கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் 82 ஆவது நாளாகவும் இன்று(12) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இலங்கையில் இடம்பெற்ற இறுதியுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட தங்களுடைய உறவுகள் தொடர்பில் இதுவரை எந்த பதிலையும் அரசு வழங்காத நிலையில் இவர்களது போராட்டம் முடிவிலியாக தொடர்கின்றது என தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களின் வெளிப்படுத்தலையும் விடுதலையையும் வலியுறுத்தி இந்த தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
எங்களது போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும் நல்லாட்சி அரசு இதற்கான பதிலை வழங்காது தொடர்ந்து எங்களை போராட்டத்தில் நீள விடுகின்றது.
எமது கோரிக்கைகளை இந்த அரசு ஏற்று எங்கள் உறவுகள் தொடர்பில் உரிய பதிலை வழங்கத்தவறும் பட்சத்தில் எங்கள் உயிரை மாய்த்தேனும் தொடர்ந்து எங்களது போராட்டத்தை முன்னெடுப்போம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.