“செய்ய வேண்டியதை செய்ய வேண்டிய நேரத்தில் செய்யத் தவறுபவனும் முட்டாள்
செய்ய கூடாததை செய்ய கூடாத நேரத்தில் செய்பவனும் முட்டாள்”
என்கிறது தமிழரின் ஒரு முதுமொழி. ரஜினிகாந்த் எனப்படும் சிவாஜிராவ் தமிழக அரசியலில் அடியெடுத்து வைப்பதை தமிழகம் முழுவதுமே விருப்புடனும் வெறுப்புடனும் பேசுகிறது. ரஜினிகாந்த் என்பவர் யார்? அவரின் தகுதி என்ன? என்ற சிந்தனை துளிகூட இன்றி தன்னைப்பற்றி தன் தகுதி பற்றி கொஞ்சம்கூட சிந்திக்காமல் திட்டுகின்றார்கள். இது ரஜினிகாந்தின் அரசியல் வருகையுடன் என்னையும் அறிமுகப்படுத்தலாம் என்ற எண்ணமோ தெரியவில்லை. தமிழ் மூத்தமொழி, பழமைமிக்க மொழி, தமிழர் பண்பாடுமிக்க இனம் என்றெல்லாம் சொல்லும் நாங்கள் எவ்வளவு தாழ்ந்த சொற்களை பேசுகின்றோம். இவர்களின் பண்பு எங்கே போய்விட்டது. தரம் குறைந்த அரசியல் செய்து இன்று மிகவும் தரம் குறைந்த வகையில் பேசும் நிலைக்கு தமிழர்கள் வந்துவிட்டனர். இதை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. ரஜினிகாந்த் ஒரு கேள்வி கேட்கின்றார் தமிழர்கள் ஏன் இவ்வளவு தரம் குறைகிறார்கள் என்று. இதற்கு காரணம் தமிழக அரசியல்வாதிகளும், திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் குறிப்பாக நகைச்சுவை என்ற பெயரில் நடிக்கும் நடிகர்கள் பேசும் வார்த்தைகள் என்பனதான் என்று உறுதிசெய்யமுடியும்.
முதலில் யார் இந்த ரஜினிகாந்த். ஒரு பேருந்து நடத்துனராக இருந்து, அதிலிருந்து தனது முயற்சியாலும், திறமையாலும், அறிவாற்றலாலும் தமிழகம் மட்டுமல்ல இந்தியா கடந்து உலக அளவில் தமிழர்களுக்கு அப்பால் பிறமொழி மக்களிடமும் அடையாளம் பெற்ற ஒருவர். எனவே அவர்பற்றி பேசமுன்பு எனக்கென்ன தகுதியுண்டு என்று மீளாய்வு செய்தே பேச ஆரம்பிக்கவேண்டும். தமிழர் என்ற ஒரேயொரு தகுதி மட்டும் இதற்குப்போதாது என்பதை புரிந்துகொள்ளும் ஆற்றல் எமக்கு இருக்கவேண்டும். ரஜினிகாந்த்தை சந்தித்த எந்த ஒரு மனிதரும் அது ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கலாம், மிகவும் நல்ல மனிதர் எளிமையானவர், எல்லோரையும் மதிக்கும் பண்பு உள்ளவர் என்று சொல்கின்றனர். எனவே அவர் மனித நேயமிக்க ஒரு மனிதர் என்று சொல்ல முடியும். உண்மையில் மனிதர் எப்படி வாழவேண்டும் என்பதற்கு உதாரணங்கள் தான் இவர்களே தவிர, வேறு சிறப்பு எதையும் சொல்லமுடியாது. காரணம் இந்தியா போன்ற நாடுகளில் மற்றவர்களை சகமனிதர்களாக மதிக்காமல் அவர்களை பெரிய மனிதர்களாக மதிக்கும் பண்பு கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களால் எந்தப்பயனும் இன்றி அவர்களை பெரியவர்களாக ஏற்றுக்கொண்டு வாழும் பழக்கம் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் உழைப்பதனால்தான் எங்கள் அன்றாட வாழ்வு நன்றாக அமையும் என்ற எண்ணம் வலுவாக அமையாததன் விளைவே பிறருக்கு கொடி பிடிப்பதும், அவர்களை அண்டி வாழ நினைப்பதும் அவர்காளால் பயனற்றுப்போகையில் அவர்களை தூற்றுவதும், என்று உறுதியாக சொல்லமுடியும். இன்று தமிழக இளைஞர்கள் அதிகம்பேர் ரஜினிகாந்த் தமிழர்க்கு எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டுவது இந்த நிலையின் வெளிப்பாடே. எனவே முதலில் உழைத்து உயர்வோம் என்ற எண்ணத்தை வலுப்படுத்துங்கள். அப்போதுதான் உங்கள் கருத்து அர்த்தமுள்ளதாக அமையும்.
இனி ரஜினிகாந்தின் தொடர்பாக பார்த்தால், அவர் நேரடியாக பண உதவி செய்தாரோ இல்லையோ ஆனால் நடிக்கும் வாய்ப்பு இழந்த அல்லது குறைந்த பல நடிகர்களுக்கு தனது படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்றுகொடுத்திருக்கின்றார். அதைவிட தனது படத்தில் நடிக்கும் எந்த ஒரு நடிகருக்கும் அவர்களது திறமைகளை நிரூபிக்க தாராளமான இடம் கொடுத்து நடிக்க வைத்திருக்கின்றார். சந்தர்ப்பம் கிடைக்கும்போது வேறு திரைப்பட வாய்ப்புகளும் பெற்றுக்கொடுத்திருகின்றார். இது கற்பனை அல்ல, பல்வேறு நடிகர்களால் சொல்லப்பட்ட செய்திகள். இதன்மூலம் நாம் புரிந்துகொள்ளவேண்டிய செய்தி உழைப்பால் உயரவேண்டும். அவ்வாறு உழைப்பால் உயர திடம்கொண்டோர்க்கு உதவவேண்டும். நல்ல சிறப்பான கொள்கை இது என்றே கூறலாம். உழைத்து உயர துடிப்பவனுக்கு மட்டுமே உழைப்பின் அருமை புரியும். அவனாலேயே தொடர்ந்து உழைக்க முடியும். உழைக்க தயாரில்லாதவனுக்கு செய்யும் உதவி விழழுக்கு இறைத்த நீர்தானே தவிர எந்தப்பலனையும் தரமாட்டாது. இதற்கும் மேலாக ஒருவருக்காக ஒருமுறை நாம் சிபார்சு செய்வதானால் அவன் நன்கு தொழிற்படவேண்டும் இல்லையேல் அடுத்தமுறை எங்கள் கோரிக்கை எடுபட வாய்ப்பில்லை. எனவே உழைப்பால் உயர சிந்தியுங்கள் ரஜனி மட்டுமல்ல எந்த ஒருவரினதும் தயவால் வாழ எத்தனிக்காதீர்கள்.
மலையாளி எம். ஜி. இராமச்சந்திரன், கன்னடத்து ஜெயலிதா, ஆந்திரத்து கருணாநிதி தமிழரை ஆள்வதா என்று வலுவான கோசங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வளவு நாளும் இவர்கள் எங்கு போனார்கள். இப்போது மட்டும் கடந்த காலத்தை மிகவும் வீரியமாக மீட்கிறார்கள். ஈழத்தில் போர்நடந்து, மக்கள் அழிக்கப்பட்டு, விடுதலைப்புலிகள் பின்னடைந்த பின்பே ஈழத்திற்காக பேச தொடங்கியுள்ளார்கள். எனவே தும்பைவிட்டு வாலைப்பிடிப்பதுதான் தமிழகத்தமிழர்களின் இயல்புபோலும். இந்த தமிழக அரசியல்வாதிகளுக்காக உதவுகின்ற, பேசுகின்ற எங்கள் ஈழமக்களையும் ஒருமுறை நினைத்துப்பார்க்கவேண்டும். இது நல்ல ஆரம்பம். திரைப்பட பாணியில் ரஜினியை “எங்க ஊரு உள்ளை வராதே” என்று சொல்லாமல் நாங்கள் என்ன செய்வோம்?, எப்படி ஆட்சி தருவோம்?, என்ற நம்பிக்கையை மக்களுக்கு வழங்கவேண்டும். நாள்பூராக பிரசாரம் செய்யும் அரசியல்வாதிகளை தாண்டி” தலைவா நீ வந்தால் நல்லது நடக்கும்” என்று இப்பொழுதே மக்கள் ஆரம்பித்துவிட்டார்கள். இரண்டு கட்சிகளான திமுக, அதிமுக என்பவற்றை தாண்டி மூன்றாவது வலுவான கட்சியாக ரஜினியின் கட்சி உருவெடுக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். தமிழர்களை, தமிழகத்தை காக்க விரும்பும் அரசியல் கட்சிகளிடம் இந்த நம்பிக்கையை மக்கள் கொள்ளாமைக்கு காரணம் என்ன? மக்களின் கருத்து அடிப்படையில் தமிழ் நாட்டிற்கு எதுவுமே செய்யாத ரஜினியில் நம்பிக்கை கொண்டவர்கள், ஏன் மற்றவர்களிடம் நம்பிக்கை வைக்கவில்லை. திரைப்பட கவர்ச்சி மட்டும்தான் காரணமா?
தமிழக மக்களிடம் இரண்டு வகை போதைகள் வலுவாக வேரூன்றி உள்ளது. ஒன்று திரைப்படம். இதில் சின்னத்திரையும் பெரியதிரையும் அடங்கும். மற்றது மதுபோதை. இவை யாவும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவாகவே உள்ளது. இந்த போதைகளை ஆண்களும் பெண்களும் வரவேற்கிறார்கள் என்றே சொல்லவேண்டும். தமிழகத்தில் உள்ள சீர்திருத்தவாதிகள் கூட இவற்றை நகைச்சுவையாக்கி, தமக்கு ஆள்சேர்க்கிறார்களே தவிர இதன் பாதிப்புகளை சுட்டிக்காட்டி திருத்துவதில்லை. இன்று ரஜினியை வேண்டாம் என்று சொல்லும் பல திரைப்பெரியவர்கள் கூட ரஜினியால் உழைத்து நன்மை பெற்றவர்கள் .அந்த நன்மை காரணமாக சிலர் ஆதரவு தெரிவிக்கின்றனர் சிலர் அமைதி காக்கின்றனர். இன்று ரஜினியை எதிர்க்கும் தமிழக மக்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் எத்தனை இளம் தமிழ் கலைஞர்களை ஊக்குவித்து வளர்த்தீர்கள். சிந்தியுங்கள். பணமே நோக்காக கொண்டு இயங்கினீர்களே தவிர சமூகம் பற்றி சிந்திக்கவே இல்லை. ரஜினி, கமல் விஜய், அஜித் என்று அவர்களுக்கு முன்னணி கொடுக்கும் தமிழ் மக்கள், புதிய தமிழ் கலைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கி இருக்கலாமே. அதெல்லாம் செய்யாமல் இப்போது மட்டும் பேசுவது தாங்கள் ரஜினியை வைத்து பிரபலமடையவே தவிர, உருப்படியாக எதையும் செய்யவல்ல என்றே நான் நினைக்கின்றேன். திரை இசையில் முன்னணி இசையமைப்பாளர் என்று பேசப்படும் இளையராஜா பற்றி வாலி அவர்கள் மேடையில் சொன்ன கருத்து புதிய கவிஞர்களுக்கு இடம் வழங்குங்கள் என்ற போது, உங்கள் வருவாய் பாதிக்கப்படும் என்பது. சிந்தியுங்கள். தமிழர்கள் எப்படி இருக்கின்றார்கள். ஒருவரிடம் பணம் குவிந்தால் போதும் என்றே நினைக்கிறார்கள். ஒரு திறமையாளனே போதும் என்கிறார்கள். இது இன்றல்ல, சங்ககாலம் முதல் வாழும் இயல்பு. எல்லோர்க்கும் சமநிலை வாழ்வு கிடைக்கவேண்டும் என்று நினைப்பதில்லை. ஆன்மீக சொற்பொழிவாளர்கள் ஒருவன் புகழ் அடைதல், பணம் படைத்தவனாதல் அவன் இறைவனிடம் வாங்கிவந்த வரம் என்று மக்களை நம்ப வைக்கின்றனர். மக்களும் அதை நம்பி கடவுள் எங்களை வஞ்சிக்கிறார் என்று வலுவாக நம்புகிறார்கள். உண்மை அதுவல்ல. இன்றைய இளம் இசை அமைப்பாளர்கள், திரைப்பட இயக்குனர்கள் மிகவும் சிரமப்பட்டு எவ்வளவு புதியவர்களை அறிமுகப்படுத்திவிட்டார்கள். கிராமங்களில் இருந்த சிறிய கலைஞர்களைகூட கொண்டு வந்து திரைக்குள் புகுத்திவிட்டார்கள். அவர்களில் பலர் நல்ல நிலையை அடைந்துள்ளார்கள்.
நாட்டுப்புற பாடகர் வேல்முருகன் சொல்கிறார் ஒரு சில பாடல்களை திரையில் பாடியதால் எமக்கும் உலகம் சுற்றி எங்கள் நிகழ்ச்சியை நிகழ்த்தும் பயன் கிடைத்தது என்று. பிழைப்புக்காக போட்டிக்கு சென்ற ஒவியாவுக்காக ஓர் இயக்கமே ஆரம்பித்து வழிநடத்தும் பண்பாளர்கள் நீங்கள். ஓவியா தேர்தலில் போட்டியிட்டால்கூட வெற்றியை உறுதியாக்கும் நிலையிலுள்ளோர் தமிழக தமிழ் மக்கள். பிழைக்க வந்தவர்களை நன்றாக வாழவைத்து அரசியல் தலைமை வழங்கும் பெரும் மனம் உங்களுக்கு உண்டு. கலை அது இறைவன் கொடுத்தது என்ற தவறான கொள்கையை விட்டுவிட்டு சிந்தியுங்கள். துடிப்புடன் வரும் புதிய தமிழ் வரவுகளை ஆதரியுங்கள். தமிழர்க்கு முன்னுரிமை கொடுங்கள். இந்த உரிமை, தனித்துவம் எல்லாம் சாதாரண மக்களிடம் திணிக்கப்படுவதே தவிர முதலாளிகளுக்கானது அல்ல எனத்தெரிந்து கொள்ளுங்கள். முதலாளிகளுக்கு பணமீட்டும் வழிமுறைகள் தேவையே தவிர வேறேதுமில்லை. அவர்களுக்கு பணம் மட்டுமே குறிக்கோள். அதற்காக எதையும் செய்வார்கள். எதையும் ஆதரிப்பார்கள். இன்றும் ரஜினியை ஆதரிப்பார்கள். அவரை வைத்து படமும் எடுப்பார்கள். எனவே ரஜினியை மட்டும் எதிர்ப்பதால் எதுவும் நடக்காது. தமிழர்களை தரம் உயர்த்துங்கள். கலை என்பது மொழி, இனம், மதம் கடந்தது என்ற தவறான சிந்தனையை தூக்கி ஏறியுங்கள். கலைகளுக்கு உங்கள் மக்களை பயன்படுத்துங்கள். அதை அங்கேயே நிறுத்துங்கள். அரசியலுக்கு அவர்களை தேடாதீர்கள். வீணே பேசி காலம் கழிக்காமல் விழிப்புடன் செயற்படுங்கள் பலன்கிட்டும். ரஜினியை எதிர்ப்பது காலம் தாழ்ந்த செயற்பாடு. ஆனால் இந்த விழிப்புணர்வு தொடர்ந்தால் இனிவரும் காலங்களிலாவது தமிழன் தவிர்ந்தோர் தமிழனை ஆள்வதை தடுக்க முடியும். திரையரங்குகளை தவிர்த்து சிறந்த செயல்திறன், அறிவாற்றல், சமூக நோக்குள்ள, சுயநலமற்ற அரசியல் நேர்மையுள்ள தலைவர்களை ஊருக்குள் தேடுங்கள். தமிழர்களின் வாழ்வினை வளமாக்க அதுவே சிறந்த வழி.
– பரமபுத்திரன்.