தமிழகத்தின் பிரபல பத்திரிகை எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான ஞாநி சங்கரன் இன்று அதிகாலை காலமானார். சிறுநீரகக் கோளாறு காரணமாகவே அவருடைய மரணம் நிகழ்ந்திருப்பதாக குடும்பத்தார் தெரிவித்தனர்.
மறைந்த எழுத்தாளர் ஞாநியின் உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டிருக்கிறது.
ஞாநியின் ஊடப்பணி பத்திரிகைத்துறை கடந்து இலத்திரனியல் துறையிலும் பெயர்பெற்றதாக விளங்கிவந்திருந்தது. நாடகத்துறையிலும் புகழ்பெற்ற அவர் பரீக்ஷா என்ற நாடகக் குழு ஒன்றையும் நிர்வகித்துவந்தார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் தேர்தலையும் அவர் சந்தித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. சென்னை கே.கே.நகரில் உள்ள அவருடைய வீட்டுக்குச் சென்ற தமிழகத்தின் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
ஞாநியின் உடலுக்கு நடிகர் ரஜினிநாந்த்தும் அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
ஞாநி தன்னுடைய நண்பர் என்றும் தான் அவரது ரசிகன் என்றும் துணிச்சலாக மக்களுக்காக பேசும், எழுதும் ஞாநியின் திடீர் மறைவு தனக்கு வருத்தமளிக்கிறது என்றும் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள இரங்கில் செய்தியில்,
பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றியவரும், கடின உழைப்பாளியும், அனைவரிடமும் எளிமையாக பழகக்கூடிய பண்பாளருமான ஞாநியின் மறைவு பத்திரிகைத்துறைக்கு பேரிழப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,
தலைசிறந்த எழுத்தாளரும் நடுநிலை தவறாத தொலைநோக்கு சமூகப் பார்வையுடன் கருத்துகளைத் தரும் விமர்சகர் என்றும் மரியாதைக்குரிய ஞாநி மறைந்தார் என்ற செய்தி கேட்டு தாங்க இயலாத அதிர்ச்சியும் துக்கமும் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எண்ணற்ற ஊடகங்களில் பணியாற்றினாலும் எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளாதவர்;தனித்தன்மையை இழக்காதவர் என்றும், தமிழகத்தில் மட்டுமின்றி தேசிய அளவிலும் ஏராளமான அரசியல் தலைவர்களுடன் பழகினாலும் அதை தன்னலனுக்காக பயன்படுத்திக் கொள்ளாதவர் என்றும் தெரிவித்துள்ளார்.