே சுதந்திரத்தின் பின்னர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாக மாறியது.
1954 இல் காங்கிரஸுக்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டதால் அஸில் பிரிந்து சென்று ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸை உருவாக்கினார். அதன்பின்னர் சி.வி.வேலுப்பிள்ளையும் பிரிந்து சென்று தொழிலாளர் தேசிய சங்கத்தை உருவாக்கினார்.
பின்னர் 1957ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி தனது மகள் இந்திராவுடன் நேரு இலங்கை வந்திருந்தார். அது அரசியல் ரீதியான பயணம் அல்ல.
புத்த ஜயந்தியின் 2500 ஆண்டைக் கொண்டாடும் வகையிலேயே இலங்கை அரசின் அழைப்பின்பேரில் அவர் வந்திருந்தார். இதன்போது அநுராதபுரத்துக்கு ரயிலில் சென்ற அவர், ஜயந்தி மாவத்தை எனும் புதிய நகரையும் ஆரம்பித்து வைத்தார்.
1987 காலப்பகுதியில் அப்போதைய இந்தியப் பிரதமர் இலங்கை வந்திருந்தாலும் அவர் மலையகத்துக்குப் பயணம் மேற்கொள்ளவில்லை. வடக்கு, கிழக்கு வாழ் மக்களுக்கு அரசியல் ரீதியான உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே அவரது பயணம் இடம்பெற்றது.