அகரமுதல்வனின் எழுத்துக்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எழுத்துக்களில் இவ்வளவு தீர்க்கம் இருக்குமென்று தெரியாது. பான் கீ மூன் – ஐநா யாரென்று உலகத்துக்கு சொல்ல நினைத்து இந்த சிறுகதை தொகுப்பிற்கு இப்பெயர் இட்டார் என்றே நினைக்கிறேன்.
பலாப்பழத்தில் உள்ள பத்து சுளை போல ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு மனிதரின், அகம் , புறம், இயக்கம் சார்ந்து எழுதப்பட்டது. தமிழர்களில் ஈழத்தவர் எந்த துன்பத்திற்கும் ஆளாகவில்லை என்று சொல்வோருக்கும், புலிகள் இயக்கம் அறம் சார்ந்து இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் நேரடியாக துப்பாக்கியின் வெளிவரும் தோட்டாக்கள் போல் கேள்வி கேட்கிறது இவரது கதைகள்.
“பெயர்” என்ற சிறுகதையில் வரும் அந்த இளம் அகதி தமிழகத்தின் ஒரு பகுதியில் எந்த அடையாளமும் இன்றி மறைவான வாழ்க்கை வாழ்வதும், பிழைப்புக்காய் இங்கு சிக்கி கொண்டவனுக்கும் ஒரு காதல் மனம் உண்டு அதில் தீராத பெருங்காயத்தை ஆற்றும் காமமும் , இன்னொரு இளம் பெண் அகதிக்கும் உண்டென்று கடைசி வரை அவர்கள் பெயர் சொல்லாமல் முடித்தது அழகு.
“கள்ளு” சிறுகதையில் வரும் பொயிலை சண்முகம் , லிங்கண்ணன் முதுகில் உள்ள சர்க்கரை நக்க வைக்கும் தண்டனை நம் பகுத்தறிவுவாதிகளே செய்ய தயங்கும் ஒன்று , இயக்கத்தின் அறத்தை , சமூக சீர்திருத்தத்தை கேள்வி கேட்பதாய் அமைந்திருக்கும் , “சங்கிலியன் படை” இதே தொனியில் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளை செய்தவர்களை எப்படி கொன்றிருக்க வேண்டுமோ அதை விட சற்று குறைவான தண்டனைகள் கொடுத்ததாக எனக்கு தோன்றிற்று , ஆனாலும் அந்த மிருகங்களை கொன்ற விதம் வேண்டுமானால் குறைவாக இருக்கலாம் , உயிரோடு உலவ விட வில்லை என்றதே கதை முடியும் தருவாயில் கிடைக்கும் ஒரு திருப்தி.
போராளிகள் என்பது போராளிகள் மட்டுமல்ல, பின்னப்பட்ட வலை போன்ற அமைப்பது. மனைவி, குழந்தைகள் எல்லாமும் அவர்களில் உண்டு, அவர்கள் நன்றாக வாழ்வார்களேயானால் இந்த உயிரும் அவர்களுக்காய் கொடுக்க சம்மதிக்கும் இயக்கத்தவர் குடும்பத்தில் நிகழும் போர்முனையல்லாத ஒரு மரணத்தை நெஞ்சில் தைக்கிறது அதியமான்-லோஜி காதலில் மரணமும் கூட வாய்க்கும் என்னும் இக்கதையின் பெயர் “தாழம்பூ”
“குடாநாட்டில் வாத்தியார் கடத்தப்பட்டார் “ என்னும் கதையில் கடினமான போக்குள்ள கதையை சொல்லிக்கொண்டிருக்கும் போதே “கிளிநொச்சியின் இரணைமடுக்குளத்திற்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியில் விடுதலை புலிகளின் விமான ஓடுதளம் தாக்கியழிக்கப்பட்டதாக இலங்கை அரசாங்கம் செய்திகளில் அறிவித்து கொண்டிருந்த நேரத்தில் புலிகளின் விமானம் பயிற்சி எடுத்து கொண்டிருந்த சத்தம் அதையண்டிய பகுதிகளின் சனங்களுக்கு கேட்டது . சனங்கள் எல்லாரும் கொழும்பை நோக்கி வாயாலும் சிரித்தார்கள் ” எனும் இப்பகுதியில் தேசிய ஊடகங்கள் பொய்யான பரப்புரைகளையே உலகுக்கு சொல்லி வந்திருந்தனர் என்பதை ஆசிரியர் ஏளனம் செய்து தொண்டை விம்மும் போதெல்லாம் சிரிக்கவும் செய்து விடுகிறார்.”உடைந்து போகும் பெண்தெய்வத்தின் சிலை மாதிரி நின்று கொண்டாள் . ஒரு சத்தம் எழுந்தது , அந்த இடத்தில அனுமா பெர்னாண்டோவின் இரத்தச்சகதி மணலில் ஊரும் கடல் நீர் மாதிரி தரையில் வழிந்தது.இந்த கதை இறுதி காலங்களில் உண்டாக்கப்பட்ட சேதங்களை விவரணை செய்கிறது.
மொத்தமாக இந்த கதைகள் யாவும் ஈழத்தின் குரல்கள் அதில் அன்பு,காதல்,காமம்,நட்பு,துரோகம் , மேன்மை , நன்றி ,வீரம் எல்லாமும் உண்டு . இதனை மக்களின் ஊடாக கட்டமைத்தவர்களுக்கும் இதெல்லாம் உண்டு அதில் முதன்மையானது அறம் , அதில் இருந்து தவறியவன் கூட்டத்தில் ஒருவனாய் இருந்தாலும் மரணம் பெரும்பாலும் பரிசளிக்கப்பட்டது என்பதே நிதர்சனம். பான் கீ மூனையும் , ஐ நா வையும் படிக்க தூண்டும் தலைப்பு , அறம் வெல்லும் . அகரமுதல்வனின் இந்த படைப்பு வெற்றி பெற நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.