மாட்டு பொங்கலையொட்டி, தஞ்சை பெரியகோயிலில் உள்ள நந்தியம் பெருமானுக்கு, 750 கிலோவிலான காய், கனிகள் மற்றும் இனிப்பு வகையில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது.
உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோயிலில், மிகப்பெரிய நந்தியம்பெருமான் சிலைஉள்ளது.
இந்த நந்தியம் பெருமானுக்கு பொங்கல் பண்டிகையான நேற்று முன்தினம் மாலை, சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. மாட்டு பொங்கலான நேற்று காலை அதிகாலை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை, 9:00 மணிக்கு உருளை கிழங்கு, கத்தரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், பாகற்காய், கரட், நெல்லிக்காய் போன்ற பல்வேறு வகையான காய்கறிகளாலும், பலவகையான கனிகளாலும், இனிப்பு மற்றும் மலர்களாலும் நந்திபெருமானுக்கு, 750 கிலோ அளவிலான பொருள்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
மேலும், நந்திபெருமான் சிலை முன்பு, 108 பசுக்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு, பசுக்கள் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுதுணி போர்த்தப்பட்டு கோ பூஜை செய்யப்பட்டது.
பின், நந்திபெருமானுக்கு படைக்கப்பட்ட காய்கறிகள், கனிகள், இனிப்புகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.