இடைக்கால அறிக்கையை மக்கள் முன் கொண்டு சென்று வாக்குக் கேளுங்கள் என்ற தொனிப்பட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது கட்சி ஆட்களிடம் அறிவுறுத்தியிருக்கிறார். அண்மையில் வடமராட்சியில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வின் போது அவர் மற்றொரு விடயத்தையும் கூறியுள்ளார். அதாவது வரவிருக்கும் தேர்தலில் கூட்டமைப்புத் தோற்றால் அது யாப்புருவாக்க முயற்சிகளைப் பாதிக்கும் என்ற தொனிப்பட. எனவே தமிழரசுக்கட்சியானது இடைக்கால அறிக்கையை முன்வைத்து மக்களாணையை கேட்கப் போகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் எனப்படுவது உள்ளூர் தலைமைத்துவங்களைக் கட்டியெழுப்புவதற்கானது. இதில் தேசிய மட்ட விவகாரங்களை அல்லது யாப்புருவாக்கம், இனப்பிரச்சினை போன்ற ஆழமான விவகாரங்களை முன்வைத்து வாக்குகள் கேட்கப்படுவதில்லை என்று ஒரு கருத்து சமூகத்தின் ஒரு பகுதியினர் மத்தியில் காணப்படுகிறது. ஆனால் இனப்பிரச்சினை கூர்மையடைந்தபின் நடந்த எல்லாத் தேர்தல்களிலும் இனப்பிரச்சினைதான் பேசு பொருளாகக் காணப்பட்டது. அந்த வழமைப் பிரகாரம் இம்முறை உள்ளூராட்சிசபைத் தேர்தலிலும் இனப்பிரச்சினைதான் அதாவது இனப்பிரச்சினைக்கான தீர்வையும் உள்ளடக்கிய யாப்புருவாக்க முயற்சிகளே பேசுபொருளாக மாறியுள்ளன. இதன்படி கூட்டமைப்பானது இடைக்கால அறிக்கையை முன்வைத்து வாக்குகளைக் கேட்கப் போகிறது. அதே சமயம் கஜன் அணி, சுரேஸ் அணி, விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை போன்றன இடைக்கால அறிக்கையை எதிர்த்து நிற்கப் போகின்றன. விழும் வாக்குகள் இடைக்கால அறிக்கைக்கு ஆதரவானவை அல்லது எதிரானவை என்றே கணிக்கப்படும்.
இடைக்கால அறிக்கையை கூட்டமைப்பு தேர்தல் பிரச்சாரத்தில் முன்வைத்தாலும் கூட அவ்வறிக்கை தொடர்பில் கூட்டமைப்பிற்குள்ளேயே நான்கு விதமான நிலைப்பாடுகள் தெரிகின்றன. சுமந்திரன் அந்த அறிக்கையை வெளிப்படையாகவும், விட்டுக்கொடுப்பின்றியும் ஆதரிக்கின்றார். அது தொடர்பான எந்தவொரு பகிரங்க விவாதத்திற்கும் அவர் தயாராகக் காணப்படுகின்றார். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அந்த அறிக்கையை தமிழ்த்தரப்புப் பங்காளியாக பிரச்சாரப்படுத்துவது அவர்தான். ஆனால் சம்பந்தரோ, மாவையோ அதை மழுப்பி மழுப்பித்தான் செய்கிறார்கள். இடைக்கால அறிக்கையை சுமந்திரன் அளவிற்கு அவர்கள் ஆக்ரோசமாக நியாயப்படுத்தவில்லை. இது இரண்டாவது நிலைப்பாடு. மூன்றாவது நிலைப்பாடு இடைக்கால அறி;க்கை போதாது என்று கருதும் தரப்பு. கட்சித் தலைமையைப் பகைக்க விரும்பாத காரணத்தால் பம்மிக்கொண்டு திரியும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் இடைக்கால அறிக்கையை வெளிப்படையாகவும், முழுமையாகவும் ஆதரிக்கத் தயாரில்லை. ஆனாலும் கட்சியின் நிலைப்பாட்டோடு தங்களை சுதாகரித்துக் கொள்ள முற்படுகிறார்கள். நான்காவது நிலைப்பாடு இடைக்கால அறிக்கை பற்றிய விளக்கமின்றியும் அதனாலேயே அதைக் குறித்து திட்டவட்டமான அபிப்பிராயங்கள் எவையுமின்றியும் காணப்படும் தரப்பு. இத்தரப்புத்தான் கூட்டமைப்பிற்குள் பெரும்பான்மையாகக் காணப்படுகிறது. இப்பொழுது உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் பெரும்பாண்மையானவர்கள் இத்தரப்பைச் சேர்ந்தவர்கள்தான். இடைக்கால அறிக்கைக்குள் என்ன இருக்கிறது என்பது பற்றி இவர்களுக்குக் கவலையில்லை. மாறாக வெல்லக்கூடிய சின்னத்தின் கீழ் போட்டியிடுவதால் கிடைக்கக் கூடிய நன்மைகளே இவர்களுடைய இலக்காகும்.
கூட்டமைப்பு வேட்பாளர்கள் மட்டும்தான் இப்படி இருக்கிறார்கள் என்பதல்ல. ஏனைய கட்சிகளின் நிலமையும் அப்படித்தான் இருக்கிறது. ஏனைய தேர்தல்களோடு ஒப்பிடுகையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் எனப்படுவது அதிக தொகை வேட்பாளர்களை களத்தில் இறக்கும் ஒரு தேர்தலாகும். அதிலும் இம்முறை பால்சமத்துவம் பேணப்பட வேண்டும். இந் நிலையில் வேட்பாளர்களைத் தெரிவது என்பது கட்சிகளுக்கு பெரிய சோதனைதான். அதிலும் பெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்வது என்பது பெருமளவிற்கு ஒரு சடங்காகவே இடம்பெற்றிருக்கிறது. கபே அமைப்புத் தெரிவித்திருப்பது போல பேரளவில்தான் பெண்கள் தேர்தலில் இறக்கப்பட்டிருக்கிறார்கள். பெரும்பான்மையான தமிழ்க் கட்சிகளிடம் கிராமமட்ட வலையமைப்பு பலமாகக் இல்;லை. ஒப்பீட்டளவில் கூட்டமைப்பிடம் தான் கிராம மட்ட வலையமைப்பு இருந்தது. ஆனால் அது கூட உள்ளூர் பிரமுகர்களையும், உள்ளூர் பிரபலஸ்தர்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட ஓர் அமைப்புத்தான். இப்பொழுது ஏனைய கட்சிகளின் நிலமையும் அப்படித்தான் காணப்படுகிறது. உள்ளூரில் துருத்திக் கொண்டு திரியும் ஆளுமைகளை அவர்கள் தெரிவு செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த ஆளுமைகள் எல்லாருமே முற்போக்கானவர்கள் என்றோ கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள் என்றோ, தேசிய விழிப்புடையவர்கள் என்றோ கூற முடியாது.
குறிப்பாக கூட்டமைப்பைப் பொறுத்தவரை வெற்றி பெறும் குதிரையில் பந்தயங் கட்டும் ஆட்களே களத்தில் இறக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கே சின்னம்தான் முக்கியத்துவம் பெறுகிறது. ஆட்களுக்கான முக்கியத்துவம் ஒப்பீட்டளவில் குறைவு. ஆனால் கஜன் அணியைப் பொறுத்தவரை அவர்கள் ஆட்கள் தெரிவில் ஒப்பீட்டளவில் கூடுதலாகக் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். சுரேஸ் அணி சின்னத்தை முன்னிறுத்தியே கூட்டை உருவாக்கியது. ஆனால் அங்கேயும் வேட்பாளர்களுக்கு தட்டுப்பாடு உண்டு. மிக மூத்த அரசியல்வாதியான ஆனந்தசங்கரி வழமையாக சர்ச்சைகளுக்குள் சிக்குபவர். ஆனால் இந்த முறை அவர் ஆகக் கூடியபட்ச கூட்டுப் பொறுப்போடு அதிகமாக வாயைத் திறக்காமல் ஒப்பீட்டளவில் அமைதியாகக் காணப்படுகிறார். மேடைப் பிரச்சாரங்கள் சூடு பிடிக்கும் பொழுது நிலமை எப்படித் திரும்பும் என்பதை இப்பொழுது ஊகிக்க முடியாது.
எனினும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் கட்சிகளுக்கு அதிகளவு நெருக்கடிகளை ஏற்படுத்திய ஒரு தேர்தல் இதுவெனலாம். வேட்பாளர் தெரிவு தொடர்பில் கட்சிகளுக்குள்ளேயே முரண்பாடுகளையும், கசப்பையும் இத்தேர்தல் ஏற்படுத்தியிருக்கிறது. வவுனியாவிலும், மன்னாரிலும், கூட்டமைப்பின் ஆதரவுத் தளத்தத்தின் கணிசமான பகுதியைத்தான் எதிரணி உடைத்திருக்கிறது. தென்மராட்சியில் அப்பகுதி அமைப்பாளர் ஒரு மாகாணசபை உறுப்பினரை தலைக்கவசத்தால் தாக்கியதாக ஒரு வீடியோ காட்சி வெளியாகியது. புதுக்குடியிருப்பில் ஒரு பெண் வேட்பாளரை மற்றொரு தோழமைக் கட்சியின் பிரமுகர் தடுத்து வைத்திருந்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.
அதே சமயம் கூட்டமைப்பும் உட்பட எதிரணியைச் சேர்ந்தவர்களும் புதிய வேட்பாளர்களைத் தேடும் பொழுது மாவீர குடும்பங்களைச் சேர்ந்தவர்களை நியமிக்க முற்பட்டதை ஒரு மாவீரரின் உறவினர் கடுமையாக விமர்சித்தார். வடமராட்சியில் கூட்டமைப்பின் தோழமைக் கட்சியான முன்னாள் இயக்கம் ஒன்று வேட்பாளர்களைத் தெரியும் பொழுது மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை கொடுத்திருக்கிறது. ஆனால் அந்த இயக்கத்தின் பாரம்பரிய ஆதரவாளர்கள் பலர் அப்பகுதியில் உண்டு என்பதை மேற்சொன்ன மாவீரரின் உறவினர் சுட்டிக்காட்டினர். கூட்டமைப்பில் மட்டுமல்ல எதிரணியிலும் கூட வேட்பாளர் தெரிவில் தமது பாரம்பரிய ஆதரவாளர்களை விடவும் மாவீரர் குடும்பங்களைத் தெரிவதில் அதிக முனைப்புக் காட்டப்பட்டதாகத் தெரிகிறது. கிளிநொச்சியில் உயிரிழை அமைப்பின் தலைவர் இம்முறை போட்டியிடுகிறார். வேட்புமனுத் தாக்கல் செய்த அன்று அவரும் உட்பட வேறு சிலரை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக் கொண்டு போகும் காட்சி வாதப்பிரதிவாதங்களை எழுப்பியது. போரால் பாதிக்கப்பட்டவர்களை தேர்தலில் இறக்குவதன் மூலம் கட்சிகள் தமது வாக்கு வங்கியை பலப்படுத்த விழைகின்றனவா?
அதே சமயம் ஏற்கெனவே ஸ்தாபிக்கப்பட்ட கட்சிகளில் நம்பிக்கையிழந்த சுயேட்சைக் குழுக்களும் ஆங்காங்கே களத்தில் இறங்கியுள்ளன. வடமராட்சியில் கூட்டமைப்பையும், எதிரணியையும் ஏற்றுக்கொள்ள மறுத்து ஒரு சுயேட்சைக் குழு வல்வெட்டித்துறையில் போட்டியிடுகிறது.இம்முறை கட்சிகளுக்குப் பாடம் படிப்பிப்போம் என்று மேற்படி சுயேட்சைக் குழு தெரிவிக்கின்றது. புதுக்குடியிருப்பு முல்லைத்தீவுப் பகுதிகளிலும் சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன. புதுக்குடியிருப்பில் போட்டியிடும் சுயேட்சைக் குழுவானது போர்ச் சூழலிற்குள் வளர்ந்த இளைஞர்களைப் பெருமளவிற்குக் கொண்டுள்ளது.இவர்களை அந்தந்த வட்டார மக்களின் அபிப்பிராயத்தை வைத்தே தெரிந்தெடுத்தாக மேற்படி சுயேட்சைக் குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வலி கிழக்கில் மயானக் காணிகளில் குடியிருக்கும் மக்களின் போராட்டங்களை பின்னிருந்து ஆதரித்த அமைப்புக்கள் சுயேட்சைக் குழுவை களமிறக்கியுள்ளன, நல்லூர் பிரதேச சபையில் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் அனுசரணையோடு ஒரு சுயேட்சைக்குழு போட்டியிடுகிறது. ஒரு சூழலியல் அமைப்பு தனது ஆட்களை தேர்தலில் சுயேட்சையாக நிறுத்துவது என்பது தமிழ் அரசியலில் ஒரு புதிய தோற்றப்பாடே.
இவ்வாறு ஏற்கெனவே ஸ்தாபிக்கப்பட்ட கட்சிக் கூட்டுக்களும், சுயேட்சைகளும் போட்டியிடும் தேர்தல் களமானது தமிழ் வாக்குகளை சிதறடிக்கும் வாய்ப்புக்களே அதிகம் தெரிகின்றன. இது சிறிய பெரும்பான்மையோடு தமிழரசுக் கட்சியை வெற்றிபெற வைக்கக்கூடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் அண்மையில் தனிப்பட்ட உரையாடல் ஒன்றின் போது தெரிவித்தார். மாற்று அணிக்குள் ஏற்பட்ட உடைவு தமிழரசுக்கட்சிக்கே வெற்றி வாய்ப்புக்களை அதிகப்படுத்தக்கூடும் என்றும் மாற்று அணி ஒருதிரட்சியாக முன் வந்திருந்தால் அது தமிழரசுக்கட்சிக்கு பெரிய சவாலைக் கொண்டு வந்திருக்கும் என்றும் அவர் சொன்னார். கூட்டமைப்பு இடைக்கால அறிக்கையை முன்வைத்து வாக்குக் கேட்குமிடத்து அது பெறக்கூடிய வெற்றியானது. இடைக்கால அறிக்கைக்கு மக்கள் வழங்கப் போகும் ஆணையாகவே கருதப்படும். இப்போது அரங்கில் உள்ள கட்சிகளில் முழுக்க முழுக்க சின்னத்தை நம்பி போட்டியிடும் கட்சி கூட்டமைப்புத்தான். எனினும் ஏனைய தேர்தல்களைப் போலன்றி உள்ளூராட்சி சபைத் தேர்தல் எனப்படுவது உள்ளூர் விசுவாசங்களிலும் தங்கியிருக்கிறது. என்னதான் தேசியம் கதை;தாலும் உள்ளூரில் சாதி அபிமானம், மத அபிமானம், ஊர் அபிமானம், பிரதேச அபிமானம் நலன்சார் தங்கு நிலை போன்ற பல இன்னோரன்ன உள்ளூர் அம்சங்களும் வாக்களிப்பைத் தீர்மானிக்கின்றன. இந்த உள்ளூர் அம்சங்களை கவனத்திலெடுத்தும் ஒரு தொகுதி வேட்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.
ஆனாலும் இந்த உள்ளூர் பரிமாணத்தையும் கடந்து தேர்தல் முடிவானது அனைத்துலகப் பரிமாணத்தைக் கொண்டதாக வியாக்கியானம் செய்யப்படும். இடைக்கால அறிக்கைக்கு தமிழ் மக்கள் வழங்கிய தீர்;ப்பாக அது வெளிஉலகிற்கு காட்டப்படும். அதன் அனைத்துலகப் பரிமாணத்தைப் பொறுத்தவரை உள்ளூராட்சி சபைத்தேர்தலானது இடைக்கால அறிக்கை மீதான வாக்கெடுப்பாகவே பார்க்கப்படும். அனால் அதன் உள்ளூர் பரிமாணத்தில் அது அவாறல்ல .பல வேட்பாளர்களுக்கே இடைகால அறிக்கையில் என்ன உண்டு என்பது தெரியாது. வாக்காளர்களின் நிலையைக் கேட்கத் தேவையில்லை. ஓரளவுக்கு படித்த நடுத்தர வர்கத்தின் மத்தியில் அது பற்றிய விழிப்பு உண்டு. அது தொடர்பாக நிறையக் கட்டுரைகளும் பத்திகளும் எழுதப்பட்டுள்ளன. அது பற்றி பல மட்டங்களிலும் கலந்துரையாடல்கள் நடாத்தப் பட்டுள்ளன. ஆனால் மேற்படி உரையாடல்களை சாதாரண வாக்காளர்கள் அறிந்திருகிறார்களா? மேற்படி கட்டுரைகளை வாசித்திருக்கிறார்களா?
எனது ஊரவன் எனது மதத்தவன், எனது சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதற்காகவோ அல்லது உள்ளூரில் தமது ஒழுங்கைகளில் அடிக்கடி சந்திக்கும் ஒரு முகத்தை முறிக்கக்கூடாது என்பதற்காகவோ அல்லது தவறணையில் ஒன்றாகக் குடிக்கும் ஒரு குடித் தோழர் அல்லது விளையாட்டுக் கழகத்தில் ஒன்றாக விளையாடும் சக வீளையாட்டு வீரர், அல்லது அந்தரம் ஆபத்துக்கு கடன் கேட்டால் மறுக்காமல் கடன் தரும் அயலவவர் போன்ற ஏதோ ஒரு காரணத்திற்காகவோ வழங்கப்படும் வாக்கானது இனப்பிரச்சினை தீர்வுக்குரிய ஒரு முதல் நிலை அறிக்கைக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வழங்கப்படும் ஒரு வாக்காக வியாக்கியானம் செய்யப்படலாம் என்பதே இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் உள்ள ஒரு ஆபத்தான யதார்த்தமாகும்.