விழிகள் மூடி மதியை இழந்து
தீயது செய்து துயரத்தில் உழன்று
பாதகம் புரிந்து பழிபாவம் சுமந்து
திசை மாறிய பயணத்தில்
நீதியில்லை மானிடா…!
இன்பத்தை தேடி தீயவழி நாடி
துன்ப துயரத்தில் மூழ்கிய படகாகி
வாழ்க்கையை தொலைத்து
வழியின்றி தவித்து
ஈற்றில் கடவுளை நாடுதல்
முறையன்று மானிடா….!
பஞ்சத்தில், பசியில்,
வறுமையில் அகப்பட்டு
பட்டினியின் கோரத்தில்
தவிக்கின்றனர் ஏழைகள்!
உன்னிடம் உள்ளதை பகிர்ந்திட
மறந்தாயே..! சுயநல சகதியில்
சிக்குண்டு சிறைப்பட்ட மனிடா…
மனிதம் பேணும்
புனிதம் போற்றும் புதியதோர்
விதிசெய்வோம்
புறப்படு வா மானிடா…!
வஞ்சனை விலக்கிடு!
வெஞ்சினம் தவிர்த்திடு!
பொறமையை துரத்திடு!
பொறுமையை சேர்த்திடு!
பொதுநலம் காத்திடு!
இரப்போர்க்கு உதவிடு!
உழைத்திடு! உயர்ந்திடு!
உண்மையாய் வாழ்ந்திடு!
பாரினில் உயிர்களை
அன்பாலே அணைத்திடு…!
பொருள் தேடி ஓடாதே!
பணம் தேடி அலையாதே!
பெயருக்கும், புகழுக்கும்
பொய் வாழ்க்கை வாழாதே!
உறவுகள் சூழ்ந்திட
ஊர் போற்ற வாழ்ந்திடு!
வாழ்க்கையின் மகத்துவம்
உலகுக்கு உணர்த்திடு..!!
வாழ்வாங்கு வாழ்தலே நல் வாழ்வு மானிடா..!!!
– வேலணையூர் ரஜிந்தன்.