நடிகர் ரஜினிகாந்த்இ அரசியலுக்கு வருவதையொட்டி ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் என்ற பெயரில் இருந்த இணையதள பக்கம் தற்போது ரஜினிகாந்த் மக்கள் மன்றம் என்று மாற்றப்பட்டு உள்ளது.
இந்த இணையதளத்தின் முகப்பில் ரஜினிகாந்த் அடிக்கடி பயன்படுத்தும் பாபா முத்திரை இடம்பெற்று உள்ளது. எனவே ரஜினிகாந்த் தொடங்கும் கட்சியின் சின்னம் பாபா முத்திரையாக இருக்கும் என்று பேச்சு அடிபடுகிறது.
இந்த நிலையில் மும்பையை சேர்ந்த வாக்ஸ்வெப் என்ற சமூக நெட்வொர்க் நிறுவனம் பாபா முத்திரைக்கு உரிமை கோரி உள்ளது. பாபா முத்திரை எங்களது நிறுவனத்தின் லோகோ. அதை நீங்கள் எப்படி பயன்படுத்தலாம்? என்று விளக்கம் கேட்டு ரஜினிகாந்துக்கு கடிதம் அனுப்பி உள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
ஏற்கனவே பாபா முத்திரையில் பா.ஜனதா கட்சியின் சின்னமான தாமரை இடம்பெற்று இருப்பதாக சர்ச்சை எழுந்ததால் தாமரைப்பூ நீக்கப்பட்டது. பாபா முத்திரை ராமகிருஷ்ணா மடத்தின் லோகோ போல் இருப்பதாகவும் கூறப்பட்டதால் அந்த மடத்தின் நிர்வாகிகளை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து பேசினார். இப்போது மும்பை நிறுவனம் உரிமை கோருவதால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ரஜினிகாந்த் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதுகுறித்து ரசிகர் மன்ற வட்டாரத்தில் கூறும்போதுஇ ‘ஆன்மிக சின்னமான பாபா முத்திரையை விட்டுக்கொடுக்க முடியாது. 2002-ல் வெளிவந்த பாபா திரைப்படத்தில் ரஜினிகாந்த் இந்த முத்திரையை பயன்படுத்தி இருக்கிறார். அப்போதே பாபா முத்திரைக்கு படக்குழு காப்புரிமை பெற்றுவிட்டது. அன்று முதல் ரசிகர்களும் இதை பயன்படுத்துகின்றனர். பாபா முத்திரைக்கு உரிமை கோரும் மும்பை நிறுவனம் 18 மாதங்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது. எனவே பாபா முத்திரையை பயன்படுத்துவதை தடுக்க முடியாது. தேவைப்பட்டால் சட்ட உதவியை நாடுவோம்’ என்றார்கள்.