இடியென இறங்கி
வெடித்துச் சிதறி
விடியல் தேடி
விதையாய் வீழ்ந்தனர்
உறவுகள் உறங்க
உறங்காப் புலியென
ஊண் தனை மறந்து
ஊடரண் படைத்தனர்
இளமை தொலைத்து
இலக்கினை வென்றிட
இன்னுயிர் ஈந்து
இழிநிலை மாற்றினர்
பகையது முடிக்க
புலிப்படை சேர்ந்து
புகையிடை கலந்து
பெருமகன் ஆயினர்
உயிர் ஆயுதமென
உலகோர் அறியா
உயர்வழி கொணர்ந்து
உலகில் உயர்ந்தனர்
கரும்புலி கூட்டமும்
கடல்சார் படையதும்
காட்டிய நெறிமுறை
காலனும் அறியான்
ஆண்டில் ஒருமுறை
அன்னார் போற்றுதல்
அறமே இருந்தும்
அனுதினம் நினைந்து
உணர்ந்து உரைத்து
உரிமைச் சமரிடை
உயிர்தனை ஈந்த
உன்னதர் நினைவினை
அகத்தில் நிறுத்தி
அனுதினம் தொழுது
அன்னை நிலத்தை
அடைந்திட முயல்வோம்
நாயகர் மாவீரரை
நாளும் வணங்கி
நற்றமிழ் ஈழம்
நன்றே படைப்போம்
மாவீரர் போற்றுதல்
மாந்தர்நம் கடமை
மாவீரர் வணங்குதல்
மாபெரும் வலிமை – வழமை
கவிஞர் தம்பியின் தம்பி