தருணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் நாங்கள் அங்கு இருந்தோம் எப்போது யாருடைய தலை நிலத்தில் சாயும் என்று தெரியாத நிலை. ஆனால் நாம் அனைவரும் சாவுக்குத்தயாராகவே இருந்தோம். ஏனெனில் சாவை தவிர எமக்கு தருவதற்கு கடவுளிடமும் வேறு எதுவும் களஞ்சியத்தில் இல்லை என்பதை நாம் உணர்ந்தே இருந்தோம். ஆனாலும் ஒவ்வொரு மணித்துளியும் சாவில் இருந்து எம்மில் பலர் மீண்டு கொண்டும் இருந்தோம். அருகில் இருப்பவர்கள் நிலத்தில் வீழ்ந்த போதெல்லாம் நாம் அவர்களை காத்துவிட துடித்து போவோம். சிலர் காப்பாற்றப்பட்டாலும் பலர் கண்முன்னே தங்கள் கண்களை மூடி இறுதி மூச்சை விட்டனர். இதை எல்லாம் பார்ப்பதை நாமும் அவர்களை போல சாகலாம் என்ற அதி உச்சக்கட்ட வெறுப்பை கடவுள் மீதும் சிங்களம் மீதும் கொட்டி கொண்டோம்.
இந்த சூழலில் தான் எனது குடும்ப உறவுகளும் ஒருவரை ஒருவர் காத்திட முடியாத படுகாயங்களுடன் தமது இறுதி மணித்தியாலங்களை எண்ணிக்கொண்டிருந்தனர். ஒரு மாதிரி அனைவருடைய இரத்த போக்கையும் கட்டுக்கள் போட்டும் முதலுதவி செய்தும் நிறுத்திய பின் தம்பி சொல்கிறான் … அண்ணா பிள்ளைட நிலை என்னவோ…? தெரியல்ல அங்க போய் வருவமா? ம் ம் போய் பார்பபம் ஆனா இங்க இதுகள் எல்லாரும் தனிமையில் என்ற சிந்தனை எழுந்த போது ” தம்பி எனக்கு சின்ன காயம் தானடா நான் இருக்கிறன் எதாவது என்றா நான் பார்க்கிறன் நீங்க போய் அவள பாருங்கடா…” அப்பா கத்துகிறார் அவர் பிடரியில் இருந்து வெளி வந்து கொண்டிருந்த குருதியினை நான் ஏற்கனவே கட்டுப்படுத்தி இருந்தேன். அதனால் அவர் கொஞ்சம் உறுதியோடு இருந்தார். நாங்கள் இருவரும் கடுமையான காயமடைந்த என் உறவுநிலை போராளியையும் அவரது குடும்பத்தையும் தூக்கி கொண்டு மருத்துவ கொட்டில் நோக்கி போவதற்காக எழுந்தோம்.
மீண்டும் ஒரு பல்முனை தாக்குதல் நடக்கின்றது. அதனால் பதுங்கு நிலை எடுத்து கொள்கிறோம் ஆனாலும் அதற்குள்ளும் அவர்களை கொண்டு சேர்க்க வேண்டிய தேவை இருந்ததாலும் தங்கையின் நிலை அறிய வேண்டிய தேவை இருந்ததாலும் அவர்களுடன் நகர்கிறோம். பல ஆயிரம் ரவைகள் எம்மை குறி வைத்து பாய்ந்து வருகின்றன அதற்குள்ளும் வெடித்து சிதறும் செல்லுக்குள்ளும் நமது கால்கள் மருத்துவமனையை வந்து அடைகிறது. ஆனால் அங்கே எதுவும் செய்ய முடியாத வேதனையில் அலறல்கள் மட்டுமே வெளிவந்து கொண்டிருக்கின்றன. திரும்பும் இடமெங்கும் உடலங்கள் சிதறி போய் கிடக்கிறது. அவற்றில் மிகவும் ஆபத்தான காயங்கள் மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறது. மற்றயவர்களுக்கு இரத்த போக்கை மட்டும் கட்டுப்படுத்துவதற்கு போராளி மருத்துவர்களும் போராளிகளும் மக்களும் என அனைவரும் முனைந்து கொண்டிருக்கிறார்கள்.
நாமும் கிடைத்த ஓரிடத்தில் அவர்களை கிடத்தி விட்டு என் நண்பரான மருத்துவரிடம் ஓடுகிறேன். அங்கே அவர் பயங்கர வயித்து காயம் ஒன்றை திறந்து அதற்கான சிகிச்சையில் மூழ்கி போய் கிடக்கிறார். அரவம் கேட்டு நிமிர்ந்து பார்க்கிறார். கவி சொல்லு… இல்ல டொக்… வெளில காயம் கொண்டுவந்தனான் அதுதான். ஒகேடாப்பா கொஞ்சம் பார்த்துக்க வாறன். டொக் என் தங்கையும் இப்பத்தான் வந்தாள் சித்தா கொண்டுவந்தார். என்ன ஆச்சு என்று தெரியல்ல. நெஞ்சு காயம். வெளில பாரு தமிழ் தான் பார்த்தவர். அவர் தனது வேலையில் முனைப்பு கொள்கிறார். நானோ அடுத்த பக்கத்துக்கு நகர்கிறேன். அங்கே சித்தா திக் பிரமை பிடித்தவர் போல அமர்ந்திருக்கிறார். அவருக்கு கால் மற்றும் முதுகு பக்கத்தில் பட்ட காயத்தில் இருந்து வடியும் குருதியை கூட மறந்து போய் இருந்தார். சித்தா எங்க பிள்ளை …? கேள்வியினூடு அந்த பகுதியில் கண்ணை விடுகிறேன். எங்கும் அவளை காணவில்லை.
அப்போது மருத்துவ போராளி ஒருவன் அந்த பகுதிக்கு வந்த போது, விசாரிக்கிறேன். அவாவுக்கு ஒன்றும் இல்ல பயப்பிடாதீங்க இரத்தம் தான் கொஞ்சம் போயிட்டுது இருந்தாலும் காப்பாற்றி விட்டோம். இப்ப மூச்சு தான் கொஞ்சம் பிரச்சனையா இருக்கு அது சரியாகிடும். அதுக்கு தான் இப்ப டொக்டர் ட்ரை பண்ணுறார். என்னும் கொஞ்ச நேரத்தில எல்லாம் சரியாகிடும். அவன் ஆறுதலாய் கூறிய வார்த்தைகள். எம்மை கொஞ்சம் இயல்புக்கு கொண்டு வந்திருந்தது. சித்தாவும் கொஞ்சம் ஆறுதல் கொண்டார். நானும் தம்பியும் பெருமூச்சு விட்டு கொண்டோம். தங்கை தப்பிவிட்டாள் என்று ஆறுதல் கொண்டோம். சிறிது நேரம் சித்தாவுடன் பேசி விட்டு காயமடைந்து மருத்துவத்துக்காக வந்து கொண்டிருந்த மக்களுக்கு முதலுதவி செய்யலாம் என்று நகர்கிறோம். கவி ஆக்களுக்கு இரத்தத்தை மட்டும் கட்டுப்படுத்துங்க மிச்சத்தை பிறகு பார்க்கலாம். மருத்துவர் வேண்டுகிறார். நாமும் சம்மதம் தெரிவித்து நகர்கிறோம்.
– கவிமகன்