நாவல் என்றால் என்ன என்பதை அதன் உள்ளடக்கம் சார்ந்து வரையறை செய்ய இயலாது. உள்ளடக்கம் தொடர்ந்து வளர்வது, மாறிக்கொண்டிருப்பது. பெரிய தத்துவ தரிசனங்களை அலசும் நாவல்கள் உள்ளன அக்னிநதி . குல் அதுல் ஐன் ஹைதர் போல. [தமிழாக்கம். சௌரி] அன்றாட வாழ்க்கையை சாதாரணமாக ராயும் நாவல்களும் உள்ளன ஒரு கிராமத்தின் கதை[ எஸ்.கெ.பொற்றெக்காட். தமிழாக்கம் சி.ஏ.பாலன்] போல. இதிகாசப்பின்னணி கொண்ட நாவல்கள் உள்ளன எஸ்.எல். பைரப்பாவின் ‘பர்வா’ போல. [தமிழாக்கம். பாவண்ணன்]
வடிவம் சார்ந்தும் வரையறை செய்ய இயலாது. காரணம் வடிவங்களும் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருக்கின்றன. இதுதான் நாவலின் வடிவம் என்று சொல்லும்போதே அவ்வடிவத்தை உடைத்தபடி அடுத்த நாவல் வந்துவிடுகிறது. வாழ்க்கை வரலாற்றுவடிவம் [ பிரதாப முதலியார் சரித்திரம் – மாயூரம் வேத நாயகம் பிள்ளை] கடித வடிவ நாவல் [கோகிலாம்பாள் கடிதங்கள், மறைமலை அடிகள்] போன்றவை நாவல் உருவான போதே வந்துவிட்டன. முழுக்க முழுக்க கணவனிடம் மனைவி கதையளப்பதாகவே தொடரும் நாவல்கூட தமிழில் முக்கால் நூற்றாண்டு முன்னரே வந்துவிட்டது. [ தலையணை மந்திரோபதேசம். பண்டித நடேச சாஸ்திரி] டைரிக்குறிப்புகள்[ நவீனன் டைரி , நகுலன்], பலவகை குறிப்புகள் [ஜெ.ஜெ.சில குறிப்புகள், சுந்தர ராமசாமி] கேள்விபதில் வடிவம் [வாக்குமூலம் .நகுலன்] ஒரு மனிதனின் மொத்த வாழ்நாளையே சொல்லும் நாவல் [ பொய்த்தேவு. க.ந.சுப்ரமணியம்] ஒரே ஒரு நாளைப்பற்றிச் சொல்லும் நாவல் [ ஒருநாள் .கநா.சுப்ரமணியம்] ஒரு மனிதரின் நனவோடையாகவே நீளும் நாவல் [ அபிதா:லா.ச.ராமாமிர்தம்] என தமிழ் நாவலின் வடிவ வேறுபாடுகளே வியப்புட்டுபவை.
நாவலை வரையறைசெய்ய இன்று சாத்தியமான ஒரே அளவுகோல் வாசகத்தரப்பில் நின்று செய்யப்படுவதே. இன்றுவரை நாவல் என்ற வடிவம் எதையெல்லாம் அடைந்துள்ளது, அவ்வடிவில் என்னென்ன சாத்தியங்கள் உள்ளது என்ற அளவில் வாசகனின் எதிர்பார்ப்பையே இன்று நாவலின் வடிவமாக முன்வைக்கலாம்.
இன்று ஓரளவு நாவல் வாசிப்பவன் கூட சிறந்த நாவல்களை வாசித்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு பலவகையான எதிர்பார்ப்புகளைக் கோண்டிருப்பதைக் காணலாம். எளிமையாக ஒரு வாழ்க்கைச்சித்தரிப்பை மட்டும் முன்வைத்தாலோ அல்லது ஒரு கருத்தை முன்வைத்து அமைந்தாலோ அல்லது ஓர் உணர்வெழுச்சியை மட்டும் முன்வைத்தாலோ இன்றைய வாசகன் அதை நாவல் என்று ஒப்புக்கொள்ள மாட்டான். அவன் நாவலாசிரியனிடம் ”ரொம்ப குறுகலா இருக்க மாதிரி இருக்கு சார்” என்றோ ”இன்னும் விரிவா எழுதியிருக்கலாம் நீங்க ”என்றோ சொல்லும்போது அவன் உத்தேசிப்பது நாவல் என்னும் கலைவடிவம் எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளதோ அந்த நோக்கத்தை அது நிறைவேற்றவில்லை என்றுதான்.
எந்த வடிவும் ஒரு நோக்கத்தின் பொருட்டே உள்ளது. மரங்களானாலும் சரி இயந்திரங்களானாலும் சரி. அந்த நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுகையிலேயே அது சிறந்த வடிவம். வடிவத்தின் பரிணாமம் என்பது அந்த நோக்கத்தை மேலும்மேலும் சிறப்பாக நிறைவேற்றும்போதே நிகழ்கிறது. கவேதான் பெரும்பாலான வடிவச்சோதனைகள் நம்மை சோதிக்கின்றன, அவை நோக்கமில்லாது செய்யப்படுபவை. ஸ்பானரை எப்படி வேண்டுமானாலும் செய்யலாம், னால் அது மரையை திருகவேண்டுமல்லவா?
நாவல் என்ற கலைவடிவின் நோக்கம் என்ன? ஒரே வரியில் இப்படிச்சொல்கிறேன் ‘தொகுத்துக்காட்டி ஒட்டுமொத்தப் பார்வையை அளித்தல்’
நாவல் வாழ்வின் ஒரு துளியை ஒரு புள்ளியை ஒரு தரப்பை மட்டும் சொல்லவந்த வடிவம் அல்ல. அதற்கு கவிதை, சிறுகதை, குறுநாவல் ,நாடகம் என பல கலைவடிவங்கள் உள்ளன. நாவல் இந்த அடிப்படையில் பிற இலக்கிய வடிவங்கள் அனைத்தில் இருந்தும் மாறுபட்டது. நாவல் அதன் கருவைச் சார்ந்த அனைத்தையும் வாசகன் முன் தொகுத்து முன்வைக்க முனைகிறது. அதன் மூலம் வாசகன் அனைத்தையும் தன் முன் கண்டு ராய்ந்து தன் நோக்கை உருவாக்கிக் கொள்ள வழிவகுக்கிறது.
உதாரணம் ‘போரும் அமைதியும்’ [லெவ் தல்ஸ்தோய். [தமிழாக்கம். டி.எஸ்.சொக்கலிங்கம் ] இந்நாவலை இத்தனை பெரிதாக ஏன் அவர் எழுதவேண்டும்? அதை சிறிதாக அவர் எழுதியிருக்கக் கூடாதா? அந்நூலில் தல்ஸ்தோய் எடுத்துக் கொண்ட கரு ‘மானுடமும் போர்களும் ‘ என்பது. ஆகவே வரலாற்றில், தனிமனித அகத்தில், உயர்மட்ட அரசியலில், அன்றாட வாழ்க்கையில், ராணுவத்தில் ,எளிய மக்களில், போர்க்காலத்தில், அமைதிக்காலத்தில், பிரபுக்களுக்கு, குடியானவர்களுக்கு, தத்துவ சிந்தனை கொண்டவனுக்கு, போர்வீரனுக்கு, குடும்ப்பபெண்ணுக்கு, அன்னைக்கு, தந்தைக்கு என பல்வேறு தருணங்களில் போர் எப்படி பொருள்கொள்கிறது என்பதை அவர் அந்நாவலில் ராய்கிறார். இதன் விளைவாக நாவல் கிட்டடத்தட்ட வாழ்வளவே விரிந்திருப்பதாக ஒரு தோற்றம் ஏற்படுகிறது. வாசகனுக்கு. னால் அது ஒரு தோற்றம்தான், நாவல் வாழ்வளவுக்கு விரிவதான பிரமையை எழுப்பும்போதே அது மாபெரும் படைப்பாக கிறது.
நாவல் அதன் வாசிப்பின் பயனாக வாசகனுக்கு ஓர் ஒட்டுமொத்த பார்வையை அளிக்க வேண்டும். அன்றாடவாழ்வில் நாம அடையும் பலவகையான கருத்துக்கள் சார்புநிலைகொண்டவை. அதாவது ஒரு தருணத்துடன், ஒரு சூழலுடன் பிணைக்கப்பட்டவை, அச்சூழலுக்கும் அத்தருணத்துக்கும் மட்டுமே பொருந்துபவை. எல்லா தருணங்களுக்கும் எல்லா காலங்களுக்கும் பொருந்தகூடிய ஒரு கருத்தையே ஒட்டுமொத்த பார்வை என்று சொல்கிறேன். அப்படி ஒரு முழுமையான பார்வை அல்லது கருத்து இருக்க முடியாதுதான். முழுமை என்பது ஒரு வகை மன உருவகமே.
ஆனால் ஒரு கருத்து எந்த அளவுக்கு அதிகமாக வாழ்க்கையை கணக்கில் கொள்கிறதோ அந்த அளவுக்கு அதற்கு ஆழம் அதிகம். இந்த ஒட்டுமொத்த பார்வையையையே திறனாய்வாளர்கள் விஷன் அல்லது தரிசனம் என்ற சொல்லால் குறிப்பிட்டார்கள். போரும் அமைதியும் போர் குறித்த ஒரு ஒட்டுமொத்த நோக்கை அளிக்கிறது, ஆகவேதான் அது பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல் இன்றுவரை செல்வாக்குடன் உள்ளது.
எளிய கருத்துக்கள், சாதாரணமான பார்வைகள் நாவலுக்குரியவை அல்ல. ஒரு தருணம் அல்லது ஒரு சூழல் சார்ந்து உருவாகும் கருத்தை முன்வைக்க நாவலை எழுதுவதே மோசமான நாவல்களை உருவாக்குகிறது.
இவ்வாறு ஒரு கருத்தை அல்லது நோக்கை ஒட்டுமொத்த நோக்காக மாற்றும்பொருட்டே நாவல் வாழ்க்கையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமாக அள்ள முயல்கிறது. இந்த தேவையை ஒட்டியே நாவலின் வடிவங்கள் அமைகின்றன.
ஏழைகள் நல்லவர்கள் என்பது ஒரு கருத்து. ஒர் அனுபவ தளம் சார்ந்தது. மொத்த வாழ்க்கையை அதன் பின்னால் நிற்கவைக்க ஒரு நாவலாசிரியன் முயன்றால் அதன்மீது பல்வேறு வினாக்கள் எழும். அவ்வினாக்களுக்கு அவன் பதில் சொல்லியாகவேண்டும்.லப்படி பதில் சொல்லச்சொல்ல அவன் எடுத்துக்கொள்ளும் பரப்பும் அவன்செல்லும் ஆழமும் அதிகமாக ஆகும்.
யதார்த்தவாத நாவல்கள் வாழ்க்கையை முழுமையாகச் சொல்ல முயல்கையில் விரிந்து பெருகுகின்றன. அது இயல்பேயாகும். அப்படியானால் நவீனத்துவ நாவல்கள்? அவை அளவில் சிறியவைதானே?
நவீனத்துவம் வாழ்க்கையை தத்துவார்த்தமாக காணமுற்பட்டது. ஆகவே வாழ்க்கையின் எல்லா நிகழ்ச்சிகளையும் அது குறியீடாக மாற்றிக் கொள்கிறது. சிறந்த நவீனத்துவ நாவல்கள் பெரும்பாலும் குறியீட்டுத்தன்மை கொண்டவை. ‘அல்பேர் காம்யூ’ வின் பிளேக் அல்லது ‘கோபோ ஆப் ‘ எழுதிய ‘ வுமன் ன் த ட்யூன்ஸ்’ அல்லது சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை ‘ போல. குறியீடு உத்தி வாழ்க்கையை செறிவுபடுத்தி சுருக்கி அளிக்க மிகவும் உதவுகிறது. ஆகவே அவற்றுக்கு அதிக பக்கங்கள் தேவையில்லை.
நாவல் என்று திட்டமிடும்போது ஒருபோதும் நம் இலக்கு ‘ஒரு பகுதியின் வாழ்க்கையைச் சொல்ல’ முயல்வதாகவோ ஒரு ‘கருத்தை வலியுறுத்துவதாக’வோ இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நம் நோக்கம் வாழ்க்கையைப்பற்றிய முழுமையான ஒட்டுமொத்தமான ஒரு நோக்கை உருவாக்குவதாகவே இருக்கவேண்டும். நாம் உருவாக்கும் நோக்கு நம்மளவில், நம் படைப்புக்குள் முழுமை கொண்டிருக்க நாம் முயலவேண்டும்.
இவ்வாறு நாவலை எழுதும்போது அது குறுகிச் செல்லாமலிருக்க என்னளவில் சில வழிமுறைகள் உள்ளன. அவற்றை வரிசையாகச் சொல்கிறேன்.
1. நாவலின் மையக் கதாபாத்திரம் மட்டுமே உணர்ச்சிகரமாகச் செயல்படுவதையும் பிற கதாபாத்திரங்களின் குரல் அந்த மையக்கதாபாத்திரத்தின் ஆளுமை முன் மங்குவதையும் தவிர்க்க வேண்டும். ஒற்றைக்கதாபாத்திரமே முழு நாவலாக ஆவது மிக மிக சிரமம். வலுவான பல கதாபாத்திரங்கள் வருவது நாவலுக்கு இயல்பாகவே பன்முகத்தன்மையை அளிக்கும். இணையான முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று துல்லியமாக வேறுபட்டவர்களாகவும், எதிரெதிர் இயக்கம் கொண்டவர்களாகவும் இருக்கும் தோறும் நாவல் விரிவடைவதை தவிர்க்க இயலாது.
2. நாவலில் கதையோட்டம் தேவையில்லை, கதைப்பின்னல்தான் தேவை என்பதே என் எண்ணம். தி ஜானகிராமனின் மோகமுள் நாவலின் சிக்கலே அதில் கதை ஓட்டம் தான் உள்ளது என்பதே. யமுனா-பாபு உறவையே ஐநூறு பக்கம் நீட்டிக் கொண்டுசெல்கிறார் ஆசிரியர். வலுவான வேறு பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் மையக்கதை ஓட்டத்துடன் கலந்து ஊடறுக்கவில்லை. அப்படி ஊடறுத்திருந்தால் கதை விரிந்து பரந்து பலவகையான வாழ்க்கைத்தளங்களை உள்ளே கொண்டுவந்திருக்கும். அதாவது யமினா- பாபு உறவை ரங்கண்ணாவோ பாபுவின் அப்பாவோ அறிய நேர்ந்திருந்தால் எத்தனை மோதல்களும் சிக்கல்களும் உருவாகியிருக்கும்! அபப்டி நிகழவே இல்லை.
அதாவது நாவலின் பின்னல் கயிறு முறுக்குவது போல இருக்காது. கூடை முடைவதுபோல இருக்கும். ஒரே கதையை பின்னி பின்னிச் செல்லும்போது நாவல் பலவீனமாகிறது. கதைகள் நாவலில் பெருகிப்பெருகிச் செல்லவேண்டும். போரும் அமைதியும் நாவல் குறைந்தது மூன்று கதாநாயகர்களைக் கொண்டது. பிரின்ஸ் ஆன்ட்ரூ , பியரி மற்றும் ராஸ்டோவ். தஸ்தயேவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் மூன்று கதாநாயகர்களைக் கொண்டது. அல்யேஷா, திமித்ரி, மற்றும் இவான். இவர்கள் மாறுபட்ட இயல்புள்ளவர்கள். கதைக்குள் எதிரெதிர் கோடுகளாக வெட்டிச்செல்கிறார்கள்.
3. நாவல் ஒரு குறிப்பிட்டவகையான கதைச்சூழலுக்குள் மட்டுமே சுழல்வதை அழகியல் ஒருமை கெடாமல் தவிர்க்க ஆசிரியன் முயல வேண்டும். நாவலில் ஒரு புறச்சூழல் எப்போதுமே மெல்ல மெல்ல படிமங்களாக ஆக மாறியிருக்கும். ஆகவே சூழலை மாற்றும்போது நாவலின் படிமக்கட்டமைப்பும் மாறுபடுகிறது. உதாரணமாக ஒரு நாவலில் வரும் காடு ஒருவகையான படிமம். அந்நாவல் நகரத்துக்கு செல்லும்போது வேறு படிமம் உள்ளே வருகிறது. இது நாவலை விரிவுபடுத்தும்.
ஆனால் ஒரு நாவல் தன் சூழலை செயற்கையாக மாற்றிக் கொண்டால் ஒரு அறுபடல் நிகழ்ந்து அழகியல் ஒருமை சிதையும்.
4. நாவலில் அதன் எழுதும் போக்கில் உணர்வுபூர்வமாகவும் தர்க்க பூர்வமாகவும் ஒரு தரப்பு நம்மால் நிலைநாட்டப்படும்போது உடனே அதன் மீதான ஐயமும் நம்முள் எழவேண்டும். அதன் அடுத்த பக்கம் நம் கண்ணுக்குத்தெரியவேண்டும். ஒரு தாயின் தியாகம் உச்ச நிலையில் நாவலில் நிகழ்ந்த உடனேயே தாய்ப்பாசம் ஒரு உயிரியல் பண்பு ஆதலால் அது உண்மையிலேயே உயர்ந்ததுதானா என்ற ஐயம் எழுந்தால் உடனே நாவல் புரண்டு அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும். இது உலகின் பெரும் நாவலாசிரியர்களின் இயல்பாக உள்ளது. இப்படி மறுபக்கத்தை பார்க்க அவர்கள் மேலே சொன்ன கதாபாத்திரங்களையும் சூழலையும் பயன்படுத்தும்போதே நாவல் விரிவடைகிறது.
பூமியிலுள்ள எல்லா வடிவங்களையும் எதிரெதிர் சக்திகளின் சமநிலைப்புள்ளையாக புரிந்துகொள்வது ஓர் எளிய வழிமுறை. [ ஹெகலின் முரணியக்க இயங்கியல் அல்லது மாக்ஸிய முரணியக்க பொருள்முதல்வாதம் என்றே வைத்துக் கொள்வோம் ] நாவலை உருவாக்கும் இரு எதிரெதிர் வல்லமைகள் யாவை? ஒன்று வாழ்க்கையை முழுதுமாக அள்ளிமுன்வைக்கவேண்டும் என்ற அதன் துடிப்பு. இதை நேர்நிலை இயக்கம் என்று சொல்லலாம் –தீஸிஸ்.
அதேசமயம் நாவல் ஒருவடிவத்துக்குள் வாழ்க்கையை நிறுத்திக் காட்டியாகவேண்டும். முடிவிலாது கதைசொன்னபடியே அது முன்செல்ல முடியாது. இந்த தேவையே அதன் எதிர்நிலை இயக்கம். ஆன்டி தீஸிஸ்.
எல்லைகளும் இலக்குகளும் இல்லாது விரையும் கட்டற்ற வாழ்க்கையை எல்லையும் இலக்கும் வகுத்து வடிவமென்ற கட்டுக்குள் கொண்டுவந்தாக்வேண்டும் நாவல். இதுவே நாவலின் சவால்.
நேற்றைய யதார்த்தவாத நாவல்கள் நேரடியான கதைப்பின்னல் என்ற வடிவத்தை எடுத்துக்கொண்டு நாவலை உருவாக்கின. கார்க்கியின் ‘அன்னை’ [தமிழாக்கம் ரகுநாதன்] மற்றும் நீலபத்மநாபனின் ‘தலைமுறைகள்’ உதாரணம். ஆனால் அந்த காலகட்டம் முடிந்துவிட்டது. அதன் பின்னர் நவீனத்துவம் என்ற அலை வந்து சென்றுவிட்டது.நாம் அடுத்த கட்டத்தில் நிற்கிறோம். இன்றைய வாசகன் மேலும் செறிவாக நாவல் சொல்லப்படவேண்டுமென எதிர்பார்க்கிறான். காரணம் நவீனத்துவம் அவனை செறிவான வாசிப்புக்குப் பழக்கிவிட்டது. பழைய யதார்த்தவாத நாவலின் சாதாரணமான ‘ஆற்றொழுக்கு போன்ற’ ஓட்டம் இன்றைய வாசகனுக்குச் சலிப்பூட்டும்.
நவீனத்துவம் இறுக்கமான ஒரு வாழ்க்கைநோக்கையும் சேர்த்தே முன்வைத்தது. மையங்களை மட்டுமே நோக்குவது, தத்துவார்த்தமாக ஆராய்வது, கூர்மையாக முன்வைப்பது ஆகியவை அதன் இயல்புகள். இன்றைய நாவல் மேலும் முன்னகர்ந்து சென்றுள்ளது. விளிம்புகளையும் மறுபக்கங்களையும் சேர்த்தே அனைத்தையும் சொல்வது, உணர்வும் உள்ளுணர்வும் வரலாற்றுநோக்கும் பின்னிப்பிணைய கதை சொல்வது, முடிவிலாது விரியும் கதையாடலை முன்வைப்பது ஆகிய பண்புகளை அடைந்துள்ளது
ஆகவே இன்றைய நாவலின் வடிவத்தில் நவீனத்துவ நாவலின் இறுக்கமும் தேவை அதற்கு முந்தைய யதார்த்தவாத நாவலின் விரிவும் தேவை. அதாவது கா·ப்காவின் அடர்த்தியுடன் தஸ்தயேவ்ஸ்கியின் விரிவுடன் நாவல் எழுதப்படவேண்டியுள்ளது
இதன்பொருட்டே இன்றைய நாவல் தன்னை தானே அழுத்தி செறிவுபடுத்திக் கொள்ளவேண்டியுள்ளது. [compression]. தமிழ் நவீனத்துவத்தின் உச்ச பிரதியும் அதனாலேயே அடுத்த கட்டத்தின் தொடக்கப்புள்ளியுமான சுந்தர ராமசாமியின் ‘ஜெ.ஜெ.சில குறிப்புகள்’ அந்த அவ்டிவத்தை ஏன் தெரிவுசெய்தது என்று யோசிக்கலாம். ழீன் கிறிஸ்தோ·ப் [ரோமெய்ன் ரோலந்த்] போல அதுவும் ஒரு கலைஞனின் கதைதான். ஆனால் முந்தையதைப்போல அது விரிந்து பரக்கவில்லை. ஜெ.ஜெயின் வாழ்க்கையை செறிவாக்கி குறிப்புகளாகவும் அடிக்குறிப்புகளாகவும் மாற்றி விடுகிறது. அதன் பின் வந்த முக்கிய நாவல்கள் எல்லாமே இந்த அழுத்திச் செறிவாக்கும் உத்தியை ஏதோ ஒருவகையில் கடைப்பிடித்துள்ளன.
இவ்வாறு செறிவாக்கவேண்டிய தேவை என்ன? என் அனுபவத்தில் சிலவற்றை முன்வைக்கிறேன்
1. நாவலில் நேர்கோடான காலம் மிகுந்த ஆயாசத்தை ஏற்படுத்தும். ஜெ.ஜெ பிறந்து வளர்ந்து இறப்பதுவரை நேர்கோடாக கதையாக சொல்லிப்பாருங்கள் தெரியும். நேர்கோடான காலம் என்பது வாழ்க்கையிலுள்ள எதையும் தவிர்க்காமல் எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு செல்கிறது. சில இடங்களில் உத்வேகமும் பல இடங்களில் சலிப்பும் அதில் இருக்கும். உண்மையில் வாழ்க்கை அப்படித்தான். கூடவே நீளமான காலமும் சொல்லப்படுகிறது என்றால் வேறு சுமையே தேவையில்லை. காலத்தை ஏதேனும் உத்தி மூலம் முன்னும் பின்னும் எப்படிவேண்டுமானாலும் நகரக்கூடியவதாக நாவலில் ஆக்கிவிட்டால் தேவையான இடங்களை மட்டும் தொட்டபடி நாவல் தாவிச்செல்ல முடியும். ஒரு சிறு விஷயம்கூட காலத்தில் எப்படி மாறியது என்பதைக் காட்டமுடியும். காலங்களை ஒப்பிடமுடியும். காலத்தை நேர்கோடல்லாமலாக்குவது என்பது நாவலை செறிவாக்கும் உத்தியில் முக்கியமான ஒன்றாகும்
2. கதை ஓட்டத்துக்காக, தொடர்ச்சியை நிலைநாட்டும்பொருட்டு மட்டும் , அவ்வளவாக ஆழமும் நுட்பமும் இல்லாத விஷயங்களைச் சொல்வதிலிருந்து விடுபடுவது நல்ல நாவலுக்கான தேவைகளில் முக்கியமானதாகும். ஏதேனும் உத்திமூலம் முக்கியமான சுவையான நிகழ்ச்சிகளை மட்டும் சொல்லி முன்செல்ல முடிந்தால் நாவல் செறிவானதாகனாகும். சிறந்த உதாரணம் ‘கொரில்லா’ [ஷோபா சக்தி] அதற்கும் ஜெ.ஜெ.சிலகுறிப்புகளுக்கும் உள்ள வடிவ ஒற்றுமையைக் கவனியுங்கள்.
3. நாவலுக்குள் வரலாற்றுத்தகவல்களை அளிப்பது அல்லது தத்துவ விவாதங்களை அளிப்பது தேவையற்ற நீட்சியை அளிக்கும். நேரடியான கூற்றுள்ள யதார்த்தவாத நாவலில் அனேகமாக உரையாடல்களாக அல்லது ஆசிரியர் கூற்றாக இவை வருகின்றன. இவ்வாறு அவற்றை சலிப்பில்லாமல் சொல்வது கடினம். வேறு ஏதேனும் உத்தியில் நாவலை செறிவாக்கி இவற்றை நாவலுக்குள் நிலைநாட்ட முடியும். உதாரணம் ஜெஜெசிலகுறிப்புகள். அதில் தத்துவார்த்தமான பகுதிகள் சம்பத்தின் கடிதம் மற்றும் டைரிக்குறிப்புகளாக வருகின்றன. ஜெஜெயின் டைரியாகவும் வருகின்றன.
4. நேரடியான வடிவம் வாசகன் பல்வேறு கோணங்களிலான வாசிப்பை நிகழ்த்துவதற்கு தடையாக அமையும். அவன் ஒரே கோணத்தில் வாசிக்க கட்டாயப்படுத்தபடுகிறான். அதை மீறியே அவன் தன் கற்பனை மூலம் புதிய வாசிப்பை கண்டடையவேண்டும். செறிவாக்கப்பட்ட வடிவம் மூலம் நாம் வாசகன் நாவலை வேறு வேறு கோணங்களில் வாசிப்பதற்கான இடைவெளிகளை உருவாக்கி சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறோம்
எவ்வாறு நாவலை செறிவாக்கலாம்?
நாவல் என்பது எப்போதுமே ஒரு கூற்று என்பதை நினைவில்கொண்டால் சிக்கல்கள் எளிதில் தீரும். யாராவது ஒருவர் நாவலை சொல்கிறார். அனேகமாக ஆசிரியர். சிலசமயம் மையக்கதாபாத்திரம். சிலசமயம் ஒன்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள்.
இவ்வாறு கதை சொல்லப்படும்போது சீரான, முறையான கதை சொல்லும் முறை மட்டுமே இயல்பானது என்று எப்படி நாம் சொல்ல முடியும்? நாம் விஷயங்களை சொல்வதற்கு என்னென்ன முறைகளை எல்லாம் கையாள்கிறோமோ எல்லா முறைகளிலும் நாவலைச் சொல்ல முடியும்.
உதாரணமாக நாவலை நேர்ப்பேச்சாக வாசகனிடம் ஆசிரியனே சொல்ல முடியும், கி.ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’ ஓர் உதாரணம். நினைவுகளாகச் சொல்லமுடியும் [ ஜீவனாம்சம், சி.சு செல்லப்பா] டைரி வடிவில் சொல்ல முடியும் [ நவீனன் டைரி, நகுலன்] கட்டுரைகள், கடிதங்கள், துண்டுப்பிரசுரங்கள், கதைத்தொகுதிகள், மேடைப்பேச்சு, தொலைபேசி உரையாடல்கள், மின்னஞ்சல்கள் எந்த வடிவிலும் நாவலைச் சொல்லலாம். அகராதி வடிவில்கூட நாவல் வந்துள்ளது [ டிக்ஷ்னரி ஆ·ப் கசார்ஸ்.]
இவ்வாறு பற்பல வடிவில் நாவலைச் சொல்வதற்கான காரணம் ஒன்றுதான். வாழ்வின் பல்வேறுபட்ட தளங்களை கச்சிதமாக ஒன்றிணைத்து கூறுதல். அவற்றில் தேவையானவற்றை மட்டும் கூறி பிறவற்றை தவிர்த்துவிடுதல்.
நாவலின் கரு எப்படிப்பட்டது என்பதுதான் அதன் வடிவத்தை தீர்மானிக்கிறது. ஒரு மனிதனில் பிரதிபலிக்கும் உலகம் நம் கரு என்றால் நாட்குறிப்பு உதவிகரமானது. இருவருக்கிடையேயான உறவினூடாக விரியும் நாவலுக்கு கடிதம் உதவியானது.
நாவலைச் செறிவாக்கும்போது நான் அனுபவத்தில் அறிந்த சில குறிப்புகள் உண்டு.
1. படைப்பூக்கத்துடன் எழாத, வாசகனிடம் அறிவார்ந்தவிதத்திலோ அல்லது உணர்வுரீதியாகவோ உரையாடாத பகுதிகளை தொடர்ச்சி இருக்கிறதா இல்லையா என்று பார்க்காமல் கண்ணைமூடிக்கொண்டு வெட்டித்தள்ளிவிடுவது அவசியம். தொடர்ச்சியை பிற்பாடு ஓர் உரையாடல் குறிப்பிலோ அல்லது நினைவுத்துளியாகவோ உருவாக்கிவிடலாம். உண்மையில் படைப்பூக்கம் இல்லாத பகுதிகள் நாவலில் வரும்போது அவை சலிப்பூட்டும். ஒரு சில சொற்களில் கூறப்பட்டு வாசகனின் ஊகத்த்கே அவை விடப்படும்போது வாசகனின் கவனத்தில் அவை வளர்ந்து பெரிதாக நிற்கும்.
2. நிகழ்ச்சிகள் மற்றும் பிற இணைப்புகளை வாசகனுக்கு சிறிய ஒரு ஆச்சரியம் அளிக்கும் விதமாக அமைப்பது மிகுந்த பலன் அளிப்பதைக் கண்டிருக்கிறேன். ஒரு கதாபாத்திரம் வந்து ஒரு சாலையில் நிற்கிறது , அடுத்த அத்தியாயம் வெள்ளைய சர்வேயர் ஒருவன் பதினெட்டாம் நூற்றாண்டில் ஒரு சாலையைபோடுவதை விவரிகிறது. முடிவில் அந்த சாலைதான் இது என்று கதை வந்து இணைகிறது என்று வைத்துக் கொண்டால் வாசகனுக்கு ஒரு மனத்தாவல் கிடைக்கிறது. அவனுடைய ஊகம் தூண்டப்படுகிறது. இது கதை துண்டுபண்ணபடும்போது வரும் ஒருவித சலிப்பை வெற்றிகரமாக ஈடுகட்டிவிடும். குர் அதுல் ஐன் ஹைதரின் அக்னிநதி இந்த உத்தியை சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறது. அதில் ஒருநதியில் ஒருவன் குதித்து மறுகரை நோக்கி நீந்துகிறான். மறுகரையில் வேறு காலத்தில் வேறு ஒருவன் எழுந்து வேறு ஒரு கதை தொடர்கிறது.
3 அதேபோல இணைப்புக்கான வழக்கமான முறைகளை கைவிட்டுவிடவேண்டும். இந்த அத்தியாயத்தில் ஒரு கதாபாத்திரம் கடிதம் எழுதுகிறது, அடுத்த அத்தியாயத்தில் அக்கடிதம் வாசகனுக்குக் கொடுக்கப்படுகிறது என்பது மிக சம்பிரதாயமான முறை. இது நேர் தலைகீழாக கடிதம் காட்டப்பட்டபின் அதை எழுதும் சந்தர்ப்பம் நாவலில் வந்தால்கூட சுவாரஸியம் இருக்கும்.
இந்த விஷயத்தில் மிகவும் கவனிக்கப்பட வேண்டியது நினைவோட்ட முறை. ஒருவன் சாலையில் செல்கிறான், மயிலைக் காண்கிறான், பழனிக்குபோனது நினைவுக்கு வருகிறது என்பது மிக சம்பிரதாயமான முறை. பெரும்பாலும் நாம் நினைவுகள் எழுவதை இப்படித்தான் எழுதுகிறோம். உண்மையில் நினைவுகள் இப்படி எழுவதில்லை. அவற்றுக்கான தர்க்கம் எப்போதும் நம்மால் ஊகிக்க முடிவதாக இருப்பதில்லை. எண்ணைக்கடையை தாண்டிச்செல்லும்போது எழுந்த சிக்குவாடை மூலம் பழனியை நினைவுகூர முடியும். ஒரு நிகழ்ச்சியிலிருந்து இன்னொன்றை நோக்கி நினைவோடை நகரும்போது அதில் இயல்பான ஒரு தாவல், ஒரு மர்மம் இருப்பது வாசகனின் கற்பனையை தூண்டி நாவலின் வசீகரத்தை அதிகரிக்கச்செய்யும்.
4. நாவலை செறிவூட்டும் மிகச் சிறந்த ஒரு முறை உள்ளது. உதிரிக்கதாபாத்திரங்களை ஏராளமாக உருவாக்குங்கள், ஆனால் அவர்களின் தனித்தன்மைகள் மட்டுமே ஓரிரு வரிகளில் நாவலில் வரட்டும். விரிவான சித்தரிப்பு வேண்டாம். ஒரு நிகழ்ச்சி, ஒரு பெயர், ஒரு குரல் போதும். சிறந்த உதாரணம் ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி ‘ அதில் பல கதாபாத்திரங்கள் வெறுமே பெயராலேயே அறிமுகமாகின்றன. மதுரையில் பஸ் ஓட்டும் டாலர் ராஜாமணி அய்யர் ஒரே ஒருவரிதான் வருகிறார். அய்யர் டாலர்செயின் போட்டுக்கொண்டு டிரைவராக வந்ததில் உள்ள கதை வாசக ஊகத்தில்தான் உருவாக வேண்டும். நாஞ்சில் நாடன் கதையில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் ‘செத்தாடு தூக்கி சிவன் பிள்ளை ‘ .அவ்வளவுதான். கதை வாசகனால் கற்பனைசெய்யப்படும். ஒரு குரல் மட்டும் நாவலில் ஒலித்தால் போதும். மிகவிரிவான சித்தரிப்பை மிக அடர்த்தியாக அளித்துவிட முடியும்.
ஒட்டுமொத்த வாழ்க்கைச்சித்திரத்தை செறிவாக அளித்துவிட்டால் நாவலாக்கம் ஏறத்தாழ முடிந்துவிட்டது என்றே பொருள்.
நாவலின் மொழி எப்படி இருக்க வேண்டும்? முந்தைய கால நாவல்களில் நாவலுக்கு என ஒரு சாவகாசமான மொழிநடை இருந்தது. பெரும் நாவலாசிரியர்கள் மிகமிக விரிவான தகவல்களை அளித்து மெல்ல நாவலைச் சுருளவிழ்ப்பார்கள். போரும் அமைதியும் [தல்ஸ்தோய்] புடன் புரூக்ஸ் [தாம்ஸ் மன்] போன்ற நாவல்கள் மிகவிரிவான தகவல்களுடன் ஒரு பெருவிருந்தை விவரித்தபடி தொடங்குகின்றன. நவீனத்துவம் அந்த போக்கை மாற்றியது. நாவலின் நடை சிறுகதையின் செறிவுடன் இருக்க ஆரம்பித்தது. ”அம்மா இறந்தது நேற்றா முந்தினமா?”என்று தொடங்கும் அல்பேர் காம்யூவின் ‘அன்னியன்’ ஓர் உதாரணம். [தமிழாக்கம். வெ.ஸ்ரீராம்] இனி பின்னால் போக இயலாது. சிறுகதையின் செறிவுடன் தல்ஸ்தோயின் விரிவை அடைவது தான் இன்றைய சவால்
மேலும் இன்றைய புனைகதை கவிதையின் நுட்பத்தையும் இலக்காக்குகிறது. கவிதை எப்படி சொல் தோறும் அர்த்தச் செறிவை வைக்கிறதோ அப்படியே புனைவுமொழியும் அமைவதை விழைகிறது. சிறந்த உதாரணம் இடாலோ கால்வினோ வின் புலப்படா நகரங்கள்[தமிழாக்கம் சா தேவதாஸ்] அந்த நடையில் நாவலை அமைப்பது மேலும் பெரிய சவலாக உள்ளது.
நடை எழுத்தாளனின் சொந்த தவத்தின் விளைவு. அவனது ஆளுமையின் தடம் அது. ஆனால் அதைப்பற்றி சில அவதானிப்புகளை என்னால் கூறமுடியும்
1. தன் நடையைப்பற்றிய ஒரு கண்காணிப்பு எழுத்தாளனுக்கு இருக்கவேண்டும். எந்தெந்த சொற்களை, சொல்லாட்சிகளை பயன்படுத்துகிறோம் என்ற விழிப்புணர்வு அது. ஓர் எல்லைவரை எழுத்தாளன் அவனுக்கென்றே உரிய சொற்களையும் சொல்லாட்சிகளையும் தவிர்க்க முடியாது, தவிர்க்கவும் கூடாது. அவை அவனது அகத்தின் வெளிப்பாடுகள். ஆனால் அது தேய்வழக்கு [க்ளீஷே] ஆகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மிதமிஞ்சி கையாளப்படும் சொல் தேய்வழக்காகிவிடும். கவனமில்லாமல் சில எழுதும் வணிக எழுத்தாளர்கள் தான் அப்படி பல சொற்களை எப்போதுமே உதிர்த்தபடி இருப்பார்கள். நல்ல எழுத்தாளர்களிலும் அக்குறை உண்டு.
2 நுட்பமான ஒரு விஷயத்தைச் சொல்ல முடியாமல் அதை தாண்டிச்செல்ல நாம் சில சொல்லாட்சிகளை அல்லது உவமைகளை நாமே கண்டுவைத்திருப்போம். அதை நம்மை அறியாமலேயே பயன்படுத்திவிட்டு தாண்டிச்செல்வோம். லா.ச.ரா ‘ காலில் பாம்பு சுற்றிக்கொண்டதுபோல ‘ என்ற உவமையை அப்படி பலமுறை பயன்படுத்தியிருக்கிறார். அவற்றை தவிர்த்தாக வேண்டும்
3. எழுதும்போது எப்போதுமே ஒரு குறிப்பிட்ட தோரணை வந்துவிடுவது நடையை நிலைக்கச் செய்து மலினமாக்கும். வண்ணதாசன் வண்ணநிலவன் போன்றோரிடம் எப்போதுமே ஒருவித மென்கவித்துவசோகத்துடன் தனக்குத்தானே பேசிக்கொள்வதுபோன்ற பாவனை உள்ளது. இது எல்லா கதைகளிலும் வரும்போது தேய்வழக்கு ஆகிவிடுகிறது.
4. நாம் பேச்சுவழக்கில் பயன்படுத்தும் மொழியை ஒட்டி அப்படியே எழுதும்போது திரும்பத்திரும்ப சில சொற்களை பயன்படுத்துவோம். அந்த, ஒரு , அவன், நான் போன்ற சொற்கள் தமிழில் தேவையின்றி அதிகமாக பயன்படுத்தப்படும் சொற்கள். எழுதியபின் தேவையான இடத்தில் மட்டும் வைத்துவிட்டு அவற்றை எடுத்துவிடுவது நல்லது.
5. அதேபோல சில சொற்களை படைப்பூக்கத்தின்போது நம் மனம் பிரியமாக மிதமிஞ்சி பயன்படுத்திவிடும். உதாரணமாக க.நா.சுவின் ஒருநாள் நாவலில் ‘சாத்தூர் சர்வமானிய அக்ரஹாரம்’ என்ற சொல் பலநூறுமுறை வருகிறது. அதை மட்டும் நீக்கினால் நாவலே சுருங்கிவிடும். பலசமயம் நாம் கதாபாத்திரங்களின் பெயர்களை அதிகமாக மீண்டும் மீண்டும் பயன்படுத்துவோம். ”சிவராமனுக்கு பசித்தது. ஏனென்றால் அன்று சிவராமன் காலையிலேயே எழுந்துவிட்டிருந்தான்…” அவற்றை எடுத்துவிட்டால் நாவல் மொழி கச்சிதமாகிவிடும்
6. நாவலின் தொடக்கத்தில் மிகுந்த படைப்பூக்கத்துடன் நம்மிடம் உருவான ஒரு சொல்லோ சொல்லாட்சியோ நமக்கு பிரியமானதாக ஆகி அளவுக்கு அதிகமாக கையாளப்பட்டும் நாவல் கடைசியை அடையும்போது தேய்வழக்காக மாறி சலிப்பூட்டும். இதையும் கவனமாக களையவேண்டும்
6. வெற்றுத்தகவல்கள் ஒரு நாவலுக்கு மிகமிகப் பெரிய சுமை. நடை தள்ளாடுவது இப்போதுதான். ஒரு அறையை வாசகனுக்குக் காட்டவேண்டுமென்றால் அந்த அறைக்குள் உள்ள எல்லாவற்றையும் விரிவாகச் சொல்லிவிடவேண்டுமென்பது இல்லை. அந்த அறையின் பொதுத்தன்மை தனித்தன்மை இரண்டையும் மட்டும் சொன்னால் போதும். சுஜாதா தமிழில் இதில் விற்பன்னர். ‘அந்த அறை எல்லா டாக்டர் அறைகளையும்போல மருந்துவாடையும் மருந்துக்கம்பெனி படங்களுமாக இருந்தது. சுவரில் ஒரே ஒரு சாய்பாபா படத்தின் கண்ணாடிமீது கையால் குங்குமம் தொட்டு எழுதிய ‘லாபம்’. நூலாக புகையும் ஊதுபத்தி ” — இவ்வளவு போதும்.
7. நாவல் ஒரே நடையால் ஆனதாக இருக்கக் கூடாது என்று ஒரு பின் நவீனத்துவக் கோட்பாடு உண்டு. பண்டைய பெருநாவல்கள் சீரான ஒரே நடை கொண்டவை. ஆனால் இன்றைய நாவல்கள் பன்முகத்தன்மையை தங்கள் இயல்பாகக் கொள்கின்றன. பலவிதமான நோக்குகள் மாறுபட்ட குரல்கள் ஒலிக்கும் ஒரு புலமாக உள்ளது பின் நவீனத்துவ நாவல். இந்நிலையில் பலவிதமான புனைவுமொழிகள் அதற்கு தேவைப்படுகின்றன. ஆகவே ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளின் ஆக்கபூர்வமான கலவையாக நாவல் இருக்கவேண்டியுள்ளது.
உதாரணமாக ஜெ.ஜெ.சில குறிப்புகள் பாலுவின் சுயச்சித்தரிப்பு ஒருநடையிலும் டைரி ஊடாடும் கவித்துவப்பகுதிகள் இன்னொரு நடையிலும் உள்ளன. புயலிலே ஒரு தோணியில் போர்ச்சித்தரிப்பு ஹெமிங்வேயின் நடை போன்ற ஒரு நடையில் உள்ளது . நடுவே தீவிரமான அகவய நக்கல் மொழி வருகிறது..சில சமயம் உணர்ச்சிகரமான தன்னுரையாடல். சில சமயம் இலக்கியச்சாயல் கொண்ட உரையாடல்மொழி. நடை அடிக்கடி மாறுபடுவதன்மூலம் தான் இந்நாவல் ஒரு மொழிப்பிராந்தியமாக உள்ளது. பலகுரல்தன்மை அடையப்படுகிறது. இன்றைய நாவலின் முக்கியத்தேவைகளில் ஒன்று இது
ஆனால் இன்னொரு விஅயம் உள்ளது, இத்தனை மொழிநிறங்களும் ஒரு பொதுவான புனைவுமொழிக்குள் அதன் நிறமாறுபாடுகளாக அமையும்போதே நாவல் கலைக்கான ஒருமை கொள்கிறது.
8. நாவலின் நடையில் உரையாடல் ஒரு முக்கியப்பங்கு ஆற்றுகிறது. பலநாவல்கள் நீர்த்துப்போவதற்கு சாரமற்ற உரையாடல்கள் முக்கியமான காரணம். நாவலின் உரையாடல் செறிவாக இருந்தாகவேண்டும். அன்றாட வாழ்வில் நாம் பேசும் சாதாரணமான , மனம் தோயாத, பேச்சுகளை நாவலில் அப்படியே எழுதக்கூடாது.
”வாங்க தம்பி , என்ன இந்தப்பக்கம்?”
”ஒண்ணுமில்லை மாமா , சந்தைக்கு வந்தேன். அத்தையும் கமலாவும் சிவராமனும் சுகமா இருக்காங்களா?”
”எல்லாரும் நல்லா இருக்காங்க தம்பி. அம்மா எப்படி இருக்காங்க? வாதம் சரியாப்போச்சா?”
”ஒருமாதிரி இருக்கு. சுப்பிரமணியம் வைத்தியரோட குழம்புதான் தடவறது. அப்றம் என்ன மாமா விசேஅம்?”
— இப்படியே உரையாடல்களை எழுதிச்செல்வது பலரால் ‘சகஜமான நம்பகத்தன்மையின் பொருட்டு’ செய்யப்படுகிறது. இது அபத்தம். இது யதார்த்தமாக இருக்கலாம். ஆனால் கலையின் யதார்த்தம் அல்ல.
அதேபோல ஒரு கதாபாத்திரம் வளவளவென்று பேசுவது என்று காட்ட அப்பேச்சை அப்படியே எழுதி வைப்பது சிலரால் செய்யபப்டுவதாகும். நாவலில் புத்திசாலித்தனமான, நுட்பமான, உணர்ச்சிகரமான உரையாடலை மட்டும் நேரடியாகக் கொடுத்தால் போதும். எந்தக் கதாபாத்திரம் நன்றாகப்பேசுமோ அதுமட்டும் பேசினால் போதும். ”இருவரும் அவசியமான முகமன்களை பரிமாறிக் கொண்டனர்.” . ” ராமசாமி வளவளப்பாக பேசியபடியே போனான்” என்று சொல்லி கடந்துசெல்வதே உசிதமாகும்.
9. சொற்றொடர் அமைப்பு மீண்டும் மீண்டும் ஒரே போல அமையாது கவனிக்கவும். நாலைந்து சிறிய சொற்றொடர்கள் தொடர்ந்து வந்தால் அடுத்த சொற்றொடரை பெரிதாக அமைக்கலாம். இது ஒரு தொழில்நுட்ப்ப பயிற்சிதான், னால் நடையை இது நம்பமுடியாத அளவு உயிர்துடிப்பாக மாற்றும்
10. உருவகநடை [மெட்ட·போரிகல் ஸ்டைல்] சிலசமயம் சிலவகை நாவல்களுக்கு தேவையாக ஆகலாம். உவமைகள், குறியீடுகள் மண்டிய நடை. குறிப்பாக வரலாற்று நாவல்கள், தத்துவ நாவல்கள் போன்றவற்றுக்கு உருவகநடையில் சிறப்பாக கவனிக்கவேண்டும் என்று எனக்குப் படுவது இரு விஷயங்கள். ஒன்று உருகங்கள் பழையவையாக மரபானவையாக இருக்கக் கூடாது. இரண்டு ஒரு உருகத்தை இன்னொரு உருவகம் மறைக்கும் அளவுக்கு அவை செறிவாக இருக்கக் கூடாது
11. நாவலில் அன்றாடத் தேய்வழக்குகள் தவிர்க்கபப்டவேண்டும். ‘திக்குமுக்காடினான்’ ‘திருடனைத்தேள்கொட்டியதுபோல இருந்தது’ இம்மாதிரி பழகிய சொல்லாட்சிகளும் பழமொழிகளும் கவனமாக கண்டுபிடித்து களையபப்டவேண்டும். அதேசமயம் புதிய கவற்சிகரமான சொல்லாட்சிகளும் பழமொழிகளும் நடைக்கு கவற்சியை அளிக்கும். உதாரணம் ”பெருவயிறை பிள்ளை என்று நினைத்ததுபோல பெரியப்பாவை நம்பியது” [நாஞ்சில்நாடன், மிதவை]
12. நடையை ஈவிரக்கமில்லாமல் வெட்டி வெட்டிச் செறிவாக்க வேண்டும். எத்தனை முறைசெறிவாக்கினாலும் நடை மேலும் சிறப்பாக ஆகவே செய்யும்.
நாவலின் முக்கியமான ஒரு தொழில்நுட்பம் படிமங்கள் மற்றும் உருவகங்கள் சார்ந்தது. ‘காலமெனும் நதி’ என்பது ஒரு கவியுருவகம். [மெட்ட·பர்] இவ்வகை உருவகங்கள் மெல்ல நவீனக் கவிதையிலிருந்து காணாமல் போய்விட்டன. சிறுகதை இன்று உருவகங்களை நிறையவே பயன்படுத்துகிறது. ஆனால் உருவகம் என்பது இன்றைய நாவலின் மையமான உத்தியாகவே மாறியுள்ளது. காலநதி என்ற உருவகமே குர் அதுல் ஐன் ஹைதரால் ‘அக்னிநதி’என்ற நாவலாக மாற்றப்பட்டுள்ளது.
உருவகம் நாவலின் உத்தியாக ஆவதன் காரணங்கள் மூன்று.
1. நாவலின் மையத்தரிசனத்தை நாவலின் உடல் முழுக்க பரப்பி நிறுத்த
2. மையத்தரிசனத்தை ஒட்டி நாவலின் வாழ்க்கையை அதை கவித்துவமாக உச்சப்படுத்த
3. தூய தத்துவ விவாதத்துக்கு அதைக் கொண்டுசெல்ல
அக்னிநதியில் ஒரே படித்துறை புராணகாலம் முதல் நவீனகாலம்வரை எப்படி எப்படி மாறுகிறது என்று சொல்லும் ஆசிரியர் பின்பு அப்படித்துறையைப்பற்றிச் சொல்வதெல்லாமே நம் பண்பாட்டைப்பற்றியதாக மாறிவிடுகிறது. ஆடுமேய்க்கும் ஒரு சமூகத்தைப்பற்றிய நாவல் என்று கொள்வோம். ஆட்டுமந்தையை விவரித்து அந்த மந்தைத்தன்மை அம்மக்களின் இயல்பின் உருவகம் என்று வாசக மனதில் தோன்றச்செய்துவிட்டால் பின்பு அம்மந்தையைப் பற்றி சொல்லும் இடமெல்லாம் கவித்துவ அர்த்தம் அளிக்க முடியும். பலவகையாக கவித்துவமாக வர்ணித்து அதை அம்மகக்களின் வாழ்வை ஆராய முயலமுடியும். இதுதான் நாவலின் உருவகம் என்பது. தமிழ்நாவலின் சிறந்த கவியுருவகங்களில் ஒன்று ‘ஒரு புளியமரத்தின் கதை’[சுந்தர ராமசாமி] . இன்னொன்று ‘தண்ணீர்’ [அசோகமித்திரன்]
நாவலின் உருவகம் இருவகை.
1. நாவல் காட்டும் புற உலகம் ஒருபோதும் முற்றிலும் புறவயமானது அல்ல. அக்கதாபாத்திரங்களின் அகத்தின் சாயல் அப்புறப்பொருட்களில் இருக்கும். புறச்சித்தரிப்பு எப்போதும் அந்த அகச்சித்தரிப்பின் உணர்வுகளை ஒட்டியே இருக்கும். கடலோர மக்களின் வாழ்க்கையைப்பற்றி சொல்லும்போது அவர்களின் வாழ்வு போலவே கடலும் அலைபாயும். இந்நிலையில் எந்த ஒரு காட்சியிலும் வெளியே உள்ள பொருட்கள் உள்ளே உள்ள உணர்வின் குறியீடாக ஆகி உருவகத்தன்மையை அடைய முடியும்.
ஆனால் இது வெளிப்படையாக அமையலாகாது. அப்படி வாசிப்பதற்கான ஒரு மௌன இடைவெளி விடப்பட்டிருக்கவேண்டும். அதுவே போதும். சற்று மிகையாக ஆனால்கூட கதையின் இயல்பான ஓட்டம் சிதைந்து நாவல் கூச்சலிட ஆரம்பிக்கும். நாவலின் எழுதும்போக்கில் இயல்பாக அமையும் உருவகங்களே அழகானவை
2. நாவலின் மையத் தரிசனத்தை தனக்குள் கொண்டுள்ள உருவகங்கள் நாவலின் மையமாக அமைந்து நாவல் முழுக்க தொடர்வது நாவலுக்கு பலவகையில் அழுத்தம் அளிக்கும். இவை பெரும்பாலும் ஓரளவு பிரக்¨அபூர்வமாக செயற்கையாக உருவகிக்கப்படுபவையே. காலநதி போல. ஆனால் நாவல் விரியும்போது அதன் ஒவ்வொரு கூறுடனும் இந்த மைய உருவகம் தன்னிச்சையாக இழைவது இயல்பாக நடப்பது. இதன்மூலம் மையப்படிமம் பெருகியபடியே செல்லும். அக்னிநதியில் ஒரே படித்துறையில் வேறுவேறு நபர்கள் வேறுவேறு காலங்களில் எப்படி எந்தெந்த உணர்வுகளுடன் அமர்ந்திருந்தார்கள் என்று சொல்லும்போது படித்துறையின் உருவகப்பொருள் வளர்ந்தபடியே செல்கிறது
3. நாவலின் சாதாரணச் சூழல் உருவகங்கள் அதன் மைய உருவகத்துடன் ஏதேனும் வகையில் பிணைந்திருக்கும்போது நாவலுக்கு ஒரு உருவக ஒருமை உருவாகிறது. சரயூ நதியை காலநதியாக உருவகித்துவிட்டால் அதில்செல்லும் அப்படகு, அதன் கரையோர நாணல், சேற்றுக்கரை முதலை எல்லாமே உருவகங்களாக மாறிவிடுகின்றன. அவை கதையின் சூழலாகவும் அமைகின்றன.
நாவலின் படிமங்கள் ஓரளவே பயனளிக்கும். படிமம் என்பது என்னவெனில் ஓரு குறியீடு எதைச்சுட்டுகிறதோ அது முற்றிலும் வாசக ஊகத்துக்கு விடப்பட்டிருப்பதே. மிகச்சிறந்த நாவல்படிமம் என நினைவுக்கு வருவது அதீன் பந்தோபாத்யாயாவின் ‘நீலகண்டபறவையைத்தேடி’ நாவலில் [தமிழாக்கம் சு.கிருஷ்ணமூர்த்தி] மணீந்திரநாத் என்ற கதாபாத்திரம் ஒரு மனநிலை பிறழ்ந்த பேரழகன். அவர் ஏதோ ஒரு பறவையைத்தேடி நாவல் முழுக்க அலைந்தபடியே இருக்கிறார். அவ்வளவுதான்.ரப்பறவைந் ஆவலில் ஒருபோதும் உணர்த்தபப்டாத ஏதோ ஒன்றை சுட்டும் படிமம். அந்தபடிமம் சாதாரணமான அரசியல் மற்றும் உறவுகளைப்பேசும் அந்நவலை சட்டென்று வாழ்வின் புரியமுடியாத ழங்களை நோக்கி நகர்த்துகிறது. நாவல் ஆழமும் அழுத்தமும் கொள்கிறது.
இதேபோல நாவலின் சித்தரிப்பில் எல்லைக்கு உட்பட்டு படிமங்கள் வரலாம். ஆனால் படிமங்கள் மண்டிய மொழி நாவலைமிக மிகவும் செயற்கையாக்கி சிறுமைப்படுத்திவிடும். ஏனெனில் நாவல் அதன் ஒட்டுமொத்தம் மூலம் தொடர்புகொள்ளும் ஒருவடிவம். ஒட்டுமொத்தத்தின் பகுதியாகவே ஒரு தனிச் சொல்கூட நாவலில் வர முடியும். அந்நிலையில் நாவலின் ஒட்டுமொத்தத்தில் இணையாமல் தனிவாசிப்புக்கு இடமளிக்கும் படிமங்கள் நாவலின் உடலெங்கும் செறிந்திருப்பது நாவலின் கலை ஒருமையை குலைத்து விடும்.
என் நோக்கில் ஒருநாவலில் ஓரிரு மையப்பெரும்படிமங்கள் வரலாம். நடையில் இயல்பாக சில படிமங்கள் கலந்திருக்கலாம். அவ்வளவுதான்.
நாவல் என்பது கதாபாத்திரங்களால் ஆனது என்பது நம் வாசகமனதின் பதிவு. நாவலின் மிகப்பெரிய சாத்தியமும் இதுதான். மனிதர்களை முழுமையாக, அவர்கள் வளர்ச்சிப்போக்குடன் காட்ட வசதியான கலைவடிவம் இது. ஆகவே நாம் அதை முடிந்தவரை பயன்படுத்தியாக வேண்டும்.
எனக்குப்படும் சில அவதானிப்புகள் இவை
1. நிஜவாழ்க்கையில் மனிதர்களுக்கு நிலையான குணச்சித்திரம் இருப்பதாகச் சொல்லமுடியாது. சூழல், மற்றும் தருணங்களே ஆளுமையை அந்தந்தக் கணங்களில் தீர்மானிக்கின்றன. மேலும் அது அம்மனிதனை நோக்குபவனின் நோக்கையும் சார்ந்தது.
ஆனால் நாவல் வாழ்க்கையை மீண்டும் நிகழ்த்திக் காட்டுவது. ஆகவே உறுதியான குணச்சித்திரம் கதாபாத்திரங்களுக்கு அவசியம் — உறுதியான குணச்சித்திரம் என ஏதும் இல்லை என சொல்ல ஆசிரியர் விழைகிறார் என்றால் அதற்கு தெரிவுசெய்த கதாபாத்திரங்களை மட்டும் அப்படி அமைத்து பிற கதாபாத்திரங்களை அவர்கள் நோக்கில் உறுதியாவையாக அமைப்பது நல்லது. ஏனெனில் உறுதியான குணச்சித்திரங்கள்தான் நல்ல நாவலை உருவாக்கும். நாவலின் நாடகீய வடிவம் அவர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது.
2. ஒருகதாபாத்திரம் அறிமுகமாகும் காட்சியில் அவனது குணச்சித்திரம் வாசகன் மனதில் திடமாக உருவாவது மிக நல்லது. போரும் அமைதியும் நாவலில் பியர் அறிமுகமாகும்போது பெரிய விருந்தில் எவரும் நடமாடமுடியாதபடி பாதையில் நாற்காலி போட்டு அமர்ந்தபடி அதைப்பற்றிய பிரக்ஞையே இல்லாமல் திருதிருவென விழித்துக் கொண்டிருக்கிறான். இவ்வாறுகுணச்சித்திரங்கள் முழுமையாக முதலியேயே உருவாவது ஆசிரியனுக்கும் கதையை கொண்டுபோக மிகமிக உதவிகரமானது
3 ஆனால் தெளிவான உறுதியான கதாபாத்திரம் அடையும் மாறுதல் [வளர்ச்சி அல்லது வீழ்ச்சி] தான் நாவலின் நாடகீயத்தன்மையை உருவாக்குகிறது என்பதை பெரும்நாவல்களை காணும்போது உணரலாம். மாற்றமே இல்லாத கதாபாத்திரம் ஒருவகையில் ஒரு ‘மாடல்’தான். பெரிய கதாபாத்திரங்களின் மாறுதலை நம்பகமாகவும் உணர்ச்சிகரமாகவும் நாம் காட்டலாம். சிறு கதாபாத்திரம் கூட நாவல்போக்கில் மெல்ல மாறுதலடைவது ஆங்காங்கே கோடிகாட்டப்பட்டால் நாவலின் பின்னல் வலுவாக அமையும்.
4. வாழ்வில் அப்படி இல்லை என்றாலும், நாவலில் கதாபாத்திரங்கள் என்பவை சில மதிப்பீடுகளின் [வேல்யூஸ்] மானுடவடிவங்களே. கதாபாத்திரமோதலே நாவலின் நாடக உச்சங்களை அமைக்கிறது. அவை மதிப்பீடுகளின் மோதல்களேயாகும். ஆகவே நாவலின் எல்லா கதாபாத்திரங்களும் ஒன்றுடன் ஒன்று உரச நேர்வது நாவலை நாடகத்தன்மையுடன் நிறுத்தும். மோகமுள்ளில் பாபு-யமுனா காதலை ரங்கண்ணா அறியநேரிட்டால் என்ன நிகழ்ந்திருக்கும்? பாபுவின் அப்பா அறிந்தால்? இம்மாதிரி சாத்தியங்களே ஒரு நாவல் எடுத்துக்கொள்ளும் பிரச்சினையை மாறுபட்ட கோணங்களில் ஆராய்வதற்கான வழிகளை திறக்கின்றன.
5. நாவலில் கதாபாத்திரங்களின் தோற்றங்களை விரிவாக வர்ணிக்க வேண்டியதில்லை. நாவலின் போக்கில் அக்கதாபாத்திரம் பலவிதமாக வெளிப்படும்போதே படிப்படியாக முகம் உருவாகிவிடும். அதற்கேற்ப சில குறிப்புகளை ஆங்காங்கே அளித்துச் சென்றால்போதும். அக்குறிப்புகள் ஆசிரியனிடமிருந்து ‘கைதவறி ‘ விழுந்தவை போலவோ, இன்னொரு கதாபாத்திரத்தின் மனப்பதிவுபோலவோ இயல்பாக, அதேசமயம் குறைவாக வரவேண்டும். வாசகனே ஒரு கதாபாத்திரத்தை கற்பனைசெய்துகொண்டால் அதன் முழுமை அதிகரிக்கும். நாம் மனிதர்களை நமக்குத்தெரிந்தவர்களின் சாயலில்தான் கற்பனைசெய்கிறோம்.
6. சின்ன கதாபாத்திரங்களுக்கு பேச்சில், தோற்றத்தில், செயலில் மறக்கமுடியாத தனித்தன்மையை அளியுங்கள். ”குப்புசாமிக்கு பொடிபோடும் பழக்கம் உண்டு, ஆசனவாயில்.” இவ்வாறு.
செவ்வியல் காலம் முதலே நாடகத்தன்மை நாவலுக்கு இன்றியமையாதது என்று சொல்லப்பட்டுள்ளது. பிற்பாடு வந்த நவீனத்துவ நாவல்களிலும்கூட நாடகத்தன்மை முக்கிய அம்சமாகவே இருந்தது. பின்நவீனத்துவ நாவல்களில் அங்கதம் [ சட்டையர்] கேலிக்கூத்து [·பார்ஸ்] போன்ற வடிவங்களை பயிற்சி செய்தவர்கள்தான் அதை தவிர்த்தனர். உதாரணமாக ஜெ.ஜெ.சிலகுறிப்புகளில் நாடகீய அம்சம் சற்றும் இல்லை.
மதிப்பீடுகளின் மோதல் மூலம் உருவாகும் உணச்சி உச்சங்களையே நாவலில் நாடகீயத்தன்மை என்கிறோம். இதுஅடிப்படைகளை விவாதிக்கும் நாவலுக்கு பொதுவாக இன்றியமையாதது என்று எண்ணுகிறேன். ஏனெனில் வாழ்க்கையை முரண்படும் சக்திகளின் மோதலும் முயங்கலும் சேர்ந்து உருவாக்கும் முரணியக்கமாக காண்போமெனில் நாடகீயத் தருணங்களை தவிர்க்கவே இயலாது. மேலைச் சிந்தனையிலும் நம்முடைய இந்திய சிந்தனையிலும் முரணியக்க இயக்கவியலுக்கும் [டைலக்டிக்ஸ்] மிக்க முக்கியத்துவம் உள்லது. நம் வாழ்க்கையின் நிதரிசனமும் அதுதான். குடும்பத்திலும் சமூகத்திலும் நாம் மோதல்களையே காண்கிறோம். நம்பகமான மோதல்களும் விளைவான மிகையற்ற நாடகத்தருணங்களும் நாவலை ஆழமாக வாசகனுடன் உரையாடச்செய்யும்.
நாடகத்தன்மையை அஞ்சவேண்டியதில்லை என்றும், அதற்கான ஒரு தருணத்தைக்கூட தவறவிடவேண்டாமென்றும் நான் வாசகனாகவும் நாவலாசிரியனாகவும் சொல்ல விரும்புகிறேன். ஆனால் சில கவனங்கள் மற்றும் சில வழிமுறைகள் மட்டும் கவனிக்கப்படவேண்டும்.
1. நாடகீயத்தருணம் நாவலின் மையத்தேடல், மைய விவாதம், மையத்தரிசனம் சார்ந்ததாக இருப்பது நல்லது. இல்லாவிட்டால் நாவலின் சமநிலையை மிகவும் குறைக்கும்
2 நாடகீயத்தருணத்தை நாவலின் பொதுவான உணர்வுப்போக்குக்கு மேலே தூக்கினால் அது சற்று துருத்தி நிற்கும். இதற்கு மேலைநாடுகளில் பரிசீலிக்கப்பட்ட எளிய வழி அதை ஒரு புனைவாகவே நாவலுக்குள் கொண்டுவருவதுதான். பின்தொடரும் நிழலின் குரலில் உச்சநாடகத்தன்மை கொண்ட பகுதிகள் எழுதபப்ட்ட நாடகங்களாகவே வருகின்றன.
3 நாடகீயத்தருணம் சற்றேனும் தத்துவார்த்தமாக ஆகாவிட்டால் அது மேலோட்டமான உணர்ச்சிகளாக[ மெலோடிராமாவாக ] ஆகிவிடும். தத்துவம் உணர்ச்சிகரமாக ஆகும்போது அது உயர்கவிதையாகும். கவித்துவமே நாடகத்தன்மையை நியாயப்படுத்தும் முக்கியமான அம்சமாகும். ‘நாடகாந்தம் கவித்வம்’ என்பதே செவ்வியல் நோக்கு.
நாவலின் முக்கிய இயல்புகள் என்ன? டி.எஸ்.எலியட் கவிஞனுக்கு வரலாற்றுப்பார்வை அவசியம் என்கிறான்.நாவலாசிரியன் நம்காலத்தின் காவியகர்த்தன். வரலாற்று நோக்கு இல்லாத நாவல் எந்நிலையிலும் ஆழமற்றதே. ஒரு குடும்பத்தின் கதையே ஆனால்கூட அதில் வரலாற்றுநோக்கு வெளிப்படுவதை நல்ல நாவலாசிரியனிடம் காணலாம்.
நாவலாசிரியன் வரலாற்றை பின்புலமாகக் கொண்டு வாழ்க்கையை நோக்குகிறான். வாழ்க்கையை வரலாற்றைக் கொண்டும் வரலாற்றை வாழ்க்கையைக் கொண்டும் புரிந்துகொள்ள முயல்கிறான். இந்த போக்கில் அவன் வரலாற்றின் இயல்பு இன்னது என்றும் அதன் சாரம் இது என்றும் ஒரு கருத்தை அடைகிறான். அதை வாழ்க்கைக்குப் போட்டுப்பார்க்கிறான். இதை நவீன சிந்தனையாளர் வரலாற்றுவாதம் [ஹிஸ்டாரிசிஸம்] என்கிறார்கள்.
வரலாற்றுவாதம் என்றால் என்ன? வரலாற்றுக்கு ஒரு மையத்தையோ திசையையோ பொருளையோ கற்பித்து அதன் அடிப்படையில் அனைத்து வரலாற்றுநிகழ்வுகளையும் தொகுத்து காட்டமுயல்வதுதான். ஹெகலியம் ,மார்க்ஸியம் உட்பட எல்லா நவீனசிந்தனைகளும் வரலாற்றுவாதங்களே என்று பின் நவீனத்துவர் சொல்வார்கள். எல்லா வரலாற்றுவாதங்களும் அதிகார நோக்குடன் உருவாக்கப்பட்ட பொய்களே என்பார்கள்.
ஆனால் ஒரு நாவல் தன் கட்டமைப்புக்குள் தனக்குரிய வரலாற்றுவாதம் ஒன்றைக்கொண்டிருக்கும் என்றே நான் எண்ணுகிரேன். அதாவது அந்த நாவலில் செயல்படும் வரலாற்று நோக்கு ஒன்று இருக்கும். அந்நோக்கை நாவல் தன் பக்கங்கள் வழியாக முழுவாழ்க்கைக்கும் விரித்தெடுக்கும்போது அது வரலாற்றுவாதமாக வளர்கிறது. நாவலுக்கு வெளியே அதற்கு ஒருவேளை பொருளே இல்லாமலிருக்கலாம். அது அந்நாவலாசிரியனின் விருப்பக் கற்பனையாக இருக்கலாம். அதற்கு நிரூபணமே கொடுக்கமுடியாமலும் இருக்கலாம். ஆனாலும் நாவலுக்குள் வரலாற்றுவாதம் செயல்படும்போதே அந்நாவல் ஆழமும் முழுமையும் கொள்கிறது 1984ல் உலகில் கருத்துப்போட்டியும் வன்முறைகளும் இல்லாமல் ஆகிவிடும் என்று தஸ்தயேவ்ஸ்கி நம்புவது அவரது நாவலுக்கு வெளியே அபத்தம்தான்.[அப்பாவியின் கனவு] ஆனால் அக்குறுநாவலின் உக்கிரமான பகுதியே அந்த கனவுதான்.
நாவலுக்குள் செயல்படும் வரலாற்றுவாதம் அந்நாவல் முன்வைக்கும் அறத்தை, அதன் கனவை, அதன் அறமறுப்பை, அதன் நிராசையை அந்நாவலுக்குள் நிறுவுகிறது. அதுவே நாவலின் சாரமான இயக்கமாகும். ‘மனிதன் எத்தனை மகத்தான சொல்!” என்பதும் சரி[கார்க்கி] ‘மனிதன் மகத்தான சல்லிப்பயல்’ என்ற நோக்கும் சரி [ஜி.நாகராஜன்] வரலாற்றுவாத நோக்கே. இலக்கியத்தில் இரண்டுக்கும் சம மதிப்புதான். அந்த வாதம் மூலம் அந்நாவல் காட்டும் வாழ்க்கைக்கு உருவாகும் ஆழமும் ஒழுங்கும்தான் முக்கியம். அதாவது நாவலின் வரலாற்றுவாதம் நாவலின் ஒரு கலைக்கூறே ஒழிய அதற்கு பெரிய தத்துவ மதிப்பு இல்லை. ஆகவே நான் மார்க்ஸியத்தை நிராகரித்தாலும் ஒரு மார்க்ஸிய நாவலை நிராகரிக்க வேண்டியதில்லை. உள்ளடக்கத்தில் ·பாசிசத்தன்மை கொண்ட ‘நாஸ்ட்ராமொ” போன்ற நாவல்கள் எனக்கு பிடித்தே இருக்கிறது
வாழ்க்கையின் ஒவ்வொரு துளியிலும் சூழவிரிந்துள்ள ஒட்டுமொத்த வாழ்க்கையின் பாதிப்பு உள்ளது என்று உணர்வதும், இன்றைய வாழ்க்கையின் ஒவ்வொரு துளியும் முந்தைய வாழ்க்கையின் வளர்ச்சியே என்று உணர்வதும்தான் நாவலின் முக்கியமான மனநிலை. இது சிரியனை வரலாறுக்குக் கொண்டுசென்று சேர்க்கிறது. வரலாற்றை எப்படிப்பார்ப்பது என்பது ஆசிரியனின் பெரும் சவாலாக உள்ளது. வரலாற்றை விழுமியங்களின் வளர்ச்சிப்போக்காக காணலாம். மிருக இச்சைகளின் போர்வெளியாகவும் காணலாம்.
என் நோக்கில் வரலாற்றை ஆராய்வதற்கு புறவயமான சிறந்த கருவி முரணியக்கப் பொருள்முதல்வாதமே [ டைலடிகல் மெட்டீரியலிசம் அல்லது மார்க்ஸியம்] . வரலாற்றை பொருளியல் சக்திகளின் மோதல்கள் மற்றும் முயக்கம் மூலம் முன்னகரும் ஒரு ஓட்டமாகக் காண்பது. ஆனால் நான் அதிலிருந்து மேலும் ஒரு ஆன்மீக சாரத்தை கண்டடையவும் முயல்வேன். அது என் தேடல்.
விரிவாக எழுதிக்கொண்டே செல்லலாம். இன்றைய நாளில் நாவல் எழுதுவதற்கு நம் அன்றாட வாழ்க்கையில் உருவாகும் தடைகளைப் பற்றியும் யோசிக்கவேண்டியுள்ளது. நாவலை எழுத முயன்று அப்படியே நிறுத்திவிடுபவர்களே அதிகம். சில நடைமுறை உத்திகளை அனுபவம் மூலம் நான் கண்டடைந்துள்ளேன்.
1. நாவலை எப்போதும் ஒரே நேரத்தில் எழுதலாம். அந்த நேரத்தில் இயல்பாகவே அம்மனநிலை கூடுவதை நான் கவனித்திருகிறேன். நேரத்தை மாற்றிக்கொண்டே இருந்தால் அனேகமாக வேலைநடப்பதில்லை
2 காலையில் எழுந்ததுமே எழுதும்போது சட்டென்று மனநிலை கூடுகிறது. மாலை அதுவரையிலான உணர்ச்சிச் சீண்டல்களை நம்மில் நிரப்பி மனநிலையை கெடுக்கிரது
3 நாவல் எழுதுவதற்கு தக்க மனநிலைக்காக காத்திருப்பது சரியாக வராது.சப்படி நாவலை எழுதிமுடிக்க முடியாது. அதுவரை எழுதியவற்றை மீண்டும் வாசிப்பது வரிகளை திருத்தி எழுதுவது நல்லது. சட்டென்று நாம் நாவலுக்குள் செல்லமுடியும்.
4. குத்துமதிப்பாக ஒரு அத்தியாயத்தை தொடங்கி வெறுமே சூழல் வர்ணனைகளை கொடுத்தபடியே செல்லலாம். ஒரு இடத்தில் நாவல் மேலெழுவது தெரியும். அங்கிருந்து எழுதி முடித்தபின் தரையில் ஓடிய முதல் பகுதியை வெட்டிவீசினால் போதும். சிலசமயம் சூழல்வர்ணனையே நமக்கு தொடக்கத்தை எடுத்துக் கொடுக்கும்
5 ஒருபோதும் நாவலுக்கு திட்டம் [பிளான்] வரைபடம் [சார்ட்] கதைச்சுருக்கம், கதாபாத்திரக் குறிப்புகள் செய்து கொள்ளாதீர்கள். அப்படி எழுதப்படும் நாவல் மிக இயந்திரத்தனமாக இருக்கும். ஒருபோதும் நிறைவு அளிக்காது. நாவலை எழுதும்போது அதுவே தன்போக்கில் விரிந்து வரவேண்டும்.நம் நாவலை நாமே அப்போதுதான் புதிதாக அறிய வேண்டும். ஒரு புது நாவலை படிப்பதுபோலவே நமக்கும் படவேண்டும். நாவலை எழுதுவது என்பது நமக்குள் இருக்கும் நாவலை நாமே கண்டடைவது ஆகும்.[ அசோகமித்திரனின் ஒற்றன் நாவலின் ஒற்றன் என்ற அத்தியாயம் இதை நகைச்சுவையாக சித்தரிக்கிறது]
6 நாவலைப்பற்றி முன்கூட்டியே நண்பர்களிடம் விவாதிப்பதும் சரியல்ல. அதுவும் அதில் உள்ள மர்மத்தை இல்லாமல்செய்துவிடுகிறது. மிக அந்தரங்கமாக ஒருவரிடம் விவாதிக்கலாம். அப்போதுகூட விரிவாக சொல்லிவிடக்கூடாது. அந்தரங்கமாக இருக்கும்போதே அது வலுவுடன் நம்முள் இருக்கும். முளைக்கும்
7 ஒரு நாள் நாவலை எழுதினால் அந்த நாளைக்கான ஒரு உச்சம்[ கிளைமாக்ஸ்] நிகழ்ந்ததும் நிறுத்திவிடவும். முன்னர் நிறுத்துவதும் சரி பின்னால் தொடர்வதும் சரி தவறானதாகும்
8.நாவலை எழுதும் கணங்களில் நம் தொகுப்புணர்வு [ எடிட்டிங் சென்ஸ்] வேலைசெய்யக்கூடாது. எழுதித்தள்ளுங்கள். பிறகு அது நாவலுக்குதேவையா இல்லையா என்று யோசிக்கலாம். பலசமயம் இப்படி நிகழும் பக்கவாட்டு திறப்புகள் நாவலிலேயே மிக முக்கியமானவையாக அமையலாம்
9 நாவல் எழுதும் முன்னர் நாவலின் பொதுவான அதாவது குத்துமதிப்பான ஒரு வடிவ உருவகம், மையமான தேடல் , முக்கியமான கதாபாத்திரங்களின் சில மெல்லிய சித்திரங்கள்மாகியவை மட்டும் மனதில் இருந்தால்போதும். துணிந்து எழுத ஆரம்பித்துவிடலாம். நாவலை நாம் எழுதியே கண்டுபிடிக்கவேண்டும்
எழுதும்போது நாவல் எங்காவது முட்டி அறுபட்டு நிற்பது மிக இயல்பாக நிகழ்வதாகும். அதற்கான காரணங்கள் பல
1. நாவலுக்கு நாம் உருவகித்துள்ள வடிவம் நாம் எழுதிச் செல்லும்போது அடையும் புதிய தேவைகளை உள்ளடக்க முடியாமல் ஆதல்
2. நாவல் ஒரு தத்துவச் சிக்கலில் மாட்டி அதை நம்மால் அவிழ்க்க முடியாமல் ஆதல்
3 அதுவரை இருந்த உத்வேகம் தீர்ந்துவிடுதல். அதற்குமேல் வரப்போகின்றவற்றில் நம் ஆர்வம் குறைந்துவிடுதல்
4 நாவலின் போக்கு நீண்டு நீண்டு சலிப்பூட்ட ஆரம்பித்தல்
இதற்கு நடைமுறை சாந்த சில முறைகளை பரிசீலிக்கலாம்
1. நாவல் வடிவம் போதாமலானால் அதை அப்படியே விட்டுவிட்டு அவ்வடிவத்தை ஒட்டுமொத்தமாக மறுபரிசீலனைசெய்வதே முறை. நம்முள் முளைத்திருக்கும் புதிய விஷயங்கள் சிலவற்றுக்கு நாவலுக்கு அதுவரை நாம் கொடுத்துள்ள வடிவம் போதாமலாகிறது என்று பொருள் அதற்கு
அந்த புதிய தேவையையும் உள்ளடக்கும் முகமாக நாவலின் வடிவத்தை மாற்றலாம். அந்த மாற்றத்தை அதுவரை எழுதிய மொத்தப்பகுதியிலும் தொடக்கத்திலிருந்தே ஓரளவுக்கு செய்து கடைசி வரை வந்தால் மேலும் தொடர்வது எளிதாகும். பெரும்பாலும் இது நாவலுக்கு ஒரு வெற்றியாகவே இருக்கும்
2 நாவல் உருவாக்கும் தத்துவச்சிக்கலை நாவலுக்கு வெளியே வைத்து யோசிக்கலாகாது. அது நாவலை செய்றகையாக ஆக்கும். அந்த தத்துவச்சிக்கலை எதிர்கொள்ளும் கதாபாத்திரங்களை அப்படியே விட்டுவிடுங்கள். வேறு ஒரு கதாபாத்திரம் மூலம் அந்த கதாபாத்திரங்களை நோக்கிக்கண்டு விரிவாக விவரிக்க ரம்பியுங்கள். மூன்றாவது கோணம் இயல்பாகவே திறந்து தத்துவக்கேள்வியின் புதிய பரிணாமம் பிறந்துவரக்காண்பீர்கள்.கால்லது அந்த தத்துவ சிக்கல் உருவான சந்தர்ப்பத்தை, காலகட்டத்தை அப்படியே விட்டுவிட்டு முற்றிலும் வேறு ஒரு இடத்தில் நாவலை தொடங்கி விரித்து எழுதி அந்த தத்துவச்சிக்கல் நிகழ்ந்த பகுதிக்கு வாருங்கள். அப்போதும் புதிய நோக்கு திறந்துவரும். அவ்விணைப்பை பிற்பாடு சுமுகமாக ஆக்கிவிடலாம்
3. அதுவரை இருந்த உத்வேகம் தீர்ந்துவிட்டதென்றால் நாவலில் புதிய ஒரு சூழல் அல்லது காலத்தை அறிமுகம்செய்து அடுத்த கட்டமாக திறந்து மீண்டும் தொடர்வது மட்டுமே உசிதமானதாகும்
4.நாவலின் போக்கு நீண்டு சலிப்பூட்டினால் அப்படியே நிறுத்தி விட்டு அதுவரை எழுதியபகுதியின் உத்தியை மீண்டும் சரிபார்த்து செறிவாக்க முடியுமா என்று பார்க்கவேண்டும்
ஒட்டுமொத்தமாக இதுதான், நாவல் அறுபட்டு முட்டி நின்றால் மேலும்மேலும் அதன் மீது மூளையால் மோதக்கூடாது. அதை அப்படியே விட்டுவிட்டு மனதை போக்குகாட்டி வேரு கோணத்துக்கு கொண்டுசெல்லவேண்டும்
ஒருநாவலை அதை எழுதிய ஆசிரியன் ஒருபோதும் புறவயமாக பார்த்துவிட முடியாது. நீண்டகாலம் அவன் ஒரு நாவலுடன் சேர்ந்தே வாழ்கிறான். வளர்கிறான். ஆகவே அவனுக்கு அது மிக நெருக்கமானதக இருக்கும். ஆகவே அதனை புறவயமாகப் பார்க்கும் ஒரு வாசகன் அதை பரிசீலனைசெய்தாகவேண்டும். அவன் நாவலின் வடிவம் பற்றிய பிரக்ஞையும் இலக்கிய நுண்ணுணர்வும் கொண்டவன் என்றால் அவனால் நாவலின் பிசிறுகளை சரிசெய்து இடைவெளிகளை நிரப்பி பலமுறை மேம்படுத்த முடியும். இவனையே நாம் பிரதிமேம்படுத்துநர், [டெக்ஸ்ட் எடிட்டர்] என்கிறோம். நாவலுக்கு இவரது பங்களிப்பு மிகமிக முக்கியமான ஒன்றாகும். ஒரு நல்ல நாவலை பிரதி மேம்படுத்துநரின் உதவியுடன் மீண்டும் மீண்டும் செப்பனிடுவது மிக அவசியம். குறிப்பாக ஐந்து விஷயங்களை அவர் செய்யவேண்டும்
1. நாவலின் இடைவெளிகளைக் கண்டடையவேண்டும். சிலசமயம் நாம் முக்கியமான ஒன்றை லேசாகத் தொட்டுச் சென்றிருப்போம். விளக்கவேண்டியதை விளக்க மறந்திருப்போம். சிலசமயம் மிக அபூர்வமான ஒன்றை நாமே அறியாமல் தொட்டபின் அதை வளர்த்தெடுக்காமல் விட்டிருப்போம். அவற்றை பிரதி மேம்படுத்துநர் தொட்டுக்காட்டி நம்மை மேலும் எழுத தூண்டவேண்டும்
2 நாவலின் கதாபாத்திரங்களுக்குள் சமநிலையை பேணுவது நம்மால் இயல்பாக சாத்தியமல்ல. நம்முடைய சுயம் பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தை நாம் பலசமயம் அதிகமாக மீட்டியிருப்போம். சில கதாபாத்திரங்கள் சென்று தேய்ந்திறும் தன்மை கொண்டிருக்கும். சில கதாபாத்திரங்கள் மறக்கவும்பட்டிருக்கும். அதை பிரதி மேம்படுத்துநர் சுட்டிக்காட்டி நம்மை ஆற்றுபடுத்த வேண்டும்
3.நாவலின் மொழிநடையை பிரதி மேம்படுத்துநர் கூர்ந்து நோக்கி செப்பனிடவேண்டும்
4 நாவலின் தகவல்களை பிரதி மேம்படுத்துநர் உதவியுடன் சரிபார்க்கவேண்டும்
5.நாவலில் அதிகமாகச் சொல்லப்பட்டவை கண்டிப்பாக இருக்கும். அதற்கு சில காரணங்கள் உள்ளன
அ] நாம் நம் உணர்ச்சிவேகம் காரணமாக சில இடங்களை அதிகமாக மீட்டுவோம். பலசமயம் இது நம் சொந்த உணர்வுகளுடன் இணைந்து வரும் பகுதிகளாக இருக்கும்.
ஆ] சொன்னவிஷயம் சரியாக போய்ச்சேருமா, நன்றாகச் சொல்லப்பட்டுவிட்டதா என்ற ஐயம் காரணமாக மீண்டும் அதை விரிவாகச் சொல்லியிருப்போம்
இ] சொன்னவற்றுக்கான வாதங்களை மறுதரப்பை சொல்லாமல் ஒற்றைபப்டையாக விரிவாகச் சொல்லியிருப்போம். அதுவும் நீட்சியாகவே உணரப்படும்.
ஈ] சிலகாரணங்களுக்காக நாவலின் மையத்தில் இருந்து வெகுவாக விலகிச்சென்றிருப்போம்.
உ] ஒரு முக்கியமான விஷயத்தை சில பகுதிகள் மூடிமறைத்துக் கொண்டிருக்கலாம். பொதுவாக உணர்ச்சிகரமான மிகைப்பகுதிகள் கவித்துவ பகுதிகளை மறைக்கும்
இக்குறைகளை அந்த பிரதி மேம்படுத்துநர் சுட்டிக்காட்டும்போது ‘நான் எழுதுயதெல்லாமே தூய பொன்’ என்று விவாதம் செய்யலாகாது. அவற்றை அவருடன் விவாதித்து வெட்டுவது மிகமிக இன்றியமையாதது ஆகும்.
ஒரு நாவல் என்பது ஒரு துண்டு வாழ்க்கை. வாழ்க்கையின் ஒரு காலகட்டத்தை எத்தனை உழைப்புடன் எத்தனை தீவிரத்துடன் நாம் வடிவமைத்துக் கொளிகிறோம்! அதெல்லாமே நாவலுக்கும் தேவைப்படும். அதை மீறி வாழ்க்கை தன் திசையை தானே தீர்மானிக்கவும் செய்கிறது. நாவலும் அப்படித்தான்.
எல்லாரும் ஒரு நல்ல நாவலை எழுதிவிடமுடியும். வாழ்த்துக்கள்.
[2006 சிங்கப்பூரில் நடத்திய நாவல் பட்டறையில் அளிக்கப்பட்ட குறிப்பு. மறுபிரசுரம். முதற்பிரசுரம் 31, 2008 @ 22:2