அழகு என்பது இன்றைய காலகட்டத்தில் முக்கிய ஒரு பங்கினை வகிக்கின்றது.குறிப்பாக பெண்களை அழகானவர்களாக மட்டுமே பார்க்கும் மனநிலை பல ஆண்களுக்கு உண்டு,அப்படியாக ஆண்கள் பெண்களை நோக்குவதற்கு ஆண்களை நாம் குறைசொல்லுவது தவறு என்றுதான் கூறிட வேண்டும். பெண்களும் தம்மை அழகானவர்களாக காட்டிட வேண்டும் என்றே துடிக்கின்றார்கள். அப்படியாயின் பெண்கள் என்றால் அழகானவர்கள் என்ற கருத்தை விதைக்க துணிபவர்கள் ஆண்களிலும் பார்க்க பெண்களே என்றுதான் என்னால் எடுத்துரைக்க முடியும்.
அழகு என்றால் என்ன என்ற தெளிவு எங்களது ஆண்களுக்கு இல்லை என்று கூறலாம்.ஆண்கள் காலத்திற்கு காலம் அழகினை பல வித கோணங்களில் நோக்குகின்றார்கள். ஆண்களின் பார்வையில் அழகு என்பதனை தீர்மானிப்பதே சினிமாத்துறையாக இருக்கின்றது. ஆண்களுக்கு பெண்களின் அழகு பற்றிய சிறந்த புரிந்துணர்வு இல்லை எனலாம். ஒரு பெண் அழகானவர் என்று அவளது முக ஒப்பனையிலும் வெளிப்புற தோற்றத்திலும் ஒரு ஆண் முடிவெடுக்கின்றான். இந்த பார்வை மிகவும் தவறான ஒரு பார்வை என்று அவர்கள் உணர வேண்டும்.
ஒரு பெண்ணின் மீதான அழகினை ஆபிரிக்க ஆண்கள் மேலைத்தேய ஆண்கள், கீழைத்தேய ஆண்கள் அனைவரும் வேறு வேறு கோணங்களில் நோக்குகின்றார்கள். ஆபிரிக்க, மேலைத்தேய ஆண்கள் பெண்ணின் அழகினை முகத்திற்கு கீழே உள்ள உடற்கூறினை முன்னிறுத்தியும், கீழைத்தேய ஆண்கள் பலர் முகத்தை முன்னிறுத்தியும் அழகினை நோக்குகின்றார்கள்.எது எப்படியாக இருந்தாலும் ஆண்களின் பார்வையில் ஒரு பெண்ணின்
அழகு என்பது உடற்கூறினை முன்னிறுத்தியே உணரப்படுகின்றது.
உண்மையில் ஒரு பெண்ணின் அழகு என்பது கண்களில் இருந்தே நோக்கப்பட வேண்டும். ஒரு பெண்ணின் கண் பெரிய கருவண்டுகள் போல இருக்கும்போது அந்த பெண் மெல்லிய உயர்ந்த பெண்ணாகவும், நடுத்தர கண்ணாக இருக்கும்போது நடுத்தர உயரமான பெண்ணாகவும் சிறிய கண்ணாக இருந்தால் குள்ளமான பெண்ணாகவும் இருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த கண்களை வைத்து ஒரு பெண்ணை எடைபோடும் அழகும் அந்த பெண் திருமணம் செய்யும்வரை மட்டுமே சாத்தியமாகின்றது. அதன் பின்னர் அந்த பெண்ணின் உடலமைப்பு அதீத மாற்றத்தை காண்கின்றது. இதற்கான முக்கிய காரணமாக பெண்களுக்கு தங்கள் உடலமைப்பு பற்றிய தெளிவான பார்வை இன்மையையே நாம் காரணமாக கூறலாம். அதிலும் கீழைத்தேய பெண்களை பொறுத்தவரை திருமணத்துடன் தமது உடல்மீதான அக்கறை குறைந்து போவதுடன் சமூகத்தின் மீதான பயமும் ஒரு காரணம் எனலாம். ஒரு பெண் எவ்வாறு தன்னை அலங்கரிக்க வேண்டும் ஆடைகளை அணிய வேண்டும் என்பதனை சமூகம் தீர்மானிக்கின்றது. இந்த சமூகத்தின் பார்வை மாறிட வேண்டும். ஒரு பெண் தன்னை அழகாக ஆரோக்கியமாக மனசுத்தமாக வைத்திருப்பதே என்னை பொறுத்தவரை பேரழகு என்பேன். என் பார்வையில் தம்மை ஒழுக்கமாகவும் ஆரோக்கியமாகவும் பேணுவதுடன் சுயமரியாதையுடன் சமூக பார்வையும் கொண்ட எந்த பெண்ணுமே பேரழகியே…
காவியா
20/01/2017
01.07
லண்டன்