பிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு
கேணல் கிட்டு
(ஜனவரி 2, 1961 – ஜனவரி 16, 1993)
சதாசிவம் கிருஸ்ணகுமார்
தனது பதினெட்டாவது வயதில் 1979 இல் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைந்தார். வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார்.
போராட்ட வரலாறு
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இராணுவப் பயிற்சி பெற்றார். 1983 ஏப்ரல் 7 இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். இதன்பின் உள்ளுராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு யாழ்ப்பாணம், கந்தர்மடம் வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல், ஜூலை 23 இல் இராணுவ வாகனங்கள் மீது நடாத்தப்பட்ட திருநெல்வேலிக் கண்ணி வெடித்தாக்குதல் என்பனவற்றிலும் கலந்து கொண்டார்.
1983இன் இறுதிக் காலத்தில் இந்தியாவுக்குப் பயிற்சிக்கெனச் சென்ற இயக்கத்தின் முதற்குழுவில் கிட்டு இடம்பெற்றார். பயிற்சியை முடித்து தமிழீழம் வந்த கிட்டு 1984 மார்ச் 2 இல் நடைபெற்ற குருநகர் இராணுவமுகாம் தாக்குதல் உட்பட்ட பல்வேறு தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்து நெறிப்படுத்தினார். இதேநேரம் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கப்டன் பண்டிதர் 1985 ஜனவரி 9 இல் வீரச்சாவடைய அவரின் இடத்திற்கு கிட்டு நியமிக்கப்பட்டார். யாழ். மாவட்டத் தளபதி ஆனவுடன் யாழ். பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடாத்தி, அங்கிருந்த பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார். 1987 மார்ச் இறுதியில் கைக்குண்டுத் தாக்குதலினால் தனது இடதுகாலை இழந்தார். இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்தில் தனது சிகிச்சைக்காக இந்தியா சென்றார் கிட்டு. கிட்டுவை இந்திய அரசு வீட்டுக்காவலிலும், சென்னை மத்திய சிறையிலும் கைதியாக அடைத்து வைத்திருந்தது. இந்திய அரசு அவரை தமிழீழத்தில் விடுதலை செய்தது.
1989 இல் இலங்கை அரசுடன் பேசுவதற்கு கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டன் சென்றார். பின்னர் லெப். கேணல் குட்டிசிறி உட்பட 10பேருடன் ‘குவேக்கர்ஸ்’ இன் சமாதானச் செய்தியுடன் சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் தமிழீழம் திரும்புகையில் இந்தியக் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து வீரச்சாவடைந்தார்.
———————————————-
வங்கக் கடலின் நடுவே அந்த தியாக வேள்வித் தீ எரிந்து அணைந்து இன்றுடன் ஒன்பது ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன. ஆனால், தமிழ் மக்களின் மனங்கள் அதை நினைத்து நினைத்து இன்னும் எரிந்துகொண்டேயிருக்கின்றன. கேணல் கிட்டுவும், அவருடன் வந்த ஒன்பது தோழர்களும் தீயோடு தீயாகி, வங்கக் கடலில் சங்கமித்த அந்தச் சம்பவம் சரித்திரம் மறக்காத ஒரு சாவு மட்டுமல்ல, அது எங்கள் நெஞ்சங்களை நீங்க மறுக்கும் நெடும் அலையாகி, நினைவெங்கும் நிலைபெற்று விட்டதொன்று.
கேணல் கிட்டு தேசியத் தலைவரால் அதிகம் நேசிக்கப்பட்டவர். அவரின் அன்பை அனுபவித்தவர். தலைவரின் இலட்சியத்திற்கு தோள் கொடுத்து அவரின் மனதோடு ஒன்றித்து வாழ்ந்தவர்
அதனால்தான், தமிழீழத் தேசியத் தலைவர் “கிட்டுவை ஆழமாக நேசித்தேன், தம்பியாக, தளபதியாக, எனது சுமை களைத் தாங்கும் உற்ற தோழனாக நான் அவனை நேசித்தேன். இது சாதாரண மனித பாசத் திற்கு அப்பாலானது. ஒரே இலட்சியப்பற்று ணர்வில் ஒன்றித்து, போராட்ட வாழ்வில் நாம் பகிர்ந்துகொண்ட அனுபவத்தில் ஒருவரை யொருவர் ஆழமாக இனங்கண்ட புரிந்துணர் வில் வளர்த்த நேயம் அது” என கேணல் கிட்டுவிற்கும் தமக்கும் இடையே இருந்த பாசப் பிணைப்பினை வெளிப்படுத்துகிறார்.
கிட்டு எந்தளவிற்கு தலைவரின் மனதில் இடம்பிடித்தாரோ அதேயளவு தமிழீழ மக்களின் மனங்களிலும் நிறைந்திருக்கின்றார். எந்தக் காலத்திலும் மறக்கமுடியாத அவரின் நினைவுகளோடு இன்று தமிழீழம் நிமிர்ந்து நிற்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்திலிருந்து ஆழப்பதிக்கப்பட்ட கிட்டுவின் வரலாற்றுத் தடங்கள் அழிக்க முடியாத பெரும் பதிவாக பரிணமித்து, தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
1979ல் ஆரம்ப காலப் பகுதி விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிடப்பட்ட காலம், சதாசிவம் கிருஸ்ணகுமார் என்னும் பதினெட்டு வயது நிறைந்த இளைஞன் தன்னை விடுதலைப் போராளியாக மாற்றியதன் மூலம் வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். கிட்டுவும், இன்னும் சில தோழர்களும் தலைவரிடமே போரியலை நேரில் கற்றார்கள். கிட்டுவின் துடிப்பும், வேகமும் அங்கிருந்தவர்களிடையே அவரை வேறுபடுத்திக் காட்டியது.
எதையும் அறிந்துகொள்ள வேண்டுமென்ற வேகமும் எந்த விடயத்தையும் அறிந்துகொள்ளும் ஆற்றலும் கிட்டுவிற்கு இயல்பாகவே இருந்ததால் தலைவரின் எண்ணங்களை, சிந்தனைகளை, மக்கள் மீது அவர் கொண்டிருந்த எல்லை கடந்த பாசத்தை, தலைவரின் அருகில் இருந்த கிட்டு அறிந்துகொள்கிறார். அளவு கடந்த திறமையுடன் வேகமும் விவேகமும் நிறைந்த அவரது செயற்பாடுகள் அவர் மீதான தனி நம்பிக்கை வளரக் காரணமாகின்றன. தன் மீது தலைவர் வைத்திருக்கும் நம்பிக்கையை நிரூபிக்கும் காலம் கனிந்துவரும் வரை கிட்டு காத்திருக்கிறார்.
1983 மார்ச் 04 இல் அற்புதன் தலைமையில் உமையாள்புரம் தாக்குதலுக்காக விடுதலைப் புலிகளின் அணி ஒன்று செல்கிறது. அதில் கிட்டுவும் ஒருவர், தாக்குதலுக்கான களம் தீர்மானிக்கப்படுகிறது. வீதியில் நிலக் கண்ணிவெடிகளை பொருத்திவிட்டு எதிரியின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கண்ணிவெடிகளை கையாளும் போதியளவு செயற்திறன் போராளிகளுக்கு இல்லாத காலம் அது. இராணுவ வாகனங்கள் இலக்காக அண்மிக்கும் நேரத்தில், துரதிஸ்ட வச மாக வாகனங்களைக் கண்டு மிரண்டு ஓடி வந்த ஆட்டுக்குட்டியின் கால்கள் பட்டு கண் ணிவெடிகள் வெடிக்க போராளிகள் நிலை குலைந்து போகிறார்கள்.
துப்பாக்கி ரவை களைக் கக்கியவாறு இரு இராணுவ கவச வாகனங்கள் போராளிகளை நெருங்கிவர, பின்வாங்கிச் செல்வதைத்தவிர வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால், கிட்டு மட்டும் எதிரியை எதிர்கொள்ளும் சாதகமற்ற களநிலையைக் கருத்திற்கொள்ளாது துணிந்து நின்று தான் வைத்திருந்த ஜுத்திறி (பு-3) துப்பாக்கியால் இராணுவ கவசவாக னத்தை நோக்கிச் சுடுகிறார். இலக்குத் தவற வில்லை. சாரதி காயப்பட வாகனம் செய லற்றுப் போகிறது. தலைவரின் நம்பிக்கையை மெய்ப்பித்த மகிழ்ச்சியோடு கிட்டு களம் விட்டு அகன்றார். அவரின் முதல் களமே தனி மனித சாதனையாக ஆரம்பமாகிறது.
1983 ஏப்ரல் 07இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். இதன்பின் சிறீலங்கா அரசால் திணிக்கப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு கந்தர்மடம் வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல , ஜுலை 23ல் இராணுவ வாகனங்கள் மீது நடாத்தப்பட்ட திருநெல்வேலிக் கண்ணி வெடித்தாக்குதல் என்பனவற்றிலும் கலந்து கொள்கின்றார். இவ வாண்டின் இறுதிக் காலத் தில் இந்திய மண்ணில் பயிற்சிக்கெனச் சென்ற இயக்கத்தின் முதற்குழுவின் இரண் டாவது பொறுப்பாளராக கிட்டு நியமிக்கப் படுகின்றார்.
பயிற்சியை முடித்து தமிழீழம் வந்த கிட்டு 1984 மார்ச் 02இல் நடைபெற்ற குருநகர் இராணுவ முகாம் தாக்குதல் உட்பட்ட பல்வேறு தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்து நெறிப்படுத்துகின்றார். இதேநேரம் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கப்டன் பண்டிதர் 1985 ஜனவரி 09இல் எதிரியுடனான மோதலில் வீரச்சாவடைய அவரின் இடத்திற்கு கிட்டு தலைவரால் நியமிக்கப்படுகின்றார். யாழ். மாவட்டத் தளபதி ஆனவுடன் யாழ். பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடாத்தி, அங்கிருந்த பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார்.
யாழ். மாவட்டத்தில் கிட்டுவின் வெற்றிகரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. எதிரிப்படை யாழ். மண்ணில் அவனுடைய முகாமுக்குள்ளேயே முடக்கப்படுகிறது. யாழ். கோட்டையை ஆக்கிரமித்திருந்த சிறீலங்கா இராணுவம் கிட்டு என்ற பெயரைக் கேட்டாலே கதிகலங்கிப் போகும் நிலை உருவானது. மக்கள் மத்தியில் கிட்டு என்ற மூன்றெழுத்துப் பெயர் மந்திரமாக உச்சரிக்கப்படுகிறது. யாழ். மண்ணில் எதிரிப்படையை மட்டும் அவர் வெற்றிகொள்ளவில்லை. மாறாக, மக்களின் மனங்களையும் அவர் வெற்றிகொண்டார்.
மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதில் அவர் அதிக அக்கறை செலுத்தினார். தொழில் நிலையங் கள், நூலகங்கள், மலிவுவிலைக் கடைகள், பூங்காக்கள் என்பவற்றை நிறுவி மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தினார். இவ வாறாகக் கிட்டுவின் சமூகப்பணிகள் விரி வடைய, அவர் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் ஒரு ஒப்பற்ற போராளியாக மக்களால் உணரப்பட்டார்.
தமிழீழ மக்கள் மனங்களில் மாத்திரமல்ல, எல்லைகடந்து வாழும் தமிழ் உறவுகள் அனைவருமே கிட்டுவின் வீரசாதனைகளை அறிந்து பெருமிதம் அடைந்தார்கள். விடுதலைப் புலிகளால் மன்னாரில் வைத்துச் சிறைப்பிடிக்கப்பட்ட இரு சிங்களச் சிப்பாய்களின் விடுவிப்பு தொடர்பாக 1986 நவம்பர் 10இல் சிங்கள இராணுவத் தளபதியான கேணல் ஆனந்த வீரசேகரா, கப்டன் கொத்தலாவை ஆகியோரை தனது இடத்திற்கு அழைத்துச் சந்தித்ததன் மூலம் கிட்டு என்ற பெயர் சிங்கள மக்கள் மத்தியிலும் பிரபல்யம் அடைந்தது.
1987 மார்ச் இறுதியில் தேசத்துரோகி ஒருவனின் கைக்குண்டுத் தாக்குதலினால் தனது இடதுகாலை இழந்த கிட்டு தனது மனஉறுதியால் முன்னைய வேகத்துடனும், திடகாத்திரத்துடனும் விடுதலைப் போருக்கு வலுச்சேர்ப்பவராக வளர்ந்து வந்தார். இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் தனது சிகிச்சைக்காக இந்தியா சென்ற கிட்டு ஒப்பந்தம் முறிவடைந்த நிலையில், இந்திய அரசினால் திணிக்கப்பட்ட போரின் உண்மை நிலைப்பாட்டை வெளிக் கொணர பெரிதும் பாடுபட்டார். இந்திய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்களர், கலைஞர்கள், பேராசிரியர்கள் எனப் பலரையும் சந்தித்து, எமது நிலைப்பாடு தொடர்பாக எடுத்து ரைத்தார். எமது தியாக வரலாறுகளை பல வெளியீடுகள் மூலம் இந்திய மக்களின் பார்வைக்குக் கொண்டுவந்தார்.
இவவாறான நிலையில் கிட்டுவை இந்திய அரசு வீட்டுக்காவலிலும், சென்னை மத்திய சிறையிலும் கைதியாக அடைத்துவைத் திருந்தது. சிறைக்குள் இருந்தபடியே அவர் தமிழகத்திலிருந்து வெளிவரும் தேவி இதழுக்கு போராட்டம் தொடர்பான நீண்ட தொடர் கட்டுரையை எழுதினார். சிறையிலிருக்கும் தன்னை விடுவிக்கும்படி கிட்டு நடாத்திய அகிம்சைப் போருக்கு அஞ்சிய இந்திய அரசு அவரை தமிழீழத்தில் விடுதலை செய்தது. விடுதலை பெற்ற கிட்டு வன்னிக் காட்டில் தலைவரைச் சந்தித்து இந்திய இராணுவத்திற்கு எதிரான போருக்கு இறுதிவரை முகங் கொடுத்தார்.
இந்திய இராணுவம் மெல்ல மெல்ல தோல்விமுகம் காணும் நிலை உருவானது. அமெரிக்காவிற்கு வியட்நாமும், ரஸ்யாவிற்கு அப்கானிஸ்தானும் புகட்டிய பாடத்தை தமிழீழம் இந்தியாவிற்குப் புகட்டியது. இந்நிலையில் இலங்கை அரசு இந்தியாவை நிராகரித்து புலிகளுடன் பேச முன்வந்தது. 1989இல் சிறீலங்கா அரசுடன் பேசுவதற்கு கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டனுக்குப் பயணமானார்.
கிட்டு லண்டனில் வாழ்ந்த காலத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழரிடையே போராட்ட உணர்வையும், நம்பிக்கையையும் ஊட்டினார். ‘களத்தில்’, ‘எரிமலை’ எனப் பல்வேறு சஞ்சிகைகள் மூலம் ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துச் சென்றார். விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பு, விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகம், எனப் பல்வேறு அமைப்புக்களையும் வெளிநாட்டில் அமைத்துச் செயற்பட்டார்.
விடுதலை உணர்வையும், தாய் மண்ணின் பற்று றுதியையும் தாயக மண்ணை விட்டு புலம்பெயர்ந்த மக்கள் மறந்து போகாவண்ணம் தனது செயற்பாட்டை விரிவுபடுத்தினார். எனினும் கிட்டு எங்குதான் வாழ்ந்தாலும் எப்பணியைச் செய்தாலும் அவர் மனம் தமிழீழ மண்ணையே சுற்றிவந்தது. அவர் தலைவரை, தாயகத்தை, தமிழீழ மக்களை ஆழமாக நேசித்தார். தமிழீழத்தில் எப்போது தனது கால் மீண்டும் பதியும் என ஏக்கத்தோடு காத்திருந்தார்.
கிட்டு எதிர்பார்த்திருந்தது போல தமிழீழத்திற்குச் செல்லும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. குவேக்கஸ் சமாதானக் குழுவின் யோசனைகளுடன் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் கிட்டுவும் அவரது தோழர்களும் பயணமானார்கள். யாரும் சென்று வரக்கூடிய சர்வதேச கடற்பரப்பில் இந்தியா தனது சதிவலையைப் பின்னியது. இந்தியக் கடற்படை சர்வதேச கடல் எல்லையில் கிட்டுவின் கப்பலை மறித்து வலுக்கட்டாயமாக தனது எல்லைக்குள் இழுத்துச் சென்றது.
சமாதான முயற்சிகள் பற்றி இந்திய அரசிடம் எவ வளவோ எடுத்துச் சொல்லியும் அவை பயனற்றுப் போயின. குமரப்பா, புலேந்திரன், திலீபன், ஜொனி என எமது தளபதிகளின் தொடர் இழப்புக்குக் காரணமான இந்தியா தனது பொறிக்குள் மூத்த தளபதி கிட்டுவையும் சிக்கவைத்தது. உயிரிலும் பெரிது தன்மானம் என நினைக்கும் தலைவனின் வழியில் வளர்ந்த கிட்டுவும் ஒன்பது தோழர்களும் அன்று ஆட்சியிலிருந்த இந்திய அரசிடம் பணிந்து போகாது. தமிழீழத்தை, தலைவனை நினைத்தவாறே தீயில் கலந்து கடலில் சங்கமித்துப் போனார்கள்.
கேணல் கிட்டுவின் இறுதி அஞ்சலி நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவர்
கிட்டுவின் இழப்பு தலைவனின் ஆத்மாவை மாத்திரமல்ல, தமிழினத்தின் ஆத்மாவையே பிழிந்த ஒரு சோக நிகழ்வு. மக்களால் மனதாரப் போற்றப்பட்ட அந்தப்பெரு வீரனை இனி எங்கு காண்போம் எனத் துடித்தனர் மக்கள். பல இழப்புக்களைக் கடந்து வாழக்கற்றுக்கொண்ட மக்களிற்கு கிட்டுவின் இழப்பு ஜீரணிக்கமுடியாத தொன்றாகவே இருந்தது. எனினும் தோல்விகளையும், இழப் புக்களையும் தனக்கான வெற்றியின் பாடமாக்கிக் கொள்ளும் தலைவர், கிட்டுவின் இழப் பிற்கு புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றார்.
“கிட்டு நீ சாகவில்லை, ஒரு புதிய மூச்சாக பிறந்திருக்கிறாய்” எனக்கூறி தனக்குள் ஒரு வீரசபதம் எடுத்துக்கொள்கிறார்.
இன்றைய உலகில், தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் எவராலும் நிராகரிக்க முடியாத பெரும் வடிவம் எடுத்ததில் கிட்டுவின் பங்கு இன்றியமையாதது. உலகெங்கும் சிதறிவாழ்ந்த தமிழ் மக்களை ஒருங்கிணைத்து, தமிழீழ விடுதலையை நோக்கி அவர்களை அணிதிரட்டுவதில் கிட்டு வெற்றி கண்டார் என்றே சொல்லவேண்டும். அந்தநிலை இன்று இன்னும் விரிவடைந்து மக்கள் -புலிகள் என்ற வேறுபாட்டை இல்லாதொழித்துவிட்டது.
சர்வதேச சமூகம் விடுதலைப் போராட்டங்களையும், பயங்கரவாதத்துடன் இணைத்து தனது பிற்போக்குத் தனமான செயலை நியாயப்படுத்திவரும் வேளைகளில்கூட, உலகெங்கும் பரந்துநிற்கும் தமிழ் மக்கள் அந்த நெருக்கடிக்கு முகம் கொடுத்து தொடர்ந்தும் எழுச்சி கொள்கிறார்களென்றால் அது கிட்டுவால் அன்று விதைக்கப்பட்ட விடுதலை குறித்த கருத்துருவாக்கமும் விழிப்புணர்வுமே அடிப்படைக் காரணமாகின்றன.
கெரில்லா அமைப்பாக இயங்கிய அந்த நாடகளில், சிறியரக ஆயுதங்களைக்கொண்டு பெரும் சாதனைகளை நிலைநாட்டிய அந்த ஒப்பற்ற வீரனின் பெயரிலே, இன்று தமிழீழ தாயகத்தில் உருவாக்கப்பட்டுள்ள கனரக ஆயுதங்களைக் கொண்ட மிகப்பெரிய படையணி தனது சாதனைகளால் உலகத்தை வியக்கவைக்கின்றது. போரியல் நுணுக்கமும் போரிடும் திறனும் கொண்ட கேணல் கிட்டு பீரங்கிப் படையணி எண்ணிலடங்கா சமர்க்களங்களில் ஈட்டிய பெரும் வெற்றிகள் மூலம், தனது சாதனைத் தடங்களை தொடர்ந்தும் பதித்துக்கொண்டிருக்கின்றது. நவீன போரி யற்கலையில் தமிழனின் தேசியப்படை முன்னேறிச் செல்வதற்கு கிட்டுவின் கனவும் ஒரு காரணம்.
ஊடகங்களில் தமிழரின் உண்மையான முகம் வெளியில் தெரியவேண் டும் என்பதில் கிட்டு அதிக அக்கறை காட்டினார். தமிழினத்தின் நியாயப் போராட் டங்களை பயங்கரவாதப்படுத்தி உலகெங்கும் பொய்யுரைக்கும் சிறீலங்கா அரச ஊடகங்களையும் அவற்றைச் சார்ந்துநிற்கும் சர்வதேச ஊடகங்களையும் கடந்து, உண்மையான செய்திகள் உலகெங்கும் தெரிவிக்கப்படவேண்டும் என்பதே அவர் கொண்டிருந்த எண்ணமாகும். இவை இன்று நிறைவேறிக்கொண்டிருக்கின்றன.
தமிழீழத்திலும் உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் தங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் உண்மை முகத் தோற்றத்தை உணரக்கூடிய விதத்தில் தமிழ் ஊடகத்துறை பெற்றிருக்கும் அபரிமிதமான வளர்ச்சிக்கு கிட்டுவின் எண்ணங்களின் தாக்கமும் ஒரு காரணம்.
சிறுவர் நலன்பேணும் திட்டங்கள், கல்வி, அபிவிருத்தி, பொருண்மிய மேம்பாடு, சமூக மேம்பாடு என மக்கள் நலன்பேணும் திட்டங்களில் அவர் காட்டிய அதீத அக்கறையின் பயனாக இன்னும் எம்மண்ணில் இச்செயற்பாடுகள் பெரும் வளர்ச்சி பெற்ற நிலையில் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றுக்கு மேலாக, ஒன்றுபட்ட தமிழினத்தின் எழுச்சியை இவர் கனவாகக் கொண்டிருந்தார். எதிரியின் இறுகிய பிடிக்குள்ளும் நிமிர்ந்து நின்று தமிழ் மக்கள் வெளிப்படுத்தும் உணர்வெழுச்சி கிட்டுவின் கனவிற்கு கட்டியம் கூறிநிற்கின்றது.
எங்கும் எதிலும் எல்லாவற்றிலும் கிட்டு என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழினத்தின் ஆன்மாவில் அழிக்கமுடியாததோர் இடம் அவருக்கு என்றுமுண்டு. எல்லையற்ற திறமைகளாலும் மக்கள் மேல் அவர் வைத்திருந்த உண்மையான பாசத்தினாலும் தமிழினத்தில் நீங்காத நினைவுகளை அவர் பதித்துச் சென்றி ருக்கின்றார். இறுதிமூச்சுவரை தமிழினத்தின் தன்மானம் காத்து தமிழினத் தலைவனுக்குப் பெருமையைச் சேர்த்த அந்த ஒப்பற்ற வீரனை எந்நாளும் எவராலும் மறக்கமுடியாது.
“கிட்டு ஒரு தனிமனித சரித்திரம், நீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றின் ஒரு காலத்தின் பதிவு”
எனக்கூறும் தமிழீழத் தேசியத் தலைவரின் எண்ணங்களோடு ஒன்றிணைந்து கேணல் கிட்டுவை நெஞ்சிலேற்றுவோம். அவர் நினைவு தினத்தில் உறுதியெடுத்துக்கொள்வோம்.
நன்றி எரிமலை
யாழ்ப்பாணத்தை மீட்டெடுத்த கிட்டு!
கிருஷ்ணகுமார் யார் என்று தெரியுமா?
தெரியாது!
சதாசிவம் கிருஷ்ணகுமார்?
தெரியாது!
கிட்டுவைத் தெரியுமா?
ஓ தெரியுமே!
யார் அவர்?
கிட்டு மாமா!
யாழ்ப்பாணச் சிறுவர்களுக்கு அவர் கிட்டு மாமா. நடுத்தர வயதினருக்கு அவர் கிட்டண்ணா. வயது வந்த முதியோருக்கு கிட்டர். இயக்கம் அவருக்கு வைத்த பெயர் வெங்கிட்டு. அதுவே நாளடைவில் சுருங்கி கிட்டு என ஆகியது.
சுதந்திர தமிழீழத்தின் போராட்ட வரலாறு எழுதப்படும்போது தளபதி கிட்டுவுக்கு ஒரு முழு அதிகாரம் ஒதுக்கப்படும். தலைவர் பிரபாகரனுக்கு அடுத்ததாக தமிழீழ மக்களது மனம் கவர்ந்த, நெஞ்சம் நிறைந்த வீரனாக கிட்டு திகழ்கிறார்.
யாழ்ப்பாண இராச்சியம் நான்கு நூற்றாண்டு காலம் (கிபி 1215-1619) நிலைத்திருந்தது. இந்தக் காலத்தில் ஆரியச் சக்கரவர்த்திகள் என்ற பட்டப் பெயர் தாங்கிய பத்தொன்பது தமிழ் அரசர்கள் அதனை ஆண்டார்கள். ஒரு காலத்தில் கோட்டை, கண்டி சிங்கள இராச்சியங்களைவிட யாழ்ப்பாண ஆரிய சக்கரவர்த்திகளின் இராச்சியம் மிக்க பலத்தோடு விளங்கியது. ஐபின்; பத்தூத்தா (Ibn Batuta) என்ற அராபிய பயணி இலங்கை வந்தபோது யாழ்ப்பாண மன்னனே அவனை சிவனொளி பாதமலையைத் தரிசிக்க சகல வசதிகள் செய்து கொடுத்து பல்லக்கில் அனுப்பி வைத்தான்.
யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி மன்னனான சங்கிலி குமாரனை 1619 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர்கள் தலைநகர் நல்லூரில் நடந்த போரில் தோற்கடித்து யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றினார்கள். அதன் பின் ஒல்லாந்தர், ஆங்கிலேயர் யாழ்;ப்பாணத்தைப் பிடித்து ஆண்டார்கள், ஆங்கிலேயர் 1948ஆம் ஆண்டு வெளியேறியபோது முழு இலங்கையையும் சிங்களவர் கையில் கொடுத்துவிட்டு வெளியேறினார்கள். இவ்வாறு சங்கிலி வாள் முனையில் இழந்த யாழ்ப்பாணக் குடாநாட்டை துப்பாக்கி முனையில் மீட்டெடுத்து தமிழர் இறையாண்மையை நிலைநாட்டிய பெருமை தளபதி கிட்டுவையே சாரும்.
கிட்டு ஒரு ஓர்மமான போராளி. அவரது வீரம், விவேகம், வேகம், துணிச்சல் மக்களிடையே பிரமிப்பை ஊட்டியது. எண்பது முற்பகுதியில் மக்கள் இராணுவத்துக்குப் பயந்து மூலையில் பதுங்கி நடுங்கி ஒடுங்கி இருந்த காலம். “ஆமி கோட்டையில் இருந்து வெளிக்கிடுறானாம்” என்ற செய்தி காற்றில் வந்தால் போதும். கிட்டு காற்றினும் வேகமாகச் சென்று வெளிக்கிட்ட இராணுவத்தை மறுபடியும் கோட்டைக்குள் அடித்துத் துரத்துவார். அப்படி அடித்துத் துரத்து மட்டும் ஓயமாட்டார். பலாலி, நாவற்குழி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஆனையிறவு இப்படி எந்த முகாமில் இருந்து இராணுவம் புறப்பட்டாலும் கிட்டு அங்கு தனது போராளிகளுடன் நிற்பார். கிட்டு களத்தில் நிற்கிறார் என்றால் மக்களுக்கு இனந்தெரியாத துணிவு எங்கிருந்தோ வந்துவிடும்.
கிட்டு காட்சிக்கு எளியவராக இருந்தார். வீதியோரத்தில் வெற்றிலை பாக்குப்போட்டுக் குதப்பிக் கொண்டிருக்கும் கிழவர்களோடு சேர்ந்து தானும் வெற்றிலை போட்டுக் கொள்வார். அவர்களோடு நாட்டு நடப்புக்களை அலசுவார்.
இந்தக் காலத்தில்தான் கிட்டு ஒரு சுத்த வீரன் என்ற படிமத்தோடு மக்கள் மனதில் உலா வரத் தொடங்கினார். காக்கிச் சட்டையைப் பார்த்தாலே
பயந்து நடுங்கிய மக்களுக்கு கிட்டு ஒரு வித்தியாசமான, அதிசயமான பிறவியாகத் தெரிந்தார்.
சின்ன வட்டங்கள் கள்ளன்-போலிஸ் விளையாட்டுக்களைக் கைவிட்டு கிட்டுமாமா – ஆமி விளையாட்டு விளையாட ஆரம்பித்தார்கள். கிட்டுவைப் போல அவர்கள் இடுப்பிலும் ஒரு (போலி) மக்னம் 357 சுழற்துப்பாக்கி!
1987ஆம் ஆண்டு வடமராட்சியில் இராணுவத்துடன் நடந்த சண்டையில் கிட்டு விழுப்புண் பட்டார். புண்ணாற சில நாட்கள் எடுத்தன. அப்போதுதான் எதிரிகளால் அவர் மீது குண்டு எறிந்து கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப் பட்டது. செய்தி கேட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். கிட்டுவின் உயிருக்கு ஆபத்தில்லை என்ற செய்தி வந்தபின்னர்தான் மக்கள் நிம்மதியாக மூச்சுவிட்டார்கள். இருந்தும் குண்டு வெடிப்பில் கிட்டு ஒரு காலை இழந்தது அவர்களுக்குக் கவலையை அளித்தது.
1971ஆம் ஆண்டு பல்கலைக் கழக நுழைவுக்கு அறிமுகப் படுத்தப்பட்ட தரப்படுத்தலுக்கு பலியான பல்லாயிரக்கணக்கான தமிழ் மாணவர்களில் கிட்டுவும் ஒருவர். தரப்படுத்தல் இல்லாவிட்டால் வசதியான குடும்பத்தில் பிறந்த அவர் படித்துப் பல்கலைக் கழகம் சென்று பட்டம் பெற்று வெளியேறி மற்றவர்களைப் போல் ஏதாவது அரச பணியில் அமந்திருப்பார். அல்லது வெளிநாடு சென்றிருப்பார்.
1979ஆம் ஆண்டு தொடக்கத்தில் கிட்டு தன்னை இயக்கத்தில் இணைத்துக் கொண்டார். அப்போது அவருக்கு வயது 19 மட்டுமே. இயக்கத்தில் இருந்தவர்களது தொகை ஒரு நூற்றுக்கு மேல் இல்லாத காலம். பெரும்பான்மையோர் தலைவர் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்கள்.
1983ஆம் ஆண்டு நிராயுதபாணிகளான தமிழர்கள் ஆயுதபாணிகளான சிங்களக் காடையர்களால் பலமாக்கத் தாக்கப்பட்டார்கள். உயிர் இழப்பு ஏராளம். உடமை இழப்பு கொஞ்சநஞ்சமல்ல. அந்தக் கருப்பு யூலை கிட்டுவின் ஆன்மாவில் பெரிய கீறலை ஏற்படுத்தியது. அவர் மனதுக்குள்ளே ஒரு பூகம்பம். பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற வேகம் மேலோங்கியது!
அதே ஆண்டு கிட்டு இயக்கத்தின் தாக்குதல் குழுவின் இரண்டாவது பொறுப்பாளராக தலைவர் பிரபாகரனால் நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டு இந்தியா சென்று இராணுவப் பயிற்சிபெற்றுத் திரும்பினார். 1984 பெப்ரவரி 29, யாழ்ப்பாணக் குருநகர் சிங்கள இராணுவ முகாம் அவர் தலைமையில் சென்ற போராளிகளால் தாக்கித் தகர்க்கப்பட்டது.
1985இல் கிட்டு யாழ்ப்பாணக் குடாநாட்டின் தளபதியாக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு யாழ்ப்பாணம் போலிஸ் நிலையம் தாக்கி அழிக்கப்பட்டது. சிங்கள இராணுவம் படிப்படியாக முகாம்களுக்குள் முடக்கப்பட்டது. புலிகளின் ஆட்சி யாழ்ப்பாணத்தில் உருவாகியது. அதன் பொருளாதாரம் மறு சீரமைக்கப்பட்டது. உள்ளுர் உற்பத்தி ஊக்கிவிக்கப்பட்டது. சிறுவர்களது பொழுது போக்குக்கு பூங்காக்கள் நிறுவப்பட்டன. தெருக்கூத்து, நாடகம், வில்லுப்பாட்டு போன்ற கலைகளின் மூலம் விடுதலை உணர்வு மக்களிடையே ஊட்டி வளர்க்கப்பட்டது. முதன்முறையாக நிதர்சனம்’ தொலைக்காட்சி இயங்க ஆரம்பித்தது. களத்தில் என்ற செய்தி இதழ் வெளிவரத் தொடங்கியது.
கிட்டு யாழ்ப்பாணக் குடாநாட்டின் தளபதியாக இருந்த காலத்திலேயே போர்க்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த சிங்கள இராணுவத்தினரை விடுவிக்க கொழும்பில் இருந்து வந்த சிங்கள இராணுவ தளபதிகள் அவரோடு பேச்சு வார்த்தை நடாத்தினார்கள். கிட்டுதான் சிங்கள இராணுவ தளபதிகளுடன் கைகுலுக்கிக் கொண்ட முதல் புலித் தளபதி.
கிட்டு பல்கலைக் கழகத்தில் படித்துப் பெறும் பட்டத்தை விட திறந்தவெளி உலகப் பள்ளியில் படித்து சகலகலா வல்லவன் என்ற பட்டத்தை வாங்கியிருந்தார். தலைவர் பிரபாகரனால் நேரடியாக ஆயுதப் பயிற்சி பெற்ற சில வீரர்களில் கிட்டுவும் ஒருவர். தலைவரைப் போலவே குறிதவறாது சுடுவதில் மன்னன். நல்ல மேடைப் பேச்சாளி. இலக்கியவாதி. எழுத்தாளன். ஓவியர். படப்பிடிப்புக்காரன். எல்லாவற்றிற்கும் மேலாக மெத்தப் படித்தவர்களும் மதிக்கும் ஆளுமை அவரிடம் இருந்தது.
1989 ஆண்டு புலிகள் – ஸ்ரீலங்கா அரசுப் பேச்சு வார்த்தை தொடங்கியது. பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள கொழும்பு சென்ற கிட்டு அங்கிருந்து வைத்தியத்துக்காக இலண்டன் போய் சேர்ந்தார். அனைத்துலக வி.புலிகளின் பொறுப்பாளராக மூன்று ஆண்டுகள் கிட்டு பணியாற்றினார். அது இயக்கத்தைப் பொறுத்தளவில் ஒரு பொற்காலம். கிட்டுவின் பன்முகப்பட்ட ஆளுமைக்கு மேற்குலகம் களம் அமைத்துக் கொடுத்தது. அவரது வசீகரம் எல்லோரையும் கவர்ந்தது. அவரது நிர்வாகத் திறமை வைரம்போல் பளிச்சிட்டது. ஒவ்வொரு சின்ன விடயத்தையும் நேரடியாகக் கவனித்துக் கொள்வது அவரது பாணியாகும். வி.புலிகளின் அனைத்துலக பொறுப்பாளர் என்ற ரீதியில் வெளிநாட்டு அரசியல் மற்றும் இராசதந்திரிகளைச் சந்தித்து தமிழ் மக்களது ஆயுதப் போராட்டத்துக்கு தார்மீக ஆதரவு தேடினார்.
பிரித்தானியாவில் தொடர்ந்து இருக்க முடியாத ஒரு சூழ்நிலை 1992 ஆம் ஆண்டுப் பிற்பகுதியில் உருவாகியது. சுவிஸ் நாட்டுக்குப் பயணப்பட்ட கிட்டு அங்கிருந்து தமிழீழம் நோக்கிய கடற்பயணத்தை ஆரம்பித்தார். அதுதான் அவரது கடைசிப் பயணம் என்பது அவருக்கோ அவரது தோழர்களுக்கோ மற்ற யாருக்குமோ அப்போது தெரிந்திருக்கவில்லை.
அனைத்துலகக் கடலில் கிட்டு ‘அகாத்’ (யுhயவ) என்ற கப்பலில் பயணம் செய்து கொண்டிருக்கிறார் என்ற செய்தியை இந்திய அரசு அறிந்து கொண்டது. அவர் மேற்கு நாடுகள் தயாரித்த அமைதித் திட்டத்தின் தூதுவனாகப் பயணம் செய்து கொண்டிருக்கிறார் என்ற செய்தியும் இந்தியாவிற்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. இருந்தும் கிட்டுவின் கப்பலை இடைமறிக்குமாறு இந்திய அரசு கடற்படைக்குக் கட்டளை இட்டது.
1993 ஆம் ஆண்டு 13ம் நாள் கிட்டுவின் கப்பல் இந்தியாவின் கடற்படையைச் சார்ந்த இரண்டு நாசகாரிக் கப்பல்களால் அனைத்துலகக் கடலில் வைத்து சுற்றி வளைக்கப்பட்டது. கிட்டு அந்தச் செய்தியை தொலைத் தொடர்பு கருவியின் மூலம் வி.புலிகளின் அனைத்துலகப் பணிமனைக்கு அறிவித்தார். கப்பல் இடைமறிக்கப்பட்ட செய்தி உலகெங்கும் பரவியது. இந்தியா மவுனம் சாதித்தது. அகத் கப்பல் சென்னைத் துறைமுகத்துக்கு நேரே, இந்;தியக் கடல் எல்லைவரை கொண்டு வரப்பட்டது. தளபது கிட்டுவும் அவரது போராளிகளும் சரண் அடையுமாறு கேட்கப்பட்டனர். சரண் அடைய மறுத்தால் அகத் தாக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்படுவீர்கள். எதிர்த்தால் கப்பல் மூழ்கடிக்கப்படும் என்று இந்தியக் கடற்படை எச்சரித்தது.
கிட்டுவைக் கைது செய்து ராஜிவ் காந்தியின் கொலைக்கு அவர் பொறுப்பு எனக் குற்றம்சாட்டி அவரை நீதிமன்றத்தில் நிறுத்துவதே இந்திய அரசின் தந்திரமாக இருந்தது. அதே நேரம் கிட்டுவை உயிரோடு பிடிக்க முடியாது என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. சரணாகதி என்ற வார்த்தை புலிகளின் அகராதியில் இல்லாத வார்த்தை. வாழ்ந்தால் மானத்தோடு இல்லையேல் வீரமரணம் என்பது புலிகளின் தாரக மந்திரம் என்பது உலகறிந்த செய்தி.
தளபதி கிட்டுவும் அவருடன் பயணம் செய்த ஒன்பது போராளிகளும் தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டு வங்கக் கடலில் சங்கமமானார்கள்! அந்தச் செய்தி உலகம் வாழ் தமிழ் மக்கள் தலையில் இடியென இறங்கியது! வங்கமா கடல் தீயினில் கொதித்தது! “அசோகச் சக்கரம்” குருதியில் குளித்தது! அகிம்சையின் அரிச்சுவடியை அறிமுகம் செய்த பாரதம் கிட்டு மற்றும் அவரது தோழர்களது செந்நீர் குடித்து மகிழ்ந்தது!
இந்தியாவின் வஞ்சகத்துக்கு விடுதலைப் புலிகள் பலியானது இது மூன்றாவது தடவை. முதற் பலி தியாகி திலீபன். இரண்டாவது பலி இந்தியாவின் மத்தியத்தை நம்பி கடற்பயணம் செய்த தளபதிகள் குமரப்பா-புலேந்திரன் உட்பட்ட 17 வி.புலிகளை ஸ்ரீலங்கா கடற்படை கைது செய்யது பலாலியில் இருந்த இந்திய இராணுவத்திடம் ஒப்படைத்தது. அவர்களைக் கொழும்புக்கு கொண்டு செல்ல முயற்சித்தபோது எல்லோரும் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டார்கள். மூன்றாவது பலி வங்கக் கடலில் கிட்டுவும் அவரது ஒன்பது தோழர்களும்.
விடுதலை என்பது சும்மா கொண்டு வந்து தருவதற்கு அது சுக்குமல்ல மிளகுமல்ல என்பது உண்மைதான். அதற்கு ஒரு விலை இருக்கிறது. ஆனால் இந்தியாவின் வஞ்சகத்திற்கு, சூழ்ச்சிக்கு, காட்டிக்கொடுப்பிற்குப் பலிபோன கிட்டு, குட்டிஸ்ரீ, திலீபன், குமரப்பா, புலேந்திரன் போன்ற போராளிகள், தளபதிகள் இவர்களின் நினைவு தமிழீழ தேசத்தின் ஆழ்மனதில் ஆழமான வடுவாக, துடைக்க முடியாத கறையாகப் பதிந்த வரலாற்றுக் காயம் காலம் காலமாக அழியாது இருக்கும்!
கிட்டு போன்ற மாவீரர்களுக்கு மரணமில்லை. அவரது 18 ஆவது நினைவு நாள் அந்தச் செய்தியைத்தான் சொல்லி நிற்கின்றது. எமது மாவீரர்களின் ஈகை வீண்போகக் கூடாது. அவர்களது தாயகக் கனவை நாம் என்றோ ஒரு நாள் நினைவாக்குவோம்!
தளபதி கிட்டு காற்றோடு காற்றாகக் கடலோடு கடலாக மறைந்தபோது “கிட்டு ஒரு தனிமனித சரித்திரம், நீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றின் ஒரு காலத்தின் பதிவு” இப்படிச் சொன்னவர் தேசியத் தலைவர் பிரபாகரன்.
வல்வைக் கரையெழுந்த புயல் ஓய்ந்ததோ?
வண்ணத் தமிழீழ மலை சரிந்ததோ?
வங்கக் கடல் மடியில் புலி தவித்ததோ?
வஞ்சகரால் எங்கள் குயில் மடிந்ததோ?
எட்டிப் பார்க்க முடியாத அளவுக்கு புகழ் ஈட்டியவர் கேணல் கிட்டு
“என் ஆன்மாவை பிழிந்த ஓர் சோக நிகழ்வு அதை சொற்களால் வர்ணிக்க முடியாதென்பது” தலைவர் மொழிந்தவை.
“மனதின் ஆழத்து உள்ளுணர்வுகளை வார்த்தையில் சித்தரிப்பது கடினம். அதுவும் ஆன்மாவை உலுப்பி விடும் ஒரு உணர்வுப் பூகம்பத்தை மனித மொழிகளில் விபரிக்க முடியாது.எனது அன்புத்தம்பி கிட்டுவின் இழப்பும் அப்படித்தான். அவனது மறைவு எனது ஆன்மாவைப் பிழிந்த சோக நிகழ்வு. அதனை சொற்களால் வார்த்து விடமுடியாது.”
“நான் கிட்டுவை ஆழமாக நேசித்தேன். தம்பியாக தளபதியாக எனது சுமைகளைத் தாங்கும் இலட்சியத் தோழனாக அவனை நேசித்தேன். இது சாதாரண மனித பாசத்துக்கு அப்பாலானது. ஒரே இலடசியப் பற்றுணர்வில் ஒன்றித்த போராட்ட வாழ்வில் நாம்பகிர்ந்து கொண்ட அனுபவத்தில், ஒருவரை ஒருவர் ஆழமாக இனம் கண்ட புரிந்துணர்வில், வேரூன்றி வளர்ந்த நேயமிது.”
“அவனில் ஓர் அபூர்வம் இருந்ததை நான் ஆரம்பத்திலிருந்தே கண்டுகொண்டேன். அது அவனது அழகான ஆளுமையாக வளர்ந்தது. ஒரு சுதந்திர வீரனுக்குரிய அனைத்துச் சிறப்பியல்புகளும் அவனிடமிருந்தன. அதனால் அவன் ஓர் அற்புதமான இலட்சியவாதியாக வாழ்ந்தான் போராடினான். அனைத்து மக்களது இதயங்களையும் கவர்ந்தான். போர்க் களத்தில் வீரனாகவும் பொதுமக்களின் தோழனாகவும் எங்கும் எல்லாவற்றிலும் எல்லோரிடமும், அவனது ஆளுமையின் வீச்சு நிறைந்திருந்தது.”
“கிட்டு ஒரு தனி மனித சரித்திரம். நீண்ட, ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு. வங்கக் கடலில் பூகம்பமாக அவனது ஆன்மா பிழந்தது. அதன் அதிர்வலையால் எமது தேசமே விழித்துக்கொண்டது. கிட்டு நீசாகவில்லை. புதிய மூச்சாகப் பிறந்திருக்கிறாய்.”
என்று விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன், கேணல் கிட்டு மறைந்த போது விடுத்த இரங்கல் செய்தி, எமது இதயத்தை அப்படியே ஆட்கொண்டுள்ளது. தலைவரின் விடுதலைப் போராட்டத்திற்கு பக்கபலமாக விளங்கிய ஒவ்வொரு தளபதிகளின் மறைவை ஒட்டியும் அவர் கூறிய கூற்றுக்கள் எம் உள்ளத்தைத் தொடுபவையாகும்.
கிட்டு அவர்கள் 1961ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி தோன்றினார். அவர் மறைந்தது 1993 ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் திகதி. எனவே அவர் இவ்வுலகில் வாழ்ந்தது மிகக் குறுகிய காலமென்பதை நினைவு கொள்ள வேண்டும். தேன்கலந்த வாசகம் தந்த வான்கலந்த மாணிக்கவாசகரின் வாழ்வு முப்பத்தி இரண்டுதான். தன்னை தமிழ் ஞானசம்பந்தரென்று ஐம்பது இடங்களில் கூறி நாளும் தமிழ் பரப்பிய தமிழ் ஞானசம்பந்தரின் வாழ்வு பதினாறுதான். ஆர்மூண்டு பதினெட்டில் நம்பியாரூரன் வாழ்வு முற்றுப் பெற்றது. இரக்கத்தில் உருவான யேசுகிறிஸ்து வாழ்ந்தது 33 ஆண்டுகள் தான். அவரின் முதல் 30 ஆண்டுகள் எவ்விதம் அமைந்திருந்ததென்பது உலகம் அறியாது. ஆனால் இறுதி 3 ஆண்டுகள் உலக வரலாற்றை மாற்றியது. அத்வைத வேதாந்தத்தை தந்த சங்கராச்சாரியார் வாழ்வு 33 ஐத் தாண்டவில்லை. மாவீரர் அலெக்சாண்டரின் வாழ்வு 33 ஆண்டுகளுடன் முடிவுற்றது. இப்படி குறுகிய காலம் வாழ்ந்தும் உலக வரலாற்றை மாற்றியமைத்தவர்கள் உண்டு. அந்த வரிசையில் 33 ஆண்டுவாழ்ந்த கிட்டுவின் வாழ்வும் ஈழத் தமிழினத்தின் விடுதலை வரலாற்றில் தனியிடம் பெறுகிறது. நாம் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பதல்ல முக்கியம் எப்படி வாழ்கிறோம் என்பது தான் முக்கியம். வாழ்வகத்தைக் காத்து வண்டதமிழை வாழ்வித் வன்னியசிங்கம் அவர்களின் வாழ்வு 48ஐத் தாண்ட மறுத்து முற்றுப்பெற்றது. ஆனால் அவர் மறைந்து ஆண்டுகள் பல உருண்டு ஓடிய நிலையிலும் அவர் நம் நெஞ்சை விட்டு அகலமறுக்கிறார். தமிழுக்கும் தமிழனுக்கும் தொண்டு செய்வோன் சாவதில்லை என்பதற்கமைய மறைந்த வன்னியரையும் மறைந்த தளபதி கேணல் கிட்டுவையும் நினைவு கொள்கிறோம்.
தலைவரைப் போற்றும் தளபதி
தலைவர் வேலுப்பிள்ளை பிராபகரன் அவர்கள் எவ்வளவு தூரம் உணர்ந்து கிட்டுக்கு மதிப்பு வழங்ககினாரோ அவ்வளவு தூரம் தலைவர் பிராபகரன் பெருமையை உணர்ந்தவர் கேணல் கிட்டு அவர்கள். இதோ தலைவர் பற்றி அவர் மொழிந்தவை. “எமது தலைவர் பிரபாகரன் விடுதலைப்வ்புலிகளின் இயகத்தின் தலைவர் மட்டுமல்ல அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் ஒரு தேசிய இனத்தின் தலைவர். இன்று விடுதலைக்காக தம்மை தியாகம் செய்யத்தயாராக நிற்கும் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கும் எமது ஆதரவாளர்களுக்கு மட்டும் தலைவரல்ல. எம்மீது அதிருப்த்தி கொண்டவர்களுக்கு எம்மை எதிர்ப்பவர்களுக்கும் அவர் தலைவர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தப்புச் செய்தவன் செய்யாதவன் என அனைவருக்கும் அவர்தான் தந்தை. பாதிக்கப்பட்டவனும் படோடாபமாக வாழ்பவனுக்கும் அவர்தான் தந்தை. போராட்டப்பணி குறித்து அவரது அபிப்பிராயம் அவரது முழுமையான அர்பணிப்புக்கு வெளிச்சமிடுகிறது. போராளிகள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பணி பெரிது. சுமையும் பெரிதுதான். ஆனால் நாம் அதை விருப்பத்துடன் தான் ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.
எதிரிக்கு எதிராக போராட வேண்டிய நிலையில் நாட்டை நிர்வகிக்கும் பணிகளும் எம்மீதே சுமத்தப்பட்டிருக்கிறது. இதுமிகப்பெரும் சுமைதான் ஆனால் இதை விருப்பத்துடன் சுமக்கிறோம்” என்று போராட்டம் பற்றி ஏற்றமுடன் எடுத்துரைத்த கிட்டு அவர்கள் போராட்டம் வெற்றிபெற அறிவாளிகளையும் புத்தி ஜீவிகளையும் எவ்விதம் உள்வாங்க வேண்டுமென்பதை அவர் கூறும் கூற்றுக்கள் அவரின் பரந்த உள்ளத்திற்கு தலைசிறந்த எடுத்துக்காட்டு.
அறிவாளிகளை உள்வாங்க விரும்பியவர் கிட்டு
இதோ அவர் மொழிந்தவை. “புத்தி ஜீவிகளை ஒன்று சேர்த்து சிந்தனைத் தடாகமொன்றை உருவாக்க வேண்டும். போராட்டத்தில் அரசியல் ராஜதந்திர நகர்வுகள் போன்ற விடயங்களில் நல்ல கருத்துகள் தேவையாக உள்ளது. இக்கருத்துக்கள் சரியான தகைமையும் கல்வியும் உள்ளவரிடமிருந்து வழங்கப்பட வேண்டும். தேவை படும் நேரத்தில் மாத்திரம் அவர்களை அணுகும் போது அவர்கள் எமது நிலைமைகளை சரியாக புரிந்து கொள்ளாதவர்களாக இருப்பார்கள். எனவே எமது போராட்டப் பாதையில் அவர்களை இணைத்துக்கொண்டு செல்வதன் மூலமே புத்தி ஜீவிகளை சரியான பாதைக்கு கொண்டு செல்லமுடியும்.”
சுருங்க கூறின் போராடுகின்ற போது துணிவை பெரிதும் போற்றிய கிட்டு அவர்கள் போராட்டத்தில் நாம் வெற்றிபெற அறிஞர்களின் அறிவுரைகளை அவர் என்றும் புறக்கணித்ததில்லை. பின் புலத்தில் அவர்களின் துணையை அவர் நாடி நின்றார். இயக்கம் செய்யும் ஒவ்வொரு விடயமும் திட்டமிட்டு செயற்பட வேண்டும். திறந்த மனத்துடன் அமைந்த கருத்துப் பரிமாற்றத்தின் மூலமே சிறந்த திட்டங்களைப் பெற முடியும் என்று கூறியவர் கிட்டு அவர்கள். புகைப்படத்துறையிலும் அவர் புகழ்பெற்று விளங்கியவர். புகைப்படங்கள் ஊடாக எங்கள் போராட்டத்தை ஆவணப்படுத்த வேண்டுமென அவருக்கிருந்த ஆர்வத்தை எளிதில் எடுத்தியம்பிட முடியாது.
நரசிம்மராவின் நயவஞ்சகம்
இந்தியத் துணைக்கண்டத்தில் இந்திரா காந்தியின் ஆட்சியில் வெளியுறவு அமைச்சராக விளங்கியவர் பி.வி.நரசிம்மராவ் அவர்கள். நான் இந்திரா காந்தியைச் சந்தித்ததையடுத்து நரசிம்மராவைச் சந்தித்த போது (1983 ஓகஸ்ட் 19) அவர் கூறியவை என் நினைவலையில் இன்றும் மோதுகிறது. “ இந்திய விடுதலை வரலாற்றில் காந்தி அடிகளின் பங்கை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் ஆயுதம் தாங்கி போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், லாய் பட்ராய், பகவத்சிங், வ.உ.சிதம்பரம்பிள்ளை, போன்றோர் ஆயுதம்தாங்கி போரிட்டதை நாம் மறுக்கவில்லை. இந்தியவிடுதலை வரலாற்றில் அவர்கள் ஆற்றிய பங்கு மிகப்பெரிது. அதுபோன்றே உங்கள் விடுதலைப் போராட்டத்தில் ஆயுதம் தாங்கிப் போராடும் போராளிகளை பெரிதும் மதிக்கிறேன் எனக் கூறியவர்தான் நரசிம்மராவ். ஆனால் நரசிம்மராவ் இந்திய துணைக்கண்டத்தில் தலைமையமைச்சராக பதவியேற்ற காலகட்டத்தில்தான் 1993ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் திகதி இந்திய நீரலையிலோ அல்லது இலங்கை நீரலையிலோ நிற்காது அனைத்துலக நீரலையில் கிட்டுவின் கப்பல் நின்ற போது இந்தக்கப்பலை இந்தியத் துணைக்கணடத்துக்கு இழுத்துச் செல்ல இந்திய அரசு முனைந்த போது கேண்ல் கிட்டுவும் அவரது தோழர்கள் மேஜர் வேலையன் (சந்திரலிங்கம் சந்திரவேல்), கப்டன் குணசீலன், கப்டன் ரோசன்(ரட்ணசிங்கம் அருணராசா), கப்டன் நாயகம் (சிவலிங்கம் கேசவன்), கப்டன் ஜீவா( நடராஜா ஜீவராஜ்), லெப்டினன் நல்லவன் (சிவஞானசுந்தரம் ரமேஷ்) லெப்டினன் அமுதன் ( அலோஷன்; ஜோன்சன்) தூயவன் (மாகாலிங்கம் ஜெயலிங்கம்) ஆகியோரும் கிட்டுவுடன் சேரந்து எம் இயக்கத்தின் இரகசியங்களை இந்திய உளவுப்படைக்கு வெளியிட விரும்பாத நிலையில் தம்மை மாய்த்துக்கொண்டனர்.
அவர்கள் செய்தது தற்கொலையல்ல. அது தற்கொடையாகும். இது கிட்டுவின் தியாகத்தைமட்டுமல்ல அவரின் தோழர்களின் தியாகத்தையும் உலகுக்கு பறைசாற்றுகிறது. இந்திராகாந்தியின் ஆட்சியில் போராளிகளை போற்றிய நரசிம்மராவ் தலைமை அமைச்சராக பதவி ஏற்ற நிலையில் இப்போராளிகளின் சாவுக்கு காரணமாக அமைந்தார். இது இந்தியாவின் வஞ்சனைக்கு தலைசிறந்த எடுத்துக்காட்டு. நமது போராளிகள் அனைத்துலக நீரலையில்தான் இருந்தார்கள் என்று காலம் தாழ்த்திய நிலையில் விசாகப்பட்டினம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது இங்கு நினைவு கொள்ளத்தக்கது. மறைந்தும் மறையாத எம் கிட்டுவையும் தோழர்களையும் நாம் நினைவு கொள்வோமாக. இவர்கள் வரலாற்றில் பதியப்பட வேண்டிய தியாகிகள். தமிழ்நாட்டில் தளபதி கிட்டு அவர்களுக்கும் எமக்கும் இடையே நிலவிய நெருக்கமான உறவையும் பரிமாறப்பட்ட கருத்துக்களையும் ராஜதந்திர நோக்குடன் இங்கு பரிமாறவில்லை. பின்பு அவை தேவையொட்டி கூறப்படும்.
நன்றி – மா.க.ஈழவேந்தன்
இந்தியாவின் துரோகத்தால் படுகொலை செய்யப்பட்ட கேணல் கிட்டு உட்பட 10வேங்கைகளின் வீரவணக்க நாள்
‘கிட்டு பயணம் செய்து எம்.வி. யகதா என்னும் கப்பல் ஹோண்டுராஸ் நாட்டிலுள்ள சான் – லோரன்சோ என்னும் துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டதாகும். இந்தக் கப்பலின் மேற்புறத்தில் அதன் பெயரும் அஃது எந்த நாட்டிற்கு உரியது என்பது; தெளிவாக எழுதப்பட்டிருந்தன. இந்தியக் கடற்படைக் கப்பல்கள் 14.1.93 அன்று இரவு 10.30 மணிக்கு அதன் அருகில் நெருங்கிய பொழுது ”இக்கப்பலின் பெயரைப் பார்க்க முடியவில்லை அதன் மீது எந்த நாட்டுக் கொடியும் பறக்கவில்லை”” என்று குற்றம் சாட்டுவது அர்த்தமற்றது. ஏனென்றால் எந்த நாட்டுக்கொடியும் கதிரவன் மறைந்த பி;ன்பு பறக்கவிடுவது வழக்கமல்ல. ஏன் இந்தியாவின் கொடி பறக்கவில்லை.
7.1.93 அன்று இந்தோனேசியாவின் மலாக்கா – சந்தியிலுள்ள பியுூபர் – கலா தீவி;ல் தளபதி கிட்டுவும் மற்றும் 9 விடுதலைப் புலிகளும் இந்தக் கப்பலில் ஏறி;னார்கள். இந்தக் கப்பலில் ஆயுதங்கள் எதுவும் இருக்கவில்லை. தமிழீழப் பகுதிக்குக் கொண்டு செல்வதற்காகப் பெட்ரோல், டீசல், மருந்துகள் போன்றவை மட்டுமே இருந்தன. இவற்றுடன் ஆயுதங்களோ, வெடி மருந்துகளோ எடுத்து வருவது அபாயகரமானது. எனவே அவற்றைக் கொண்டு வரவில்லை.
13.1.93 அன்று இந்தியாவில் இருந்து 440 மைல்களுக்கு இப்பாலும், இலங்கையின் தென் முனையிலிருந்து 290 மைல்களுக்கு அப்பாலும், நிலநேர்கோட்;டிற்கு வடக்கில் 6 பாகையிலும் நிலக்கோட்டிற்கு கிழக்கே 8 பாகையிலும் இந்தக் கப்பல் சென்று கொண்டிருந்த பொழுது கப்பல் நிறுத்தப்பட்டு கடலைகளின் இயற்கையோட்டத்தில் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. சனவரி 16-ஆம் நாள் அவர்கள் யாழ்ப்பாணத்தை அடையவேண்டியிருந்ததால் அங்கிருந்து வரும் சமிஞ்கைக்காகக் காத்திருந்தார்கள். அதே இரவு 10.30 மணியளவில் இந்தியக் கடற்படை கப்பல் ஒன்று விடுதலைப் புலிகளின் கப்பலை அணுகியது. இரவு நேரம் ஆதலால் இந்தியக் கப்பலை விடுதலைப் புலிகளால் அடையாளம் காண முடியவில்லை. இந்திய கடற்படைக் கப்பலிலிருந்து வானொலி மூலமாக் கப்பலின் காப்டன் ஜெயச்சந்திரனுடன் தொடர்பு கொள்ளப்பட்டது.
‘திரிகோணமலையை நோக்கி இந்தக் கப்பல் செல்கிறதா” என்று கேட்டபொழுது ‘ஆம்” என்று பதில் கொடுக்கப்பட்டது. பொதுவாக ஒரு கப்பலை நோக்கி இது போன்ற கேள்விகள் கேட்கப்படுவதில்லை. இடுத்த கேள்வியாக ‘நீங்கள் இலங்கைத் தமிழர்களா”? என்று கேட்கப்பட்டது. அதற்கும் ‘ஆம்” என்று பதில் கொடுக்கப்பட்டது. மேலும் ‘யகர்தா” கப்பலில் பயணிகள் யாரும் இருக்கின்றார்களா என்பதை பார்த்து அறிய இந்தி;யக் கடற்படைக் கப்பலின் காப்டன் விரும்புவதாகவும் கூறப்பட்டது. இதற்கு பின்னர் ஜெயச்சந்திரன் ”கேள்விகளுக்கு மேல் கேள்விகள் கேட்கும் நீங்கள் யார்?”” என்று வினாவினார். தாங்கள் ‘சர்வதேசக் காவல் பணிபுரிவதாக” இந்தியக் கடற்படைக் கப்பலின் காப்டன் பதில் கூறினார். ‘யகதா கப்பலின் பயணிகள் யாரும் இருக்கிறார்களா”? என்பதை அறிந்து கொள்வதில் மாத்திரமே அவர்கள் தீவிரம் காட்டினார்கள். அதன் பின்பு தங்கள் கப்பலை நெருங்கக்கூடாது என்று ஜெயச்சந்திரன் இந்தியக் கடற்படைக் கப்பலை எச்சரித்தார்.
சிங்களக் கடற்படைக் கப்பல்தான் தங்களை வழிமறிக்கிறது என்று ஜெயச்சந்திரனும் மற்றவர்களும் நினைத்தார்கள். எனவே அதை தாக்குவதற்கு ஆயத்தம் ஆனார்கள். இதற்குப் பின்னர்தான் இந்திய கடற்படைக் கப்பலின் காப்டன் தாங்கள் யார் என்ற உண்மையைத் தெரிவித்தார்.
ஜ.என்.எஸ்.38 விவேகா என்னும் இந்தியக் கடற்படைக் கப்பல்தான் தங்களை மறிக்கிறது என்ற விவரம் தெரியவந்தது. இந்த உண்மை தெரியவந்ததும் அந்தக் கப்பலை தாக்கவேண்டாம் என்று தளபதி கிட்டு ஜெயச்சந்திரனுக்கு ஆணையிட்டார். ஏற்களவே இந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் உள்ள உறவு சீராக இல்லாததாலும் விடுதலைப் புலிகள் இந்தியாவுடன் பகையுணர்ச்சி கொண்டிருக்கின்றார்கள் என்ற பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டு வரும் சுூழ்நிலையிலும் இந்தியக் கடற்படைக் கப்பலை நாம் தாக்கினால் அது மேலும் வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தும் எனவே, நமது உயிரை இழக்க நேர்ந்தாலும் பரவாயில்லை இந்தியக் கப்பலைத் தாக்க வேண்டாம் என்று தளபதி கிட்டு திட்டவட்டமாகச் கூறினார்.
அதன் பின்பு இந்தியக் கடற்படைக்கப்பலின் காப்டனுடன் வானொலி மூலம் பேசுவதற்கு கிட்டு விரும்பினார்.
இந்திய காப்டன் கிட்டுவை யார் என் விசாரித்தார். அதற்கு கிட்டு பதில் அளிக்கும்போது ‘தன்னை இப்பொழுது மாறன் என்று அழைக்கலாம்” பின்பு தன்னுடைய உண்மையான அடையாளத்தை தெரிவிக்கிறேன்” என்று பதில் கூறினார். எங்களுடைய கப்பலை எதற்காக மறிக்கிறீர்கள் என்று கேட்ட பொழுது அதற்குப் பதில் அளித்த இந்தியக்; கப்பலின் காப்டன் ‘அது பற்றி எனக்குத் தெரியாது, உங்களுடைய கப்பலை கடற்கரைக்குக் கொண்டுவரும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு செய்யத் தவறினால் உங்கள் கப்பலைத் தாக்க நேரிடும்” என்று எச்சரித்தார்.
தங்களுடைய கப்பலில் பெட்ரோல், டீசல் ஆகியவை சேமித்து வைக்கப்பட்டு இருப்பதால் சண்டை மூண்டால் பெரும் சேதம் ஏற்படும் என்பதால் இந்தியக் கடற்படைக் கப்பலைத் தொடர்ந்து செல்லக் கிட்டு முடிவு செய்தார்.
சனவரி 14-ஆம் நாள் காலை 6 மணிக்கு மற்றொரு இந்தியக் கடற்படைக் கப்பல் கிட்டுவின் கப்பலுக்கு அருகே வந்தது. ஜ.என்.எஸ். பாப்பா 44 கிருபாணி என்னும் கப்பல் ஒருபுறமும், ஜ.என்.எஸ் 38 விவேகா மறுபுறமும் கிட்டுவின் கப்பலுக்குத் காவலாக இந்தியக் கடற்கரையை நோக்கி வழிநடத்திச் சென்றன. எம்.வி.யகதா கப்பலில் தளபதி கிட்டு பயணம் செய்கிறார் என்பதை நன்கு தெரிந்துகொண்டு, அவரை யாழ்ப்பாணம் செல்லவிடாமல் தடுத்து உயிரோடு சிறைபிடித்துச் செல்லவே இந்தியக் கடற்படைக்கப்பல்கள் வந்திருக்கின்றன என்ற உண்மை தெளிவாகியது. இருந்தாலும்; கிட்டு இந்தியக் கடற்படைக் காப்டனுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைச் சந்தித்து சமாதான் திட்டம் ஒன்றைப் பற்றி விவாதிக்கவே தான் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டு இருப்பதாகச் கிட்டு கூறினார். ஆனால் இந்தியக் காப்டனோ அவர்களைச் சென்னையை நோக்கி வருமாறு வற்புறுத் தினார். சென்னை அழைத்துவரவேண்டிய அவசியம் என்ன? என்று கேட்டபொழுது அவர் அதற்கு மழுப்பலான பதில் கூறினார். அது பற்றி தனக்கு எதுவும் தெரியாதென்றும், கிட்டு சென்னை வந்த பின்பு உயர் அதிகாரிகள் அவரைச் சந்தித்து மேலும் பேசுவார்கள் என்றும் கூறினார்.
இந்தப் பேச்சுக்களிடையே பயணட் தொடர்ந்தது. சென்னை அருகேயுள்ள எண்ணு}ரிலிருந்து கிழக்கே 16ஆவது மைலுக்கு யகாதா கப்பல் வந்த பொழுது அதை நிறுத்தி நங்கூரம் பாய்ச்சும்படி கிட்டு ஆணையிட்டார். அதற்குமேலும் பயணம் செய்தால் இந்தியாவின் கடல் எல்லைக்குள் நுழைவதற்கு கிட்டு திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்த நிலைமையில் மற்றொரு இந்தியக் கடற்படைக் கப்பலான ஜ.என்.எஸ் சாவித்திரி விரைந்து வந்து கிட்டுவின் கப்பலை முற்றுகையிட்ட கப்பல்களுடன் சேர்ந்துகொண்டது. உடனடியாகச் சரண் அடையும்படி கிட்டுவுக்கு ஆணையிடப்பட்டது. அதற்குக் கிட்டு மறுத்துவிட்டார். தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் இந்திய உளவுத்துறை தலைவர்களையோ சென்னையில் உள்ள அரசியல் தலைவர்களையோ அழைத்து வரும்படி கிட்டு கேட்டுக்கொண்டார். அதை ஏற்பதற்கு இந்திய கடற்படை தளபதி மறுத்துவிட்டார்.
16-ஆம் நாள் காலை 6 மணி வரை அவகாசம் தருவதாகவும் அதற்குள் கிட்டுவும் மற்றவர்களும் சரணடைய வேண்டும் என்றும் இல்லையென்னறால் அதிரடிப்படை அவர்களைத் தாக்கிச் சிறைபிடிக்கும் என்றும் எச்சரித்தார். சரியாக காலை 6 மணிக்கு இரண்டு உலங்குவானு}ர்திகளும் மூன்று போர் விமானங்களும் கிட்டுவின் கப்பலைச் சுற்றி வட்டமிட்டன. கப்பலின் மேல் தளத்தில் தளபதி கிட்டு நின்ற வண்ணம் எதையும் சந்திக்கத் தயாரானார்.
சிறிது நேரத்தில் கிட்டுவின் கப்பலை நோக்கி இந்திய கடற்படைக் கப்பல்கள் பீரங்கிகளால் சுட்டன. கப்பலின் கேப்டன் ஜெயசந்திரனையும் மற்றும் மாலுமிகளையும் கடலில் குதித்துத் தப்புமாறு கிட்டு ஆணையிட்டார். தன்னுடனிருந்த விடுதலைப் புலிகளை நச்சுக்குப்பிகளைத் தயாராக வைத்துக் கொள்ளும்படியும் உத்தரவிட்டார். ஆனால் மாலுமிகள் கிட்டுவை ஆபத்தில் சிக்கவைத்துவிட்டுத் தாங்கள் மட்டும் தப்பிச்செல்ல விரும்பவில்லை. ‘தேவையில்லாமல் அவர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்ய வேண்டியதில்லை” என்று கூறிய கிட்டு அவர்களை ஒவ்வொருவராக பிடித்துக் கடலில் தள்ளினார். கடலில் அவர்கள் குதிக்கும்பொழுது தங்கள் கப்பல் பற்றி எரிவதையும் எரிந்து கொண்டிருக்கும் தீச்சுவாலைக்கு நடுவே தளபதி கிட்டுவும் மற்ற விடுதலைப் புலிகளும் கம்பீரமாக நிற்பதையும் பார்த்தனர்.
16.1.93 அன்று அதிகாலை 6.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்தியக் கடற்படை கப்பல்கள் பீரங்கி குண்டுகளால் தாக்கியதால் கிட்டுவின் கப்பல் தீப் பிடித்து எரிந்தது. கடலில் குதித்த கப்பலின் மாலுமிகளை இந்தியக் கடற்படைக் கப்பல் காப்பாற்றிச் சிறைபிடித்தது. அவர்களில் சிவலிங்க கேசவன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவருக்கும் படுகாயம் எற்பட்டது. கைது செய்யப்பட்டவர்களை நியாயமாக சென்னைக்கு கொண்டு வந்திருக்கவேண்டும். ஏனென்றால் சென்னைக்கு அருகே கிட்டுவின் கப்பலைச் சுற்றி வளைத்தாக இந்தியக் கடற்படை குற்றம் சாட்டி இருந்தது. அதற்கு மாறாகவும் சட்டத்திற்குப் புறம்பாகவும் கைது செய்யப்பட்டவர்களை விசாகப்பட்டினத்திற்குக் கொண்டு சென்றார்கள். சென்னைக்கு கொண்டு வந்தால் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் கொதிப்புணர்வும் கிளர்ச்சியும் வெடிக்கலாம் என்று அவர்கள் அஞ்சியதே இதற்குக் காரணமாகும்.
கிட்டு தன்னுடைய கப்பலில் ஏறிற பொழுது ”தலைவர் பிரபாகரன் அவர்களிடம் கொடுப்பதற்காக பல முக்கியமான ஆவணங்களை ஒரு கைப்பெட்டியில் கிட்டு வைத்திருந்தார்.மேலும் இரண்டு அல்லது மூன்று பெட்டிகளில் 15 இலட்சம் அமெரிக்க டாலர்களையும் வைத்து இருப்பதாகக் கிட்டு என்னிடம் கூறியிருந்தார்”” எனக் கப்பலின் கேப்டன் ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
மேற்கு ஜரோப்பிய நாடுகள் தயாரித்து அளித்த சமாதானத் திட்டத்துடன் தமது தலைவரைச் சந்தித்துப் பேசுவதற்காகவே யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தளபதி கிட்டுவை இந்தியக் கடற்படை வழிமறித்துப் படுகொலை செய்தது.
“கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்
நீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும்
எமது விடுதலை வரலாற்றின்
ஒரு காலத்தின் பதிவு”
கிட்டு ஒரு பன்முக ஆளுமை
வங்கக் கடலும் வெண்புறா பறக்கும் நாட்களுக்காக ஆதரவளித்து அக்கப்பலை தொட்டு அரவணைந்தது! இந்திய உளவுப்பிரிவின் நச்சுக் கண்கள் அதன் மேல் பாய்கின்றன. பாரதக் கடற்படை அகத் கப்பலைச் சுற்றி வளைக்கிறது. ஆயுத பலத்தால் அதை பாரதக் கப்பல் தன் கடல் எல்லைக்குள் இழுத்துச் செல்கிறது.
கப்பலில் பயணித்த போராளிகளை சரணடையும்படி கட்டளை பிறக்கிறது! உயிரணைந்து போனாலும் சரணடையாத புலிகள் கட்டளைக்குப் பணிய மறுக்கின்றனர். சரணடையாவிட்டால் கப்பலைத் தாக்கப் போவதாக மீண்டும் ஒரு கட்டளை! புலிகளின் முகங்களில் கேலிப்புன்னகை! கப்பல் வெடித்துச் சிதறுகிறது! விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியையும் தோழர்களையும் உயிருடன் பிடித்துவிடலாம் என்ற பாரதத்தின் நப்பாசை கப்பலுடன் சேர்ந்து சிதறிப்போகிறது!
கிட்டுவும் அவருடன் வந்த 12தோழர்களும் நிலையாமை என்ற பூலோக வாழ்வுக்கு விடை கொடுத்துவிட்டு என்றும் தமிழ் மக்களின் நெஞ்சில் நின்று நிலைக்கும் பேரின்ப நிலையை எட்டுகின்றனர்.
ஆம்! கிட்டுவும் தோழர்களும் வங்கக்கடலில் சங்கமமாகி ஒரு மாபெரும் தியாக காவியம் வீர வரிகளால் எழுதி விட்டனர்!
வஞ்சமனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும்
அகத்தே நகும் – இது வள்ளுவன் குறள்.
ஆகாய நீர், காற்று, பூமி, நெருப்பு எல்லாமே இந்தியாவை பார்த்து அகத்தை நகைக்கவில்லை! எல்லா மூலைக்கும் கேட்கும் விதமாக எள்ளி நகையாடின. எப்படியிருப்பினும் –
நாம் மூத்த தளபதி கிட்டுவை இழந்தோம்! கிட்டு – எதிரிகளைக் கலங்க வைக்கும் ஒரு ஒப்பற்ற வீரத் தளபதி! கிட்டுவின் அணி வருகிறது என செய்தி கிடைத்தாலே சிங்களப் படை அஞ்சிப் பின்வாங்கும் அளவுக்கு அவனிடம் ஒரு ஆளுமை கொப்பளித்தது! களத்தில் கிட்டு இறங்கவிட்டால் சக போராளிகளிடம் பலம் பன்மடங்கு பெருகிவிடும்.
கிட்டு ஒரு அரசியல் வாதி!
விடுதலையுணர்வை மக்களுக்கு விதைப்பது, போராட்டப் பணிகளில் மக்களை ஈடுபடுத்துவது, தெளிவான அரசியல் பார்வையை தோழர்களுக்கு ஊட்டுவது, எந்நேரமும் மக்களோடு மக்களாக உறவாடுவது – இவையெல்லாம் அவன் அரசியல் ஆளுமை!
கிட்டு ஒரு ராஜதந்திரி!
இந்திய இராணுவம் எமது மண்ணை ஆக்கிரமித்திருந்த போது இந்தியாவிலேயே தலைமறைவாக இருந்து கொண்டே எமது போராட்டத் நியாயங்களை வெளிநாட்டு தூதுவராலயங்களுக்கு விளக்கினான். ஆங்கில வெளியீடுகள் மூலம் பரப்புரை மேற்கொண்டான். இலண்டனில் இருந்து கொண்டு பன்னாட்டு போராட்ட அமைப்புகளுடனும் தொடர்புகளை மேற்கொண்டான்.
கிட்டு ஒரு ஊடகவியலாளன்!
பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி எனப் பல்வேறு ஊடகங்களை ஆரம்பித்து தானே நெறிப்படுத்தி விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஊடகப் பலம் சேர்த்தவன் கிட்டு.
கிட்டு ஒரு புகைப்படக் கலைஞன்!
கிட்டுவின் கழுத்தில் என்றுமே இணைபிரியாமல் இருப்பவை இரண்டு. ஒன்று – சயனைட் குப்பி! மற்றது புகைப்படக் கருவி! எந்த நெருக்கடியான சண்டையிலும் அவன் ஒரு கையில் துப்பாகியுடனும் மறுகையில் கமெராவுடனும் நிற்பான். எந்த ஒரு சம்பவத்தையும் அவன் ஆவணப்படுத்த தவறுவதில்லை.
கிட்டு ஒரு ஓவியன்!
அவனின் ஓவியங்களில் கற்பனைகளும் கனவுகளும் சிறகடிக்கும்! ஆத்மார்த்த உணர்வுகள் கொப்புளிக்கும் விடுதலையுணர்வு வீறுகொண்டெழும்” அவனின் ஓவியங்கள் வெறும் படைப்புக்களல்ல! மனிதரை செயல் நோக்கி உந்தித்தள்ளும் விசைகள்!
கிட்டு ஒரு கவிஞன்!
அவனின் கவிதைகளில் மண் மணக்கும்! வல்லை வெளிப் பூவசரசும், உடல் தழுவும் உப்புக்காற்றும் மெல்ல நடை பயிலும். கள்ளிறக்கும் கந்தனும், மீன்பிடிக்கும் மரியானும் சமத்துவம் தேடி அவன் கவிதைகளில் சங்கமிப்பார்கள். காதல் உணர்வு கடல் கடந்தும் சிறகடிக்கும்!
இப்படி இப்படியாக –
கிட்டு ஒரு பன்முக ஆளுமையின் அவதாரம்! ஒரு விடுதலைப் போராட்டத் தளபதியின் தலைசிறந்த முன்னுதாரணம்!
இந்தி அரசே!
அந்த அற்புதத்தை வங்கக்கடலில் வைத்து அழித்தாய்!
இப்போது கேட்கிறோம்!
அவனை உன்னால் எமது நெஞ்சிலிருந்து அழிக்க முடியமா?
எம், இதய நரம்புகளில் இன்றும் விடுதலை உணர்வை மீட்டிக்கொண்டிருக்கும் அவனின் நினைவுகளை அழிக்க முடியுமா?
முடியாது!
உன் இலட்சக்கணக்கான படையினராலும் முடியாது! உன் பலம் வாய்ந்த புலனாய்வு அமைப்புக்களாலும் முடியாது!
ஏனெனில் – கிட்டு எங்கள் மண்ணில் ஒவ்வொரு துகள்களிலும் உயிர் வாழ்கிறான்!
செண்பகப்பெருமாள்.
இது ஒரு மீள்பதிப்பு