பகிரப்படாத பக்கம் – 10
பகிரப்படாமல் இருக்கும் பல்லாயிரம் வீரங்களும் தியாகங்களும் இந்த பகிரப்படாத பக்கங்களினூடாக ஒவ்வொன்றாக பகிரப்பட்டு வரும் சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றிலும் எம் தியாக வேங்கைகள் எங்கள் மனங்களில் உயிர்வாழ்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்நிலையில் வெளித் தெரியாமல் தேச வரலாற்றுப் பக்கங்களை நிரப்பி நிற்கும் தமிழீழ மருத்துவத் துறை நீண்ட பெரும் தியாகங்களைக் கொண்டது.
யாழ் மாவட்டம் அப்போது அங்குலம் அங்குலமாக தீவிர தேடுதல்களுக்கு உள்ளாகும் எம் தாயக நிலம். கிட்டத்தட்ட 40000 படைகளை குவித்து வைத்து வெறும் 100 பேரளவிலான விடுதலைப்புலிகளின் தொல்லை தரும் கெரில்லாத் தாக்குதல்களை எதிர்கொள்ள திணறிய காலம். “யாழ்செல்லும் படையணி” என்ற உள் நடவடிக்கை படையணிப் போராளிகளின் அதிரடித் தாக்குதல்கள் யாழ்ப்பாண மாவட்டம் எங்கும் பரந்து விரிந்து கிடந்தது.
அதனால் கைதுகளும் காணாமல் போதலும் அதிகரித்திருந்த காலம். அதனால் அந்த நாட்களை எம் போராளிகள் கடப்பது என்பது சாதாரணமானதல்ல. அவ்வாறான திகில் தரும் நாட்களை சில பத்து போராளிகள் சிறு அணிகளாக கடந்து கொண்டிருந்தனர். அவர்களோடு யாழ்ப்பாண நடவடிக்கைகளுக்கான நடவடிக்கை மருத்துவர்களாக மூன்று மூத்த மருத்துவர்கள் தென்மராட்சி, வடமராட்சி பிரதேசங்களின் எல்லைக் கிராமமான கப்பூது, முள்ளி போன்ற இடங்களை சூழ்ந்த கண்டல் பற்றைகளுக்குள் நிலை எடுத்து இருந்தார்கள்.
அவர்களின் தங்குமிடம். எப்போதும் வல்லையில் இருந்து ஆனையிறவு வரை நீண்டு செல்லும் சிறு கடல்நீரேரியால் சூழ்ந்த இடம். எப்பொழுதும் நீர் ஓடிக் கொண்டிருக்கும் அந்த கண்டல் காடு தான் அப்போது பாதுகாப்பானதாக விடுதலைப்புலிகளின் தாக்குதல் அணிகளால் தெரிவு செய்யப்பட்டிருந்தது. நீருக்கு மேலே வளர்ந்து நிற்கும் கண்டல் பற்றைகளில் மறைப்பில் நீண்ட தடிகளினால் பறண்கள் அமைத்து அதன் மேலே அவர்கள் வாழ்ந்தார்கள். அந்த பறன் தான் அவர்களின் மறைவிடம், தங்குமிடம், மருத்துவ அறை, உணவகம், சத்திரசிகிச்சை அறை. எந்த நாட்டிலும் இல்லாத இராணுவ மருத்துவர்கள் எம் போராளிகள்.
அவர்களுக்கு சத்திரசிகிச்சைக்கு வசதிகள் தேவையில்லை. வாழ்வதற்கு குளிரூட்டப்பட்ட வீடுகள் தேவையில்லை. தினமும் அழுத்தி மடிக்கப்பட்ட சீருடைகள் தேவையில்லை. அவர்களுக்கு வேண்டப்பட்டதெல்லாம் ஒன்று தான் தமது மருத்துவப் பொருட்களை பாதுகாக்க, காயப்பட்டவர்களை பராமரிக்க ஒரு பாதுகாப்பான இடம். அதை அவர்கள் சரியாக தெரிவு செய்திருந்தார்கள். ஒரு மரபு வழி இராணுவ படையின் மூத்த இராணுவ மருத்துவர்களாக இருந்தும். தள மருத்துவமனைகளில் மட்டும் சத்திரசிகிச்சைகள் அல்லது மருத்துவ பணி என்றில்லாமல், கள மருத்துவ போராளிகள் போலவே இவர்கள் வாழ்ந்தார்கள். அங்கே அமைக்கப்பட்டிருந்த பரண்களே அவர்களின் சத்திரசிகிச்சைக் கூடம்.
இவ்வாறான வாழ்க்கையில் அவர்களால் தெரிவு செய்யப்பட்டிருந்த இந்த கண்டல் பற்றைக் காடுகளின் தெரிவில் பல காரணங்கள் இருந்தாலும், இரண்டு முக்கிய காரணங்கள் குறிக்கப்பட்டன.
1). தண்ணீர் இடுப்பளவிற்கு மேல் ஓடுவதால் அதற்குள் விடுதலைப்புலிகள் தங்கி நிற்க வாய்ப்பில்லை என்று சிங்களம் கருதும். அதனால் அந்த இடத்தில் சிங்கள இராணுவம் கவனம் கொள்ளாது.
2). ஒருவேளை எதிரி இனங்கண்டு தாக்க வந்தால் கூட நீரில் அவனின் நகர்வுகளை எம்மவர்கள்
இலகுவில் அடையாளம் கண்டு தப்பிக்க முடியும்.
இவ்விரண்டு விடயங்களும் ஆபத்து நிறைந்தவை எனிலும் அப்போதைய யாழ்ப்பாணச் சூழலில் அதுவே சிறந்த தெரிவாக இருந்தது.
அங்கே தங்கி நின்ற மருத்துவ அணி யாழ்ப்பாணத்தில் நடவடிக்கையில் நின்ற அனைத்து போராளிகளையும் காயங்களில் இருந்தும் வீரச்சாவில் இருந்தும் காக்க வேண்டிய பெரும் பொறுப்பை சுமந்து நின்றனர். வடமராட்சி, தென்மராட்சி பகுதிகளில் காயப்படும் போராளிகள் இவர்களிடம் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டு மீள்உயிர்ப்பித்தல் செய்யப்பட்டே வன்னிக்கு அனுப்பப்படுவார்கள்.
இவ்வாறாக காயப்பட்ட ஒரு போராளி யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னியின் இராணுவ மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படும் வரை அவர்களின் உயிர்காத்தல் நடவடிக்கைகளை அங்கே கடமையில் இருந்த இராணுவ மருத்துவர்களான திரு மலரவன், திரு முரளி, திரு அமுது, கப்டன் அன்பானந்தன் ( பின்னொரு நாளிள் வலிகாமம் பகுதியில் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு) ஆகிய நான்கு மருத்துவர்களுமே செய்ய வேண்டி இருந்தது. இவர்களோடு மருத்துவ நிர்வாகப் பொறுப்பாளர் மாவியும் அங்கே நின்றார்.
மருந்துப் பொருட்களை பாதுகாக்க பெரும் பிரச்சனைகள் எழுந்தன. ஒரே இடத்தில் வைக்க முடியாது. எதோ ஒரு இடம் எதிரியால் இனங்காணப்பட்டால் அத்தனை மருந்துகளும் கிடைக்காமல் போய்விடும் அதனால் 10 பரல்களில் (Log tubes ) மருத்துவ பொருட்களை பாதுகாப்பாக அடைத்து மூன்று இடங்களில் அவற்றை தாட்டார்கள். தாட்டு அதன் புவிநிலையைக் GPS (Global Position System ) குறித்துக் கொள்வார்கள். ஒரு தொகுதி பிடிபட்டாலும் ஏனையவை தப்பிக்கும் என்ற நம்பிக்கை. அல்லது ஓரிடத்தில் இருந்து பாதுகாப்பு கருதி மாறும் போது பயன்பாட்டுக்கு மற்றவற்றை பயன்படுத்த முடியும்.
இதில் ஏற்பு வலி தடுப்பூசிகளை (ATT – Anti Tetanus Toxoid ) பாதுகாப்பது என்பது பெரும் பிரச்சனையாக இருந்தது. அதற்கு குளிரூட்டி தேவைப்பட்டது. அதனால் வன்னியில் இருந்து கொண்டு வந்து பயன்படுத்துவது சாத்தியமற்று போனது. அதன் காரணமாக அவற்றை அங்கே வாழ்ந்த எம் மக்களின் உதவியோடு மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், தாதிகளினூடாக அவற்றை பெறுவதற்கு திட்டமிடப்பட்டது. அவர்களூடகவே அவை பெறப்பட்டன. அவற்றை மக்கள் மனமுவந்து போராளிகளுக்கு கொடுத்துதவினார்கள். அவற்றை வழங்குவதால் இராணுவத்திடமிருந்து கிடைக்க போகும் ஆபத்துக்களை எல்லாம் அவர்கள் சிந்திக்கவில்லை. அவர்களின் உதவிகளூடாக பெறப்பட்ட மருத்துவப் பொருட்களையும் கொண்டு ஒரு பெரும் சாதனையையே செய்தார்கள் மருத்துவப் போராளிகள்.
இவர்களின் வீரம்மிகு செயல்களால் தாக்குதல் அணியில் இருந்த போராளிகள் நம்பிக்கை கொண்டிருந்தனர். அந்த நேரங்களில் எதிரியை திணறடிக்கும் பல முனைக் கெரில்லாத் தாக்குதல்களை போராளிகள் செய்து கொண்டிருந்தனர். எங்காவது இலக்கு கிடைக்கும் என்று வேவுக்காக அலைவதும், கிடைக்கும் இலக்குகளை வீணாக்காது அழிப்பதும், தப்பி ஓடுவதும் என யாழ்ப்பாணத்தை விடுதலைப்புலிகளின் படையணிகள் திணறவைத்துக் கொண்டிருந்தன.
இதில், வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் என நான்கு சண்டை வலையங்களாக பிரிக்கப்பட்டு தனித்தனி தளபதிகளும் பொறுப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருந்தனர். அப்போது தென்மராட்சி கோட்டத் தாக்குதல் அணித் தளபதியாக திரு வீமன் அவர்கள் இருந்தார். அவரோடு நடவடிக்கை பொறுப்பாளராக திரு கோகுலன் அவர்கள் இருந்தார். ( சாள்ஸ் அன்டனி படையணியின் தளபதிகளில் ஒருவரும், குடாரப்பு தரையிறக்க வெற்றியின் மிக முக்கிய வேவுப் போராளியாக செயற்பட்டு அந்த வரலாறு காணாத வெற்றி சமரின் ஆணிவேர்களில் ஒருவராக விளங்கியவர். ) இவர்களின் பிரதேச அறிவும் மதிநுட்பமான திட்டமிடலும் தென்மராட்சியில் தங்கியிருந்த இராணுவத்தை திணறடித்துக் கொண்டிருந்தது.
இவ்வாறான ஒரு நாளில் தான். வடமராட்சிக்கு செல்ல வேண்டிய தாக்குதல் அணி ஒன்று பூநகரி ஊடாக தென்மராட்சிக்கு வந்திருந்தது. அந்த அணியை நகர்த்துவதில் பெரும் இடர்கள் வந்தன. அதனால் சுட்டிபுரம் அம்மன் கோவிலுக்கு அருகில் இருந்த ஒரு எல்லை காவலரன் தொகுதியை தாக்க வேண்டிய தேவை எழுந்தது. திரு கோகுலனின் தலமையிலான வேவு அணி அதற்கான வேவை எடுத்து சண்டைக்கான திட்டத்தை போடுகிறார்கள். தென்மராட்சியில் தாக்குதலுக்காக தளபதி வீமனின் கட்டளைக்குள் செயற்பட்டுக் கொண்டிருந்த தாக்குதல் அணி தயாராகியது.
அந்த தாக்குதல் அணியில் ஒருவராக மலரவனும் செல்கிறார். தாக்குதல் போராளிகளால் தொடங்கப்பட்ட போது காவலரனில் இருந்த இராணுவத்தினர் எதிர்த் தாக்குதலை தொடுத்தனர். அப்போது 15 போராளிகள் விழுப்புண் (காயம்) அடைகிறார்கள். அதில் இரண்டு வயிற்றுக் காயம் மற்றவை வேறு வேறு காயங்கள். அக் காயப்பட்ட போராளிகளில் மருத்துவர் மலரவனும் ஒருவர். மலரவன் முதுகுப் பக்கத்தின் தோழ் மூட்டு (Back side shoulder ) பகுதியில் காயமடைந்திருந்தார். இராணுவம் சுட்ட ரவை ஒன்று பெரும் காயத்தை உண்டு பண்ணி இருந்தது. குருதி பெருக்கெடுத்த நிலையில் மலரவனும் ஏனைய காயமடைந்த போராளிகளும் தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து மறைவிடத்துக்கு தாக்குதல் அணியினரால் நகர்த்தப்படுகிறார்.
காயப்பட்ட போராளிகள் அனைவரையும் அந்த கண்டல் காட்டுக்குள் நகர்த்தி பாதுகாப்பது என்பது சாதாரணமானதல்ல. ஆனால் அசாதரமாணதைக் கூட சாதாரணமாக செய்து முடிக்கும் எம் போராளிகள் அதையும் செய்தார்கள். இரண்டு மருத்துவர்கள் மட்டும் அத்தனை போராளிகளுக்கும் சிகிச்சை அளிப்பது என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. ஆனால் முதலில் வயிற்றுக் காயத்தை திறந்து சிகிச்சை செய்தார்கள் அமுது மற்றும் முரளி ஆகிய இராணுவ மருத்துவர்கள்.
கண்முன்னே மயக்க நிலையில் போராளிகள் இருக்கும் போது இராணுவம் இவர்களைத் தாக்கினால் தப்பிக்க வழி இல்லை என்ற பெரும் பிரச்சனை ஒன்று எழுந்தாலும், காயப்பட்ட அத்தனைபேருக்கும் சிகிச்சை கொடுத்து காப்பாற்ற வேறு வழி தெரியவில்லை. கிடைத்த மருத்துவ வசதிகளைக் கொண்டு சிகிச்சை தரப்படுகிறது. அந்த பிரதேசத்தில் முழுமையாக பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. திடீர் தாக்குதல் நடந்தால் சமாளிக்கும் வகையில் போராளிகள் தயாராக நின்றார்கள்.
காயப்பட்டிருந்த மருத்துவர் மலரவனால் மற்ற இரு மருத்துவர்களும் சிகிச்சை அளிப்பதை பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை. தானும் மற்றைய போராளிகளுக்கு சிகிச்சை அளிக்க தொடங்குகிறார். குருதி தடுப்புக்கு கட்டப்பட்டிருந்த குருதி தடுப்பு பஞ்சை மீறி அவரது காயத்தில் இருந்து குருதி வெளியேறுகிறது. மருத்துவர் முரளியும் அமுதுவும் மலரவனை தடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்க முயல்கிறார்கள். ஆனால் மலரவன் மறுக்கிறார். முதலில் அவசர சிகிச்சைக்குரிய போராளிகளின் காயங்களுக்கான சிகிச்சையை மற்றவர்களுடன் இணைந்து வழங்குகிறார். அவரது காயம் பெரும் வலியைத் தந்தாலும் அதை பொருட்படுத்தாது ஏனைய 14 போராளிகளுக்கும் சிகிச்சை வழங்கிய பின்னே தனக்கான சிகிச்சை வழங்க அனுமதிக்கிறார்.
முறையான சிகிச்சை வழங்கவில்லை எனில் மலரவனை நாம் இழக்க வேண்டி வரும் என்ற உண்மை அங்கு நின்றவர்களால் புரியப்பட்டது. அதாவது காயத்தை பிரித்து சுத்தம் செய்து மருந்திடுவது (Wound Toilet ) அதனால் மருத்துவர் முரளியும் அமுதுவும் மலரவனுக்கான சிகிச்சையை கண்டல் காட்டுப் பரண்களில் வைத்து செய்கிறார்கள்.
முதுகு காயம் பலமானதாக இருந்தது. மயக்க மருந்து (General Anesthesia /அனஸ்தீசியா) கொடுக்கப்படுகிறது. காயம் தாங்க முடியாத வேதனையை தந்தது. ஆனாலும் மலரவன் மயக்கநிலையில் இருந்து மீண்டு வந்தும் அந்த வலிகளையெல்லாம் தாங்கிக் கொண்டார்.
காயப்பட்ட இடத்தில் ஒவ்வொரு கலன்களும் பிய்ந்து தொங்கின. அவற்றை எல்லாம் சிகிச்சை மூலம் சீரப்படுத்த முனைந்தார்கள் மருத்துவர்கள்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான ஒரு போராளியாக இருந்த மலரவனை நிட்சயமாக இழக்க முடியாது. தமிழீழ மருத்துவக் கல்லூரியின் முதல்நிலை மாணவனாக இருந்து, தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த இராணுவ மருத்துவனாக இருக்கும் அவரை இழப்பது பல போராளிகளை இழப்பதற்கு ஒப்பானது என்பதை அங்கு நின்ற மற்ற மருத்துவர்களும் மருத்துவ அணிக்கு பொறுப்பாக நின்ற மாவியும் புரிந்து கொண்டார்கள். தளபதி வீமன் உடனடியாக அவரை இரகசிய பாதையூடாக பூநகரிக்கு அனுப்பி அங்கிருந்து சரியான மருத்துவத்தை கொடுக்க ஏற்பாடு செய்தார்.
யாழ்செல்லும் படையணியின் கட்டளைச் செயலகம் உடனடியாக மலரவனை வன்னிக்கு நகர்த்துமாறு கட்டளை அனுப்புகிறது. காயப்பட்ட மற்ற போராளிகளுடன் அவரையும் வருமாறு கூறப்படுகிறது. ஆனால் மலரவன் வன்னிக்கு போக மறுக்கிறார். யாழ்ப்பாணத்தில் தனது தேவை இருக்கும் நிலமையை புரிந்து கொண்டார். தான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளி வர முடியாது என்று திடமாக அறிவித்தார். யாழில் நடவடிக்கையில் நிற்கும் பல நூறு போராளிகளை விட்டு என்னால் வன்னிக்கு வர முடியாது. அவர்களின் மருத்துவ நம்பிக்கையை என்னால் உடைத்தெறிய முடியாது. எனது காயம் எனக்கு பெரும் பாதிப்பைத் தரப்போவதல்ல. என் காயத்தை நான் இங்கிருந்தே மாற்றிக் கொள்ளலாம். அதற்கான வசதிகள் போதிய அளவு எம்மிடம் இருக்கிறது என்று கூறி மறுக்கிறார்.
போராளிகளின் மருத்துவ நம்பிக்கை தளர்ந்தால் யாழ்ப்பாணத்துக்கான நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. அவர்கள் காயப்பட்டாலும் மலரவன் டொக்டரோட மூன்று மருத்துவர்கள் நிக்கினம் எங்கள காப்பாத்துவினம் என்ற எண்ணம் போராளிகளிடம் இருக்கும் என்றே அவர் நம்பினார். அப்பிடி இருக்கும் போது தான் இந்தக் காயத்தை சுட்டிக்காட்டி வன்னிக்கு பாதுகாப்பாக சென்றால் அவர்கள் மனதளவில் சிறு நம்பிக்கையீனம் தோன்றாலாம். காயப்பட்டாலும் மீண்டும் எதிரியோடு சண்டை போட தயாராகலாம் என்ற நம்பிக்கை இல்லாது போய்விடும் காயப்படுபவர்கள் குப்பியோ அல்லது குண்டையோ பயன்படுத்தி உயிரிழக்கும் அபாயம் தோன்றும் என்றெல்லாம் அவர் சிந்தித்தார்.
சிறு காயங்கள் என்றாலும் பாதுகாப்பாக மருத்துவமனையில் பதுங்கும் இராணுவத்தை கொண்டவர்கள் அல்ல விடுதலைப்புலிகள். அஞ்சாத வீரமும், அடங்காத மண்பற்றும் கொண்ட பெரும் வேங்கைகள் இவர்கள். இவர்களை இந்தக் காயங்கள் ஒன்றும் சண்டைக் களத்தில் இருந்து வெளியில் கொண்டு போகாது. இது பல ஆயிரம் போராளிகளின் சான்று. இன்றும் மலரவனாலும் நியமாக்கப்பட்டது.
அவரால் நிமிர்ந்து படுக்க முடியாது. ஒற்றைப் பக்கமே சரிந்து உறங்க முடியும். மறுபக்கமும் திரும்ப முடியாது. அதுவும் பஞ்சு மெத்தையில் அவர் உறங்கவில்லை. குறுக்கே கட்டப்பட்டிருக்கும் கட்டைகள் அவர் உடலில் வேதனையை உண்டாக்கும். ஆனால் அதை பெரிது படுத்துவதில்லை. எப்பவோ ஒரு நாள் கிடைக்கும் உறக்கத்தையும் காயத்தின் வலி குழப்பும் ஆனால் அவர் தளர்ந்து போகவில்லை.
காயம் தாங்க முடியாத வலியை தரும் போதெல்லாம் அதற்கு வலிநிவாரணியாக Brufen / Voltaren மாத்திரைகளில் ஏதோ ஒன்றை கூட போட முடியாது. அந்த மாத்திரைகள் வலியை தற்காலிகமாக குறைக்கும் அதே வேளை நித்திரையை உருவாக்கும் அதனால் அதை பாவிப்பவர் சரியான உறக்க நிலைக்கு சென்று விடுவார். அவ்வாறு மலரவனும் உறக்க நிலைக்கு போனால், திடீர் என்று அவர்களின் மறைவிடம் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டால்? நிலை என்ன? என்ற வினா எழும். அதற்கு பதிலாக வீரச்சாவு அல்லது கைது என்று பதில் வரும். தப்பிப்பது கடினம். அதற்காக வலிநிவாரணி மாத்திரைகளை கூட மலரவன் பாவிப்பதை பெரும்பாலும் தவிர்த்தார்.
அதே வேளை அந்த மாத்திரைகள் போட்ட உடன் வயிற்றில் எரிவு ஏற்படும். (குடற்புண் (Ulcer ) வந்தால் ஏற்படும் எரிவை போன்றது.) அந்த வேளைகளில் நல்ல உணவும் தண்ணீரும் குண்ண வேண்டும். ஆனால் அவர்களுக்கு உணவு கிடைப்பது அருமை. அதனால் காயத்தில் இருந்து எழும் பயங்கர வலியை தாங்கிக் கொண்டார்.
கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேலாக அந்த காயம் ஆறாது இருந்தது. அத்தனை நாட்களும், ஏனைய போராளிகள் தாக்குதல்களுக்காகவோ அல்லது வேவுக்காகவோ அல்லது காயப்பட்ட போராளிகளின் மருத்துவத் தேவைக்காகவோ மறைவிடம் விட்டு வெளியில் சென்றால், தன்னந்தனியாக இரவு பகல் என்ற பேதம் இன்றி துப்பாக்கியை கையில் பிடித்துக் கொண்டு காவல் காப்பார் மலரவன்.
சில வேளைகளில் போனவர்கள் மீள வர மூன்று நாள் கூட ஆகும். அவ்வாறான நேரத்தில் தூக்கமோ அல்லது பசிக்கு உணவோ கிடைக்காது. 2 அல்லது 3 வெறும் பிஸ்கட் ( Biscuit) ஐ மட்டும் சாப்பிடுவார். துப்பாக்கியை இறுக பற்றிக் கொண்டு காத்திருப்பார் மலரவன். இழந்த இரத்தத்தை நிரப்ப மீள் இரத்தமேற்றலோ, அல்லது உடலில் உருவாக ஒழுங்கான உணவோ, தண்ணியோ, ஓய்வோ கிடைக்காத போதிலும் மலரவன் சோர்ந்ததில்லை.
இந்த இடத்தில் முக்கியமாக எம் மக்களை நினைவு கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இந்த கண்டல் பற்றைகளுக்குள் வாழும் எம் போராளிகளுக்கு மட்டுமல்ல இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் வாழும் போராளிகள் அனைவருக்கும் மிகப்பெரிய பாதுகாப்பு அரண்கள் எம் மக்களே. உணவு வழங்கல் தொடக்கம் அவர்களுக்கு இராணுவம் தொடர்பான வேவாளர்களாகவும் போராளிகளுக்கிடையிலான தகவல் பரிமாற்றுனர்களாகவும் அவர்களே இருந்தார்கள். பல துரோகிகள் எம்மினத்தில் கலந்திருந்தாலும் அவர்களின் கண்களில் மண்ணைத்தூவி போராளிகளை மக்கள் காத்தார்கள். அவ்வாறே மலரவனையும் மக்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் உணவு வழங்கி பாதுகாத்தார்கள்.
இவ்வாறான நிலையில் போராளிகளுக்கு வேறு ஒரு பிரச்சனையும் எழுந்தது. அதாவது உணவு மற்றும் மருத்துவ பொருட்களின் கழிவுப் பொருட்களை ( Packet, Plastic Bags, Syringe, Syringe Needles and ect… ) அகற்றுவது பெரும் பிரச்சனையாக இருந்தது. ஏனெனில் கீழே பாய்ந்து கொண்டிருக்கும் தண்ணீரில் அவை மிதந்து போய் எங்கோ ஒரு கரையில் ஒதுங்கும் போது நிட்சயமாக எதிரிக்கு பெரும் தடையம் கிடைக்கும். அதனூடாக அவன் இவர்களின் மறைவிடத்தை இனங்காணக் கூடும். அதனால் அனைத்தையும் சேர்த்து வைத்து மக்களின் குப்பைக் கிடங்குகளில் கொட்டுவது வழமை.
சிறு உணவுத் தடையம் கூட மறைவிடத்தை காட்டிக் குடுக்கும் வல்லமை பொருந்தியது. அதனால் உணவுக்காக பயன்படுத்தப்படும் பிஸ்கட் பைகளைக் கூட கவனமாக சேகரித்து பாதுகாத்து வைப்பார்கள் இவர்கள். பின் வெளியே உணவுக்காக அல்லது தாக்குதலுக்காக என்று செல்லும் போது அவற்றை மக்களின் குப்பைக் குவியல்கள் அல்லது கிடங்குகளில் மேலே எறியாது கிளறிவிட்டுத் தாட்டு விடுவார்கள். அது கண்ணுக்குள் எண்ணையை விட்டு காத்திருக்கும் புலனாய்வாளர்களையும் சிங்களப் படைகளையும் ஏமாற்றி மக்களின் கழிவுப் பொருளாகவே அதற்குள் இத்துப் போய்விடும்.
காயங்களில் தண்ணீர் பட்டால் காயம் ஆறுவது கடினம் என்பார்கள். அதை எல்லாம் பொய்ப்பித்தவர் மலரவன். இடுப்பளவு தண்ணீருக்கு மேல் கட்டப்பட்டிருந்த பரணில் மூன்று மாதங்களுக்கு மேலே முதுகில் ஏற்பட்ட பாரிய காயத்தோடு வாழ்ந்த போராளி. அதை விட மழை பெய்தால் அவர்கள் ஒதுங்குவதற்கு ஒரு கூரை கிடையாது. வெறும் மழை அங்கியை போட்டுக் கொண்டு அல்லது அதை கூடாரமாக்கி அதற்குள் வாழ்ந்தார்கள். அவ்வாறு வாழ்ந்தும் காயம் கொஞ்சம் ஆறிய போது, காயப்பட்டு வந்த போராளிகளுக்கான மருத்துவத்தை தானும் செய்தார். மற்ற மருத்துவர்கள் தடுத்தாலும் தன்னால் முடிந்தவற்றை அவரும் செய்யத் தொடங்கினார்.
எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை அருந்தும் மலரவன் தேடலையும் கற்றலையும் கைவிட்டதில்லை. மறைவு வாழ்க்கையில் ஓய்வு என்பது கிடைக்காத ஒன்று. இருந்த போதிலும் ஒருபுறம் எதற்கும் தயாராக இருக்கும் அவர், மடியில் துப்பாக்கியை தயாராக வைத்துக் கொண்டு கையில் புத்தகங்களை வைத்து படிப்பார். மருத்துவம் தொடர்பான புத்தகங்களை எப்படியோ பெற்றுக் கொண்டு அதை படிப்பார். வலி ஒருபுறம் அவரை வேதனைப்படுத்தும் அதே வேளை, அதை பொருட்டாக கொள்ளாது தான் மருத்துவத்துறையில் இன்னும் பல வேலைகளை செய்ய வேண்டும் என்ற ஆவலோடு எதிரி எப்பொழுதென்றாலும் தாக்கலாம் என்ற அபாயத்தையும் தாண்டி புத்தகங்களை படிப்பார்.
அதோடு மீண்டும் வேவுகள், தாக்குதல்கள் என யாழ்ப்பாணத்தில் நீண்ட காலங்களை இந்த பரண்களிலால் ஆன நீர் நிலை வாழ்விடங்களில் வாழ்ந்தார்.
இவ்வாறு பல நூறு பகிரப்படாத பக்கங்களை தன் வாழ்க்கையில் கொண்ட இராணுவ மருத்துவர் திரு மலரவன் தனது வாழ்க்கைத் துணையான யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவியும் விடுதலைப்புலிகளின் இராணுவ மருத்துவருமான திருமதி பிரியவதனா வுடன் 2009 ஆம் ஆண்டு வைகாசி 17 வரை தமிழீழ விடியலுக்காக மருத்துவப் பைகளோடு திரிந்ததை மறுக்கவோ மறக்கவோ முடியாது… இப்போது அவரும் மனைவியும்…. எம் மனங்களில் பலநூறு கேள்விகளை உருவாக்கி விட்டு சென்று விட்டார்கள்…
கவிமகன்.இ
15.01.2018