இன்று ஜனவரி 23
எங்கள் மண்ணில் வெடிகுண்டு ஒசைகள் எதுவும் இல்லாமல் காற்றில் கந்தகவாசம் இல்லாத நல்ல காற்றை சுவாசித்துக்கொண்டு இந்த பந்தியை டைப் செய்துகொண்டு இருக்கின்றேன்
ஆனால் அன்று
இதே போன்ற ஒரு ஜனவரி 23 ம் திகதி 2009ம் ஆண்டு விசுவமடு வள்ளூவர் புரம்
இறுதி யுத்தத்தின் கோரமான குண்டு மழை நடுவிலும்,குருதி மழை நடுவிலும் எம் மக்கள் உயிர் தொலைத்து நாதியற்று மரணத்துடன் போராடிக்கொண்டு இருந்தார்கள்.
மரணம் என்பது மலிந்துகிடந்த எங்கள் மண்ணில்.நண்பர் ஒருவருடையை மரணம் என்னை வெகுவாக பாதித்த நாள் இன்று
ஜனவரி-23,2009ம் ஆண்டு
காலை-9-10 மணி இருக்கும்
கடுமையான யுத்த மழை பொழிந்துகொண்டு இருந்த நேரம் டக்டரில் பொருற்களை ஏற்றிக்கொண்டு இருந்தோம்.
எங்கிருந்தோ வந்த ஒரு எறிகணை(shell) அருகில் வீழ்ந்து வெடித்தது எல்லோறும் நிலத்தில் வீழந்து படுத்துவிட்டார்கள்.எனக்கு எறிகணை வெடித்த சத்தம் கேட்டாலும் அது பழகிப்போன ஒசை என்பதால் அருகே வீழந்தது என்று தெரிந்தாலும் நிலத்தில் வீழ்ந்து படுக்கவில்லை.அப்படியே நின்று கொண்டு இருந்தேன்.அப்போது தமிழ் என்கிற நண்பர் வந்து சொன்னார் விசராடா(பைத்தியம்) உனக்கு விழுந்து படுக்காமல் அப்படியே நிக்குற உன்ற காதுக்கு அருகில் பீஸ் ஒன்று(எறிகணை சிதறல் துண்டு) காற்றை கிழித்துக்கொண்டு போனது கொஞ்சத்தில் தப்பிவிட்டாய் இல்லைனா காதுக்கு பக்கத்தில் அரைவாசியைக் காணக்கிடைத்திருக்காது திரும்பி பின்னால் நிற்கும் டக்டரை பார் அந்த பீஸ் எப்படி துளைச்சிருக்கு என்று. நான் சற்று திரும்பி டக்டரை பார்த்தேன் டக்டர் பெட்டியில் பாரிய துளை ஒன்றை ஏற்படுத்தியிருந்தது அந்த எறிகணை சிதறல்.
அந்த நிமிடம் ஒரு கணம் என் மரண சாசனத்தை பார்த்ததை போல ஒரு உணர்வு மனசில் வந்து போனது.
தொடர்ந்தும் நாங்கள் பொருற்களை ஏற்றிக்கொண்டு இருந்தோம்.
மாலை-2-3 மணியிருக்கும்
கடுமையாக அந்த பிரதேசம் எங்கும் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்க ஆரம்பித்தது எல்லோறும் பதுங்கு குழிகளுக்குள் சென்று விட்டோம்.சிறிது நேரத்தில் சற்று ஒய்ந்தது எறிகணை மழை.அப்போது அருகில் இருந்த பதுங்கு குழிக்குள் இருந்து ஏனைய நண்பர்கள் ஏதோ பொருற்களை எடுப்பதற்காக அழைக்கவே.எங்கள் பதுங்கு குழிக்குள் இருந்த தமிழ் அங்கே சென்றார். அவர் சென்று ஒரு ஜந்து நிமிடம் இருக்கும் பாரிய சத்தத்துடன் எறிகணை ஒன்று அந்த பிரதேசத்தில் வீழ்ந்தது.அதை சத்தத்தை வைத்து அது அருகில் தான் வீழ்ந்து இருக்கவேண்டும் என்று தெரிந்தது வெளியில் பேச்சுக்குரல்களும் அழுகுரல்களும் கேட்டது
ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டதை நானும் என்னுடன் இருந்த இன்னும் ஒரு அண்ணாவும் உணர்ந்து கொண்டோம் பதுங்கு குழியைவிட்டு மேலே வந்து பார்த்தோம்.அடுத்த பதுங்கு குழியை நோக்கி சென்ற தமிழ் அந்த பதுங்குழி வாசலில் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்.அவரது தலையில் அரைவாசியை எறிகணைச்சிதறல் துளைத்து இருந்தது.
ஒரு பொலித்தீன் பையில் தூக்கிவைத்கொண்டு வந்து வாகனத்தில் ஏற்றி வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தோம் ஏற்கனவே இறந்துவிட்டார் தலையில் அரைவாசி இல்லை என்று தெரிந்தும் ஏதோ ஒரு நம்பிக்கையில்.ஆனால் எங்கள் மண்ணில் யுத்தம் காவுவாங்கிய உயிர்களில் வாழவேண்டிய இளம் வயதில் தமிழும் கலந்துவிட்டார்.
அன்றைய பொழுது முழுவதும் காலையில் அவர் எனக்கு சொன்னது எதிர் ஒலித்துகொண்டேயிருந்தது
”விசராடா உனக்கு விழுந்து படுக்காமல் அப்படியே நிக்குற உன்ற காதுக்கு அருகில் பீஸ் ஒன்று காற்றை கிழித்துக்கொண்டு போனது கொஞ்சத்தில் தப்பிவிட்டாய் இல்லைனா காதுக்கு பக்கத்தில் அரைவாசியைக் காணக்கிடைத்திருக்காது”
எனக்கு சொல்லிவிட்டு நீ அவதானம் இல்லாமல் இருந்துவிட்டாயே நண்பா.ஒவ்வொறு ஜனவரி-23ம் அன்றும் உன் குரல் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது மனசில் ரணமாக
தெரிந்த சனம் தெரியாத கதைகள்
( தொடரும்)