ஆண்டாளைப் பற்றி அவதூறாக பேசியதாக தமிழ் சினிமாவின் கவிப்பேரரசு வைரமுத்து மீது பெரும் எதிர்ப்புத் தெரிவித்து இந்து அமைப்புக்கள் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் என் நெஞ்சைத் தொட்ட சம்பவம் ஒன்றை நினைவு படுத்தியது. அந்த சம்பவம் உண்மையில் எங்கள் விடுதலைப் போராட்டத்துக்கு மக்கள் எப்படியெல்லாம் தங்களின் கூரிய பங்கை தந்தார்கள் என்ற கேள்விக்கான விடையை இலகுவாக சொல்லிச் சென்றது.
“குடாரப்பு தரை இறக்கம் ” சொல்ல முடியாத வரலாற்று பக்கத்தை கொண்டது. இதில் பல ஆயிரம் சம்பவங்கள் உறங்கிக் கிடக்கின்றன. அதில் ஒன்று இன்றைய இந்து மதம் சார்ந்தவர்களுக்கு அதிர்ப்த்தியை தரலாம். அல்லது வேறு மதத்தை சார்ந்தவர்கள் பற்றி பதிவிடப்படவில்லை என்று கோவிக்கலாம். அல்லது என் மீது இந்த சம்பவத்தை பதிவதால் எதிர்ப்பு எழலாம். ஆனால் இது மதம் தொடர்பான பதிவல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். பதியப்பட வேண்டி முக்கிய சம்பவம்.
எம் விடுதலைப் போராட்டம் தனக்குள் சாதி மத பேதமின்றியே தன்னகத்தே அனைவரையும் ஒரு கோட்டில் இணைத்து வைத்திருந்தது. மதக் கோட்பாடுகளுக்கு விடுதலைப்புலிகள் எப்போதும் தடை விதித்ததில்லை. அது பல விமர்சனங்களை உருவாக்கி இருந்தாலும் தடை இல்லை என்பதுவே நியம். அதற்கு மடு மாதா ஆலயம், வற்றாப்பளை கண்ணகி ஆலயம் போன்றவை போல பல நூறு வணக்க தலங்களின் பெருவிழாக்களை அவர்களே பாதுகாப்பு வழங்கி மக்கள் செய்து வந்ததை குறிப்பிடலாம்.
இந்த நிலையில், அனைத்து மத குருக்களும் விடுதலைப்புலிகளால் மதிக்கப்பட்டே வந்தார்கள். அது இந்து கிருஸ்த்தவம் என்ற பாகுபாடில்லை.
இந்த நிலையில் இந்து மதக் கோட்பாடுகளில் ஒன்றான ” கொல்லாமை உண்ணாமை “என்ற பெரும் விடயம் இந்து மத குருக்கள் மாமிச உணவுகளை உண்ணாமையை குறித்து பேசுகிறது. கொல்வதும் அதை உண்பதும் குற்றம் என்று கூறப்படுகிறது. உண்மையில் தீவிர இந்து மதம் சார்பானவர்கள் மாமிச உணவுகளின் அருகே செல்லக்கூட மாட்டார்கள். அவ்வாறான ஒரு இந்து மத குரு பற்றியே இந்த பத்தி கூற விளைகிறது.
குடாரப்புச் சண்டை தொடங்கிய முதல் நாள், அந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் பலர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தார்கள். அவர்களில் இந்து மத குருவும் ஒருவர் இருந்தார். அவர் இயக்கப் போராளிகளைக் கண்டதும் பெரும் மகிழ்வடைகிறார். கட்டிப்பிடித்து உச்சி முகர்ந்து தனது வெளிப்படையான மகிழ்ச்சியை உணர்த்துகிறார். “தம்பி உங்களக் பார்க்க எவ்வளவு ஆசைப்பட்டம். இன்றுதான் மனசு நிறைஞ்சிருக்கு” என்று மகிழ்வின் உச்சத்தில் இருந்தார். அவருக்கு புலிகளைக் கண்டது பெரு மகிழ்வைத் தந்தது. கடல், இத்தாவில், நாகர்கோவில், மருதங்கேணி என நான்கு புறமும் இராணுவத்தின் பயங்கர தாக்குதல்கள் அந்த பகுதி எங்கும் நடக்கின்றது.
மக்கள் பாதுகாப்பு பகுதிகளுக்கு நகர்த்தப்பட்டிருந்தார்கள். போராளிகள் தம் இலக்குகளை அடையும் ஓர்மத்தோடு சண்டையிடுகிறார்கள். அதைப் போலவே இராணுவமும் தனது படை பலத்தை பிரயோகிக்கிறது. இரு தரப்பும் அதி உச்ச பலத்தை பிரயோகித்து கொண்டிருந்தனர். அப்படியான சண்டைக்களத்தில் காயமடையும் போராளிகளுக்கான மருத்துவ அணியையே அவர் சந்தித்திருந்தார். அவர்களும் அவரை கண்ட மகிழ்வில் இருக்கிறார்கள். அப்பா நீங்கள் கவனமா இருங்கோ. இது சண்டைக்களம் இங்கு எப்ப என்ன நடக்கும் என்று தெரியாதப்பா. கவனமா இருங்கோ பங்கர்ல… மருத்துவப் போராளிகள் அவரை பாதுகாப்பான பகுதிக்கு அனுப்புகிறார்கள்.
சரியப்பு சாப்பாடுகள் என்ன மாதிரி? சாப்பிட்டீங்களா? அவர் உணவை பற்றி வினவிய போது ஓம் அப்பா சாப்பாடு இருக்கு பட்ஜட் கொண்டு வந்தனாங்கள். சாப்பாட்ட பற்றி நினைக்க முடியாதப்பா. இந்த சண்டை வெற்றி பெறும் வரைக்கும் எங்களால சாப்பிட முடியாது அப்பா. மருதங்கேணி பக்கமாக உடைச்சு பாதை எடுக்கும் வரை இது தான் அப்பா சாப்பாடு. என்று மருத்துவ போராளி ஒருவர் தனது உணவுத் தொகுதிப் பையை காட்டுகிறார். அதற்குள் சில உலருணவுகள், பொரித்த இறைச்சித் துண்டு போன்றவை இருக்கின்றன. அதைக் கேட்ட உடனே அவருக்கு கவலையாக இருந்தது சரியப்பு நான் பிறகு வாறன் என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்று விடுகிறார்.
அங்கே சண்டையணிகள் உலருணவை மட்டுமே நம்பி சண்டையை செய்தனர். அவர்களுக்கு உணவு வருவதென்பது சாதாரணமாக இருக்கவில்லை. அதனால் உணவைப் பற்றி அவர்கள் நினைக்கவும் இல்லை. அவர்கள் எண்ணங்கள் முழுவதும் சண்டை பற்றியே இருந்தது.
ஆனால், காயப்பட்டு வரும் போராளிகளுக்கு உணவுத் தேவை எழுந்தது. உலருணவை சாதாரணமான போராளிகள் பயன்படுத்துவதில் சிக்கல்கள் எதுவும் இல்லை ஆனால் காயப்பட்ட போராளிகளுக்கு இருக்கவில்லை. அவர்களால் உலருணவை உண்ண முடியாது. அதனால் உடனடி சமைத்த உணவு கொடுக்க வேண்டிய தேவை இருந்தது.
இந்த நிலையில் அங்கே தரித்து நின்ற மருத்துவ அணி பல சிக்கல்களை எதிர்நோக்கி இருந்தது. காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை கொடுத்து கொண்டிருந்த மருத்துவர் தணிகை, வித்தகி மற்றும் மருத்துவ போராளிகளான வண்ணன் மற்றும் நிர்த்தனா ஆகியோர் களைப்படைந்து காணப்படுகிறார்கள். வரும் காயங்க்காறரை பாதுகாக்க அவர்கள் அயராது உழைக்க வேண்டி இருந்தது.
இத்தாவில் பக்க களமுனைக்கு கட்டளைத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுடன் இராணுவ மருத்துவர் சத்தியா மற்றும் மருத்துவப் போராளி திருவருள், சுதர்சன் ஆகியோர் சென்றிருந்தனர். அவர்களும் இவர்களைப் போலவே சண்டையை எதிர் கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு தொடர்ந்த தாக்குதல்கள் தூக்கமற்ற இரவுகளாகவே இருந்தன. அதோடு உணவுகளும் இல்லாமல் இருந்தது. காயப்பட்ட போராளிகளும் மருத்துவர்களும் சோர்வடைந்து இருந்த போதும், அவர்களுக்கான உணவு வளங்கல்கள் கிடைப்பது பெரும் சிக்கலாக இருந்தது.
சண்டை தொடங்கி 2 ஆவது நாள் மேலே குறிப்பிட்ட இந்து மதக் குரு அங்கே வருகிறார். போராளிகள் படும் கஸ்டங்களை அவரால் தாங்க முடியாது இருந்தது. எதுவும் பேசாது திரும்பி சென்றவர். தன் வீட்டில் கூட்டுக்குள் நின்ற இரண்டு சேவல்களை பிடித்து கொண்டு ஓடி வருகிறார்.
“தம்பி நான் கொலை செய்ய மாட்டன் எனக்கு உரிக்கவும் தெரியாது. இதை உரிச்சு தர முடியுமாப்பு.? நான் சமைச்சு கொண்டு வாறன். மருத்துவர்களால் அவரின் வேண்டுகோளை ஏற்க முடியவில்லை. அவர்கள் ஏற்கனவே காயப்பட்டிருந்த 6 போராளிகளுக்கு சிகிச்சை செய்திருந்தார்கள். கைகள் , உடை என்று அனைத்தும் அந்த போராளிகளின் குருதியில் நனைந்தருந்தன. அதை விட தொடர்ந்தும் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த பல போராளிகளை மீள்உயிர்ப்பு நடவடிக்கை செய்ய வேண்டியும் இருந்தது. அதனால் அவர்கள் மறுக்கிறார்கள் “இல்லை அப்பா நிறைய போராளிகளுக்கு சிகிச்சை குடுக்க வேணும். நாங்கள் இதில மினக்கட இப்ப நேரம் இல்லை அப்பா. பரவாயில்ல நீங்கள் யோசிக்க வேணாம் அப்பா நாங்கள் உலருணவு சாப்பிட்டனாங்கள் சாப்பாட்டை பற்றி கவலையில்லை அப்பா.
அவர்கள் தம் கடமையில் மூழ்கிப் போய்விட இந்து மத குருவால் எதையும் செய்ய முடியவில்லை. கொல்வதும் உண்பதும் தவறான செயல் என்ற கோட்பாட்டுக்குள் வாழ்ந்து வரும் அவரால் அதை மீறவும் முடியவில்லை. ஆனால் தன் பிள்ளைகளான போராளிகள் பசியோடு இருப்பதை பார்த்துக் கொண்டிருக்கவும் அவரால் முடியவில்லை. அவரின் மனப் போராட்டம் இறுதியாக அடிப்படை இந்துதத்துவ கோட்பாட்டை உடைத்தெறிகிறது. கோழியை கொன்று உரிக்கிறார். சோறும் சுவையான கோழிக் கறியும் சமைக்கிறார். உயிரை கொல்லுதல் பாவம் என்று வாழ்ந்த அந்த இந்துமதக் குரு, போராளிகளுக்காக இரண்டு கோழிகளை கொலை செய்தும், அதை தன் கைகளால் சமைத்தும் பெரும் வெற்றி ஒன்றுக்காக தம்மை ஆகுதி ஆக்கத் தயாராக இருந்த அந்த போராளிகளின் பசியை போக்கினார்.
எங்கள் மக்களுக்காக அவர்களின் வாழ்வுக்காக போராளிகள் எதையும் செய்ய தாயாரானவர்கள் எதையும் தியாகிக்க துணிந்தவர்கள். ஆனால் பொதுமக்கள் அவ்வாறானவர்கள் அல்ல, தமது குடும்பம், தனிநபர் விருப்பங்கள் என்றும் மதம், சாதியம் போன்ற கொள்கைகள் என்றும் பலவாறான கட்டுப்பாட்டு விழுமியங்களை பின்பற்றியே வந்தார்கள். ஆனால் அதை எல்லாம் தாண்டி இப் போராளிகளுக்கும் எம் போராட்டத்துக்குமாக எதையும் செய்ய துணிந்தவர்கள் எம் மக்கள் என அந்த இந்துக் குரு சொல்லி நின்றார்.
இது நடந்து 3 ஆவது நாள் போராளிகளுக்கான உணவு வழங்கள் மருதங்கேணி பகுதியில் இருந்து ஒழுங்காக கிடைக்கத் தொடங்கிய போது இந்து மதக் குரு கொஞ்சம் ஆறுதலடையத் தொடங்கினார். ஆனால் அவர் அதன் பிறகு கூட காயப்பட்ட போராளிகளை பராமரிக்கும் உதவியை மருத்துவ அணிக்கு செய்தார். உணவூட்டி தண்ணீர் பருக்கி அவர்களுக்கு உதவினார். வரு சண்டைக் கள முனையில் போராளிகளுக்கு உதவ எந்த பயமும் இன்றி
ஆனால் அன்று பின்னேரம் காலில் பாரிய காயமடைந்திருந்த சாள்ஸ் அன்டனி சிறப்பு படையணிப் போராளி வைத்தியை ( வைத்தி அண்ணை) அவசர சிகிச்சைக்காக தமது மருத்துவ பதுங்ககழி நோக்கி தூக்கிக் கொண்டு வந்தார்கள் மருத்துவர்களான வித்தகி மற்றும் தணிகை ஆகியோரை தாண்டி திடீர் என்று கிபிர் தாக்குதல் நடக்கிறது. நடந்த கிபிர் தாக்குதலில் தப்பிக்க நிலத்தில் நிலை எடுக்கிறார்கள். பல குண்டுகள் அந்த பிரதேசம் எங்கும் கிபிரால் விதைக்கப்பட்ட போது, இந்துக் குருவின் வீட்டுப்பக்கத்தில் இருந்தும் பெரும் புகைமண்டலம் எழுந்தது. அப்போது அவர்களின் மனதில் அந்த மதகுரு வந்து போனார்.
அவரின் வீட்டை நோக்கி ஓடிய போராளிகள் காலை வரை தமக்கு உணவளித்து தம் தந்தையாக நின்று தம்மை பராமரித்த அந்த மதக்குரு உடல் உயிரற்றுக் கிடந்த கோலத்தைக் கண்டு மனமுடைந்தார்கள். அவரை தூக்கினார்கள் உயிரற்ற வெற்றுடலை துப்பரவு செய்தார்கள். அப்போது அந்த பெரியவரின் மனைவி ஓடி வருகிறார். கதறி அழுதார். போராளிகளை பராமரிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு தேவையான உணவுகளை சமைத்து குடுக்க வேணும் என்றுதான் அவர் அவர்களுடன் செல்லாது இங்கே தங்கி இருந்ததை எண்ணி மனம் வருந்தினார்கள் போராளிகள்.
ஆனாலும் தளரவில்லை குடாரப்பில் வீரச்சாவடைந்த போராளிகளோடு இன்றும் அவரை நினைத்துக் கொண்டு பயணிக்கிறார்கள்…
கவிமகன்.இ