அண்மைக்காலமாக இந்திய மற்றும் இலங்கை பத்திரிகை, வானொலி. இணையத்தளங்கள் என்று சாதனை படைத்து வருபவரும் சமூக அக்கறையுடன் தன்னை ஒரு படைப்பாளியாக சமூகத்துக்கும் தன் வரிகள் மூலம் செய்தி சொல்லி வரும் இவர் வளரும் இளம் எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார் . கவிஞரும் எழுத்தாளருமான. பாடலாசிரியர் செந்தமிழ் அவர்களின் சிறப்பு ஒருநேர்காணல்
வணக்கம் செந்தமிழ்
வணக்கம் நிலவன்
நிலவன் :- செந்தமிழ் உங்களை பற்றி ஒரு சிறிய அறிமுகம் தாருங்கள்?
பதில் :- நான் பாடலாசிரியர் செந்தமிழ். எனது ஊர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளாத்தூர் என்ற கிராமம். பொறியியல் பட்டதாரி. இதுவரை மூன்று கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. ஒரு இசை பாடல் தொகுப்பும் எனது வரிகளில் வெளிவந்துள்ளது. அகில இந்திய சென்னை வானொலி நிலையத்தில் கவிதைச்சரம் நிகழ்ச்சியில் எனது கவிதைகள் என் குரலோடு ஒலிப்பதிவு செய்து வெளி வந்து கொண்டிருக்கிறது. தமிழ் திரைத்துறையில் பாடல்கள் எழுதி வருகிறேன்.
நிலவன்:- உங்களது குடும்பம் பற்றியும் வாழ்வுச்சூழல் பற்றியும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ?
- பதில் :- எனது குடும்பம் அழகான ஒரு கூட்டு குடும்பம்.. அப்பா தமிழ் ஆசிரியர், அம்மா குடும்பத்தலைவி, எனக்கு மூன்று அக்காமார்கள்.. தற்போது ஆசிரியர் மற்றும் சட்ட துறையில் அவர்கள் பணியாற்றி வருகிறார்கள். நான் தான் கடைக்குட்டி. நான் படித்தது, ருசித்தது வாழ்வை ரசித்தது எல்லாம் என் கிராம கை ரேகைகளைத்தான். அந்த வாழ்க்கை சூழல் சொல்லி கொடுத்தது எந்த பல்கலைக்கழகத்தாலும் கொடுக்க முடியா அனுபவங்கள், அறிவுரைகள் மற்றும் அடிகள்.
நிலவன் :- உங்களது இனிமையான அந்த பள்ளிக் காலம் பற்றி கூறுங்கள் ?
பதில் :- என் கிராமத்துக்கு கொஞ்சம் அருகாமையில் உள்ள அரசு பள்ளியில் தான் எனது பள்ளி வாழ்க்கை தொடங்கியது. அந்த எளிய மக்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் சொற்கள், வாழும் விதம், எதிர்பார்ப்பில்லா அன்பு, மாடு கோழி குருவிகள், மைனாக்கள், என்னும் ஏராளமான சொந்தங்களின் சொர்க்கமாக கிராம வாழ்க்கையும் பள்ளி வாழக்கையும் இருந்தது.
நிலவன் :- உங்களது பல்துறை சார் நிபுணத்துவ பயணம் பற்றி கூறுங்கள்?
பதில் :- படிக்கும் போதே எனக்கு மொழி தான் விருப்பமாக இருந்தது. அதில் ஊடுருவி பார்க்கும் போதுதான் நமது கலாச்சாரம் பண்பாடு, நமது ஈழ சொந்தங்களின் நிலைப்பாடு, தமிழின் சிறப்பு, தமிழர்களின் கலை மற்றும் அறிவியல் ஆகியவற்றில் கரைந்து போன போது தான் இன்றைய நெருக்கடி நிலையில் நாம் எவ்வாறு நம் தொன்மைகளை இழந்துள்ளோம் என்பது புலப்பட்டது. எனவே சமூக கவிதைகளின் மூலம் எனது கருத்தை கோபத்தில் வெளிக்கொணர்ந்தேன். இவ்வாறு மொழி, பொறியியல், கவிஞர், பாடலாசிரியர் மற்றும் சிறுகதை ஆசிரியராகவும், எனது இலக்கியப் பயணம் தொடர்கிறது..
நிலவன் :- உங்கள் இலக்கியப் பிரவேசம் எப்படி நிகழ்ந்தது?
பதில் :- எனது சமூக, அக புற கோபங்களையும், ஆழ்மனதின் அலறல்களையும் சாட்டையடியாக அடித்து சொல்ல மொழி எனக்கு வரப்பிரசாதமாக இருந்தது. ஓர் எழுத்தாளராக வேண்டும் என்ற எண்ணத்தில் நான் எதையும் செய்யவில்லை. பள்ளிபருவம் முடித்த பிறகுதான் நான் மொழி சார்ந்த விடயங்களில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டேன். என்னை எழுத தூண்டிய சம்பவங்களாக காரணிகளாக காதலும் மோதலும் சமூக சாடலும் அமைந்தது.
நிலவன் :- நீங்கள் எழுத்து மேல் கொண்ட காதல் பற்றி….
பதில் :- “சாதிகள் இல்லையடி பாப்பா
சாதி மீறிய காதல் தப்பா”
என்று சமூக கவிதைகளை எழுதி கொண்டிருந்தேன். எழுத்தின் மேல் ஈடுபாடு வரக்காரணம் என் அப்பா தான்.. இவர் தமிழ் ஆசிரியர் அதே போல் சிறந்த ஓவியர். எங்கள் ஊர் கிராம கோவில்களில் அவரது கைவண்ணத்தை காணலாம். அவ்வளவு மொழி,கவிதை, கலை மீது ஈடுபாடு கொண்டவர். இப்போதும் நினைத்து பார்க்கிறேன் நானோ அல்லது அக்காக்களோ ஏதேனும் தவறு செய்து விட்டால் முதலில் அடிக்க மாட்டார். அறிவுரை தான் சொல்லுவார். அந்த அறிவுரை கூட ஒரு திருக்குறளையோ, புறநானூறு அகநானூறு என்று ஏதேனும் செய்யுளை சொல்லிதான் அறிவுறுத்துவார். எனவே இது நினைவு நாடாக்களில் நிரந்தரமாக படிந்து போனது. இப்படிதான் எழுத்தின் மீது என்னை அறியாமல் காதல் கொண்டேன்.
நிலவன் :- உங்கள் எழுத்து பயணத்தின் ஆரம்ப காலகட்டம் அதன் வளர்ச்சி பற்றி…
பதில் :- எனது கல்லூரி வாழ்க்கையை காஞ்சிபுரத்தில் தான் கழித்தேன். சிற்ப கலைகள் ஆன்மீக சிந்தனை, கூடவே பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் தொடர்பும் ஏற்பட்டது. அங்கிருந்து தான் எழுத்தில் முழுமையாக ஈடுபட்டு எழுத ஆரம்பித்தேன். நா.முத்துக்குமார் முதல் கவிதை நூலை முதலில் வெளியிட்ட பதிப்பகத்தில் தான் எனது கவிதை நூலையும் வெளியிட விரும்பி மும்மரமான முயற்சியில் ஈடுபட்டேன். வேறு சில காரணங்களால் அது அந்த நேரத்தில் நிகழாமல் போனது. வளர்ச்சி என்று பார்த்தால், கல்லூரிக்காலத்தில் எனது கவிதைகள் தினத்தந்தியில் மாணவர் ஸ்பெஷல் பகுதியில் தொடர்ச்சியாக வெளி வந்தது. அது தான் என்னை ஒரு கவிஞராக வெளி உலகத்திற்கு அறிமுகப் படுத்தியது. அதன் பிறகு தின இதழ், தின மணி, ராணி போன்ற வெகுஜன நாளிதழ்களில் எனது படைப்புகள் வெளிவரத் தொடங்கியது.
நிலவன் :- உங்களது படைப்புக்கள் பற்றி கூறுங்கள்..?
அம்மாவின் கையும் பேசும்
(அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மூலம் 2014ஆம் ஆண்டு சிறந்த புத்தகத்திற்கான விருதினை பெற்றது )
மீண்டும் பள்ளிக்கு போகலாம்
சேந்தமிழ்ப்பாடல் – தனி இசைப் பாடல் தொகுப்பு இறுவட்டு
ஆச்சரியக்குறிகளோடுஒரு கேள்விக்குறி..!?!’
(அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மூலம் 2014ஆம் ஆண்டு சிறந்த புத்தகத்திற்கான விருதினை பெற்றது )
நிலவன் :- ஆச்சரியக்குறிகளோடுஒரு கேள்விக்குறி..!?!” என்ற கவிதை தொகுப்பை நூலைத் தாங்கள் எழுதுவதற்கு உந்துதல் வழங்கிய காரணி எது?
பதில் :- ஆச்சரியக்குறிகளோடுஒரு கேள்விக்குறி..!?!” கவிதை நூல் எனது மூன்றாவது படைப்பாகும். நூறு கவிதைகளை கொண்டு, கவிஞர் கலைமாமணி பிறைசூடன் மற்றும் வித்தக கவிஞர் பா விஜய் அவர்களின் அணிந்துரையோடும், வாழ்த்துரையோடும் சிறப்பாக இயக்குநர் கே. பாக்கியராஜ் அவர்களால் வெளியிடப்பட்டது.
இந்த தொகுப்பில் சாமானிய மக்களின் வாழ்வியலை அவர்களின் நெகிழும் தன்மையற்ற நேசங்களையும் பதிவு செய்துள்ளேன். ஈழ சொந்தங்களின் கண்ணீரையும் கனலையும் ஒருங்கே எழுத்தில் ஒலிப்பதிவு செய்துள்ளேன்.
நிலவன் :- நீங்கள் எழுதிய கவிதை வரிகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கவிதை ஏதாவது (நேயர்களுக்காக)?
பதில் :- எல்லாமே என் பிள்ளைகள் தான். எனினும் நீங்கள் கேட்டதற்கிணங்க பின்வரும் சில வரிகளை கூறுகின்றேன்.
ஈழ கவிதையில்,
*”பூக்களில் எங்களின் இரத்த வாடை..!
மின் மயானத்தில் பாதிக்கப்பட்ட
புழுக்களுக்கு
எங்களின் இறப்பு
பெரு மகிழ்ச்சி..!
ரவா லட்டு வாயில்
ரவா குண்டு வயிற்றில்..!
சோட்டா பீம்களை ரசித்த கண்களில்
தொட்டா பீம்கள்..!*
நாய்களை பற்றிய கவிதையில்,
எப்படி புரிய வைப்பேன்
நாய்களுக்குள்ளும்
ஜாதிகள் இருப்பதை..!
இத்தனை ஜனங்களுக்கு மத்தியில்..!
தன்னம்பிக்கை கவிதையில்,
கல் என்பது மூடத்தனம்
உளி என்பது மூலதனம்
சிலை என்பது வெற்றி வாகைத்தினம்..! இன்னும் நிறைய உள்ளன.
நிலவன் :- நீங்கள் எழுதிய பாடல்கள் பற்றி கூறுங்கள்..?
பதில் :- இதுவரை 25 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளேன். எல்லாமே காதல், மொழி, ஜல்லிக்கட்டு என்று தனிப்பாடல்களாகவும், ஐந்து திரைப்படத்திற்கு பாடல்களை எழுதியுள்ளேன். இன்னும் புதிய தேடல்களையும் புதிய பரிமாணங்களையும் நோக்கி பயணிக்கிறேன்.
நிலவன் :- ஒரு பாடல் ஆசிரியர் அறிஞராகவும் அல்லது கல்வியாளராக இருக்க வேண்டிய அவசியம் இருக்கின்றதா ..?
பதில் :- பாடலாசிரியர் என்பவர் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் பிரதிபலிப்பவராக உள்ளார். எனவே அவர் பல் துறை அறிவு பெற்றவராக இருத்தல் வேண்டும். கண்ணதாசன்,பட்டுக்கோட்டை, மருகதாசி, வாலி போன்ற ஆளுமைகள் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். ரோபோ படத்தில் வைரமுத்து ரோபோவை படித்து பின் பாடல் எழுதுகிறார். எனவே பல் துறை அறிவு என்பது பாடலாசிரியனுக்கு அவசியம்.
நிலவன் :- உங்களின் பார்வையில் ஒரு சிறந்த எழுத்தாளனின் அடையாளமாக எதை நினைக்கிறீர்கள்..?
பதில் :- என்னை பொறுத்த வரை, ஒரு எழுத்தாளனுக்கு உடை அடையாளம் தேவையில்லை. ஆனால் மொழி, பண்பாடு, கலாச்சாரம், இன மக்களின் விடுதலை, அவர்களின் அழுகை போன்றவற்றை தன்னுடைய படைப்பு உடலில் குருதியாக்க வேண்டும். இதைதான் கைவிடக் கூடாது அடையாளமாக பார்க்கிறேன்.
நிலவன் :- உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள் யார் யார்?
பதில் :- கல்கி, சுஜாதா, ஜெயகாந்தன், ஜெயமோகன், வைரமுத்து, மேத்தா, கண்ணதாசன், வாலி,மற்றும் எஸ் ரா.
நிலவன் :- தமிழரின் கலை,கலாசார பண்பாடுகளைப் பாதுகாப்பதில், இன்றைய நவீன,நாகரிக வளர்ச்சி எவ்வகையான ஆதிக்கத்தினைச செய்கின்றது என நினைக்கின்றீர்கள்?
பதில் :- தமிழர் கலை, கலாச்சார பண்பாடுகளை பாதுகாப்பதில் இன்றைய நவீன நாகரிக வளர்ச்சி முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக இத்த்கைய வளர்ச்சி பழமைகளை கொன்று அதன்மேல் குத்தாட்டம் போட நினைக்கிறது. இது தவறு. இளைய தலைமுறை நம் தொன்மைகளை அறிய வேண்டும் அதற்கு நமது கல்வி முறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். தமிழ் படித்தால் எல்லாம் கிடைக்கும் என்ற நிலை உருவாக வேண்டும் இல்லையேல் உருவாக்க வேண்டும்.. அப்போதுதான் நமது பாரம்பரியம் பாதுகாக்கப்படும்.
நிலவன் :- நெருக்கடிகளைப் பதிவு செய்வதில் உங்களின் பங்கு பற்றி கூறுவீர்களா?
பதில் :- எளிய மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அரசியல் மற்றும் எல்லா அதிகார வர்க்க சட்டங்களும், வஞ்சனை நடவடிக்கைகளும் அன்றாடங் காட்சி நெருக்கடியைத்தான் உருவாக்கும். அத்தகைய சூழலில் எனது கோபம் கவிதையாகவும், பாடல் வழியாகவும் வெளிப் படுத்தியுள்ளேன். குறிப்பாக, ஜல்லிக்கட்டு, நெடுவாசல், கதிராமங்கலம், மீத்தேன், ஈழத்தில் அரங்கேறிய அரசியல் வஞ்சக கொலைகள், என அனைத்து அதிகார அநிதிகளை நோக்கியும் எனது படைப்புகள் இருந்து வந்துள்ளது இனியும் தொடரும்.
நிலவன் :- உங்களது குறும்படங்கள் பற்றி கூறுங்கள் ?
பதில் :- குறும்படங்களில் பாடல் இடம் பெறுவது என்பது அரிது. எனினும் ஜல்லிக்கட்டு போராட்டம் உச்ச நிலை எட்டிய பொழுதில் ஒரு ஜல்லிக்கட்டு குறும்படத்தை நண்பர்களோடு சேர்ந்து தயாரித்தோம். அதில் நான்கு பாடல்கள் எழுதினேன்.
அன்பாகத்தான் பார்த்தா இது அலங்கா நல்லூர்
அடக்கத்தான் பார்த்தா இது அடங்கா நல்லூர்..!
என்பன போன்ற சில வரிகள் அதில் இடம் பெற்றன. மேலும் நண்பர்கள் இயக்கும் குறும்படத்தில் வசனம் எழுதி வருகிறேன்.
நிலவன் :- விமர்சனங்கள் அல்லது எதிர்மறை கருத்துக்களை எப்படி பார்க்கிறீர்கள் ?
பதில் :- எல்லா படைப்பாளனும் எதிர் கொள்ளவேண்டிய ஒன்றுதான் இது. எனினும் என்பார்வையில் விமர்சனங்கள் மற்றும் எதிர் மறை கருத்துக்களை ஆய்வு செய்ய வேண்டியது ஒரு படைப்பாளனின் முக்கிய பணி. அப்படி செய்யும் போது தான் அவன் படைப்பு எவ்வளவு இடைவெளியுடன் சமூகத்தில் பார்க்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். காய்க்கிற மரம் தான் கல்லடி படும் அதற்காக அது காய்ப்பதை நிறுத்த போவதில்லை.. அதைபோல் எழுத்தாளனும் அந்த கருத்துக்களை பகுத்து ஆராய்ந்து தம்மை செழுமை படுத்திக்கொள்ள வேண்டும்.
நிலவன் :- உங்கள் படைப்புகளில் காலம் தாண்டி நின்று நிலைக்கக் கூடியதாக எதைக் கருதுகிறீர்கள்?
நிலவன் :- சமூகத்திக்காகவும், எளிய மக்களின் வாழ்வியலை அவர்களின் அழுகை, சந்தோசம் ஆகியவற்றின் ஊடே எனது படைப்பு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவலங்களை பவளங்களாக மாற்ற துடிக்கிறேன். காவியக் கவிஞர் வாலி சொல்லவதைபோல்… ஒரு படைப்பாளன் தன் படைப்பை எந்த வித ஒழிவு மறைவின்றி ஆக்கம் செய்தல் வேண்டும்.. பின் அதை செல்லுபடி ஆக்க வைப்பதும், செல் அரிக்க செய்வதும் காலத்தில் கைகளில் விட்டு விட வேண்டும்
நிலவன் :- உங்களைப் போன்ற இளம் எழுத்தாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில் :- நானும் ஓர் இளம் எழுத்தாளன் தான். ஒரு சக படைப்பாளியாக மற்றவர்களுக்கு சொல்ல விழைவது, நீங்கள் தமிழை அதன் பண்பாடு கலாச்சார நீள அகலங்களை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். மரபுகளை அறிந்து கொண்டால் தான் அதனை புதுப்பிக்க முடியும். வேறொரு தளத்தில் அதனை சீர் தூக்கி வைக்க முடியும். எனவே நம் வரலாற்றை படியுங்கள் பின் வரலாறு படையுங்கள்..
நிலவன் :- அடுத்த கட்டமாக ஏதேனும் முயற்சியில் ஈடுபடவுள்ளீர்களா?
பதில் :- தற்போது இயக்குனர் திரு கே பாக்யராஜ் அவர்கள் நடத்தும் பாக்கியா வார இதழில் சிறுகதை எழுதி வருகிறேன். அதனை தொகுத்து புத்தகமாக வெளியிட திட்டமிட்டுள்ளேன். அதனை தொடர்ந்து திரைத்துறை பாடல் எழுதும் பணியில் இன்னும் வேகத்துடன் பயணிக்க திட்டமிட்டுள்ளேன். இன்னும் நிறைய வெகு நாள் இலக்கிய திட்டங்கள் முழுமை பெறாமல் இருக்கின்றன. அதனை முனைப்புடன் தூசி தட்டி தூவானத்தில் பறக்க செய்ய வேண்டும் உங்கள் ஆதரவுடன்.!
நிலவன் :- செந்தமிழ் தனிச் சிறப்பு வாய்ந்த தைத்திருநாள் பற்றி உங்கள் பார்வை?
பதில் :- தமிழன் எந்த ஒரு விஷயத்தையும் காரணம் இல்லாமல் செய்யமாட்டான். எல்லா சின்னது முதல் பெரிய காரியங்கள் வரை தக்கண காரணங்கள் கொண்டது. செயல் அப்படி என்றால், ஒரு திருவிழாவை அதுவும் தமிழர் திருவிழாவை முன்னோர்கள் முன்னெடுக்கிரார்கள் என்றால் அதில் எத்தனை எத்தனை அர்த்தங்கள் பொதிந்து கிடக்கும் என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.
தை திருநாள் என்பது தமிழர்களின் உழைப்பை வீட்டிற்க்கு ஆனந்தமாய் கொண்டு வரும் அறுவடை திருநாள் ஆகும். சூரிய பகவானுக்கும், நம்மோடு சுழன்று வேலைப்பார்த்த கால்நடைகளுக்கும் நன்றி சொல்லும் மகத்தான நெறி நாள் இது.
இப்போதைய பரபரக்கும் வாழ்க்கை சூழ்நிலையில் சூதுகளும் வஞ்சங்களும் நிறைந்த மாநகர அடுக்குமாடி அலுப்புகளில் நம் அன்றாடம் தேவைக்காக அல்லல்பட்டு நம் பாரம்பரியங்களை பரிதாபாமாக கை கழுவி கழிக்கிற்ன்றோம் பொழுதுகளை நியூக்கிலியர்
வாழ்க்கைதனில்..!
ஆனால், எங்கள் தலைமுறை சற்று சிந்திக்க தொடங்கி இருக்கிறது. அரசியலை ஆராய்கிறது.. சினிமா நடிப்புகளை சாயம் கலைத்து பார்க்க தொடங்கியுள்ளது. இதன் அனைத்தின் வெளிப்பாடுதான் மெரினா புரட்சி..!
இன மாண்புகளை மீட்டெடுக்க திரண்ட மாவீர்ரகளை இந்த சமூகம் கண்டெடுத்து விட்டது… இனி நல்லதொரு விடியல் தான் இந்த இனிய தை திரு நாளில்..!
நிலவன் :- நீங்கள் எழுதிய ‘கசட தபற..!’ பாடல் உருவாக்கம் பற்றியும் வெளியீடு பற்றியும் சொல்லுங்கள் ?
பதில் :- முனைவர் திரு. வா.மு.சே. ஆண்டவர் அய்யா அவர்கள்(பச்சயப்பன் கல்லூரி தமிழ் முதல்வர்) வெளியிட தமிழ்த் திரைப்பட இயக்குநர் திரு. முனியப்பக் குமார் அவர்கள் பெறுகிறார்..!
இந்தப் பாடல் தமிழ் மொழி பற்றிய அதன் ஆளுமைப் பற்றிய பாடல்..! ஏன் இதை எழுதினேன் என்றால், தமிழ் பேசுவதையே ஒரு தரம் குறைவாக நினைக்கும் சில பதர்களுக்கு அதனை சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருப்பதாக இக்காலகட்டத்தை கருதுகிறேன். அதற்காக எளிய வடிவில் ஒரு பாடல் எழுத வேண்டும் என்று நினைத்தேன். மொழி ஒரு பரிமாற்றுப் பொருளல்ல என்பதை பொருள் தேடி அலையும் இருள் மாந்தர்களின் இதயத்தில் ஊற்ற நினைத்தேன்.
இதற்கு முன்பே வெளியிட்ட செந்தமிழ்ப்பா..! இசை ஆல்பத்தில் தமிழர்களின் இன்றைய அவலங்களை எடுத்து பாட்டாக்கினேன். ஆனால் மொழியை கொண்டாட வேண்டும் அதன் மேன்மைகளில் மெய் மறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதியது தான் பொங்கலன்று வெளிவரவுள்ள தமிழே… செந்தமிழே.. என்ற தனி இசைப் பாடல்..! அருமையாக வந்துள்ளது..!
நிலவன் :- நிறைவாக என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
பதில் :- இறுதியாக என்னுடைய கவிதையோடு இந்த பேட்டியை முடிக்கிறேன்.
கல் என்பது மூடத்தனம்
உளி என்பது மூலதனம்
சிலை என்பது வெற்றி வாகைத் தினம்..!
தமிழால் ஒன்றிணைவோம்
தமிழா ஒன்றிணைவோம்
துரோகிகளை துவம்சம் செய்து
எதிரிகளை வேரறுத்து
பொங்குவோம் நமக்கான சுதந்திர பொங்கலை நாமே..!
நிறைவாக… இந்த பேட்டி மன நிறைவாக இருந்து. நண்பர் நிலவனின் உயிர்ப்பூ இதழ் மூலமாக தமிழ் சமுகத்தை இன் நன்னாளில் சந்திக்க இருக்கிறேன். அதற்கு முதலில் நண்பருக்கு நன்றி.
பாடலாசிரியர் செந்தமிழ் கைபேசி: 9500982317
நிலவன் :-எனது கேள்விகள் உங்களை சிரமப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். எங்களுக்காக உங்களது நேரத்தை செலவழித்தமைக்கு மிக்க நன்றி. “கனவு மெய்ப்படும்” என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது. அதை நோக்கி அனைவரும் இணைந்து செயல் படுவோம். இந்த வாய்ப்பிற்கு மிக்க நன்றி.
-நிஜத்தடன் நிலவன்.