“ஓடும் நண்டை பிடித்து மடிக்குள் கட்டிவிட்டு குத்துது குடையுது எண்டால் என்ன செய்யலாம்” என்று தமிழில் கேலியாக பேசுவார்கள். விக்கினேஸ்வரன் ஐயா அவர்கள் அரசியலுக்கு உள்வாங்கப்பட்ட கதை இதுதான் போல தெரிகிறது. அவரோ தனது எண்ணங்களுக்கு மாறுபடுவதை ஏற்கவும் முடியாமல், கூட்டிவந்து அரசியலில் இணைத்தவர்களுடன் ஒத்துப்போகவும் மனமின்றி சிக்கலடைகிறார் போலும். அவரை கூட்டிவந்தவர்களோ நாங்கள் சொல்வதையும் கேளாமல், எங்களுக்கும் உதவாமல் கூட்டுச் சேர்த்தமைக்கு நன்றியும் இல்லாமல் இருக்கிறார், என்று ஒருவர் மாறி ஒருவர் அவர் மீது குற்றச்சாட்டு சொல்லிக்கொண்டே போகிறார்கள். நீதிமன்றில் குற்றச்சாட்டு கேட்பதே தொழிலாக கொண்டிருந்த அவருக்கு இதெல்லாம் பெரிதாக தெரியாது என்றுதான் சொல்லமுடியும். இதேவேளை அவர் விரும்பிவரவில்லை நாங்கள்தான் வரவைத்தோம் இப்போது ஒத்துழைக்கிறார் இல்லை என்று கவலைப்படுகிறார்கள். இதெல்லாம் புதினதாள்கள் நமக்கு கூறும் செய்திகள். எங்களுடைய தலைவர்களே ஒருவழியில் ஒற்றுமையாக செல்லமுடியாத நிலையில் இவர்களை நம்பிய தமிழர்களின் நிலையை சிந்திக்கவேண்டித்தான் உள்ளது.
“வேண்டாப் பொண்டாட்டி கைபட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம்” என்பார்கள். எனவே குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன. “பனையாலை விழுந்தவனை மாடேறி மிதித்தது போல” யார் வேண்டுமானாலும் குற்றம் சொல்லக்கூடிய ஒருவராக திரு. விக்கினேஸ்வரன் மாறியிருக்கிறார். அரசியல் தலைவர்கள் விமர்சித்தது போக, வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்படுகிறது. “இந்த மனுசன் கடைசி காலத்திலை வீணா மானம்கெடுது” என்றும் குரல்கள் எழுந்து சாய்கின்றன. மொத்தத்தில் அவர் வேண்டாத ஒருவராக கருத்துருவாக்கம் செய்யப்படுகின்றது. தமிழர்களுக்கு உண்மையில் உழைக்க புறப்பட்டவர்களை மெதுவாக அசைத்து இல்லாமல் செய்கிறார்கள் அல்லது மாற்றுகிறார்கள். இதுதான் எங்கள் வரலாறு. இதில் ஒரு விமர்சனம் சற்று வித்தியாசமான கோணத்தில் தெளிவாக ஆராய்கிறது.
முதலில் விக்கினேஸ்வரன் ஐயா தொடர்பாக கறுப்பு எழுத்துகளால் காட்டப்பட்ட முக்கிய குறிப்புகள் அல்லது குறைபாடுகள் இங்கே தரப்படுகிறது.
நன்றியின்மை, கருத்தின் உறுதியின்மை, ஆளுமையின்மை, சுய உணர்வால் ஏற்றபட்ட நீதியின் மீதான நம்பிக்கையின்மையும் இனப்பற்றின்மையும் ,மக்கள் மீதான அக்கறையின்மையும் தன்னைச் சார்ந்தவர்களின் பிழைகளை மூடிமறைக்கும் பொய்மையும், நிர்வாகத்திறனின்மையும், நீதியின்மையும், பக்கச்சார்பும், உண்மைக்கு மாறான தன்உணர்ச்சியும் வெற்றிக்காய் எதையும் செய்யத்துணியும் பொய்மையும் தீர்க்க்தரிசனமின்மை, தியாகத்தின் (?) வீரியம், தடுமாற்றம்,முடிவெடுக்கும் திறனில் உள்ள குறைபாடு
இப்படியாய் இன்னும் பலவற்றைச் சொல்லலாம்.
இனி அவர் பற்றிய செய்தியின் ஒரு பகுதி.
நீதியரசர் எங்கள் கழகத்தின் பெருந்தலைவராக பதினைந்தாண்டுகளுக்கு மேலாகச் செயலாற்றியவர். என்மேல் தனிப்பட்ட மதிப்பும் அன்பும் கொண்டவர்.
எங்கள் கழகத்தின் பெருந்தலைவராக அவர் இருந்தபோது,
அவரது பெருமைக்கு எவ்வித மாசும் வராமல் நாம் பார்த்துக் கொண்டோம்.
முதலமைச்சராக அவர் வரவேண்டுமென,
பத்திரிகைகளிலும் மேடைகளிலும் துணிந்து குரல் கொடுத்தவன் நான்.
அப்போது அறிவுத்துறை சார்ந்த பலரும்,
அக்கோரிக்கையில் தங்களை அடையாளப்படுத்த விரும்பவில்லை.
முதலமைச்சர் கண்ணியமானவர் என்பதில் எனக்கு இன்றும் நம்பிக்கை உண்டு.
அவர் பெருமை தெரியாத யாரோ சிலர் அவரைப் பிழையாய் வழிநடத்தி,
மதிப்புக்குரிய அவரை இன்று மதிப்பிழக்கச் செய்திருக்கிறார்கள் என்பதே என்கருத்து.
இன்றும் அவர்மேல் தனிப்பட்ட வகையில் எந்தவிதமான பகையும் எனக்கில்லை.
ஆனால் சமுதாய நலம் நோக்கி மிக நிதானமாகச் சீர்தூக்கியே,
அவர் மீதான எனது விமர்சனங்களை முன்வைத்து வருகிறேன்.
இது புதினத்தாள் ஒன்றில் வெளிவந்த முதலமைச்சர் தொடர்பான கருத்துரை. மதிப்புக்குரிய அவர்களை மதிப்பிழக்கச் செய்திருக்கிறார்கள் என்று கூறி, அவர்மீது விளக்கவுரையுடனான குற்றங்களை அடுக்கி அடிமட்டம் வரை மதிப்பிறக்கம் செய்ய முயன்றுள்ளது இக்கருத்துரை. உண்மையில் இதனை விளங்கி கொள்வது மிகவும் சிக்கலாக உள்ளது. காரணம் முன்னுக்கு பின் முரணாக செய்திகள் சொல்லப்பட்டுள்ளது. 15 வருடங்களுக்கு மேலாக கழகம் ஒன்றின் பெருந்தலைவராக பணியாற்றியவருக்கு ஆளுமையுமில்லை, நிர்வாகத்திறனுமில்லை. இன்னும் பல திறன்கள் பற்றாக்குறை. அத்துடன் அவர் ஒரு நீதியரசர். ஆகவே இந்தக்கழகம் எப்படி தங்களின் அங்கத்தவர்களை வளர்க்கிறது. மேலே சொன்ன இவ்வளவு குறைகள் உள்ளவர் தலைவர் என்றால் அங்குள்ள மற்றவர்களை எவ்வாறு கணிப்பிடுவார்கள் என்ற எண்ணம் இன்றி அவர்பற்றி சொல்லப்பட்டுள்ளது. ஒரு படித்த, இலக்கிய அறிவாளி மக்களுக்கு வழிகாட்டவே இக்கருத்துகளை சொல்லியுள்ளார். ஆகவே நேர்மையாக சரியாக ஆராய்ந்து எழுதியிருப்பார். அத்துடன் அவருடைய திறனின்மையை நிரூபிக்கும்வகையில் ஆதாரங்களும் தந்திருக்கின்றார். அப்படியென்றால் சாதாரண தேநீர்க்கடை நடாத்தும் ஒருவர்கூட தன் கடையில் “குறை இருந்தால் எம்மிடம் கூறுங்கள், நிறைவாக இருப்பின் நண்பர்களிடம் சொல்லுங்கள்” என்று எழுதி வைத்திருப்பார். இவர்கள் தேநீர் கடைகளுக்கு செல்லாதவர்களாயினும், யாழ்ப்பாணத்தில் பிறந்த ஒருவர் இதை கண்டிப்பாக அறிந்திருப்பார். அந்த அடிப்படையில் நோக்கின் இலக்கிய அறிவும், நடைமுறை அறிவும் ஒருங்கே பெற்ற ஒருவர் நயமுற பத்திரிகையில் எழுதுவதிலும், தெளிவுற கூட இருந்தவருக்கு சொல்லியிருக்கலாமே. உண்மையான அன்பு, மதிப்பு, அக்கறை என்பன அவர்மீது வைத்து இருந்தால் அவரிடம் இரகசியமாக விளக்கியிருக்கலாமே. பகிரங்கமாக பத்திரிகையில் விளக்கவுரையுடன் எழுதி அவமானப்படுத்த தேவையில்லையே. இதற்கும் மேலாக ஒரு கழகத்தில் 15 வருடமாக இணைந்து செயற்பட்டவரை நன்கு அறிந்த பின்புதான் அவர் உகந்தவர் என்று குரல் கொடுத்திருப்பார்கள். கருத்துரை எழுதியவர் முதலில் அவர் தகுதியானவர் என்றும் சொல்லி, இப்போது அவர் தகுதி இல்லை என்றும் சொல்வது நன்றுமல்ல, அது மக்களுக்கு செய்யும் நன்மையுமல்ல என்றே கருதமுடியும்.
“தீதும் நன்றும் பிறர் த வாரா” நாமே தேடுவது, நயம்பட தமிழில் திறம்பட உரைக்கும் உயர் தமிழ் அறிவு ஓங்கியே வளர்ந்த பெரியவனல்ல யான். இருப்பினும் தமிழன் இருப்பினை சிதைக்கும் எவர் மொழி கேட்டும் எழுந்து நோக்கி எதிர்வினா தொடுத்தல் எம்வேலையல்ல. உயர்வினை நோக்கி பயணித்த ஒரு இனம், வழித்தடம் தவறி புதியவர் தேட, படித்தவர், பண்பாளர் அனைவரும் சேர்ந்து அழைத்துவந்த ஒரு அறிய தமிழன் விக்கினேஸ்வரன் என்றால் இப்போ என்ன குழப்பம். அழைத்தவர் நாங்கள் அவருடன் இணைந்து வெற்றியை நோக்கி விரைந்திருக்க வேண்டும். வந்தவர் எம்முடன் வழிவரல் தவிர்த்து, தன்னிடை தோன்றும் எண்ணங்கள் கூறுதல் தவறென உரைத்தல் நன்றென எவரும் ஏற்றிடமாட்டார். இதுவே தமிழரின் மரபென காணின் அது பொருத்தமும் இல்லை, அதனால் நமக்கு நன்மையுமில்லை. பதினைந்தாண்டு சேவையை கொண்டு, தமிழர் தலைமைக்கு தகுதியில்லை என்று அன்றே மறுத்து அறிக்கையிட்டிருந்தால் அதுவே நேர்மை. அன்றோ தமிழர்க்கு நன்று இவரென்று குரலும்தந்து, இன்றோ எழுத்தில் சான்றிதழ் கொடுத்து, இவர்தரம் குறைவு என்றெழுந்து உரைத்தல் சரியும் அல்ல அது முறையுமல்ல.
உண்மையில் இக்கட்டுரையாளரையோ அல்லது திரு.விக்கினேஸ்வரன் அவர்களையோ எனக்கு நேரடியாக தெரியாது. ஆனால் அரசியல் தலைவர்கள் அவரை குற்றம் சொல்லும் போது அது பெரிதாக தெரியவில்லை. காரணம் அரசியல் தலைவர்கள் தங்களது இருப்பினை நிலைப்படுத்த நிலையான கொள்கையின்றி, என்ன தேவை என்று யோசித்து, அதற்காகவே தொழிற்படுபவர்கள். பொதுவாக எல்லோருக்கும் ஒத்துப்போவர்கள். ஒரு சிலர் மட்டும் எது வரினும் கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பார்கள். அப்படி ஒருவராக விக்கினேஸ்வரனும் இருக்கலாம். வாய்ப்பினை வழங்கி அவரை செயற்பட விடுதல்தானே சரி. முன்னுக்குபின்முரணான கருத்துக்கள் வைப்பது இலக்கியவாதிகளுக்கு பொதுவாக இருக்கலாம். ஆனால் கம்பன் புகழ் பாடுவோர் செய்யக்கூடாது. காரணம் இராமாயணம் என்பது தொடக்கம் முதல் முடிவு வரை எடுத்த கருத்தினை விலக்காது செல்லும் ஒரு காப்பியம். விக்கினேஸ்வரன் முதலமைச்சராக வருவதற்கு குரல் கொடுத்தவர்கள் அவருக்கு பக்கபலமாக இருக்கவேண்டுமே தவிர எதிர்த்து நின்று போர்தொடுக்க கூடாது. இப்படி ஒரு கலாசாரம் பரவ நாம் அனுமதிக்க கூடாது. ஏனென்றால் தங்களிற்கு ஏற்ப ஒருவரை உருவாக்குதல் பின்பு தங்கள் தேவை முடிந்தவுடன் அவர்களை அழித்துவிட துணிதல் என்பது தமிழின வரலாறு. இதனை தாண்டி நின்றவர்கள தான் சாதனைகள் செய்துள்ளனர். எங்கள் சிந்தனைகளை ஏற்றி அனுப்ப ஒருவர் வேண்டுமெனின் அவர் மிக சாதாரணமான ஒருவராக இருக்க வேண்டுமே தவிர சுயசிந்தனையாளராக இருக்க கூடாது.
தமிழர்களை எப்படியும் ஏமாற்றலாம் என்ற தலைவர்களை இருக்கும் வரை நாங்கள் உரிமை பெறுதல் நடக்க கூடிய ஒன்றல்ல. விக்கினேஸ்வரன் அவர்கள் ஒருமுறை சொன்ன ஒரு கருத்து “நான் இதுவரை தமிழர்களின் நிலையை தெரியாமல் வாழ்ந்துவிட்டேன். ஆனால் இன்று தமிழ்மக்கள் என்னிடம் வந்து தங்கள் குறைகள் சொல்லும்போதே அவர்களை பற்றி சிந்திக்க ஆரம்பித்துள்ளேன். அவர்களின் துயரினை போக்க என்னால் இயன்றதை செய்வதற்கு ஆசைப்படுகின்றேன்.” எனவே வெளியில் இருக்கும்வரை அவருக்கும் அரசியல் என்னவென்று தெரிந்திருக்காது. அரசியலில் வந்தவுடன் அவர்களுடன் ஒத்துபோகமுடியாது காரணம் அவர் அரசியல்வாதியல்ல. அரசியல்வாதியாக மாறவும் அவரால் முடியவில்லை. அரசியல்வாதி அல்லாத ஒருவர் சந்திக்கக்கூடிய சிக்கல்களையே விக்கினேஸ்வரனும் சந்தித்து கொண்டிருக்கின்றார். சட்டம் படித்தவர்களை நம்பி ஏமாந்த சமூகம்தான் நமது சமூகம். மலையக தமிழரின் குடியுரிமை பறிப்பை எதிர்த்தவர் திரு. செல்வநாயகம், ஆதரித்தவர் திரு பொன்னம்பலம். இருவரும் சட்டம் படித்தவர்கள். இதில் யாது சரி. மாவட்டசபை அமைப்பை பெற்றுத்தந்தவர்களும் சட்டம் படித்தவர்கள். எனவே சட்டம் படித்தவர்கள் எல்லோரும் சரியாக சிந்திப்பார்கள் என்று ஒத்துக்கொள்ளமுடியாது. மக்கள் தலைவனாக அரசியலுக்கு வந்தால் அவனிடம் அரசியல் நேர்மை இருக்கவேண்டும். இல்லையேல் பயனில்லை. சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இங்கு இடமில்லை. அறிவு முதிர்ந்தோர் எங்கள் மக்களுக்கு அரசியலை சொல்லிகொடுக்கவேண்டுமே தவிர அவர்களை குழப்பக்கூடாது. நீதியை பேசவேண்டுமே தவிர நீதியை தமக்காக வளைக்க கூடாது.
நீதியரசர் அவர்கள் தனக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை என்பதால் அழைத்தபோது மறுத்திருக்கலாம். அவரை அழைத்தவர்களும் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியலாம் என்று சிந்தித்திருக்கலாம். அவரை அழைத்தபோது வராதிருந்தது அவரின் சுயசிந்தனை தந்தமுடிவு. இன்று அவரை எடுத்த எடுப்புக்கு எல்லாம் வளைக்க முடியாதிருப்பது அவரின் நேர்மை என்று நான் கருதுகின்றேன். கூப்பிடும் போது வருவது, போ எனும்போது போவது ஒரு சரியான தலைவனுக்கு பொருத்தமானதல்ல. இந்த ஒன்றே அவர் தலைமைக்கு பொருத்தமானவர் என்று காட்டுகிறது. அரசியல் தலைமைகளை தாண்டி மக்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பது அவருடைய செயற்பாட்டை மக்கள் விரும்புவதைக்காட்டுகிறது. மனஉறுதியுள்ள எந்த ஒருவரும் எடுத்த முயற்சியில் முடிவொன்று காணாது மீளமாட்டார்கள். அது வெற்றி அல்லது தோல்வியாக இருக்கலாம். சில நல்ல ஆரம்பங்கள் கண்டிப்பாக தொடரும். எனவே விக்கினேஸ்வரனிடம் நல்ல தகுதி இருப்பதாகவே தெரிகிறது. அதனாலேயே எல்லோரும் வெறுக்கிறார்கள் போல. எல்லாவற்றுக்கும் மேலாக,
எங்கள் உரிமைகளுக்காக ஒவ்வொருவராக கெஞ்ச வேண்டிய அவசியமில்லை, அதேவேளை சிங்களவர்கள் நிலையான கொள்கையுடையவர்களும் அல்லர். தனிச்சிங்கள சட்டம் வந்தபோது “ஒரு மொழி என்றால் இருநாடு, இரு மொழி என்றால் ஒரு நாடு” என்று சொன்ன கொல்வின் ஆர். டீ.சில்வாதான் பின்பு சிங்களம் ஆட்சிமொழி, பௌத்தம் அரசமதம் என்று சட்டவாக்கம் செய்தவர். நீதியரசர் இவற்றை தெளிவாக அறிந்திருக்கலாம். ஒருவர் தொடர்பாக முடிவெடுக்க அவரின் நீண்ட செயற்பாடுகளே குறிகாட்டி. மேலும் கொள்கைகளை மாற்றுதல் அரசியல்வாதிகளுக்கு கைவந்தகலை.
பணிந்து கேட்டு பெற்றுகொண்டால் அவை சலுகைகளே தவிர உரிமைகள் அல்ல. உரிமை என்பது துணிந்து கேட்டு பெறப்படவேண்டும். அதுவே நிலையானதும் கூட, என்ற நிலைப்பாடும், யாரிடம் எதைப்பேசவேண்டுமோ, அவரிடமே அதைப்பேச வேண்டும் என்ற தீர்க்கமான முடிவும் சிறந்த தலைமைக்கு தேவை. மக்களுக்கு எதுவும் செய்யாமலிருக்கலாம் ஆனால் தங்களை பெரிதாக உருவகித்து, எதையோ சாதிப்பதாக காட்டி மக்களை ஏமாற்ற முனைவது ஏற்கமுடியாது என்பது சரியான நிலைப்பாடு. அதுதான் அவசியமும் கூட.
பரமபுத்திரன்.