ஒற்றையாட்சியின் கீழ் வழங்கப்படுகின்ற அதிகாரம் பெரும்பான்மையினரிடமே இருக்கும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கலந்துரையாடலில் உரையாற்றியபோதே இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“1992 ஆம் ஆண்டில் 58 ஆவது இலக்கச் சட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் பற்றிய அதிகாரமாக்கல் சட்டத்தினை ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதன் மூலம் எமக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள் பறிக்கப்பட்டிருந்தன. அதாவது திரும்பப் பெற்று வேறு பிரிவினருக்குக் கொடுத்தார்கள்.
ஒற்றையாட்சி பெரும்பான்மையினரிடம் இருப்பதால் எமக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் பறித்தெடுக்கப்படுகின்றன. மாகாண சபைகளின் அதிகாரத்தின் கீழ் இருந்த மாவட்டச் செயலாளர்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டனர்.
இதனால் இன்று வடமாகாணத்தில் இரட்டை நிர்வாகம் நடைபெற்று வருகின்றது. ஆனால் அதிகாரப்பரவலாக்கம் மூலம் நாம் எதிர்பார்த்தது நம்மை நாமே ஆண்டு வருவதைத் தான்.
ஆனால் அதிகாரப்பரவலாக்கம் மூலம் தற்போது எமக்குக் கிடைத்தது மத்திய அரசின் ஊடுருவல் அல்லது தேவையற்ற தலையீடுகளே” என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.