அம்மா மூன்றெழுத்தில் சொல்லிவிட
அகராதி வார்த்தையல்ல
கருவறையெனும் உயிரறை தாங்கி
ஏழு தலைமுறை எழுந்து பேசும்
வரையறை தாண்டிய வளர்மதி
உயிரணுக்கள் உற்புகுந்த
நாள் தொடங்கி
ஆறடி நிலம் செல்லும்வரை
என் சுவாசித்தல் கலந்து
அணையாது துளிர்விடும்
பொக்கிஷ விளக்கு
கருவறை என்றதும்
சிலர் சிறையறை என்றனர்
அங்குதான் நான்
சுதந்திரமாய் சிறகடித்தேன்
பசியென்று பதறவில்லை
வலியென்று கதறவில்லை
பத்துமாத சுமைதனையே
பக்குவமாய் ஏற்றெடுத்த
பாசமழை பசுமையவள்
உயிரொன்று உயிரில் வைத்து
என் சுமையை தானேற்று
தன்னுடலை தானீய்த்து
என்னுடலை உருவாக்க
மெய்யுருவில் நான் கண்ட
தெய்வமில்லை என் அம்மா
அதற்கும் மேல் சிறந்தவளே
வயிற்றில் எனை சுமந்தபடி
நல்லுணவு உண்டிருப்பாள்
நான் வளர வேண்டும் என
விழிமூடி நானுறங்க
தாலாட்டி கவி வடிப்பாள்
தன் துயில் இழந்தவளாய்
எனக்கு வலிக்குமென்று
ஆகாயம் பார்த்தவளாய்
தினம் நீண்டு படுத்திருப்பாள்
அவளுக்கு வலிச்சுதென்றா
கதறிப் போய்த் துடித்தாலும்
தடவி என்னை அணைத்திருப்பாள்
சத்தியமா சொல்கின்றேன்
சரித்திரமே என் அம்மா
நான் திசைமாறி கிடக்கயில
சீஸர் பண்ணிக் கிழிக்கையில
நெருஞ்சி முள் குத்திவிட
உயிர் போன வலி போல
என்ன துடி துடித்திருப்பாள்
கதறி நான் பிறக்கையில
கைகள அசைக்கையில
அவள் கண்டு மகிழ்ந்திருப்பாள்
முதல் முத்தம் கொடுத்திருப்பாள்
கருவறையில் இருந்துவிட
என்ன தவம் செய்தேனோ
முழுவதுமாய் போற்றிவிட
காலமில்லை என்னிடத்தில்
காதலித்துக் கூறுகிறேன்
காவியமே என் அம்மா
– வன்னியூர் கிறுக்கன்