நீல இரவு
பகலின் மறுபக்கம்.
கொந்தளிக்கும் முகங்களின்
இயந்திரங்களின்
கணக்குகளின்
செய்திகளின்
அமைப்புகளின்
மறுபக்கம்.
நீலஇரவு
மௌனமே வானமென
மூடிய இந்த இரவு
அந்த கரும்பட்டுவிரிப்பின்
கீழ் ஓரத்துத்
தனிவைரம்
எதன் மறுபக்கம்?
*
கொச்சிக்கு நான் வந்துசேர்ந்தது ஒரு நள்ளிரவில். அந்த ரயில் எங்கெங்கோ நின்று மூச்சுவாங்கி, ஊளையிட்டு, ஏராளமான அதிவேக அலட்சிய ரயில்களுக்கு வழிவிட்டு, ‘ஸ்ஸ்ஸப்பா’ என்று இரும்பால் முனகியபடி எர்ணாகுளம் வந்தது. ஜங்ஷனுகுப்போக வேண்டாம், டவுனிலேயே இறங்கிவிடுங்கள் என்று உண்ணிக்கிருஷ்ணன் சொல்லியிருந்தார். ரயில் ஐந்துநிமிடம்தான் நிற்கும். நான் என் இரு கனத்தபெட்டிகளுடன் பாய்ந்திறங்கினேன். ஒருபெட்டி கட்டைவிரலை நசுக்கிவிட்டது. வலியால் நொண்டியபடி திரும்பிப்பார்த்தபோது தூரத்தில் உண்ணிக்கிருஷ்ணன் கையை தூக்கி வீசிக்காட்டியபடி வெற்றிலைக்காவிப் பற்களால் அகலமாகச் சிரித்துக்கொண்டு வருவதைப்பார்த்தேன்.
உண்ணிக்கிருஷ்ணன் அசல் மலையாளிகளுக்கான தோற்றத்தில் இருந்தார். டப்பாக்கட்டு கட்டிய பட்டைக் கரையுள்ள வேட்டி, செருப்பு. சுள்ளிமாதிரி மயிரடர்ந்த கால்கள். மேல்பட்டனை திறந்து போட்டு கைகளை சுருட்டி மேலேற்றிய சட்டை. இடது அக்குளில் ஒரு செய்தித்தாள் சுருள். ”வரணும் வரணும்…வண்டி குறே லேட்” என்று வரவேற்றார்.
”பெட்டியை தூக்கணுமே” என்றேன். ”அய்யோ சாரே, நம்மளே உருட்டிக்கிட்டு போயிடுவோம். அவன்மார் வந்தால் முந்நூறு ரூபாய்க்கு குறையாமல் கேட்பார்” என்றார். இருவரும் பெட்டிகளை உருட்டிக்கொண்டு வந்தால் குறுக்கே பாலம். ”இந்தபடியிலே ஏத்தணுமே” என்றேன் ”நான் ஏற்றும் சார்…சார் பேசாமல் வரணும்” என்றார்.
இருபெட்டிகளையும் இருவருமாகச் சேர்ந்துதான் ஏற்றினோம். வெளியே கொண்டு வந்ததும் ஆட்டோ ஒன்று வந்து நின்றது. உண்ணிக்கிருஷ்ணன் பெட்டிகளை தூக்கி அதன் பின்பக்கம் வைத்து ஏறிக்கொண்டார். நான் ஏறியதும் ”வள்ளிக்குந்நு” என்று சொல்லிவிட்டு ”நல்ல உறக்கமா?” என்றார். ஆட்டோ அவருக்கு தெரிந்ததா என்ற எண்ணம் ஏற்பட்டது. ”ஆட்டோ கூலி பேசலியா?” என்று மெல்ல கேட்டேன். டிரைவர் ”இவிடே எல்லாம் ·பிக்ஸட் சார். நிங்ஙளுடே தமிழுநாடு மாதிரி பற்றிக்கில்லா” என்றார். நான் புன்னகைசெய்தேன்.
அங்கெல்லாம் சாலை போடும் வழக்கமே இல்லை போலிருக்கிறது. சமீபத்திய மழையில் சாலை முழுக்க குட்டி குட்டி நீர்க்குட்டைகள். வண்டிக்குள் நாங்களிருவரும் ஆவேசமாக நடனமாடுவது போலிருந்தது. அதனூடாக உண்ணிக்கிருஷ்ணன் ”நல்ல வீடு சார்…சார் கேட்டதுமாதிரி ஒதுக்குபுறமா அமைதியா ஸ்வஸ்தமான வீடு…வாடகையும் சகாயம்…பின்னே பஸ் இல்லை. சாருக்கு கம்பெனி கார் உண்டுதானே?” என்றார். நன் ”ஆமாம்” என்றேன்.
எர்ணாகுளம் நகரமே தூங்கி கிடந்தது. ஒரு கடை ஒரு வீடு கூட திறக்கப்பட்டிருக்கவில்லை. மெல்லிய மழைச்சாரல் ஆட்டோவின் முகவெளிச்சத்தில் பொன் துகள்களாக விழுந்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். இந்த பருவநிலையில் ஏன் விழித்திருக்கவேண்டும்.? ஆறுமணிக்கெல்லாம் மலையாளிகளில் தொண்ணூறு சதம் பேர் ‘ரண்டெண்ணம் வீசி’ விட்டு படுத்து விடுவார்கள் என்று ராஜன் சொல்லியிருந்தார்
நகர எல்லை அத்தனை சீக்கிரம் முடியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சாலையில் எங்கள் ஆட்டோவின் முகவெளிச்சமல்லாமல் வேறு விளக்கே இல்லை. இருபக்கமும் தென்னைமரக்கூட்டங்கள் இருட்டுக்குள் அடர்ந்து நின்று, மங்கிய வெளிச்சம் வருடிச்செல்கையில் பளபளக்கும் ஓலைகளை மெல்ல அசைத்தன. ஆட்டோ ஒலியில் சில பறவைகள் தூங்கி எழுந்து ”ரீப் ரீப்” என்று குரல்கொடுத்தன.
சாலை சரிந்து இறங்கியது. ஏதோ ஆறு வரப்போகிறது என நான் எண்ணியதுமே மேலேற ஆரம்பித்தது. விளக்கே இல்லாத பெரிய பாலம் ஒன்றின் மீது செல்ல ஆரம்பித்தோம். கீழே அகலமான ஆறு சாம்பல்நிறமாக ரகசிய ஒளியுடன் கிடந்தது. அதில் நாலைந்து படகுகள் லாந்த ஒளி ஆட, தூக்கத்தில் மிதந்தன. நான் குனிந்து அவற்றைப் பார்ப்பதைக் கண்டு ”தாப்புவலை போடுறாங்க சார்…நல்ல கரிமீன் கிட்டும்” என்றார் உண்ணிக்கிருஷ்ணன்.
சிறிய சாலைக்குப் பிரிந்து நீரோடையில் மிதந்து செல்வது போல வளைந்து வளைந்து வளைந்து சென்று ஒரு சிறிய இரும்பு கேட் முன்னால் நின்றது ஆட்டோ. என்னுடைய தலை பலமுறை கம்பிகளில் முட்டி வலித்தது. உண்ணிக்கிருஷ்ணன் இறங்கி இரும்பு கேட்டை திறந்தார். தரை ஈரமாக பளபளத்தது. கொஞ்சநேரம் முன்னால் நல்ல சாரல் மழை பெய்திருக்கக் கூடும்.
”வீடு குறே உள்ளேயாக்கும்…சுற்றி நல்ல தென்னந்தோப்பு உண்டு” என்றார் உண்ணிக்கிருஷ்ணன். ஆட்டோ உள்ளே ஏறி தோப்புக்குள் சென்றது. ஒளி நனைந்து கருமையாக இருந்த தென்னைமண்டைகளை தழுவிச்செல்ல பறவைகள் கலைந்தெழுந்தன. தோப்பே கூக்குரலிடுவது போலிருந்தது. வீட்டு முற்றத்தில் ஆட்டோ நின்றது. பெட்டிகளை ஆட்டோ டிரைவரே தூக்கி வைத்தார். * ஒரு சொல்கூட பேசாமல் ஆட்டோவுக்கு பனம்கொடுத்தார். நள்ளிரவில் அத்தனை தூரம் வந்ததற்கு நூறு ரூபாய் மிகவும் குறைவுதான். சென்னையில் முந்நூறு கேட்பான்.
நான் இறங்கி நின்று சோம்பல் முறித்தேன். பழையபாணி ஓட்டு கட்டிடம். கேரளத்தில் அத்தகைய உயரமான ஓட்டுகூரை கொண்ட பெரிய கட்டிடங்களை பார்த்திருக்கிறேன். சதுரமான பூமுகம் என்ற முகப்புநீட்சி. அதன் அகலமான திண்ணைகள் மழைச்சாரலால் ஈரமாக சில்லென்று இருந்தன. தரையும் சிமிட்டி போடப்பட்டு பனிக்கட்டி போல் இருந்தது.
உண்ணிக்கிருஷ்ணன் பூட்டை திறந்து கதவைத் தள்ளி விரித்தார். ”உள்ளே நல்ல சூடுண்டாகும் சார். தட்டும் நிரையும் உள்ள வீடாக்கும்” என்றார்.”சார் உள்ளே போகணும்.நான் பெட்டிகள் கொண்டு வந்து வைப்பேன்…” நான் உள்ளே சென்றேன். அகலமான கூடம். உண்மைதான் உள்ளே வெதுவெதுப்பாக இருந்தது. காரணம் மிக உயரமாக தெரிந்த ஓட்டுக்கூரைக்குக் கீழே தேக்குமரத்தால் சீலிங் போடப்பட்டிருந்தது. பெரிய தேக்குமர இரட்டைக்கதவுகள். செங்குத்தான கம்பிகள் கொண்ட அகலமான சன்னல்கள். கூடத்தில் கனமான பெரிய நாற்காலிகள் நான்கும் ஒரு டீபாயும் கிடந்தன. ஒரு பெரிய சாய்வு நாற்காலி பிரம்பு முதுகுடன் கிடந்தது.
சாய்வு நாற்காலியில் கால்களை விரித்து அமர்ந்துகொண்டேன். உண்ணிக்கிருஷ்ணன் பெட்டிகளை கொண்டுவந்தபடி ”இதை உள் அறையில் வைக்கும். மேலே நல்ல பெட் ரூம் உண்டு சாரே” என்றார். கூடத்தின் வலதுபக்கம் மேலே செல்லும் மரத்தாலான பெரிய படிகள் இருந்தன. அவற்றில் திம் திம் என்று உண்ணிக்கிருஷ்ணன் ஏறிச்செல்லும் ஒலி கேட்டது.
உண்ணிக்கிருஷ்ணன் கீழே வந்து ”நான் நேற்று ஆள் கொண்டுவந்து நல்லா அடிச்சு வாரி விருத்தியாக்கினேன் சார்…பெரிய வீடு…ரிசார்ட் நடத்த ஆள் பிடிபிடின்னு நிக்கிறாங்க. ஹாஜியார் குடுக்க மாட்டேன்னு சொல்றார். நம்ம கம்பெனிக்கு ஒரு கெஸ்ட்ஹவுஸா வாங்கி போடலாம்.. மேலே போயி நிந்நால் அந்தப்பக்கம் காயலுண்டு…” என்றார் ”பால் ஆறுமணிக்குதான் கிட்டும். பங்கஜம் கொண்டுவரும். இப்ப ஒரு கட்டன் போடட்டுமா?”
நான் சரி என்றேன். உண்ணிக்கிருஷ்ணன் கறுப்பு டீ போட போனபோது நான் படிகளில் ஏறி என்னுடைய படுக்கையறைக்குச் சென்றேன். அகலமான சுத்தமான அறை. தேக்குமரத்தாலான தரை . சுவர் ஓரமாக ஒரு பெரிய மர அலமாரா. மரவேலைப்பாடுகள் கொண்ட பெரிய கட்டில் புதிய வார்னீஷில் பளபளவென நின்றது. புதிய மெத்தை, படுக்கைவிரிப்பு, தலையணை. என் பெட்டிகள் ஓரமாக இருந்தன. சிவப்பு சூட்கேஸை திறந்து பைஜாமாவையும் குர்தாவையும் எடுத்து போட்டுக்கொண்டேன். முகம் கழுவலாம் என இருபக்கமும் தெரிந்த அறைக்கதவுகளை திறந்து பார்த்தேன். ஒரு பெரிய அறையை பிளாஸ்டிக் விரிப்பால் தரை போட்டு கழிவறை குளிப்பறையாக மாற்றியிருந்தார்கள்.
தண்ணீர் சில்லென்று இருந்தது. வாயில் விட்டபோது தண்ணீர் கொஞ்சம் கனமாக இருப்பதாக பட்டது. முகம் கழுவிக்கொண்டு வந்து நாற்காலியில் அமர்ந்து பெட்டியை இழுத்து திறந்து என் துணிகளை எடுத்து அல்மாராவில் அடுக்கி வைத்தேன். பற்பசை சோப்பு ஷேவிங் சாமான்களை குளியலறையில் கொண்டுசென்று வைத்தேன். திரும்ப வந்தபோது பெரிய பீங்கான் கோப்பை நிறைய சூடான பாலில்லா டீயுடன் உண்ணிக்கிருஷ்ணன் நின்றிருந்தார். ”இனிப்பு மதியோ சாரே?” என்றார்.
மலையாளிகள் பாலில்லா டீ போடுவதில் கில்லாடிகள், பால் சேர்த்தால்தான் சொதப்பிவிடுவார்கள். டீயை உறிஞ்சியபடி மறுபக்க கதவு வழியாக வெளியே சென்றேன். அது ஒரு சிறிய பால்கனி. அங்கிருந்து பார்த்தபோது தென்னை மரங்களுக்கு அப்பால் வெளிச்சம் தெரிந்தது. டீ டம்ளருடன் பால்கனி கைச்சுவரை சாய்ந்து நின்று கூர்ந்து பார்த்தேன். அங்கே ஒரு பெரிய வீடு இருப்பது போல் இருந்தது. அதன் மூடிய சன்னல்களில் இருந்து மெல்லிய வெளிச்சம் கசிந்துகொண்டிருந்தது.
கண்பழகியபோது தெரிந்தது, அந்த வீட்டுக்கு முன்னால் உள்ள விசாலமான முற்றத்தில் ஏழெட்டு கார்கள் கிடந்தன. வீட்டுச் சன்னல்கள் மூடப்படவில்லை, உள்ளே இருந்த வெளிச்சமே அத்தனை மங்கலான ஒன்றுதான். அங்கிருந்து மெல்லிய குரலில் உரையாடல்களின் ரீங்காரம் எழுந்தது. எவரோ விளக்குடன் நடமாடுவது போலிருந்தது. சட்டென்று அவை மின்விளக்குகள் அல்ல, மெழுகுவத்திகள் அல்லது எண்ணைத்திரி விளக்குகள் என்று புரிந்துகொண்டேன்.
ஏதாவது பார்ட்டி நடக்கிறதா என்ன? ஆனால் இந்த பின்னிரவு வரை எந்தப்பார்ட்டி நீளும்? பார்ட்டிக்கான எந்த குதூகல ஒலியும் கேட்கவில்லை. கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டு நின்றேன். பிறகு கீழே இறங்கிச் சென்றேன். கூடத்தில் இருந்த பெரிய மரசோபாவில் உண்ணிக்கிருஷ்ணன் படுத்து போர்வையால் தலைமூடி போர்த்திக்கொண்டிருந்தார்.
”நாயரே” என்று அழைத்தேன். ”ஓய் நாயர்” . உண்ணிக்கிருஷ்ணன் கண்விழித்து ஒருகணம் திகைத்து ”ஆ, சாரா? என்ன சார்?” என்றார். ”அந்த பக்கத்து வீட்டிலே என்ன வெளிச்சம்?” என்றேன்
நாயர் ”எங்கே?” என்றார். நான் சொன்னதும் ”அதுவா? நான் நேத்தைக்கும் பார்த்தேன். அங்கே ஒரு குடும்பம் ஜீவிக்குது சார்…அவங்களை பாக்க சிலர் வாறாங்க. நமக்கு அதுக்குமேலே தெரியாது” என்றார்.
நான் அவரிடம் ”சரி தூங்குங்க” என்று சொல்லிவிட்டு திருப்பி என் அறைக்குச் சென்றேன். குளிர் இதமானதாக இருந்தது. படுத்துக்கொண்டு போர்வையை கால் வழியாக கழுத்துவரை இழுத்து விட்டேன். செல்போனில் ஒரு பழைய மலையாளப்பாடலை ஓடவிட்டேன் ”மஞ்ஞலையில் முங்ஙி தோர்த்தி தனுமாச சந்திரிக வந்நு…” ஜெயச்சந்திரனின் பழைய குரல். சின்னபையன் பாடுவது போல. வெளியே மழை மென்மையாகப் பெய்ய ஆரம்பித்தது.ஒரு ரகசியமான குதூகலம் போல மரங்களில் மழை அலைப்புறும் ஒலி.
– jeyamohan