மனிதம் இழந்த மனிதர்களால்
மலிந்து கிடக்கும் அநீதிகள் பாரில் !
மரணித்துப் போகும் தருவாயில்
மனிதம் இங்கே தவிக்கிறது பாரீர் !
விபத்தில் ஒருவன் உயிருக்குப் போராட
புகைப்படம் எடுத்துப் புதினம் பார்ப்போர்
மறந்தும் கூட அன்பு செலுத்த மறந்து
வலைத்தளத்தில் புதைந்து தொலைகிறார் !
மருந்துக்குக் கூட ஒரு துளி அன்புக்குப் பஞ்சம்
சுயநலத்தை மறைக்க பொது நலப் போர்வை !
தெருவுக்குத் தெரு வம்பளக்கும் ஒரு கூட்டம் !
பொறுப்புகளை மறந்து குடிபோதையில் நாட்டம் !
அதிகார வர்க்கத்தின் ஆதிக்கம் ஒருபுறம் !
அதற்கு தலை அசைக்கும் மேதாவிகள் மறுபுறம் !
பத்து மாதம் பத்திரமாய் பாலூட்டிச் சீராட்டி
பக்குவமாய் ஆளாக்கி வளர்த்துவிட்ட அன்னை
தெருவோரம் தனிமரமாய் நிற்கிறாள் இன்று
மூலைக்குள்ளும் இடமில்லை என்று
முதியோர் இல்லம் சேர்க்கும் பிள்ளை !
பூக்களும் பூக்காத பல மொட்டுகளும்
ஈவு இரக்கமற்று கசக்கி எறியும் காமுகர்கள் !
கலியுத்தின் காம லீலைகள்
தயக்கமின்றி அரங்கேற்றம்…
தட்டிக்கேட்க நாதியற்றுத் தவிக்கிறது நீதி…
கட்டிக்காக்க யாருமின்றி பரிதவிக்கிறது மனிதம் !
– வேலணையூர் ரஜிந்தன்.