ஆண்டாள் பற்றிய சர்ச்சையான நேரத்தில் பேசும் நான் ஆண்டாள் பிரியதர்ஷினியாக பேசவில்லை இப்போது ஆண்டாளாகவே பேசுகிறேன் அது அவசியமும் கூட…
சென்னையில் நடைபெற்றுவரும் புத்தகத்திருவிழாவின் மூன்றாம் நாளான்று பெண் பேச்சாளர்கள் பங்கேற்ற கருத்தரங்கு நடைபெற்றது.
கோவை பொதிகை தொலைக்காட்சியில் முக்கியப்பதவியில் பணியாற்றி வரும் இவர் கவிஞர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியருமாவார்.இவர் தினமலர் ஆன்மீக மலரில் எழுதிவரும் ‘மனதில் பட்டதை’ என்ற தலைப்பிலான பக்திக் தொடர் மிகவும் பிரபலமாகும்…
மென்மையான வாழ்விற்கும் வார்த்தைக்கும் சொந்தக்காரரான இவர் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் பொங்கிஎழுந்துவிட்டார்.ஆண்டாளுக்கு எதிராக அவதுாறு பேசுவதா என கொதித்துவிட்டார்.அவர் பேசியதாவது…
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அவதரித்த ஆண்டாளை இப்போது வந்த அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் ஆராய்ச்சி செய்வதை என்னவென்பது உனக்கு ஆண்டாள் பற்றி என்ன தெரியும்.
ஆராய்ச்சி என்ற பெயரில் அமெரிக்கக்காரன்தான் பிதற்றுகிறான் என்றால் சிந்தனையாளர்கள் என்று இங்கே சொல்லிக்கொள்பவர்கள் அதை எப்படி வழிமொழியலாம்.
இவர்களது ஆணாதிக்க சிந்தனை இன்னமும் அப்படியேதான் இருக்கிறது உங்களின் கோபத்திற்கும் தாபத்திற்குமான வடிகாலாக மட்டும்தானே பெண்களை பார்க்கிறீர்கள், அதற்காக மட்டுமே பெண்கள் படைக்கப்பட்டதாகத்தானே கருதுகிறீர்கள். சமையலறையில் கிழித்து கிடக்கும் கரித்துணிக்கு கொடுக்கும் மரியாதையைக்கூட பெண்களுக்கு கொடுப்பது இல்லை பிறகு எங்கே அவளது சிந்தனைக்கு மதிப்பு கொடுக்கப் போகிறீர்கள்.
மதிப்பு கொடுக்காவிட்டாலும் பராவாயில்லை ஆனால் அவளை சதா சர்வகாலமும் வார்த்தைகளால் இம்சிக்காதீர்கள்.நாங்களும் எங்கள் திறமையை எத்தனை முறைதான் நிரூபிப்பது உங்களுக்காக எத்தனைமுறைதான் நெருப்பாற்றில் இறங்கிக் காட்டுவது…
புத்தகத்திருவிழாவிற்கு வருபவர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன் இங்கே வந்து டில்லி அப்பளம் பஜ்ஜி பஞ்சு மிட்டாய் மட்டும் சாப்பிடும் பொழுது போக்குமிடமாக மாற்றிவிடாதீர்கள் பெண்மையை போற்றும் பலவித புத்தகங்கள் இருக்கின்றன தேடிப்பிடித்து வாசியுங்கள்
சிந்திக்கிறாள் என்ற ஒரு காரணத்திற்காகவே மணிக்கட்டோடு இரண்டு கைகளும் வெட்டப்பட்ட ஆப்பிரிக்காவின் பின்தங்கிய மண்ணைச் சார்ந்த் ஒரு பெண் கை வெட்டப்பட்ட பின் மயங்கி விழுகிறாள் பின் எழுகிறாள், தாகம் தீர்க்க அருகில் உள்ள ஆற்றிற்க்கு செல்கிறாள், அப்போதுதான் உணர்கிறாள் தன்னால் தண்ணீரை கையால் முகர்ந்து குடிக்க முடியாது என்று பின் தரையோடு தரையாக படுத்து ஆற்று நீரை நக்கி குடிக்கிறாள், அந்த நிலையிலும் தன் சிந்தனையை வேட்கையை கைவிடாது முன்னேறியதன் விளைவு இன்று லண்டன் யுனெஸ்கோ நிறுவனத்தில் பின்தங்கிய பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடும் துாதுவராக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார் இவரது நிஜக்கதை பைட் ஆப் தி மேங்கோ என்ற புத்தகத்தில் இருக்கிறது இது போன்ற புத்தகங்களை வாங்கி வாசியுங்கள் எப்போதும் பெண்மையை நேசியுங்கள் என்று கூறி முடித்தார்.
-எல்.முருகராஜ்
[email protected]