எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ள நிலையில் ஐக்கிய நாடு கள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல்ஹூசைன் இலங்கை தொடர்பான தனது அறிக்கையில் அதிருப்தி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக இலங்கை குறித்த ஜெனிவா பிரேரணை நிறைவேற்றப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் பொறுப்புக்கூறல் பொறிமுறை விடயத்தில் இதுவரை சரியான முன்னேற்றம் காணப்படவில்லை என்ற அதிருப்தியை தனது அறிக்கை ஊடாக செயிட் அல் ஹூசைன் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
செய்ட் அல் ஹுசேனின் இலங்கை குறித்த அறிக்கையை தொடர்ந்து இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அறிக்கை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது. இதன்போது வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் சார்பில் அறிக்கையை முன்வைப்பார் என்பதுடன் இலங்கையானது ஜெனிவா பிரேரணையை எவ்வாறு அமுல்படுத்துகின்றது என்பது குறித்து விளக்கமளிக்கவுள்ளார்.
அத்துடன் இலங்கையானது பிரேரணையின் பரிந்துரைகளை அமுல்படுத்திவருவதாக கூறவுள்ள அரசாங்கம் பிரேரணையை அமுல்படுத்துவதில் காணப்படுகின்ற சவால்கள் குறித்தும் விளக்கமளிக்கவுள்ளது.
தொடர்ந்து உறுப்பு நாடுகள் இலங்கை நிலைமை தொடர்பில் இந்த விவாதத்தில் உரையாற்றவுள்ளன. அதாவது 2015ஆம் ஆண்டு ஐ.நா . மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2017 ஆம் ஆண்டு மேலும் இரண்டு வருட கால நீடிப்புக்குள்ளான இலங்கை குறித்து பிரேரணை எவ்வாறு அமுல்படுத்தப்படுகிறது என்பது தொடர்பான மீளாய்வு அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹசைனால் முன்வைக்கப்படவுள்ளது.
மேலும் பொறுப்புக்கூறல் பொறிமுறை தாமதமடைந்தால் அடுத்த கட்டமாக எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பது குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் விளக்கமளிப்பார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோன்று சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் மனித உரிமை அமைப்புக்களும் இலங்கை தொடர்பில் பல்வேறு அறிக்கைகளை 37ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கவுள்ளன. இந்த அறிக்கைகளில் இலங்கை பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டவேண்டுமென சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தவுள்ளன.
கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகளினால் இலங்கை குறித்த பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதில் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மற்றும் விசாரணையாளர்களின் பங்களிப்புகளுடன் பொறுப்புக்கூறல் பொறிமுறை முன்னெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
இது இவ்வாறிருக்க மார்ச் மாதம் 16 ஆம்திகதி இலங்கை தொடர்பான பூகோள காலக்கிர மீளாய்வு விவாதமும் நடைபெறவுள்ளது. இதில் கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கை ஐ.நா. மனித உரிமை பேரவையில் வாக்குறுதிகள் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது.
பெப்ரவரி 26ஆம்திகதி முதல் மார்ச் மாதம் 23 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் தலைமையில் உயர் மட்ட தூதுக்குழுவினர் கலந்துகொள்ளவுள்ளனர். வெளிவிவகார அமைச்சின் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளும் இந்த தூதுக்குழுவில் இடம்பெறுவர்.