புங்குடுதீவு மகா வித்தியாலயத்தினை அண்மித்த சந்தியில் கடற்படையினரின் கவசவாகனம் ( பவள் ) மோதியதில் பாடசாலை சிறுமி இறந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் தனது மாமாவுடன் றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்தபோதே கவசவாகன சாரதியின் கவனயீனத்தால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடற்படையினருக்கான உணவுப்பண்டங்களை ஏற்றியிறக்க பயன்படுத்தப்பட்ட பவள் வாகனமே இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிவேகமாக இந்த வாகனத்தை செலுத்தவேண்டாமென்று கோத்தம்பர முகாம் கட்டளை அதிகாரிக்கு மக்கள் பல தடவைகள் முறைப்பாடுகளை தெரிவித்திருந்ததாகவும் குறிப்பாக இரவு வேளைகளில் ஒரு முன்பக்க விளக்குடன் பல நாட்களாக இந்த வாகனம் ஒடித்திரிந்தமை குறித்தும் மக்கள் விசனம் தெரிவித்திருந்தனர்.
விபத்து என்பது தற்செயலாக இடம்பெறும் ஒன்று தான். ஆனாலும் அவ்வாறான விபத்துக்களை தடுக்கவும் முடியும். இன்று யாழ் புங்குடுதீவில் பச்சிலங்குழந்தை ஒன்றின் உயிரை இராணுவ வாகனம் பறித்திருக்கிறது. உண்மையில் இவ்வாறான விபத்துக்களை தடுக்க முடியும். அது எவ்வாறெனில் எமது மண்ணுக்கு வேண்டாத,எமது மண்ணுக்கு எந்த பிரியோசனத்தையும் தராத இராணுவத்தை இங்கிருந்து வெளியேற்றுவதன் மூலம் தான் அது சாத்தியம். ஆனால் அது நடக்காது.
ஏன் அது நடக்காது என்றால் நாம் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர்தான் வடக்கில் தொடர்ந்தும் இராணுவம் நிலைகொண்டிருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வருடமும் சிங்கள அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் பாதீட்டுக்கு ஆதரவு வழங்கி இராணுவ பிரசன்னத்தை தொடர்ந்தும் வடக்கில் தக்கவைத்து வருகின்றனர்.
இந்த ஆண்டு பாதீட்டில் கூட பாதுகாப்புக்கு(இராணுவத்திற்கு) அதிக தொகை ஒதுக்கப்பட்டிருந்த போதும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தவிர மற்ற அனைவரும் அரசாங்கத்தின் இரண்டு கோடி ரூபாய்களுக்காக ஆதரவாக வாக்களித்தனர்.
வெறும் இரண்டு கோடி ரூபாகளுக்காக வாக்களித்த கூட்ட்மைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த பாலகனின் உயிர் பெறுமதி தெரிய வாய்ப்பில்லை. அவர்கள் மைத்திரியை கூட்டி வந்து தங்கள் பிள்ளைகளுக்கு பிறந்தநாள் கொண்டாடுவார்கள்,மத்திய வங்கியில் தங்கள் பிள்ளைகளுக்கு வேலை வாங்குவார்கள். இறப்பது யாரோ தானே யார் இறந்தால் என்ன? தங்களுடைய பெட்டி நிரம்பினால் சரி அவ்வளவுதான்.
எனவே இராணுவ பிரசன்னம் தொடர்ந்து நிலைக்கவேண்டுமா? இல்லையா? என்பதை எமது மக்கள் முடிவு செய்யாத வரைக்கும் இந்த சிறுமி போல பல குழந்தைகளுக்கு நாங்கள் கொல்லி வைக்கத்தான் வேண்டும் வேறு வழியில்லை.