மேலதிக சிகிச்சைக்காக வேறு ஒரு நாட்டிற்கு பயணிக்க அமெரிக்கா விமான நிலையத்திற்கு வந்த போது, அமெரிக்கா விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன், அமெரிக்காவில் இருந்து வெளியேற முடியாதெனவும் அவ்வாறு வெளியேற முற்பட்டால் கைது செய்ய நேரிடும் எனவும் அமெரிக்க விமான நிலைய அதிகாரிகள் எச்சரிக்கைவிடுத்துள்ளதாக அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய, ஊடகங்களுக்கான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜாலிய விக்ரமசூரியவை உடனடியாக கைது செய்வதற்கான பிடியாணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் கடந்த 05ம் திகதி பிறப்பிக்கப்பட்டிருந்தது.
2017ம் ஆண்டு ஜூலை மாதம், தனது கண் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல நீதிமன்றத்தில் அனுமதி வேண்டியிருந்த ஜாலிய விக்ரமசூரியவுக்கு, 08 வாரங்களுக்கு உலகில் எந்த நாட்டிற்கும் சிகிச்சைக்காக செல்ல நீதிமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா நோக்கி பயணம் செய்தார்.
எவ்வாறாயினும் நிபந்தனையின் படி உரிய தினத்தில் மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததன் காரணமாக, கடந்த 2017 நவம்பர் மாதம் 17ம் திகதி அவருக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், மீண்டும் ஜனவரி 05ம் திகதி அவரை கைது செய்வதற்காக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் தன்னால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது போனமைக்கான காரணங்களை விளக்கி அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற அவர், மேலதிக சிகிச்சைக்காக வேறு ஒரு நாட்டிற்கு பயணிக்க அமெரிக்கா விமான நிலையத்திற்கு வந்த போது, அமெரிக்கா விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன், அமெரிக்காவில் இருந்து வெளியேற முடியாதெனவும் அவ்வாறு வெளியேற முற்பட்டால் கைது செய்ய நேரிடும் எனவும் அமெரிக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தன்மீது விசாரணை நடைபெறுவதால் தன்னை அமெரிக்காவை விட்டு வெளியேற அனுதிக்க வேண்டாம் என இலங்கை வௌிவிவகார அமைச்சு அமெரிக்கா அரசிடம் முன்வைத்த கோரிக்கையே இதற்கு காரணம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக ஜாலிய விக்ரமசூரிய வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
நீதிமன்றத்தில் ஆஜராகாவிட்டால் தன்னை கைது செய்ய உத்தரவிட்டுள்ள அதேவேளை அமெரிக்காவில் இருந்து வௌியேற முற்பட்டால் கைது செய்ய இலங்கை அரசாங்கம் அனுமதித்துள்ள நிலையில் தான்னால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாதுள்ளதென்று அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் இலங்கையில் நடந்ததாக கூறப்படும் போர்க் குற்றங்களைப் பற்றிய தகவல்களை தெரிவித்தால், தனக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதாகவும், எனினும் தான் அதை கடுமையாக நிராகரித்ததாகவும் ஜாலிய விக்ரமசூரிய வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.