அரசமைப்பு உருவாக்க முயற்சியைக் குழப்புவது எமது நோக்கமல்ல. அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எமது நோக்கம் என்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழக விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் “இடைக்கால அறிக்கை – மாயைகளை கட்டுடைத்தல்” என்ற கருத்தாடல் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது-,
இலங்கையில் போர் மௌனிக்கப்பட்ட பின்னர் அரசியல் ரீதியாக மாத்திரமே எமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஒரு சிலரிடம் மட்டும் அந்த அரசமைப்பு ஆக்கத்தை ஒப்படைத்துவிட்டு மக்கள் ஒதுங்கி இருக்க முடியாது.
சட்டம், ஒழுங்கு, கல்வி, மீன்பிடி, விவசாயம், கூட்டுறவு போன்ற விடயங்கள் இடைக்கால அறிக்கையில் முற்றுமுழுதாக மௌனிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வரலாம் என்பது பற்றி எனக்குத் தெரியாது. இந்த இடைக்கால அறிக்கையை வைத்துக் கொண்டு மக்கள் முடிவெடுப்பதாயின் ஒன்றையாட்சி என்ற குணாதிசயத்தில் இருந்து தாண்டி வர இந்த அறிக்கையில் முதற்கட்ட விடயம் ஏதாவது இருக்கின்றனவா? அல்லது மகாண அரசுகளுக்கு சுயாதீன அதிகாரம் கிடைக்க ஏற்பாடுகள் ஏதாவது உள்ளனவா? என ஆராய்ந்து மக்கள் முடிவெடுக்க வேண்டும்.
ஒரு முதுர்ச்சியான தமிழ் சமூகம் உருவாக்கப்பட வேண்டுமானால் பொது விடயங்களில் நாட்டம் கொள்ள வேண்டும். பல்கலைக் கழகச் சமூகம், ஆசிரியர் சங்கம், தமிழ் மக்கள் பேரவை போன்றவை அதில் அங்கம் வகிக்க வேண்டும்.தமிழ் மக்கள் பேரவையின் இந்தக் கருத்தாடல் நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசி குழப்புவதற்குச் சிலர் முயற்சித்தனர்.
யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டபோது சில அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாகவும் சில அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும் கருத்துக்களை முன்வைத்து மக்களை திசை திருப்ப போகின்றனர் என்று கூறி தேர்தல் தினைகக்ளத்துக்கு அறிவித்து நிறுத்தினார்கள். பின்னர் வீரசிங்கம் மண்டபத்தில் கருத்தாடலை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போதும் சிலர் தடுத்து நிறுத்த முயன்றனர்.
அவர்களுக்கு அது சாதகாமாக அமையவில்லை. எவ்வித அரசியல் பேச்சும் இல்லாது இருக்க வேண்டும் என தேர்தல் திணைக்களம் அறிவுறுத்திக் கடிதமும் அனுப்பியுள்ளது. நாட்டில் நீதித்துறை, தேர்தல் திணைக்களம் இரண்டுமே நடுநிலைமையுடன் செயற்பட வேண்டும்.
அவ்வாறான தேர்தல் திணைக்களம் அரசியல் பேசக் கூடாது என கூறுவது வேடிக்கையாக உள்ளது. இந்த நிகழ்வு நடக்க கூடாது எனக் கருதி முறைப்பாடு செய்தவர்களின் விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடக அறிவேன். – என்றார்.